Header Ads



இலங்கை சூறையாடப்படுவதும், ஆசியாவின் ஆச்சரியமா..?

-GTN-

தலைவனும் தலைவன் தன் குடும்பமும் கஷ்டப்பட்டாவது நாட்டு மக்களை சந்தோசமாக வாழவைப்பது மரபுச் சிந்தனை. நாட்டு மக்களனைவரும் கஷ்டப்பட்டு தலைவனையும் அவனது குடும்பத்தையும் சந்தோசமாக வாழவைப்பது மஹிந்த சிந்தனை.

எவனெவனோ ஏறி முடித்த வழுக்க மரக்க கம்பத்தில் கிறீஸ் அனைத்தும் துடைக்கப்பட்ட நிலையில் இலகுவாக ஏறிக் கொடியைக் கைப்பற்றியவர் போல சந்திரிக்கா, ரணில், சரத் பொன்சேகா என அனைவரும் சிரமப் பட்டு முடிக்க போர்வெற்றியை வாகை சூடிக்கொண்டவரே தற்போதைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். இந்த யுத்த வெற்றி அவருக்கு மாத்திரமே உரிய ஏகபோக உரிமை ஒன்றல்ல என்றாலும் கடைசியில் கொடியெடுத்தவராச்சே என்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகளை மக்களும் நன்றிக் கடனாகக் கொடுத்தார்கள். சில சமயம் அவரின் சகாகக்கள் தேர்தல் வெற்றிகளைப் பிடுங்கியெடுத்தார்கள் என்றும் தகவல்களிருக்கின்றன.

ஆனால் இம்முறையும் மூன்றாவது தடவையாகவும் நிறைவேற்று அதிகாரம் வேண்டி களத்திலே குதித்திருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். இதிலும் வெற்றியடைந்தால் லைப் டைம் ஜனாதிபதியாகிவிடலாம் என்கின்ற உள்நோக்கத்துடனேதான் இத்தகைய கைங்கரியத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.

இவரது அரசாங்கத்தில் பயங்கரவாத யுத்தம் தந்த வலிகளை விடவும் அதிகமாகவே நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கத் துவங்கியுள்ளனர். யுத்த காலத்தில் நமது விருப்பமின்றி ஆயுததாரிகள் எம்மைக் கொன்றார்கள். இவரது ஆட்சியிலோ காணாமல் போய்விடுகிறோம் அல்லது நாமே விரும்பி தற்கொலை செய்துகொள்கிறோம். பொருளாதாரச் சுமையினால் ஆங்காங்கே நடைபெறுகின்ற தற்கொலைகள் இதற்குச் தக்க சான்றுகளாகும்.

நாடு வறுமையினால் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கையில் இன்றைய அரசாங்கம் தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களையும் எம்.பிக்களையும் பில்லியனர்களாக மாற்றியிருக்கிறது.

அரசாங்கத்தின் கடனானது ஒரு ட்ரில்லயன் ரூபாவாக உயர்ந்துள்ளது. 2005ம் ஆண்டில் 32.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாகக் கொண்டிருந்த 55 அரச நிறுவனங்கள் தற்போதைய அரசாங்கத்தில் காணப்படுகின்ற 100 இற்கும் மேற்பட்ட அமைச்சுப் பதவிகளினால் 107 பில்லியன் நஷ;டத்தினை எதிர்கொண்டுள்ளது.

ஒரு நாட்டின் பாராளுமன்றம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமே தவிர அது வெறுமனே அரசாங்கத்தின் இருப்பை மாத்திரம் பாதுகாப்பதில் அக்கரை காட்டக்கூடாது. இன்றைய அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தக்க வைத்துத் தனது விருப்பப்படி ஆடவேண்டும் என்பதற்காகவே நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சுக்களை உருவாக்கி அவர்களைக் குளிர்வித்து நாட்டு மக்களை வறுமைச் சுடுகாட்டுக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது.

30 வருடப் போர் உட்பட 2009ம் ஆண்டு வரையிலான 60 வருடங்களில் 3589 பில்லியன்களாக மாத்திரமே இருந்த மொத்த வெளிநாட்டுக் கடனானது 2009 தொடக்கம் 2012 வரையிலான மூன்றே வருடங்களில் 6791 பில்லியன்களாக இரட்டிப்படைந்துள்ளது.

