Header Ads



சுதந்திரக் கட்சியில் மைத்திரி - மஹிந்த பனிப்போர், முஸ்லிம் கட்சிகள் குறித்து ரணிலுக்கு நெருக்கடி

-நஜீப் பின் கபூர்-

சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த மாவட்டமான பொலன்னறுவைக்கு சென்று அங்கு தனது மக்கள் ஏற்பாடு செய்திருந்த பல வரவேற்புக் கூட்டங்களில் தற்போதய ஜனாதிபதி கலந்து கொண்டு பேசி இருந்தார். இன்று உங்கள் முன் ஜனாதிபதியாகத் தோன்றி இருக்கின்ற  நான் தோற்றுப் போயிருந்தால் என்னை மண்ணுக்குள் போட்டுப் புதைத்திருப்பார்கள். எனது பிள்ளைகளையும் அவர்கள் சிறைக்குள் தள்ளி விடுவதற்கும் ஏற்பாடுகள் இருந்தது. 

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரனதுங்ஹவும் தனக்கு ஏற்பட்டுள்ள உயிரபத்துப் பற்றி அப்போது பேசி இருந்தார். ஜனநாயகத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு ஆபத்துக்கள் நிறையவே இருக்கின்றது என்னைக் கொன்று விட்டாலும் எனது சடலத்தை ஏந்திக் கொண்டாவது இந்தப் போரட்டத்தில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். என்று அமைச்சர் ராஜித அன்று குறிப்பிட்டிருந்தார். 

இலங்கையில் நடைபெற்ற தேர்தல்கள் பலவற்றறை நாம் நேரடியாகப் பார்த்திருக்கின்றோம். அவற்றில் இதுபோன்ற வார்த்தைகள் பேசப்பட்டிருப்பதை நாம் ஒருபோதும் கேட்டிருக்கவில்லை. இப்படி இந்தத் தலைவர்கள் பகிரங்க மேடைகளில் உச்சரிக்கின்ற போது அப்படியானால் இவர்களை கொல்ல இருந்தவர்கள் யார்? என்ற கேள்வியும் அதனூடே எழுகின்றது. 

விடயத்தை ஒலிவு மறைவின்றி கூறுவதாக- பேசுவதாக  இருந்தால் இவர்களது இந்தக் குற்றச்சாட்டு முன்னாள் ஆட்சியாளர் மீதுதான் என்பது பகிரங்மான விடயம். எனவே  ராஜபக்ஷக்களை இவர்கள் பெயர் குறிப்பிடாது கொலைகாரர்கள் என்று அடையாலப்படுத்துகின்றார்கள் என்பது சின்னப் பிள்ளைக்குக்கூடப் புரிந்துகொள்ளக் கூடிய விடயம்தான்.

இந்தப் பின்னணியில் இன்று சுதந்திரக் கட்சியின் தற்போதய தலைவர்  மைத்திரிபால. போசகர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான  சந்திரிகாவும், ராஜபக்ஷவும் தெரிவு செய்யப் பட்டிருக்கின்றார்கள். 

சுதந்திரக் கட்சியில் மைத்திரியுடன்  தேர்தலுக்கு முன்பு இணைந்து கொண்டவர்களும் தேர்தலுக்கிப் பின்னர் இணைந்து கொண்டவர்கள் என்றும், இன்னும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேரடியாக ஆதரவு வழங்குகின்றவர்கள் என்றும் கோஷ்டிகள்-குழுக்கள்  இருக்கின்றன.  இவர்கள் யார் எந்த அணி என்பதனை அவர்களது நடவடிக்கைகளிலும் செயல்பாடுகளிலும் அவதானிக்க முடியும்.

சுதந்திரக் கட்சியில் தற்போது யார் ஏற்றுக் கொண்டாலும் மறுத்தாலும் மைத்திரி - மஹிந்த அணிகள் என்று இரு கோஷ்டிகள் இருக்கின்றது என்பது கட்டுரையாளனின் கருத்து. முட்டிப்பார்த்தல் முடியாது போனால் முத்தமிட்டுப் பார்த்தல் என்ற நிலையில்தான் இன்று பல சுதந்திரக் கட்சிக்காரர்கள் மைத்திரியை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்;. இவர்களை நம்பி ஒரு போதும் மைத்திரி அரசியல் தீர்மானங்களுக்கு வர முடியாது. சந்தர்ப்பம் வரும் போது இவர்கள் மைத்திரியை கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றவும் தயங்க மாட்டார்கள்.

