Header Ads



“தேச கேர்த்தி" விருது பெற்றுள்ள, ஒரேயொரு இலங்கை முஸ்லிம் பெண்

– அனஸ் அப்பாஸ் –

அக்குரணையைச் சேர்ந்த அப்துல் காதர் அப்துல் ரஸ்ஸாக் – செய்யத் ஹபீம் மெளலானா தூஃபது மஹ்கூமா தம்பதிகளின் புதல்வியாம் பாத்திமா ஸிமாரா அண்மையில் “தேச கேர்த்தி அரச தேசிய விருது – 2018” பெற்று கௌரவிக்கப்பட்டார். இவரது உயர்ந்த சமூக சேவைப் பணிகளை கௌரவித்தே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் வாழ்ந்துவரும் இவ்விருது பெற்றுள்ள ஒரே முஸ்லிம் பெண் என்ற பெருமை இதனால் இவருக்குக் கிடைத்துள்ளது.

“ஊதாப் பூ” என்ற புனைப்பெயரில் இலக்கிய உலகில் பிரகாசித்துவரும் ஸிமாரா அலி 1984.03.21 ஆம் திகதி பிறந்தார். கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 8 வரை பயின்ற இவர், பின்னர் மடவளை மதீனா மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் கணணி மென்பொருளாளராக பட்டப்படிப்பை முடித்ததுடன், AMI பாடநெறியையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தார்.

அல்-அஷ்ரபியா பாலர் பாடசாலை ஆசிரியையாக இவர் 2001 – 2002 காலப்பகுதியில் பணி புரிந்துள்ளார். பின்னர் B.M.M.S சரக்கு சேவை நிறுவனத்தில் உதவி முகாமையாளர் பதவி வகித்த இவர், தற்போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் தகவல் திணைக்களத்தில் சமூக சேவை, மனித உரிமை பெண்களுக்கான நிர்வாக அதிகாரியாகவும் செயற்படுகின்றார்.

வித்துவ தீபம் அப்துல் காதர் புலவரின் பேத்தி என்று தன்னை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியுறும்  ஸிமாரா, 2003 ஆகஸ்ட் 7ஆம் திகதி மன பந்தத்தில் தன்னுடன் இணைந்த அலி உல் அக்பருடன் அன்பின் 5 பிள்ளைகள் சகிதம் கொழும்பில் வாழ்ந்து வருகின்றார்.

குருந்திரைப்படம் மற்றும் இறுவட்டுகளுக்கு பாடல் எழுதுவதில் சிறந்த திறன்களை வெளிப்படுத்தும் இவர் தென்னிந்தியாவிலும் தனது கைவரிசையைக் காட்டி வருகின்றார்.

பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளுக்கு கவிதை, கட்டுரை, விமர்சனங்கள், குறிப்புக்கள் எழுதுவதுடன், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி / ஒளிபரப்புக்களில் அறிவிப்பு, கதை மற்றும் கவிதை நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்களிகின்றார்.

இருபது வருடங்களுக்கு மேலாக தவமாய் தவமிருந்து எழுதி “கரையைத் தழுவும் அலைகள்” எனும் தனது முதல் கவிதை நூலை கடந்த ஆண்டு (2017) நவம்பரில் கொழும்பு அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் வெளியீடு செய்தார் இந்த ஊதாப் பூ. கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நூலை வெளியிட்டு வைத்தார். மேல் மாகாண சபை உறுப்பினர் பைறூஸ் ஹாஜி, பிரபல ஒலிபரப்பாளரும் கலைஞருமான பி.எச். அப்துல் ஹமீட் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். நூலின் முதல் பிரதியை பிரபல தொழிலதிபர் பௌசுல் ஹமீத் பெற்றுக் கொண்டார்.

பதிமூன்று வயது முதல் பாடசாலை கவிதை பேச்சு போட்டிகளில் பங்கு பற்றியமைய தொடர்ந்து வானொலி கவிதை நிகழ்ச்சிகளில் சிறந்த வாய்ப்பை ஸிமாராவின் கவிதைகள் பெற்றன. இதுவரை இவர் “ஈழக்குயில் விருது”, “சந்தக்கவி விருது” மற்றும் “கவி தென்றல் விருது” ஆகியவற்றை இலக்கியத் துறை பங்களிப்பிற்காக வென்றுள்ளார். உண்மையில் தனது தாயையும், கணவரையும் பெறுமதியான நன்றிகுரியவர்களாக இங்கு குறிப்பிடுகின்றார்.

கல்வியை பாதியில் இழந்த மாணவர்களுக்கான தேவைகளைக் கண்டறிந்து அதற்கான செயற்பாடுகளில் அடுத்து களமிறங்க எண்ணியுள்ள ஸிமாரா, இலக்கியத் துறையிலும் தொடர்ந்து தனது மேலான பங்களிப்புகளை வழங்க உத்தேசித்துள்ளார்.

2002 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் பேராளராக பங்குபற்றி விருதும் பெற்ற ஸிமாரா, சிறு வயதுமுதலே ஆசை வைத்த வழக்கறிஞர் தொழிலுக்கு தன்னால் செல்ல முடியாமல் போனமையை இன்றும் கவலையுடன் நினைவுகூறுகின்றார். எதிர்பார்ப்புக்களில் தொலைத்த பலத்தை எதிர்காலம் அவருக்கு வழங்க வாழ்த்துக்கள்!

2 comments:

Powered by Blogger.