Header Ads



கிராமத்தவர்களின் குறைகளை கேட்டறிய, மக்களின் காலடிக்குச்சென்ற ஜனாதிபதி


"கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கெபிதிகொல்லேவ கனுகஹவெவ கிராமத்திற்கு விஜயம் செய்தார். இது ஜனாதிபதி பங்கேற்ற நான்காவது "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சித்திட்டமாகும்.

இந்த திட்டம் 2020 செப்டம்பர் 25 ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவில் உள்ள வேலன்விட கிராமத்தில் ஆரம்பமானது. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்று கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை அடையாளம் காண்பதும், அந்த பிரச்சினைகளை நேரடியாக அதிகாரிகளிடம் முன்வைத்து அவற்றைத் தீர்ப்பதும் ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும். விரைவாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும். தீர்க்கப்படுவதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு பின்னர் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

திட்டத்தின் இரண்டாவது நிகழ்ச்சி 2020 ஒக்டோபர் 2 ஆம் திகதி மாத்தளை மாவட்டத்தில் உள்ள வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹிம்பிலியாகட கிராமத்திலும், மூன்றாவது நிகழ்ச்சி டிசம்பர் 18 ஆம் திகதி பலங்கொட, இம்புல்பே ராவணாகந்த கிராமத்திலும் நடைபெற்றது.

இன்றைய (30) மக்கள் சந்திப்புக்காக அனுராதபுரம் நகரத்திலிருந்து 73 கி.மீ தூரத்தில் உள்ள கெபிதிகொல்லேவ பிரதேச செயலக பகுதியில் உள்ள கனுகஹவெவ கிராமம் தெரிவு செய்யப்பட்டது. மக்கள் சந்திப்பு கனுகஹவெவ ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. தல்கஹவெவ, ஹல்மில்லவெடிய, தம்மன்னேவ, ஹேரத் ஹல்மில்லேவ, நிகவெவ உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் குறைகளை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்க வருகை தந்திருந்தனர்.

கெபிதிகொல்லேவ பிரதேசம் பிரிவினைவாத போரின்போது அடிக்கடி எல் டீ டீ ஈ பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பிரதேசமாகும். 2006 ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஹல்மில்லவெடிய கிராமத்தில் கெபிதிகொல்லேவ  பஸ் வண்டியொன்று புலிப் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதில் கனுகஹவெவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 68 பேர் உயிரிழந்தனர்.

1995 முதல் 1998 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக முகாம்களில் வாழ வேண்டி ஏற்பட்டது. இப்போது அந்த அச்சுறுத்தல் முடிந்துவிட்டாலும், அவர்கள் பல கடுமையான பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மக்கள் தொகையில் 54% கிராமப்புற வறுமைக்கு உட்பட்டுள்ளனர்.

நெல் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை கனுகஹவெவ மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் வசிக்கும் மக்களின் பிரதான வாழ்வாதாரமாகும். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக காணிகளை கைவிட்டுச் சென்றமையால் பாரம்பரிய வாழ்விடங்களை இழந்திருப்பது அனைத்து கிராம மக்களுக்கும் உள்ள முக்கிய பிரச்சினையாகும். இதனால் பயிர்நிலங்கள் காடுகளாக மாறிவிட்டன. வனசீவராசிகள் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் நில அளவீடுகளில் இத்தகைய நிலங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் மக்கள் பயிரிடுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அவர்கள் எதிர்நோக்கும் மற்றொரு பெரிய பிரச்சினையாகும்.

அரசாங்கத்தினதும் தனதும் கொள்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகும் எனக் கூறிய ஜனாதிபதி அவர்கள், விவசாயத்தை  வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் அன்றாட பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அரசியல் அதிகாரிகளின் முழு ஆதரவும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூகிள் வரைபடத்தின்படி பாதுகாக்கப்பட்ட வன எல்லைகளை அடையாளப்படுத்தும் போது எஞ்சிய காடுகள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளை உடனடியாக மக்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க முடிவு செய்யப்பட்டது.