ஆளும் ஆணவத்தினாலும் பிரதேசவாதத்தினாலும் அம்பாந்தோட்டையில் பாரிய செலவீடுகள் விரயமாக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக 9 பில்லியன் ரூபாய்களும், டெலிசினிமாப் பூங்காவிற்காக 2 பில்லியன் ரூபாய்களும், சர்வதேச கிரிக்கட் மைதானத்திற்காக 700 மில்லியன் ரூபாய்களும், மத்தள விமான நிலையத்திற்காக 39.6 பில்லியன் ரூபாய்களும், செலவிடப்பிடப்பட்டுள்ளன. மத்தள விமான நிலையத் திட்டமானது ஒரு வடிகட்டப்பட்ட முட்டாள்த்தனம் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானத்திற்கு முன்னால் யாரும் கேள்வியெழுப்ப முடியாது. ஒரு நகைப்பிற்குரிய விடயம் யாதெனில் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 40 பிரயாணிகள் மாத்திரமே மத்தள விமான நிலையத்தில் பதிவாகியிருந்தனர். இந்நிலைமையைப் பார்க்கும் போது ஒரு வெற்றிலை வியாபாரி  பெறுகின்ற வருமானத்தை விடவும் குறைவாகவே மத்தள விமான நிலையம் வருமானமீட்டுகிறது எனக் குறிப்பிடமுடியும். இது குறித்து அரசாங்கத்தைக் கேள்வி கேட்க இன்னும் யாருமற்ற நிலைமையே தொடர்கிறது.

எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருடாந்த செலவு 8.6 பில்லியன் ரூபாய்களாகும். இது இங்கிலாந்து ராணியின் செலவை விடவும் அதிகமாகும். அமைச்சர்களின் வாகனங்களுக்கான செலவு 6 பில்லியன் ரூபாய்களாகும் போது ஜனாதிபதி என்கின்ற தனி நபரின் வாகன செலவு 5.1 பில்லியன் ரூபாய்களாகக் காணப்படுகின்றது.

2005 தொடக்கம் 2009 வரையிலும் இலங்கையில் ஊழல் மோசடி காரணமாக 870 பில்லியன் ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

100இற்கும் மேற்பட்ட பாரிய அமைச்சரவையினால் அரசாங்கத்தின் எல்லாத் திணைக்களங்களும் 2.6 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளன. அத்தோடு தமது வரிச்சலுகை வாகனங்களை விற்பனை செய்வதினூடாக பல மில்லியன்களை அரசாங்க அமைச்சர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

எண்ணெய் வணிகத்தில் அரசாங்கம் 17 பில்லியன் நஷ;டமடைந்துள்ளது. அரச தாபனங்களில் 300 பில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொது நிறுவனங்களின் குழுவானது (COPE) அறிக்கை வெளியிட்டுள்ளது. சிலர் பெறுகின்ற பெருந்தொகையான கடன்களை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஏழைப் பொதுமக்கள் செலுத்த வேண்டிய துர்ப்பக்கிய நிலை நாட்டில் நிலவுகின்றது.

கடவத்தையிலிருந்து கரவலப்பிட்டிய வரையிலான வீதி நிர்மானத்திற்கு ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு 7500 மில்லியன் ரூபாய்கள் செலவாகியிருக்கும் நிலையில் கொட்டாவையிலிருந்து காலி வீதி நிர்மானத்திற்கு ஒரு கிலோமீற்றார் தூரத்திற்கு 9000 மில்லியன் ரூபாய்கள் எவ்வாறு செலவாக முடியும்? பண வீக்கச் செலவுகள் 5% - 10% ஆக உயர முடியும். ஆனால் 800% இனால் உயர வாய்ப்பில்லையே...?

இலங்கை இவ்வாறு சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலை அத்தியவசிய மருந்துகள் தம்மிடம் இல்லையெனவும், கொழும்பிலள்ள வைத்தியசாலைகள் சாதாரண அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்யவே தம்மிடம் இரசாயணப் பொருட்கள் இல்லை எனவும் அறிவித்துள்ளன. அதே வேலை நாட்டை சூறையாடும் அரசாங்கம் கொழும்பிலே மழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வெறும் 333 ரூபாய்களையே வழங்கியது.

ஜனாதிபதி ஐ.நா உச்சிமாநாட்டிற்குச் செல்கின்ற பிரயாணச் செலவில் அரைவாசிப் பகுதி சேமிக்கப்பட்டாலே இலங்கையிலுள்ள புற்று நோயாளிகளுக்கு அடுத்த 20 வருடங்களுக்கு மருந்துகளை வாங்கப் போதுமானதாக இருக்கும்.

இப்படியாக நாட்டு மக்களைக் கவனத்தில் கொள்ளாத ஒரு தலைவருக்கு நாம் மீண்டும் வாக்களிக்க என்ன அவசியமிருக்கிறது....?

இந்தத் தேர்தல் இலங்கையர்கள் முட்டாள்களல்லர் என்பதை உலகிற்குச் சொல்லக் கிடைத்த அழகான சந்தர்ப்பமாகும். நாம் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்கு ஊழலுக்குள் அமிழ்ந்து குட்டிச்சுவராகிக் கிடக்கும் எமது தேசத்தை மீளக் கட்டியெழுப்ப கட்டாயம் பயன்படுத்தப்படவேண்டும்.

No comments

Powered by Blogger.