நிமல் சிரிபால சில்வா, தற்போதய செயலாளர் அணுர பிர்யதர்ஷன யாப்பா, பந்துல குணவர்தன போன்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்தனை நாம் முன்கூட்டியே அடையாளப்படுத்தி வைக்கின்றோம். சுதந்திரக் கட்சியிலுள்ள பெரும்பாலானவர்கள் யார் பக்கம் வலு இருக்கின்றதோ அந்தப் பக்கத்தில வந்து சேர்ந்து கொள்வார்கள்.

எமது கணிப்பின்படி மைத்திரி-மஹிந்த பனிப்போர் சுதந்திரக் கட்சியில் தற்போது துவங்கி இருக்கின்றது. இதற்கு சில ஆதரங்களை நாம் முன்வைக்க விரும்புகின்றோம். கட்சியின் செயலாளர் அணுர  பிர்யதர்சன யாப்பா சுதந்திரக் கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு கட்சிக் கட்டுப்பாடு பற்றி சுற்று நிருபங்களை அனுப்பி எச்சரிகை செய்து கொண்டிருக்கின்றார். அவர் அனுப்புகின்ற கடிதங்கள் பற்றி தலைவர் மைத்திரி அறிந்திருந்தாரா என்று தேடிப்பார்த்தால் அது பற்றிய விளக்ததை எம்மால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

காலியில் சர்ச்சைக்குறிய பாராளுமன்ற உறுப்பினர் முதுஹெட்டி இன்னும் மூன்று மாதங்களில் நாம் மீண்டும் பதவியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற பகிரங்கமாகப்பேசி வருகின்றார். அப்படியானால் மைத்திரியை அவர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை சொல்ல வருகின்றாரா அல்லது பொதுத் தேர்தலில் அதிகாரத்தைப் பிடிப்பது பற்றி  சொல்கின்றாரா என்று புரியவில்லை. 

அடுத்த தேர்தலில் நான் சுதந்திரக் கட்சி சார்பில் மேடையேருவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அறிவித்திருக்கின்றார். எனவே கொலை செய்ய முயன்றவர்களும் கொல்லப்பட இருந்தவர்களும் ஒரே மேடையில் பரப்புரை போலும்.!

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விடயத்தில் ராஜபக்ஷ அரசு நேர்மையாக  நடந்து கொள்ள வில்லை என்பது நாட்டிலும் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக இருந்தாலும். மோகன் பீரிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்ட விடயத்தில் தினேஷ் குணவர்தன, நிமல் சிரிபால, விமல் வீரவன்ச, வாசுதேவ, போன்ற இன்னும் பலர் பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக் கிழமை நடந்து கொண்ட ஒழுங்கைப் பார்க்கின்றபோது மைத்திரி - மஹிந்த அணிகளின் ஆட்கள் பலரை இனம் கண்டு கொள்ள முடிந்தது. என்றாலும் சுதந்திரக் கட்சியில் பெரும்பாலான உறுப்பினர் அங்கு மௌனமாக நின்றதையும் அவதானிக்க முடிந்தது.

சுதந்திரக் கட்சியின் தற்போதய தலைவராக இருக்கின்ற மைத்திரியே மோஹன் பீரிஸை வெளியேற்ற முடிவு  செய்திருந்தார். எனவே மைத்திரி தீர்மானத்தை அவரது கட்சி முக்கியஸ்தர்கள் சிலர்  ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் என்றால் மைத்திரியின் சுதந்திரக் கட்சித் தலைமைத்துவத்தையும் அவர்கள் அங்கிகரிககவில்லை என்றுதான் நாம் பார்க்க வேண்டும். 

