Header Ads



''ஷஃபான்'' நூதனங்களை விட்டொழித்து, ரமழானுக்கு தயாராகுவோம்..!

-எம்.ஐ அன்வர் (ஸலபி) 

ஷஃபான் என்ற சொல் ‘ஷிஃபுன்‘ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். கணவாய் என்பது இதன் பொருள். இந்த மாதத்தில் நன்மைகள் அதிகளவில் கிட்டுவதால் இப்பெயர் வழங்கலாயிற்று என அறிஞர்கள் கூறுகின்றனர். கணவாய்கள் மலைக்குச் செல்வதற்கு வழியாக இருப்பது போன்று இந்த மாதம் நன்மைகளையும், இறையருளையும் அதிகளவில் பெறும் வழியாக இருக்கின்றது. 

ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் இம்மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது. ஆகவே ரமழானுக்கு முந்திய மாதமே ஷஃபான் மாதமாகும். அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ஷஃபான் மாதம் எமக்கு துணைபுரிகிறது.

இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை, என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

மற்றுமொரு அறிவிப்பில்,

நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்) என வந்துள்ளது.

பிறிதொரு அறிவிப்பில்

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதால் அம்மாதம் நபி (ஸல்) அவர்களுக்கு மிக விருப்பத்திற்குரிய மாதங்களில் ஒன்றாக இருந்தது. மிகச் சில நாட்கள் தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அம்மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்பவர்களாகவே காணப்பட்டார்கள். எனினும், அவர்கள் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். (நஸஈ).

ஷஃபான் மாதம் முழுவதும், அம்மாத்தின் அதிகமான நாடகளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என வந்துள்ள மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போன்று வெளிப்படையாகத் தோன்றினாலும், அம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் நோன்பு நோற்காது அம்மாதத்தின் பெரும்பாலான நாட்களில் மாத்திரம் தான் நோற்றிருக்கின்றார்கள் என்பதை குறித்து ஹதீஸ்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது எவ்வித முரண்பாடுகளுமின்றி விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

ஷவ்வால் ஆறு நோன்புகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)

வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)

ஆஷுரா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்).

இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை எமது முஸ்லிம்களின் அதிகமானோர் அலட்சியம் செய்கின்றார்கள். ஆனால் சரியான சான்றுகளெதுவும் இல்லாத, எந்த விதமான உத்தரவாதமும் கூறப்படாத பராஅத் நோன்பை நோற்க ஆர்வம் கொள்கின்றார்கள். இது கவலைப்பட வேண்டியதும், தவிர்க்கப்பட வேண்டிய விசயமுமாகும்.

எனவே, ஷஃபானின் 15 ஆம் நாளுக்கு தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் இல்லை என விளங்கி, நாம் ஷஃபானில் கூடுதலாக நோன்புகள் நோற்று நூதனங்களை விட்டொழித்து ரமழானுக்கு தயாராகுவோமாக! 

No comments

Powered by Blogger.