"பாவமன்னிப்புக்கு குறுக்கு வழிகள் இல்லை"
நாத்திகர்களைப் பொறுத்தவரை பாவம் பற்றியோ மன்னிப்பு பற்றியோ கவலைப் படுவதில்லை. ஆத்திகர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால் கடவுளிடம் இருந்து தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் கடவுளை நம்பும் ஆத்திகர்களும் பாவங்களில் அதிகமாக மூழ்குவதற்குக் காரணம் பாவமன்னிப்பு அல்லது பாவ பரிகாரம் பற்றிய தெளிவின்மையே. பாவபரிகாரம் என்ற பெயரில் சில இடைத்தரகர்கள் அறிமுகப்படுத்தியுள்ள சில சடங்குகளை உண்மை என்று பலர் நம்புகின்றனர். அவற்றை நிறைவேற்றுவதன் மூலம் தங்களின் பாவங்கள் கழுகப்பட்டு விடுகின்றன என்ற நம்பிக்கை அவர்களை மேலும் பாவங்கள் செய்ய ஊக்குவிக்கிறது.
வேறு பலர் ஒரு குறிப்பிட்ட மனிதரில் நம்பிக்கை கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்றும் நம்புகின்றனர். அந்த புனிதர் அனைத்து மனிதர்களின் பாவங்களுக்காகவும் தன்னையே தியாகம் செய்தார் என்று இவர்கள் நம்புவதால் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் அனைத்துமே மன்னிக்கப்பட்டவையே என்ற உணர்வு மேலோங்குகிறது. முக்கியமாக மதுப்பழக்கம் விபச்சாரம் போன்றவை பூமியில் பெருக இது ஒரு காரணமாக அமைகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் உண்மை இறை மார்க்கமோ இறைவனை மாபெரும் கருணையாளன் என்று அறிமுகப்படுத்தும் அதேவேளையில் இடைத்தரகர்கள் கற்பிக்கக்கூடிய வீண் சடங்குகள் அல்லது மூடமான நம்பிக்கைகள் மூலம் பாவங்கள் மன்னிக்கப் படுவதில்லை என்கிறது.
''தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!'' (அல்குர்ஆன் 39:53)
ஆனால்ஒருவர் செய்த பாவத்திற்கு அவரே பொறுப்பாவார் என்றும் மனம்வருந்தி இறைவனிடம் முறையிட்டு மன்றாடுதல் மூலமே பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு என்று தெளிவுபட கூறுகிறது. பாவத்தை நினைத்து வருந்துதல், பாவமன்னிப்புக்காக இறைவனிடம் மன்றாடுதல், மீண்டும் பாவத்தின் பக்கம் மீளாதிருத்தல் ஆகிய மூன்று நிபந்தனைகளும் பேணப்பட்டாலே பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்படும் என்கிறது இஸ்லாம்.
தனிநபர்களை பாதிக்கக்கூடிய குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட நபர் மன்னித்தாலே யன்றி இறைவன் மன்னிப்பதில்லை என்றும் சமூகங்களை பாதிக்கக்கூடிய விபச்சாரம், கற்பழிப்பு, கொலை போன்ற பெருங்குற்றங்களுக்கு இவ்வுலகிலேயே அதற்குரிய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் இறைவனிடம் மன்னிப்பு உண்டு என்றும் தெளிவுபடுத்துகிறது இஸ்லாம்.
மீறப்பட்ட மனித உரிமைகளுக்காகப் பரிகாரம் தேடுதல்
எந்த மனிதராக இருந்தாலும் அவரால் மற்றவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். உடல், பொருளாதாரம் மற்றும் மன ரீதியாக நம்மால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டும். மனிதர்களுக்கு அநீதி இழைத்த நிலையில் நாம் மரணித்தால் மறுமையில் தண்டனைகளை நாம் சந்திக்க நேரும்.
= மற்றவரின் மானம், அல்லது வேறு பொருள் சம்பந்தமாக ஒருவர் ஏதேனும் அநீதி இழைத்திருந்தால் தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும் செல்லாத நாள் வருவதற்கு முன் இன்றே அவரிடம் பரிகாரம் தேடிக் கொள்ளவும். இவரிடம் நல்லறங்கள் இருந்தால் இவர் செய்த அநியாயத்தின் அளவுக்கு இவரிடமிருந்து நல்லறம் பிடுங்கப்படும். இவரிடம் நன்மைகள் இல்லாவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவரின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர் மீது சுமத்தப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2449, 6534)
நஷ்டவாளி யார் தெரியுமா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யாரிடம் காசுகளும், தளவாடங்களும் இல்லையோ அவர் தான் நஷடவாளி என்று விடையளித்தனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் ஒருவர் வருவார். அதே சமயம் இவனைத் திட்டியிருப்பார்; அவன் மீது அவதூறு கூறியிருப்பார்; இவனது சொத்தைச் சாப்பிட்டிருப்பார்; அவனது இரத்தத்தை ஓட்டியிருப்பார்; இவனை அடித்திருப்பார். அதன் காரணமாக இவர் செய்த நன்மைகள் இவனுக்கும் அவனுக்குமாக வழங்கப்படும். கணக்குத் தீர்வதற்கு முன் இவரது நன்மைகள் முடிந்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர் மீது போடப்படும். பின்னர் இவர் நரகில் வீசப்படுவார். இவர் தான் மறுமை நாளில் நஷ்டவாளி என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4678)

Post a Comment