Header Ads



அதிபர் மாளிகையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின், மரடோனாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் உடல் ஆர்ஜென்டீனாவின் புவெனஸ் ஐரிஸின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பெல்லா விஸ்டா கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

டியாகோ மரடோனாவின் பெற்றோர் முன்னதாக குறித்த கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமையினால் அவரது உடலும் வியாழக்கிழமை பிற்பகுதியில் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மரடோனாவின் உடல் நல்லடக்கத்தின்போது அவரது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் உடனிருந்தனர்.

புதன்கிழமை உயிரிழந்த மரடோனாவின் உடல் ஆர்ஜென்டீனாவின் தலைநகர் புவெனஸ் ஐரிஸிலுள்ள அதிபர் மாளிகையில் அஞ்சலிக்காக ஒருநாள் வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது பெருந்திரளான கூட்டத்தினர் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு, மரடோனாவுக்கு கண்ணீராலும், முத்தங்களினாலும், பிரார்த்தனைகள் மூலமாகவும் அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.

மாரடைப்பு காரணமாக புதன்கிழமை உயிரிழந்த 60 வயதான மரடோனாவுக்கு அர்ஜென்டீனா மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. 

தனது நளினமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த மரடோனா 1986 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை அர்ஜென்டினாவுக்கு வென்றுத் தந்தார்.

அந்த உலக கிண்ணத் தொடரில் 5 கோல்கள் அடித்தும், 5 கோல்கள் அடிக்க உதவி புரிந்தும் அந்த உலக கிண்ணத் தொடரில் சிறந்த வீரருக்குரிய தங்கப்பந்து விருதை பெற்றார்.

இவ்வாறு கால்பந்தாட்டத்தில் தனக்கென தனியுடம் மிடித்த மரடோனா, ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டீனா அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட போதிலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் விலகினார். அநேக கழகங்களுக்க பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. 

இந் நிலையில் மரடோனாவின் திடீர் மரணம் விளையாட்டு நட்சத்திரங்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments

Powered by Blogger.