Header Ads



சமூகத்தையும், கலாச்சாரத்தையும் உடைத்தெறிவதில் எனக்கு உடன்பாடில்லை - சமீலா யூசுப் அலி


“Always remember that when a man goes out of the room, he leaves everything in it behind… When a woman goes out she carries everything that happened in the room along with her.” ― Alice Munro, Too Much Happiness

பெண்களின் எழுத்து பற்றி பேசும் இந்த அரங்கில் பெண் என்ற ரீதியில் பொதுவாகவும் குறிப்பாக முஸ்லிம் பெண் என்ற வகையிலும் என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்க்காக என்னை இங்கு அழைத்த இந்த ஏற்பாட்டுக்குழுவுக்கு  எனதுநன்றிகள்.

வாழ்க்கை சார்ந்த என் அனுபவங்கள் வித்தியாசமானவை.

வாசிப்பினூடாக வாழ்க்கையை வாசிக்கத் தொடங்கும் அல்லது பார்க்கத் தொடங்கும் எல்லோருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை.தனித்துவமானவை தான். அதில் சந்தேகம் கிடையாது.

சிமமன்டா அடீச்சியினுடைய கமலாதாஸ் சுரையாவுடைய ஜும்பா லாஹீரியுடைய அல்லது அலிஸ் மன்ரோவுடைய வாழ்க்கை முறைமைகளும் சூழல் அமைப்பு,இருத்தலியல் போராட்டங்களும்  ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை; ஆனால் அவர்கள் எல்லோரையும்  ஒரே புள்ளியில் இணைப்பது, தான் சார்ந்த சமூகத்தின் அழுத்தங்களை சுட்டுவிரல் நீட்டி விசாரிக்கும் எழுத்துக்கள்; அவர்தம் சுய விசாரங்கள்.

என் இலக்கியப் பயணம் என் தந்தையின் மடியில் தான் ஆரம்பித்தது. என்னுடைய வாப்பா ஊடாகத் தான் தமிழ் இலக்கியங்களும் உலக இலக்கியங்களும் நிரம்ப சிறுவயதிலேயே எனக்கு பரீட்சயமாகின. அவர் தமிழும் பிறகு சிங்களப் பாடசாலைகளில் சிங்கள இலக்கியமும் கற்றுக் கொடுத்தவர்.

மார்டின் விக்ரமசிங்க,குமாரதுங்க முனிதாச, ஜெயகாந்தன்,கல்கி, மு,வரதராசன் Anton chekhov,Tolstoy,victor hugo,ernest hemingway போன்றவர்களையெல்லாம் வாப்பா அறிமுகப்படுத்தினார்.

அப்போது எனக்கு ஜெயகாந்தனின் ‘நினைத்துப் பார்க்கிறேன்’ தொகுதி மிகப் பிடித்தமாயிருந்தது.13603301_10154471106812323_5788229307986596911_o (1)

வாப்பா அவரது இளமையில் மார்க்ஸிச்ட் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தார்.வாழ்க்கையைப்பற்றிய ஒரு தெளிவான நோக்கு அவரிடமிருந்தது. தீவிரமான வாசிப்பும் தேடலும் அவரிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்ட பழக்கங்கள்.

அதற்கு அப்பால் எனது வாசிப்பும் தேடலும்  நீட்சி பெறுவதில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.

நான் பிறந்தது மாவனல்லையில். சூழ வர இருந்தவை சிங்களக் கிராமங்கள்.

எனது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர்களும் அரசதுறையில் பணியாற்றுபவர்களும் மீதிப் பேர் வியாபாரத்திலும் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்ட  சமூகம்.இலக்கியம்,ரசனை இவற்றில் அதிக ஈடுபாடற்ற அல்லது அதற்கான நேரத்தை கொண்டிராத சமூகம்.

Academics அறிவுத்துறையில் அதிகம் ஈடுபடக் கூடியவர்கள் இருந்த போதிலும் எழுத்து,இலக்கியம் ஆக்கத் துறை சார்ந்த நுண்ணுணர்வுகள் முன்னுரிமை பெறாத சமூக ஒழுங்கு.

தமிழ் நூற்கள் வாங்குவதென்றால் கண்டிக்குச் செல்ல வேண்டும்.மாவனல்லை நூலகத்தில் சிங்கள நூற்களே அதிகமாயிருந்தன,மருந்துக்குப் போல சில தமிழ் நூற்கள்.

அப்போதென் மனசில் பீடம் போட்டு உட்கார்ந்திருந்தவர்கள் வைரமுத்து,மேத்தா மற்றும் அப்துல் ரஹ்மான். கிட்டத்தட்ட அவர்களது கவிதைகளின் ஒவ்வொரு வரியும் அப்போது மனப்பாடம்.

கலீல் ஜிப்ரானின் சில நூற்களில் தமிழாக்கங்களும் கிடைத்தன.முறிந்த சிறகுகளும் ஞானிகளின் தோட்டமும் மிகப் பிடித்தமாகின. அதற்குப் பின்வந்த காலம் வாசிப்பைப் பொருத்தவரை ஒரு தேக்க நிலை stagnant period.

ஒரு மூடிய semi conservative ஆன சமூகத்தில் நடக்கக் கூடிய விடயங்கள் என்னையும் சுற்றியிருந்தன. வெளி சமூகத்தோடு அதிகம் புழக்கம் இல்லாத, வாசிப்பினையோ எழுத்தினையோ அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியாத ஒரு நிலமை.

எழுத்தில் துணிச்சலாக சில விடயங்களை வெளிக் கொணரும் போது ஏற்படும் சமூக அழுத்தங்கள், அதை எதிர் கொள்ளும் பக்குவம் இருந்தாலும் மறைமுகமாக குடும்ப அமைப்புகளுக்குள் ஏற்படும் பாதிப்புக்கள். நெருக்கடிகள் எழுத்தின் வீரியத்தினை வெகுவாகக் குறைத்து விட்டன.