யான் ஓயா திட்டத்தை அமுல்படுத்தியபோது ஏராளமான மக்கள் தங்கள் நிலங்களையும் இழப்பீடுகளையும் இழந்திருப்பதாக மக்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் திட்டங்களை வடிவமைக்கும் போது நிலங்களை இழந்தவர்களுக்கு மாற்று நிலங்கள் மற்றும் இழப்பீடு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனுகஹவெவ கிராமத்தில் வீடுகள் உள்ளிட்ட தேவைகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன ஏற்றுக்கொண்டார். இதன் கீழ் கனுகஹவெவ கிராமம் ஒரு மாதிரி கிராமமாக அபிவிருத்தி செய்யப்படும்.

கிராமத்தின் விகாராதிபதி, கிராம அலுவலர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தலைவர் ஆகியோருடன் இணைந்து கிராமத்தின் தேவைகளை அடையாளம் கண்டு விமானப்படைத் தளபதியிடம் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

விவசாயத்திற்கு தேவையான குளங்களை புனரமைப்பது இச்சந்திப்பில் கலந்துகொண்ட பல கிராமவாசிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். 21 குளங்களை உடனடியாக புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் கீழ் பல கால்வாய்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்பதுடன் சுமார் 8000 ஏக்கர் காணியில் புதிதாக பயிரிடுவதற்கும் வழி ஏற்படும்.

கெபிதிகொல்லேவ பிரதேச வாசிகளின் மாதாந்த பால் உற்பத்தி ஒரு லட்சத்து முப்பதாயிரம் லீட்டர் ஆகும். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2019 ஐ விட 2020 ஆம் ஆண்டில் விவசாயிகள் அதிக பால் உற்பத்தியை மேற்கொண்டுள்ளனர். பண்ணை விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை மேய்ச்சல் நிலங்கள் இல்லாமையாகும். எனவே, பண்ணை வளர்ப்பை மேம்படுத்த புல் நிலங்களை உருவாக்குவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அண்மித்த நிலங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

கனுகஹவெவ அரம்பப் பாடசாலை, ஹல்மில்லவெடிய மற்றும் கெபிதிகொல்லேவ பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஏனைய தேவைகளை விரைவாக நிறைவேற்றி கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கனுகஹவெவவிலிருந்து ரம்பகெபுவெவ, கெபிதிகொல்லேவ முதல் புஹல்மில்லேவ வரையான மெதவெவ வீதி, யகாவெவ, போகஸ்வெவ, வாகல்கட முதல் யாங் ஓயா வரையிலான வீதிகள் உள்ளிட்ட பிரதான மற்றும் துணை வீதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

கிராமவாசிகளின் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க உடனடி கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த விடயத்தில் தலையிடுமாறு மாகாண அரசியல் அதிகார தரப்பினரிடம் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீரை வழங்கக் கூடிய வகையில் நிகவெவ குளத்தை அபிவிருத்தி செய்ய  முடிவு செய்யப்பட்டது.

சோளம் பயிர்ச்செய்கையை பாதிக்கும் சேனா படைப்புழு அச்சுறுத்தல் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தனர்.

கெபிதிகொல்லேவ தள வைத்தியசாலை மற்றும் வாகல்கட கிராம வைத்தியசாலையில் மருத்துவ மற்றும் தாதியர் வசதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. பாடசாலை பிள்ளைகள் மற்றும் கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

"கிராமத்துடன் உரையாடல்" திட்டத்துடன் இணைந்ததாக ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனம் கனுகஹவெவ ஆரம்ப பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கிய கணினி வசதிகளுடன் கூடிய 'ஸ்மார்ட் வகுப்பறையை' ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி லலித் செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

லலித் செனவிரத்ன எழுதிய இரண்டு நூல்கள் இதன் போது ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.

மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் விஹார ஹல்மல்லேவ ஸ்ரீ சுலுகல் தம்புலு விஹாரையின் பிரிவெனாவுக்கு சென்று விஹாராதிபதி விஹாரஹல்மில்லேவே தம்மரக்கித தேரரை சந்தித்தார். பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு விஹாரையை பாதுகாப்பதில் தேரர் அவர்கள் செய்த பணியை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.

விஹாரையின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு உதவுவதாக ஜனாதிபதி அவர்கள்  தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். நந்தசேன, உத்திக பிரேமரத்ன, ஆளுநர் மகிபால ஹேரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பலர் இந்த 'கிராமத்துடன் உரையாடலில்' பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

1 comment:

  1. பட ஷோ.... காட்டுறான்....

    ReplyDelete

Powered by Blogger.