Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் குறுநில மன்னர்களால், குழப்பியடிக்கப்படும் நல்லாட்சியின் நோக்குகள்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

முள் ஒன்று காலில் தைத்தால் அதுவாகவே தம்மைக் குத்தி விட்டதாக அதன் மீதே குற்றஞ் சுமத்தி  விடுவதுதான் எல்லோருக்கும் பழக்கமானது. ஆனால், கீழே பார்த்து நடக்காமல் தெரிந்து கொண்டே அதனை மிதித்து விட்டு பின்னர் முள்ளின் மீது குற்றஞ் சுமத்துவது  தப்பில்லையா? அதே போன்றே குத்திய முள்ளை இன்னொரு  கூரான பொருளினால் எடுப்பதற்காக அதே இடத்தில்  நாமே குத்திக் கொண்டு, ஓரிடத்தில் ஏற்பட்ட வேதனைக்காக உடம்பெல்லாம் வலிக்கும் நிலைமையை உருவாக்குகிறோம். ஆக, இந்த இரண்டு விடயங்கள் ஊடாகவும் நாம் நமக்கே வலியை ஏற்படுத்திக் கொள்வதாக முடிகிறது.  நாங்களே அனைத்துப் பிழைகளையும் தெரிந்து கொண்டே செய்து விடுகிறோம். ஆனால், அதன் பலாபலன்களையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அவை அனைவரையும் பாதிக்கவே செய்யும்.

இந்த விடயத்தை இன்றைய அரசியல் களத்தில் யாருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு ஒப்பிட முடியும் என்று பார்த்தால், அது முஸ்லிம் காங்கிரஸுக்கே பொருத்தமான தொப்பியாக அமைகிறது. அதற்காக  கட்சியின் தலைமையையோ அல்லது அதன் சில முக்கியஸ்தர்களையோ குற்றம் சாட்டி விடவும் முடியாது. ஆனால், அந்தக் கட்சிக்குள்ளிருக்கும் சில குறுநில மன்னர்களால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.  இதில் தலைமையின் தப்பு என்னவென்றால் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதுதான். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் ஆக மாற நினைத்தால் அல்லது மாறுவதனைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது தப்பில்தான் போய் முடியும். தெரிந்து செய்யும் சின்னச்.. சின்ன.. சின்னத்தனமான வேலைகளால் ஒட்டு மொத்த கட்சிக்கே மாசு ஏற்பட்டு விடும். ஆமாம், சின்னதொரு முள் தைத்ததால் ஏற்பட்ட வலி முழு  உடம்பையும் நோவிப்பது  போன்றுதான் இதுவும்.

கருத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடுவதற்கான உரிமை அனைத்தும் இந்த நாட்டில் இன்று உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக புதிய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அந்த நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸில் உள்ள சிலர் மட்டும் பல விடயங்களில் முன்னைய ஆட்சியையே பின்பற்றுகிறார்களோ தெரியாது. பழக்க தோஷத்தை உடனடியாக மாற்றுவதும் கஷ்டம்தான்.  

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் என தங்களை மிதமான  கற்பனைக்கு உள்ளாக்கிக் கொண்டுள்ள சிலர் இன்று எவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதனை அறியும் போது வேதனையாக உள்ளது. தங்களது காட்டாச்சியை அங்கு அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். சிலவேளைகளில் பழுத்த ஓலைகளைப் பார்த்து குருத்து ஓலைகள் சிரித்து வேதனைப்படுத்தும் சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை.

அண்மையில் மூதூர், சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இதற்கு உதாரணமாகின்றன. பிற கட்சிகள், அமைப்புகள் தங்களது கருத்துகளை வெளியிட முடியாத நிலைமைகள் அங்கு தோன்றியுள்ளன. மாற்றுக் கருத்துக் கொண்டோரின் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் அங்கு மறுக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அண்மையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ”தற்போதைய அரசியல் நிலவரமும்  நல்லாட்சிக்கான எமது பங்களிப்பும்” எனும் தலைப்பில் சாய்ந்தமருதுவில்  ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, இந்தக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரசார செயலாளர் சிராஜ் மஸ்ஹுர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது சபையில் இருந்தவா்களினால் கேள்விகள் கேட்கப்பட்டதால்  அங்கு அமைதி இன்மை தோன்றியதுடன் அசாதாரண நிலைமை உருவாகி வன்முறையாக வெடித்தது.  இதனையடுத்து கூச்சல், குழப்பம் கைகலப்பு ஏற்பட்டதுடன்   மண்டபத்தின் கண்ணாடிகள்,  கதிரைகள்  நொறுக்கப்பட்டன. இவ்வாறான நிலைமைக்கு மாற்றுக் கருத்துடையோரே ஆளாகினர். இந்த குழப்பகரமான சம்பவத்தின் பின்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில குறுநில மன்னர்களே செயற்பட்டனர் என்பது உடனடியாக தெரிய வந்தது.

சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கட்சியின் தவிசாளரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்திருந்தார். அந்தக் கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

”அரசியல் அடக்குமுறை, வன்முறை மற்றும் காடைத்தனம் என்பனவற்றுக்கு எதிராக வாக்களித்தே மக்கள் இந்த மாற்றத்தினை ஏற்படுத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததாகும். இறுதி நேரத்திலேயே நீங்கள் இணைந்து கொண்ட போதிலும் கூட  நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே தானும் முன்வந்திருப்பதாக நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் அதேவேளை? உங்களின் உள்ளூர்த் தலைவர்களின் ஆதரவுடன் உங்களது கட்சிக்காரர்கள்  மேற்கொள்ளும் காடைத்தனம் மிகவும் கவலையளிக்கின்றது. நாகரீகமான முற்போக்கான அரசியலை நோக்கிய மாற்றம் நிகழத் தொடங்கியுள்ள நிலையில் உங்களது கட்சியானது அநாகரீகமான அரசியல் கலாசாரத்தை ஏன் தொடர்கிறது என்பது  எனக்குப் புரியவில்லை. அத்தோடு எமது அமைப்புக்கு எதிராக  உங்களின் கட்சிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் இந்த வன்முறைகளுக்கு நீங்களும் ஆதரவளிக்கின்றீர்களா என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளிட்டிருந்து. அதில் இரு முஸ்லிம் குழுக்களுக்கடையில் கிழக்கில் பாரிய மோதல் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த சில ஆயுததாரிகள்  தாக்குதல் நடத்தியதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்து.  ஒரு விடயம் சிங்கள ஊடகங்களால் எவ்வாறு பிரசாரப்படுத்தப்படுகிறது. அதன் பின்விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதனையும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள  வேண்டும். 

சிங்கள இனவாத சக்திகள் இதனை முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஆயுத மோதலாக சித்திரிக்கும் பட்சத்தில் தேசிய ரீதியில் இதன் தாக்கம் அந்தக் கட்சியை மட்டுமல்ல அது சார்ந்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தையே தலைகுனியும் நிலைக்கு  ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

இதுபோன்றே மூதூரிலும்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால்  ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திலும் சில அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் அமைசச்ர் ஹக்கீம் எவ்வாறு நடந்து கொள்வாரென தெரியவில்லை.  இவ்வாறான விரும்பத்தகாத, வெறுக்கத்த சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் தடுப்பது கட்சித் தலைமையின் பொறுப்பாகும். ஆட்.சி, அதிகாரம் உள்ளது என்பதற்காக மாற்றுக் கருத்துடைய எவருக்கும் தடைகளை, தீங்குகளை ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு இடம்பெறுமாயின் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல் நல்லாட்சியும் ஆகிவிடும்.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கூட்டங்களை அக்கரைப்பற்றில் நடத்திய போதும் நடத்த முயற்சித்த போதும் பிறிதொரு கட்சியினால் அதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகளை, துன்பங்களை அந்தக் கட்சி மறந்து விடக் கூடாது. அக்கரைப்பற்றில் கூட்டங்களை நடத்த முடியாத அளவு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸ் தடுக்கப்பட்டிருந்தபோது கட்சி தொண்டர்களால் அன்று  எதனையும் செய்ய முடியாதிருந்தாலும் வேதனைப்பட்டிருப்பார்கள் என்பது உண்மை. அதேபோன்றதொரு நிலைமை இன்று முஸ்லிம் காங்கிரஸினால் பிற  கட்சிகளுக்கு ஏற்படுமோ என்ற அச்ச நிலைமை தோன்றியுள்ளது.

No comments

Powered by Blogger.