Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவனின், மரணத்திற்கான காரணம் வெளியாகியது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் பயின்று வந்த மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் மூச்சுத் திணறல் காரணமாவே இடம்பெற்றுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த 24 வயதுடைய துர்கேஷ்வரன் கணேஷன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டார்.  இவர் நுவரெலியா பூண்டுலோயா டன்சின் தோட்டத்தின் அக்கரமலை என்னும் பிரிவினை பிறப்பிடமாகக் கொண்டவர்.

மர்மமான முறையில் உயிரிழந்த இம்மாணவரின் மரணமானது மூச்சுத் திணறல் காரணமாக இடம்பெற்றுள்ளதாக வைத்திய அறிக்கைகள் தெரிவித்ததனை அடுத்து மாணவரின் சடலம் சனிக்கிழமை(24) பிற்பகல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உணவுத் துணிக்கைகள் சுவாசக் குழாயில் சென்று அடைத்துள்ளதால் மூச்சுத் திணறி இவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.இஸட்.எம்.சர்பறாஸ் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் பல்கலைக்கழகத்தின் பொறியல்துறை விடுதியின் தரைத்தளத்தில் இருக்கும் பகுதியில் இறந்து கிடந்த நிலையில் சக மாணவர்கள் இவரது சடலத்தினை மீட்டுள்ளனர். நிலப்பகுதியில் தலை குப்புற வீழ்ந்து உயிரிழந்த நிலையிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டதாக சக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மாணவர் இறப்பதற்கு முன்தினம் தமது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றினை செலுத்துவதற்கென கற்றுக் கொண்டிருந்ததாக இதனை அவதானித்துக் கொண்டிருந்த நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சனிக்கிழமை பிற்பகல் வேளை வரை இவரது சடலம் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் அன்றைய தினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இம்மாணவரின் மரணம் தொடர்பில் அக்கரைப்பற்று  பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் பிறந்த துர்கேஷ்வரன் அக்குடும்பத்தின் மூத்தவர் என்றும் இவரது குடும்பத்தில் இவருடன் இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாயார் தோட்டத் தொழிலாளி என்றும் தந்தை கூலித் தொழிலாளி எனவும் கூறப்படுகின்றது.

துர்கேஷனின் மறைவினை அறிந்த அக்கரைமலைப் பிரிவு ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மிகுவும் பின்தங்கிய தமது பிரதேசத்திலிருந்து உருவாகவிருந்த பொறியியலாளர் ஒருவர் கவலைக்கிடமாக உயிரிழந்துள்ளமை எம்மையெல்லாம் ஆளாத்துயரில் ஆட்கொண்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

2 comments:

  1. really heartbreaking news....

    ReplyDelete
  2. Very Sad news... May Almighty Allah bless his family..

    ReplyDelete

Powered by Blogger.