Header Ads



UNP யின் தலைமைத்துவம் எனக்கே, கிடைக்க வேண்டும் - வஜிர அபேவர்தன

(ஆர்.யசி)


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் எனக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நானாக கேட்பேன். தலைமைத்துவத்தை எனக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது என்கிறார்  ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய தேசிய கட்சியை கைப்பற்ற முடியாது. அதற்கு நாம் இடமளிக்கவும் மாட்டோம் என்றார்.


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ மாற்றம் மற்றும் அடுத்த கட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,


ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ள முடியும். அதனை நாம் ஒருபோதும் தடுக்க மாட்டோம். ஐக்கிய தேசிய கட்சி எவரையும் நிராகரிக்கும் கட்சி அல்ல. இன்று தனித்து செயற்படும் அனைவரும் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் நிலை உருவாகும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியை எவரும் ஆக்கிரமிக்கலாம் என நினைப்பது தவறான விடயமாகும். அது ஒருபோதும் நடக்காத விடயம் எனபதையும் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சஜித் பிரேமதாச இன்று தற்காலிக வெற்றியை பெற்றுக்கொண்டு எமக்கு சவால் விடுத்து வருகின்றார். அவரது அணியில்  சிலர் ஐக்கிய தேசிய கட்சியை கைப்பற்றுவதாக கூறுகின்றனர். ஆனால் சஜித் பிரேமதாஸவினால் ஐக்கிய தேசிய கட்சியை கைப்பற்ற முடியாது. அதற்கு நாம் இடமளிக்கவும் மாட்டோம்.


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தான் கட்சியின் தலைமைத்துவத்தை கைவிடுவதாக கூறியுள்ளார். தான் தலைமை பொறுப்பில் இருந்தது போதும் எனக் கூறியுள்ளார். ஆகவே கட்சி இப்போது மாற்று தலைமைத்துவம் குறித்து சிந்தித்து வருகின்றது. கட்சியின் தலைமைத்துவத்திற்கு நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நாளை ( இன்று) முன்னெடுக்கப்படும். எனக்கு கட்சியின் தலைமைப்பொறுப்பை வழங்க வேண்டும் என நானாகவே கேட்டுக்கொண்டேன். எனக்கு தலைமைத்துவம் கிடைத்தால் கட்சியை மீண்டும் என்னால் மீட்டெடுக்க முடியும்.


ஐக்கிய தேசியக் கட்சி விழவேண்டிய அடிமட்டத்திற்கு விழுந்து விட்டது. பிளவுபட வேண்டிய உச்சகட்ட பிளவையும் சந்தித்துவிட்டது. அடைய வேண்டிய மோசமான தோல்வியை சந்தித்து விட்டது. இதற்கு மேல் பலவீனமடைய கட்சியில் ஒன்றும் இல்லை. ஆகவே மீண்டும் கட்சியாக வளர்ச்சியடைய வேண்டும். மக்களின் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். ஆகவே புதிய தலைமைத்துவத்தின் கீழ் புதிய கட்சியாக மக்களை சென்றடைய சகல நடவடிக்கையும் என்னால் முன்னெடுக்க முடியும். எனவே நாளை ( இன்று) கூடும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தலைமைத்துவத்தை எனக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நானாக முன்வைப்பேன். எனக்கு தலைமைத்துவத்தை வழங்கும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் குறித்தும் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட எவருக்கும் தேசிய பட்டியலில் இடமளிக்க முடியாது என்பதே கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளது என்றார். 

No comments

Powered by Blogger.