Header Ads



பாடசாலைக்கு வந்த மாணவர்களை மீண்டும், வீடுகளுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் - அட்டனில் சம்பவம்


சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்த அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்து காணப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை எக்காரணங் கொண்டும் கல்வி கற்பதற்கு அனுப்பிவைக்க முடியாது என தெரிவித்து மேற்படி கட்டிட வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (02) காலை கல்லூரி அதிபரின் காரியாலயத்துக்கு முன்பாக திரண்டு கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.


மேலும், குறித்த கட்டிடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் இன்று பாடசாலைக்கு வந்திருந்த நிலையில், குறித்த மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


அதே வேளை நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வே.ராதாகிருஷ்ணன், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அமைத்து கொடுத்த புதிய கட்டிடத்தின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டும் திறக்கப்படாமலேயே இருப்பது குறித்தும் பெற்றோர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். 


மேற்படி சேதமுற்றதாகக் கூறப்படும் வகுப்பறை மாணவர்களுக்காகவே புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளமையை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.


இதையடுத்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது என்று கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.


எவ்வாறியினும், புதிய கட்டிடம் திறக்கும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பப்போவதில்லை என்றும் வலயக் கல்வி பணிப்பாளர் வரும் வரை இங்கிருந்து செல்ல முடியாது என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.