என்னுடைய தாகம் மிகைத்திருந்தாலும் அதற்கான வாய்ப்புக்களை இனங்கண்டு கொள்வதில் அதிக தாமதம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் தான் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு தான் நான் இன்னும் தீவிரமாக வாசிக்கத் துவங்கினேன். அம்பையின் காட்டில் ஒரு மான் எனக்குள் கனன்று கொண்டிருந்த கேள்விகளை இன்னும் விசிறி விட்டது.

வைக்கம் முஹம்மது பஷீரின் கதைகள் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்க வைத்தன.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் என் தேடலுக்கான தீனி கிடைக்கத் துவங்கியது. பல்கலைக் கழக நூற்களஞ்சியத்தில் சுந்தர ராமசாமி,நகுலன்,அசோக மித்திரன் போன்றவர்களின் எழுத்துக்களைக் காணக் கிடைத்தது.

சம காலத்திலேயே ஆங்கில இலக்கிய வாசிப்பும் தீவிரமடையத் தொடங்கியது. மனுஷ்யபுத்திரன்,சல்மா மற்றும் சுந்தரராமசாமி போன்றவர்களின் எழுத்தை இணையத்தளங்களூடாக வாசிக்கத் தொடங்கினேன்.

சல்மாவின் இரண்டாம் ஜாமம் எனக்கு மிக மிகப் பிடித்தமாயிருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை பிரதிபளிக்கும் அந்த நாவலில் உள்ளீடுகள் நான் பிறந்து வளர்ந்த காலத்துக்கு சற்று முந்தையதோர் காலகட்டத்திலிருந்த என் சமூகத்தை அப்படியே வெளிக்கொணர்ந்திருந்தது அந்த விருப்பத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

Sociology படிக்கும் போது வெர்ஜீனியா வூல்ப்,பெட்டி பீரிடன் போன்றவர்களும் பெண்ணிய இயக்கங்களும் அறிமுகமாகின.

பெட்டி ப்ரீடனின் பெமினின் மிஸ்டீக் நூலில் பெண்ணின் அடையாளச் சிக்கல் identity crisis சம்பந்தமாகப் பேசும் the problem which has no name பெயர் அற்ற ஒரு பிரச்சினை  என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. ஒரு பெண் தாய் அல்லது மனைவி என்ற பாத்திரங்களோடு மாத்திரம் தன்னை நிறுத்திக்கொள்வது அல்லது சுறுக்கிக் கொள்வது மிகப்பெரியதோர் அநியாயம் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தேன்.

பெண்ணின் சுயம் பற்றியும் அடையாளம் பற்றியும் இன்னும் என் வாசிப்பினை விசாலப்படுத்தினேன்.As Betty Friedan says,  the problem lay buried, unspoken, for many years in the minds of women. பெண்ணுடைய பிரச்சினைகளை ஆண்கள் அடையாளப்படுத்தும் அவளுக்கான தீர்மானங்களை அவர்களே எடுக்கும் கலாச்சாரத்தை கண்டு மனம் வெதும்பினேன்.

In order to be universal, you have to be rooted in your own culture. Abbas Kiarostami

உலகளாவிய மனிதனாக நீ  ஆக வேண்டுமானால் முதலில் உன் சொந்தக் கலாச்சாரத்தில் உன் வேர்கள் ஆழமாக இருக்க வேண்டும் நான் வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தையும் கலாச்சாரத்தையும் ஒட்டுமொத்தமாக மறுதலித்து உடைத்தெறிவதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்குள்ளிருந்தே மாற்றத்திற்கான முன்னுரையை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

நான் எனக்கான அடையாளத்தை என் எழுத்துக்களுக்குள்ளிருந்து கண்டெடுத்தேன்.

இனி ….

அந்த எழுத்துக்கள் பேசட்டும்.

-நன்றி  Eathuvarai-

2 comments:

  1. You should write as much as possible...but your writing should have mission and visision

    That mission is that each one of our writing should represent Islamic values ...dawa should be core stone of our writing ..
    Many Muslim women become good writer and speaker but with mission in mind.
    As Sister Marian Jameela...and sister Jasmine Mugahed .many more

    ReplyDelete
  2. ஷாமிலா தாத்தா, உங்களுடைய எழுத்துக்களை வாசித்து இருக்கின்றேன். நீங்கள் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் பெயர்களை குறிப்பிட்டாலும், உங்களின் எழுத்துக்கள், படைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நின்றுகொண்டு போலிப் புரட்சி பேசுகின்றனவே தவிர, சுதந்திர சிந்தனைகளை வெளிப்படுத்துபவையாக, நிஜமான தடைகளை தகர்த்தெறியும் அழைப்புக்களாக இல்லை, வெறும் சமாளிப்புகளாக, சுய புராணங்களாகவே உள்ளன.

    அதைவிடவும், உங்கள் வாப்பா இளவயதில் மார்க்சிசவாதியாக இருந்தார் என்பதை நீங்கள் பெருமையாக சொல்கின்றீர்களா, அல்லது இஸ்லாமியத்திற்கு அஞ்சி கவலையாக சொல்கின்றீர்களா?

    உண்மையான எழுத்து, ஒரு வட்டத்திற்குள் நின்றுகொண்டு போலிப் புரட்சி பேசாமல், நிஜமான புரட்சி பேச வேண்டும், நிஜமான புரட்சிக்கு வெளிகள் உண்டு, வேலிகள் கிடயாது.

    ReplyDelete

Powered by Blogger.