Header Ads



ஷைத்தானை வெற்றிகொள்ள, தேவையான ஆயுதங்கள்..!

-எம்.அன்வர்தீன்-   

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. மனித குலத்தின் மாபெரும் விரோதியான ஷைத்தான், மனிதர்களை வழிகெடுத்து அவர்களை அழிவின்பால் இட்டுச்சென்று இறுதியில் நரகில் சேர்க்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றான். இதற்காக இறைவனிடமே அவன் சவால் விட்டு வந்திருப்பதை அல்-குர்ஆன் நமக்கு எச்சரிக்கின்றது.

"(அதற்கு இப்லீஸ்) ‘நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்’ என்று கூறினான். ‘பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்;ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்’ (என்றும் கூறினான்). அதற்கு இறைவன், ‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு – அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறினான்" (அல்-குர்ஆன் 7:16-18)

மனிதர்களின் எண்ணங்களில் வீணான சந்தேகங்களை உருவாக்கி அவர்களை வழிகெடுப்பதுவும் மனித குலத்தின் எதிரியான ஷைத்தானின் ஒரு வழியாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இதுபோன்ற விஷயங்களில் நம்மை எச்சரித்திருக்கிறார்கள்.

"ஷைத்தான் உங்களில் ஒருவரிடம் வந்து, இவற்றை யார் படைத்தது, இவற்றை யார் படைத்தது என்று கேட்டு, உன்னுடைய இறைவனை யார் படைத்தது என்று கேட்பான். இது போன்று ஒருவருக்கு நிகழ்ந்தால், அவர் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடி, அது போன்ற எண்ணங்களை விட்டுவிட வேண்டும்" (ஆதாரம் : புகாரி)

இது போன்ற சந்தர்ப்பத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நமக்கு முக்கியமான 2 விஷயங்களை கற்றுத்தந்துள்ளார்கள்.

(1) அல்லாஹ்விடம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டவராக அவனிடமே பாதுகாவல் தேடவேண்டும். (2) எந்த விஷயத்தில் இத்தகைய ஷைத்தானிய ஊசலாட்டம் ஏற்பட்டதோ, அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அதிலிருந்து விடுபட்டு, மற்ற பயனுள்ள விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஒருவர் அல்-குர்ஆனையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையையும் முறையே பின்பற்றினால் அவர் ஷைத்தானை விரட்டி அடித்து அவனை கோபமுண்டாக்கிவிடலாம்:

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:"ஆதமுடைய மகன் குர்ஆனில் ஒரு வசனத்தை ஓதி ஸஜ்தா செய்யும் போது, ஷைத்தான் அங்கிருந்து விலகி அழுதுகொண்டு செல்கின்றான். ஆதமுடைய மகனுக்கு ஸஜ்தா செய்ய கட்டளை இடப்பட்டால் அவன் செய்கின்றான். ஆகையால் அவனுக்கு சொர்க்கம்; எனக்கு கட்டளையிடப்பட்டபோது நான் நிராகரித்தேன்; எனக்கு நரகம் தான்! நாசமுண்டாகட்டும்" (ஆதாரம் : முஸ்லிம்)

பின்வரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் எப்படி பாதுகாப்புத் தேடுவது என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகின்றது:

கழிவறையில் நுழையும் போது: ‘அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மினல் குப்தி வல் கபாயித்’ பொருள் : "ஆண் பெண் ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்’

கோபமாக இருக்கும் போது: ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ராஜீம்’ பொருள் : ‘விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்’

உடலுறவின் போது: ‘பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம ஜன்னிப்னல் ஷைத்தான் வ ஜன்னிப்னல் ஷைத்தான மா ரஜக்தனா’ பொருள் : ‘இறைவா! ஷைத்தானை விட்டும் எங்களை தூரமாக்கி வைப்பாயாக! எங்களுக்கு அருளப்போகும் சந்ததியையும் ஷைத்தானை விட்டும் தூரமாக்கி வைப்பாயாக!’

"நல்லவர்களாக நம்மிடம் வந்து நமக்கு நேர்மையான அறிவுரை கூறுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நல்லவர்களாக இருந்திருந்திருந்தால் தனக்குத்தானே நன்மை செய்துகொண்டிருக்கமுடியும்! அவ்வாறில்லாமல், அவன் தனக்குத்தானே அநியாயம் செய்துகொண்டவனாகி விட்டான். நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது தொழுகையை சுருக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினால், நீங்கள் தொழுகையை நீளமாக்கிக்கொள்ளுங்கள்! உங்கள் உளூ முறிந்துவிட்டது என்று கூறினால், ‘நீ பொய்யன் என்று கூறுங்கள். இறந்தவர்களுக்கு கேட்கச் செய்யவும் நன்மை மற்றும் தீமைச் செய்யமுடியும் என்று என்று கூறினால் ‘நீ பொய்யன் என்று கூறுங்கள். நீங்கள் சாப்பிடும் போது அவனுக்கு மாற்றமாக வலது கையால் உண்ணுங்கள்" (ஆதாரம் : ஸஹீஹுல் ஜாமிவு 4/47)

"நீங்கள் சாப்பிடும் போது ஒரு பருக்கை கீழே விழுந்துவிட்டால் அதை எடுத்துக்கொள்ளுங்கள்! ஷைத்தானுக்காக அதை விட்டுவிடாதீர்கள்" (ஆதாரம் :முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஷைத்தான் இறைவனிடம் உன்னுடைய அடியார்களை அவர்கள் உயிருடன் உள்ளவரை வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்று கூறினார். இறைவன், ‘அவர்கள் என்னிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கும் வரை என்னுடைய கருணையினால் மன்னித்துக் கொண்டே இருப்பேன்’ என்று கூறினான். (ஆதாரம் : அஹ்மத்)

ஆகையால் நாம் அல்லாஹ்விடமே திரும்பி பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நமது தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அழகிய படிப்பினை உள்ளது. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம், ‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’ என்று கூறினார்கள். (அல்-குர்ஆன் 7:23)

No comments

Powered by Blogger.