முன்னாள் ஜனாபதி பதவிக் காலத்தில் எல்லவற்றிற்கும் கை தூங்கி நின்றவர்கள் இன்றைய ஜனாதிபதியின் தீர்மானங்களை கேள்விக் உற்படுத்துகின்றார்கள் என்றால். அதன் அர்த்தம்  தற்போது கட்சியில் ஜனநாயகத்திற்கு இடம் வழங்கப்பட்டிருக்கின்றது என்றும் எடுத்துக் கொள்ள முடியும். மறு புறத்தில் மைத்திரிக்கு இப்போதே தொல்லை கொடுக்கின்ற வேலையை மஹிந்த விசுவாசிகள் துவங்கி விட்டார்கள் என்றும் இதனை எடுத்தக் கொள்ள முடியும்.
  
உண்மையில் கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக் கணக்கான கோடிப் பணம் மோடி  செய்யப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இது பற்றி முறைப்பாடுகளைத் தனி நபர்களாகவும் மற்றும் அரசியல் கட்சிகலூடாகவும் வெகு ஜன இயக்கங்கலூடாகவும் கொடுத்தாலும் அதனை மைத்திரி - ரணில் பார்க்கின்ற Nவைலையாக காட்டி புதிய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் முனைவதுடன் குற்றவாலிகள் சார்பில் ஆஜராவதும் சுதந்திரக் கட்சியில் மைத்திரிக்கு எதிரான சதியாகத்தான் பார்க்க வேண்டும்.

குற்றச் செயல்களுக்காக தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்களைப் பார்க்க  சிறைச்சாலை செல்கின்ற நிமல் சிரிபால சில்வா  அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து வருவதும் ஒருவகை அரசியல் விளையாட்டுத்தான். இதனை அவர் அரசியல் பலிவாங்கள் என்றும்  இனம்காட்ட முனைகின்றார்.

இதற்கிடையில் வடக்கில் வன்முறைகளை ஏற்படுத்தி அதனை புலிகளின் பெயரில் வைப்புச் செய்ய 400 பேருக்கு ஒரு இராணுவ அதிகாரியின் தலைமையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது என்று அமைச்சர் ராஜித குறிப்பிடுவதுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா அரசைக் கவிழ்கின்ற முயற்சியில் இன்னும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார் என்று பகிரங்கமாக கூறி இருப்பதுடன் இது பற்றிய தகவல்கள் ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்கவுக்கும் கிடைத்திருக்கின்றது என்றும் அவர் கூறுகின்றார்.

100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பதாக ஏற்கெனவே அறித்த சுதந்திரக் கட்சியினர் தற்போது  அரசியல் பலிவாங்கள் தொடர்ந்தால் அது பற்றி யோசிக்க வேண்டியும் வரும் என்றும் எச்சரித்திருக்கின்றார்கள். எனவே இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு இவர்கள் ஆப்புவைத்து மைத்திரிக்கு நெருக்கடி கொடுக்கவும் இடமிருக்கின்றது. எனவே குற்றவாலிகள் விடயத்தில் நடவடிக்கை  எடுப்பதை இவர்கள் தடுக்க முனைகின்றாகள்;.

பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் என்னை பதவி நீக்காதீர்கள் உங்களுக்கு தேவைப்படுகின்ற படி நான் தீர்ப்புகளையும்  வழங்குகின்றேன் என்று கடந்த புதன்கிழமை காலை 7 மணிக்கு தொலைபேசியில் ஜனாதிபதி மைத்திரியிடத்தில் மண்றாடியதாகவும் அமைச்சர் ராஜித  ஊடகச் சந்திப்பில் கூறினார். 

இந்த நாடகங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு குறிப்பிடுவதாகவும் கூறினார். மேலும் தனக்கு செல்வாக்கான ஒரு நாட்டிற்கு தூதுவர் பதவி தந்தால் தான் பதவி விலகுவதாக மேகான் பீரிஸ் அடம் பிடித்தார் என்று அதுருலியே ரத்ன தேரர் குறிப்பிட்டார்.  

