Header Ads



நீதி வழங்கப்படாத ஒரு சமூகத்தின் கதை...!

(சுஹூத் பஸ்லீம்)

1990ம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இம்மாதம் (ஒக்டோபர்) 24 வருடங்கள் நிறைவு பெறுகிறது. உலக வரலாற்றில் இனரீதியிலான பலவந்த வெளியேற்றங்களும் இடம்பெயர்வுகளும் இனப்படுகொலைகளும் தொடர்ந்து  நடந்துகொண்டுதான் வருகிறது.. இவ்வாறான இனத்துவ அடிப்படையிலான வன்செயல்களின் இலக்குகளாக அல்லது அதிகம் பாதிக்கப்படும் குழுக்களாக சிறுபான்மைச் சமூகங்களாகவே உள்ளது. இக்குற்றங்களை தடுப்பதற்கு உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டங்கள், நாடுகளின் அரசியல் யாப்பின் சட்ட ஏற்பாடுகள் யதார்த்தத்தில் எந்தளவிற்கு பங்களித்துள்ளன என்பதே இன்று எம்முன்னுள்ள கேள்வி?

இவ்வாறு ஒரு சமூகம் தனது சொந்த மண்ணிலிருந்து ஒரு ஆயுதக் குழுவினால் ஒரு குறுகிய நேர இடைவெளியில் பலவந்தமாக திட்டமிட்டு வெளியேற்றப்படுகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அது தனது சொந்த மண்ணிற்கு வெளியே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றது. நாட்டின் அரசு இது தொடர்பான எவ்வித உத்தியோகபூர்வமான விசாரணைகளையும் மேற்கொள்ளத் தவறிவிடுகிறது. ஐக்கிய நாடுகள் சபை அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விடுகிறது. புலிகளோ ஓர்  ‘தந்திரோபாயத் தவறு’ என்றனர். தமிழ் அரசியல் தரப்புகள் போதிய எதிர்ப்புகளைத் தெரிவிக்காமல் ஒதுங்கிக்கொள்கிறது. கால நீரோட்டத்தில் உள்நாட்டு யுத்த நிலமைகள் இன்னும் அதனை ஒட்டிய பிரச்சினைகளுக்குள்ளும், அண்மைக்கால இடம்பெயர்வுகளுகுள்ளும் வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் என்ற ஒரு பாரதூரமான விடயம் இலகுவாக மறக்கடிக்கப்படுகிறது. இவற்றின் பலாபலன்களை  இப்போது இந்த வெளியேற்றப்பட்ட சமூகம் அனுபவித்துக்கொண்டிருகின்றது. அதன் நீடித்த தீர்வு இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

வெளியேற்றத்தின்போது சுமார் 70000 ஆக இருந்த வடமாகாண முஸ்லிம்களின் சனத்தொகை 2011ம் ஆண்டு வரை 90000 ஐ எட்டியிருந்தது. அவர்களின் சொத்து இழப்புகளாக சுமார் 112 மில்லியன் அமெரிக்க டொலர் என 2004ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீடு கூறுகிறது. 66  முகாம்களில் அவர்களது அகதி வாழ்க்கை புத்தளம் மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது. அவற்றில் பல தற்போது மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்களாக அறியப்படுகிறது. புத்தளம் மாவட்டம் தவிர நீர்கொழும்பு சிலாபம், கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும் கணிசமான தொகையினர் வாழ்கின்றனர். 

77820 தனிநபர்களைக் கொண்ட 18850 குடும்பங்கள் வடக்கில் மீளக்குடியேரியுள்ளன எனவும் புத்தளம் மாவட்டத்தில் 2011ம் ஆண்டு வரை  6378 தனிநபர்களைக் கொண்ட 1874 வடமாகாண முஸ்லிம் குடும்பங்கள் தங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் தகவல் கூறுகின்றது. ஆனால் 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவின்படி புத்தளம் மாவட்டத்தில் 15200 வடமாகாண முஸ்லிம்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவலொன்று தெரிவிக்கின்றது. தகவல்களில் மாத்திரமன்றி யதார்த்தத்திலும் அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பான பல குழப்பங்கள் நிலவுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து வடக்கு மீள்குடியேற்றத்திற்கான சாதகமான சூழ்நிலைகள் தோன்றினாலும் வட மாகாணத்திற்கு வெளியே இரண்டு தசாப்த்தங்களுக்கும் மேலாக வாழ்வைக் கழித்த ஒரு சமூகம் என்ற ரீதியில் உடனடியாக மீளத்திரும்புதல் என்பது வடமாகாண முஸ்லிம்களுக்கு இலகுவான விடயமில்லை. வடமாகாணத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியையும் 3 வடமாகாண முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களையும் தன்னுடன் கொண்டுள்ள அரசு இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான சீரான ஒரு கொள்கையை இன்று வரை  அறிவிக்கவில்லை. மீளத்திரும்பும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் வேறுபடுத்திக் காட்டப்படவில்லை அல்லது பிரேத்தியேகமாக அணுகப்படவில்லை. 2011ம் ஆண்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டாலும் ஒழுங்கமைக்கப்படாத இம்மக்களின் மீள்குடியேற்றம் இழந்த அவர்களது $112 மில்லியன் பெறுமதியான சொத்துக்களுக்கு வகை சொல்லவில்லை. இன்னும் பல தேவைகள் செய்யப்படவுள்ளன.

