Header Ads



சாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி


(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும்,  தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போதைய பிரதமர் ரணில்  அழைத்தால் அவரை சந்திக்க செல்லக் கூடாது என முப்படைகளின் தளபதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளை இட்டிருந்ததாக, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன  சாட்சியமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், நேற்று முன்தினம்  மாலை முதல் இரவு நேரம் வரையிலும்  தனது  சாட்சியத்தை பதிவு செய்யும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார். அத்துடன், தான் தொடர்ச்சியாக உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பங்கேற்ற போதும், அக்கூட்டங்களில் ஒரு போதும், சஹ்ரான் கைது செய்யப்பட வேண்டிய நபர் என்பதை தேசிய உளவுச் சேவை பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன  அங்கு குறிப்பிடவில்லை எனவும், ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட  ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

 இதன்போதே நேற்று முன் தினம், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன சாட்சியமளித்தார். அவரது சாட்சியம் ஆரம்பிக்கப்பட்ட போது, அதனை நெறிப்படுத்திய அரச சிரேஷ்ட சட்டவாதி,  நீங்கள் கலந்துகொண்ட உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டங்களின் போது,  சஹ்ரானை கைது செய்யப்பட வேண்டியவர் என்பதை, தேசிய உளவுச் சேவை பிரதான நிலந்த ஜயவர்தன கூறினாரா? என  வினவினார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சர் ருவன் விஜயவர்தன,  இல்லை... ஒரு போதும் இல்லை. நான் கலந்துகொண்ட புலனாய்வு ஒருங்கமைப்பு கூட்டங்களில் அவர் அப்படி எதனையும் கூறவில்லை என்றார். இதன் போது, ஆணைக் குழுவின் தலைமை நீதிபதி ஜனக் டி சில்வா தொடர்ச்சியாக பல கேள்விகளை எழுப்பினார்.

 குறிப்பாக முதலில்,  நீங்கள் கலந்துகொண்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் திறந்த, வெளிப்படை விசாரணைகளை செய்ய வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டாரா? என வினவினார்.

 அதற்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் , ஆம்...முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்துக்கு அப்படியான ஒரு கட்டளையை முன்னாள் ஜனாதிபதி பிறப்பித்தார். திறந்த விசாரணைகளை செய்ய வேண்டாம் என தெரிவித்த அந்நடவடிக்கைகளை நிலந்த ஜயவர்தனவுக்கு பொறுப்பளித்தார்.

 குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு பின்னர் நான் பாதுகாப்பு குழு கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. இதன்போது குறுக்கீடு செய்த ஆணைக் குழுவின் உறுப்பினரான ஓய்வுபெற்ற நீதிபதி, அவ்வாறு கலந்துகொள்ளாமைக்கான காரணம் என்ன என வினவினார்?

 அதற்கு பதிலளித்த ருவன் விஜய்வர்தன,  2018 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு பின்னர், பாதுகாப்பு குழு கூட்டங்களில் கலந்துகொள்ள எனக்கு எந்த அறிவித்தலும் வரவில்லை. இது தொடர்பில் நான் பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலர் ஹேமசிறி பெர்ணான்டோவிடம்  வினவினேன். அதற்கு பதிலளித்த அவர், உங்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரையிலேயே காத்திருக்கின்றோம் என பதிலளித்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது, கடமைகளை முன்னெடுக்க உங்களை பதில் அமைச்சராக நியமித்து விட்டா செல்வார் என  குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி வினவினார்.

அதற்கு பதிலளித்த ருவன் விஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் ஒரே ஒரு முறை மட்டுமே, ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது என்னை பதில் அமைச்சராக நியமித்துவிட்டு சென்றார். பாதுகாப்பு பதில் அமைச்சராக நான் கடமையாற்றிய மற்றைய சந்தர்ப்பங்கள் மூன்றும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னரான சந்தர்ப்பங்களாகும்.

அவ்வாறு பதில் அமைச்சராக நியமித்தாலும், வெளிநாட்டுக்கு செல்ல முன்னர் அது எனக்கு அறிவிக்கப்படவில்லை.  அவர் வெளிநாடு சென்று ஓரிரு நாட்களிலேயே, பாதுகாப்பு அமைச்சராக தான் பதில் கடமைகளை செய்ய வேண்டும் என தொலைநகல் ஊடாக அறிவிப்பு வரும். அதன் மூலப் பிரதி கையில் கிடைக்கும் போது, ஜனாதிபதி மீள நாட்டுகே திரும்பிவிடுவார்.

இதன்போது மீள, ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா, கேள்விகளை தொடர்ந்தார்.

' சாட்சியாளரே, பாதுகாப்பு குழு கூட்டங்களின் போது பிரதமர் கலந்துகொண்டாலும் 5 நிமிடங்களில் அங்கிருந்து சென்றுவிடுவாராம். இவ்வாறான சாட்சியங்கள் இவ்வாணைக் குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் கேட்கின்றேன்... அந்த விடயம் உண்மையா... அதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? என அவர் வினா தொடுத்தார்.

அதற்கு பதிலளித்த ருவன் விஜயவர்தன, ஆம்... நான் ஏற்றுக்கொள்கின்றேன். பல சந்தர்ப்பங்களில் அவர் அவ்வாறு வெளியேறிச் சென்றுள்ளார். பாதுகாப்பு குழு கூட்டத்தில் தலையீடு செய்ய பிரதமருக்கு அதிகாரம் இருக்கவில்லை.

ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைப்பதற்கான அதிகாரம் பிரதமருக்கு இருந்தாலும்,  தான் இல்லாத போது பிரதமர் சந்திக்க அழைத்தால்  செல்லக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படைகளின் தளபதிகளுக்கு கட்டளையிட்டிருந்தார். என குறிப்பிட்டார்.

இதனையடுத்து, அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கூறினால் அதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா? அவ்வாறான சாட்சிகள் ஆணைக் குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால் இதனை கேட்கின்றேன் என ஆணைக் குழுவின் தலைவர் ஜனக் டி சில்வா மீளவும் வினவினார்.

 அதற்கு பதிலளித்த ருவன் விஜயவர்தன,  இல்லை. ஒரு போதும் தேசிய பாதுகாப்பினை  குறைத்து எடைபோடவில்லை.  எனினும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான மோதல் நிலைமை தேசிய பாதுகாப்பை பாதித்தது என்றார்.

 இதன்போது, ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் நல்லாட்சி அரசாங்க காலத்தில் உளவுத் துறை பலவீனமடைந்திருந்ததா என வினவினார்.

 அதற்கு பதிலளித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன இல்லை. நான் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன். உளவுத்துறைகளின் பிரதானிகளிடையே நிலவிய நம்பிக்கையின்மை காரணமாகவே அவர்கள் உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளவில்லை என்பதே எனது நிலைப்பாடு. நான் உளவுத் துறை ஒழுங்கமைப்பு கூட்டங்களில் பங்கேற்ற நாட்களில், தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த நிலந்த ஜயவர்தனவுக்கும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த நாலக சில்வாவுக்கும் இடையே  உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டன என சாட்சியமளித்தார்.


1 comment:

  1. Thinai vithaittavan thinai aruppaan kandippaaaga.... aththodu ivarin koottaalium...mp harin mentioning always it may be true!!! GOD IS THERE ALWAYS...LETS SEE

    ReplyDelete

Powered by Blogger.