பொதுத் தேர்தலில் மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி களமிறங்கினாலும் தேர்லில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பதைப் போன்று மைத்திரி-மஹிந்த கோஷ்டி பூசல்கள் அங்கும்  ஏற்படும். இதற்கிடையில் சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிக்கு ராஜிதவின் பெயர் முன்வைக்கப்பட்டாலும் அதற்கும் ராஜபக்ஷ தரப்பினரால் முட்டுக்கட்டைகள் வரும். மைத்திரியையும் சந்திரிகாவையும் அநாகரிகமாக விமர்சித்த எஸ்.பி.க்குக் கட்சியில் உதவித் தவிசாளர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. இது ராஜபக்ஷ வாதிகளின் ஒரு விளையாட்டு.

இவ்வாறு சுதந்திரக் கட்சியில் பதவிகளைக் கைப்பற்றும் முயற்சிகளில் மைத்திரி-ராஜபக்ஷ தரப்பினர் ஈடுபடுட்டிருக்கின்றார்கள். எமக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி வருகின்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரி கட்சிக்குத் தலைமைத்துவம் கொடுத்து அதன் பின்னர் கட்சித் தலைமைப் பதவியை  சந்திரிக்காவுக்குக் கைமாற்ற இருப்பதாகவும் அதற்கு ஏற்றவாறு தேர்தலுக்குப் பின்னர் கட்சி யாப்பில் மாற்றங்கள் வர இருக்கின்றது என்று தெரின்றது. 

ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரசிங்ஹவுக்கும் தனது கட்சியில் எதிர்வரும் நாட்களில் நெருக்கடிகள் ஏற்பட இடமிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரித்து பதவியில் அமர்த்திய மைத்திரி எதிர்வரும் தேர்தலில் ரணிலுக்கு எதிராக சுதந்திரக் கட்சி சார்பில் களமிறங்கும் நிலை தற்போது உருவாகி வருகின்றது. 

மஹிந்த இந்தத் தேர்தலில் தோற்றுப்போன பின்னணியில் மைத்திரி தலைமையில் கட்சி கடந்த கால முறன்பாடுகளை மறந்து சிறுபான்மை சமூகத்தின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்று இந்த தேர்தலில் களத்தில் இறங்கினால் வருகினற தேர்தலில் அது நேரடிப் போட்டியாக இருந்தாலும் விகிதசாரமுறையில் அமைந்தாலும் தேர்தலில் கடும் போட்டி நிலை ஏற்படும்  இதற்கு ஐ.தே.க. தலைவர் ரணில் எந்தளவு கட்சியை தயார்படுத்தி இருக்கின்றார்  என்ற விடயத்தில் நிறையவே பலயீனங்கள். சில தொகுதிகளுக்கு அமைப்பாளர்கள் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதற்கிடையில் வழக்கம் போல் ஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆளும் தரப்புக்குத் தாவுகின்ற முஸ்லிம் கட்சிகள் இந்தத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்க ஆர்வமாக இருக்கின்றது. இவ்வாறான கட்சிகளுக்கு இடம் கொடுப்பதை அந்தக் கட்சியில் இருக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை தற்போது தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இது விடயமாக ஐ.தே.க.முஸ்லிம் முக்கியஸ்தர்கள் கடுமையான எதிர்ப்பை ரணிலிடத்தில் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

இது விடயத்தில் தான் அவசரப்பட்டு எந்த முடிவுகளுக்கும் வரப்போவதில்லை என்று ரணில் அவர்களிடத்தில் கூறி அவர்களை அனுப்பி வைத்திருக்கின்றார். என்றாலும் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சிகாரர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் போகின்ற சில்லறைகளுக்கு ரணில் வழக்கம் போல் பச்சசை கொடி காட்டுவார் என்பது எமது கருத்து. 

மேலும் இந்தத் தேர்தலில் யானைச் சின்னத்திலா பொதுச் சின்னத்திலா இறங்குவது என்ற விடயத்திலும் இன்னும் முடிவில்லை. நுவரெலியா, கொழும்பு, மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாரை, வடக்கு, வன்னி, கண்டி, புத்தளம், களுத்துறை போன்ற மாவட்டங்களில் சில்லறைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் முதுகில் ஏறிப் பயணம் போக தன்னைத் தயார் செய்து வருகின்றது என்பதனைப் பார்க்க முடிகின்றது.

2 comments:

  1. யப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே!

    ReplyDelete
  2. Politics or politricks ....hmm

    ReplyDelete

Powered by Blogger.