Header Adsஊழலுக்கு எதிராக செயற்பட அரசாங்கம் தேவையான வளங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது இன்று 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ‘குலோபல் கறப்ஷன் பரோமீட்டர்’ அறிக்கையினை வெளியிடுகின்றது. குலோபல் கறப்ஷன் பரோமீட்டர் அறிக்கை என்பது உலகின் பாரியளவில் பொதுமக்களிடையே நடைபெறும் ஊழல்பற்றிய அனுபவம் தொடர்பான கருத்துக்கணிப்பாகும். 

பொதுமக்களிடையே இடம்பெறும் கருத்துக்கணிப்பின் பிரகாரம் ஊழல் காரணமாக எவ்வாறு தனிநபரது வாழ்க்கை பாதிப்படைகிறது என்பதை சுட்டிக்காட்டுவதுடன் தேசியமட்டத்தில் ஊழலை இல்லாதொழிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பொதுமக்களின் கருத்துக்களையும் கொண்டுள்ளது. 

கருத்துக்கணிப்பின் முக்கிய 4 அம்சங்கள்; 

நீதித்துறை, அரசாங்கம், பொலிஸ் ஆகிய அரச நிறுவனங்களில் தாம் எந்த அரச நிறுவனத்தை மிகவும் நம்புகிறார்கள் என வினவிய போது, 73 % ஆனோர் தாம் கணிசமான அளவு அல்லது அதிக அளவில் நீதித்துறையையும் நீதிமன்றத்தையும் நம்புவதாக தெரிவித்தனர். அத்துடன் முழுவதுமகாக ஒப்பிடுகையில் அரசாங்கம் மீதான நம்பிக்கை 47% மும் பொலிஸார் மீது 57% வீதமும் உள்ளது. 

நான்கில் ஒரு பகுதி பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது குறித்த சேவையைத் துரிதப்பதுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாக ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறக இலஞ்சம் கொடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல எனத் தெரிவித்தனர். 

பதிலளித்தோரில் கிட்டத்தட்ட அரைவாசிப்போர் ஊழலின் ஒருவடிவாமாக பாலியல் இலஞ்சம் இருப்பதாக நம்புகின்றனர். அரச அதிகாரிகளினால் அரச சேவைகளை வழங்கும் போது பிரதிபலனாக பாலியல் சலுகைகள் சிலவேளைகளில் அல்லது அடிக்கடி பெறப்பட்டுள்ளது. இவை கிராமப்புற மக்களிலும் பார்க்க நகரப்புற மக்களிடம் அதிகம் கோரப்பட்டுள்ளது. எனினும், கிரமமப்புற மக்களிலும் பார்க்க தோட்டப்புற மக்கள் மிகவும் இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாக உள்ளனர் என்பதை தரவுகள் காட்டுகின்றது. 

இலஞ்சம் ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று இயங்குகின்றது எனும் விடயம் 86% ஆனோர் அறிந்துள்ள போதிலும் 72% ஆனோர் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்செயல்களின் போது முறையிடக்கூடிய பொறிமுறை பற்றி அறிந்திருக்கவில்லை. 

TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேயசேக்கர குறிப்பிடும் போது “கருத்துக் கணிப்பினூடாகப் பெறப்பட்ட அடைவுகளினைக் கருத்தில் கொண்டு ஊழல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மீள்பார்வை செய்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை அரசுக்கு வழங்கியுள்ளது. அரசாங்கம் மற்றும் பொலிஸார் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த செயற்பட வேண்டும். பாலியல் இலஞ்சம் தொடர்பான ஆபத்தான நிலைமையைக் கட்டுப்படுத்துவதுடன் விசேடமாக பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக செயற்பட்டு அவர் எதிர்கொள்ளும் பல்வகை சவால்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்தார். 

ஓபேயசேகர மேலும் குறிப்பிடும் போது “நாட்டின் இலஞ்ச ஊழலுக்கு எதிராகச் செயற்படும் பிரதான முகவரான இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவினை வலுப்படுத்தி அதன் 2 வருடங்களுக்கான தேசிய செயற்றிட்டத்தினை துரிதப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகின்றது. அத்தோடு இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு பற்றி அதிகமான பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள் எனும் விடயம் ஆறுதலளித்த போதிலும் ஊழல் தொடர்பாக முறைப்பாடு மேற்கொள்வதற்கான பொறிமுறைகள் பற்றிய விளக்கமின்மையானது ஊழலை இல்லாதொழிப்பதற்கான சவாலாக அமையும்” எனத் தெரிவித்தார். 

“ஊழல் தொடர்பான பூச்சிய சகிப்புத்தன்மைக் கொள்கையினை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய அதேவேளை, ஒரு குறிப்பிட்ட சில சேவைகளைப் பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதென நான்கில் ஒரு பகுதியினர் கூறுவதானது ஊழலில் ஈடுபடுவதற்கான விளைவுகள் பற்றிய அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. கடுமையான சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதனூடாக இதனை நிவர்த்தி செய்ய முடியும் என்பதோடு ஊழலை இல்லாதொழிப்பதற்காகப் போராடுவதற்கு சாத்தியமான முறையில் வளங்கள் மற்றும் துறைசார் நிபுணத்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா எனும் விடயம் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவேண்டும் அத்துடன் ஜனாதிபதி ராஜபக்ஸவினது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கமைய ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கு அரசாங்கம் தேவையான வளங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். 

‘குலோபல் கறப்ஷன் பரோமீட்டர்’ TISL இனால் 2019 ஆண்டின் முதல் காலாண்டுப்பகுதியில் 9 மாகாணங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு அறிக்கையாகும். இதில் நகர மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 18-80 வயதுக்குட்பட்ட 1300 பிரஜைகள் பங்குபற்றித் தமது கருத்துக்களைப் பரிமாறியிருந்தனர்.

No comments

Powered by Blogger.