Header Ads



நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள, இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை - பிரதமர் உத்தரவு


- IBC -

நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று -26- உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் பணிபுரியும் ஏராளமான இலங்கை பணியாளர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு முடியாமல் தவிப்பதாக இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி இப்பணியாளர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

இப்பணியாளர்களை அழைத்துவரும் பயணிகள் விமானங்களுக்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளல் தொடர்பிலும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.

இவ்வாறு அழைத்து வரப்படுபவர்களை தத்தமது இல்லங்களின் இடவசதிக்கேற்ப தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கான அனுமதியை பெற முடியுமா என்பது குறித்தும் ஜனாதிபதி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதுவரை வெளிநாட்டில் பணியாற்றும் 32000 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 22483 பேர் தமது சொந்த நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களின் இடவசதியை கருத்திற்கொண்டு இதுவரை அப்பணியாளர்களுக்கு நாட்டிற்கு வருவதற்கான விமானச்சேவை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே அவர்கள் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே, ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.