Header Ads



இஸ்லாம் கூறும், எளிய தர்மம் "புன்னகை"

-அபூ ஸாலிஹா-     

புன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்தப் பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகைக் குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும், குறிப்பாக முஸ்லிம்களிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய ஓர் எளிய ஆனால் வசீகரமான உத்தியாக இப் புன்னகையைக் குறித்து இஸ்லாம் அழகிய முறையில் அறிவுறுத்திச் சென்றிருக்கிறது.

இதைப் பிறர் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்கள் அறிந்தோ அறியாமலோ அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தான் வேதனையான உண்மை!

"உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.''

என்று நபி நாயகம்ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லவம்அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான்: திர்மிதீ)

வேறு எந்த ஒரு மதத்திலும் இல்லாத அளவிற்கு, அறிவுக்கு ஒவ்வும் சிறந்த பகுத்தறிவுச் சித்தாந்தத்தை இஸ்லாம் புகுத்தியுள்ளதை இதில் காண முடியும். ஒரு மனிதன் தனக்குச் செய்ய வேண்டிய வழிபாடுகளைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் சொல்லும் «øÄ¡‹, அதே அளவில் பயனைப் பெற்றுத் தரும் இன்னொரு செயல் பற்றியும் கூறுகிறான். இறைவழிபாட்டின் மூலம், தான் வழங்கும் நன்மைகளைப் போன்றே ஒரு மனிதன் சக மனிதர்களுடன் அன்புடன் கலந்துறவாடுவதற்கும் கொட்டித் தருவதாக வாக்களிக்கிறான். சுருக்கமாகச் சொல்வது என்றால்இ சமூகத்தினுள் அழகானதொரு பிணைப்பை ஏற்படுத்தும் இறைவனின் தயாள குணத்தினை சிந்தனையாளர்கள் இதில் இருந்து அறிந்து கொள்ள இயலும்.

"நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்."(அல்குர்ஆன் 3:92)

சமூகத்தில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்னைகள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற கொடிய பல செயல்கள் ஆகியவற்றின் மூல காரணமாக ஒருவரின் வறுமை சொல்லப்படுகிறது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வறுமையை ஒழிக்கும் ஒரே ஆயுதமாக "வளத்தை விநியோகித்தல்" எனும் அற்புதத் திட்டமான 'ஜகாத்'தை ஏற்படுத்திய இஸ்லாம், தமது இறைவிசுவாசத்தினைக் காட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தங்களால் இயன்ற அளவிற்குச் சமூகத்திற்கு, தான-தர்மங்கள் செய்வதை வலியுறுத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கான மூலக்காரணம் விநியோகத்தில்தான் உள்ளது என்பதை அறிந்து உருவாக்கப்பட்ட திட்டமே இது என்பதை சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்ள இயலும்.

அதிகம் சிரிக்காத சிடுமூஞ்சியாய் இருப்பவரும் யதார்த்தத்தில் சிரிப்பதை விரும்பக்கூடியவரே! நீங்கள் விரும்பிய ஒன்றை உங்கள் சகோதரருக்காக விரும்பாத வரையில் ஒருவர் உண்மையாளராக மாட்டார் என்று நபிகள் நாயகம்ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லவம் அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரி, முஸ்லிம்)

எனவே, இதுவரை நம் முகத்தில் அணிந்து வந்த கடுமை எனும் முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு இந்த நிமிடம் முதல் ஒரு புத்துணர்வுடன் நமது வாழ்க்கையைத் துவக்குவோம். நம் குடும்பத்திலிருந்துத் துவங்கி, சகோதரர்களுடன், நண்பர்களுடன், அண்டை வீட்டார், உற்றார் உறவினர் ஆகிய அனைவருடனும் நபிகள் நாயகம்ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லவம் அவர்கள் காட்டித்தந்து ஊக்கப்படுத்திய கனிவுடன் கூடி புன்னகையை முகத்தில் தவழ விடுவோம். அதன் மூலம் பிறரின் இறுக மூடப்பட்ட மனங்களையும் புன்னகை என்ற கனிவான நம் திறவுகோல் கொண்டு திறப்போம். இம்மையில் சமூகத்தில் சகோதரப் பிணைப்பை உறுதி செய்து கொள்வதுடன் மறுமையில் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்லியிருக்கும் புன்னகை எனும் நபிவழியைப் பின்பற்றியதன் மூலம் நிறைய தர்மங்கள் செய்த நன்மையையும் பெற்றுக்கொள்வோம், இன்ஷா அல்லாஹ்!

2 comments:

  1. இஸ்லாத்தை - சாந்தியை அனுபவிப்பதற்கான ஓர் எளிய வழியும் கூட. சிறந்த ஆக்கம்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த புன்னகையை முகத்தை மூடிக்கொண்டு பிறரை முகங்கொள்ளும் பெண்கள் எவ்வாறு சாத்தியமாக்குகிறார்கள்?

    இன்முகத்தோடும் புன்னகையோடும் இதர பெண்களை அணுகி இஸ்லாம் அவர்களது மார்க்கமும்தான் என்பதை எவ்வாறு நிறுவப்போகிறார்கள்?

    புன்னகை சிந்தும் மனிதனது இயல்பான எதிர்பார்ப்பான பதில் புன்னகையை அவளிடமிருந்து இவள் பெறாதபோது ஓர் மனக்குறை இவளுக்கு ஏற்படாதா?

    ReplyDelete

Powered by Blogger.