வெளியேற்றத்தின் பின்னர் புத்தளத்திலும் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடக்கிலும் இம்மக்களுக்கு வழங்கப்பட்ட வீடமைப்பு போன்ற சில திட்டங்களையும் நிவாரணங்களையும் ஒரு தீர்வாகக் கருத முடியாது. அவை வெறும் தித்திப்புக்கள், தீர்வாகாது. மிக நீண்ட கால இடம்பெயர்வின் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புடைய பல குழப்பங்களை அவர்கள் எதிர்நோக்குகின்றனர். பலவந்த வெளியேற்றத்தினால் ஒரு தலைமுறை இழந்த கல்வி தொடர்பாக சீர்தூக்கிப் பார்க்கவேண்டியுள்ளது. அதேபோல் திடீரென அதிகரித்த சனத்தொகைக்கும் தொடர்ந்து அதன் இருபது வருடத்திற்கும் மேற்பட்ட இருப்பிற்கும் உதவும் நிர்ப்பந்தத்தினால் புத்தளம் பிரதேசத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளும் கருத்தில் கொள்ளப்பட்டு அங்கும் உள்ளூர் மக்களும் பயன்பெறும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கையில் பல்வேறு காலப்பகுதிகளில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யு.ஆர்.டி. பண்டாரநாயக அவர்களின் படுகொலை தொடர்பாக ஆளுநர்  வில்லியம் கோபல்லாவ அவர்களால் 28.06.1963 ஆந் திகதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றுவரை அண்மையில் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு உள்ளடங்கலாக 12 ஆணைக்குழுக்களும் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சால் விசாரணை சபையொன்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரனைக்குழுவொன்றும் அமையப்பெற்றது. இதில் 1981ஆம் ஆண்டு தொடக்கம் 1984 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற இன வன்முறை தொடர்பாக அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் ஜனாதிபதி ஆணைகுழுவொன்று நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பலவந்த வெளியேற்றத்தின் பின் 1990 ஆண்டிலிருந்து இதுவரை ஜனாதிபதிகளை நாடு கண்டு விட்டது. ஆனாலும் இதுவரை வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படாமை ஏமாற்றமளிகின்றது. இது தொடர்பாக சிவில் சமூகத்திடமிருந்தோ முஸ்லிம் அரசியல் தரப்புகளிடமிருந்தோ பலமான கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் தற்போது 4 முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள வடமாகாண சபையில் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் தொடர்பாக ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியுமாக இருந்தால் சாதனைதான்.

இந்நிலையில் ‘சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியம்’ என்ற அரச சார்பற்ற அமைப்பினால் பலவந்த வெளியேற்றம் தொடர்பாக  பிரஜைகள் ஆணைக்குழு ஒன்று 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற அனுபவம் என்பவற்றை உள்ளடக்கி  2013ம் ஆண்டு தனது இறுதி விசாரணை அறிக்கையை வெளியிட்டது. வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினையை இலங்கையின் பாரிய சமூக – அரசியல் மட்டத்தில் வெளிப்படுத்தும் இத்திட்டம்  வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும்.    

வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தேசிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற தவறியுள்ளது. இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் முக்கியத்துவம் அளித்ததாகத் தெரியவில்லை. பலவந்த வெளியேற்றம் தொடர்பாக ஒரு நீடித்த தீர்வைத்தரும் உத்தியோகபூர்வ அரச விசாரணையொன்றை வடமாகாண முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாகவே எதிர்பார்கின்றார்கள். எல்.எல்.ஆர்.சீ. அறிக்கையும் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஒரு சீரிய அரச கொள்கையொன்ரின் மூலம் அணுகப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. சிவில் சமூகத்தார் அரசினதும் அரச சார்பற்ற அமைப்புகளினதும் வளங்களை சமூகத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு கொடுத்த ஈடுபாட்டை இப்பிரச்சினையை ஒரு முக்கிய பிரச்சினையாக தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் எடுத்துக்காட்டத் தவறியுள்ளார்கள். இந்த விடயத்தில் இவர்களது முயற்சிகள் பலவீனமாக உள்ளன. இப்பிரச்சினை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சமூக ஊடகங்களின் இன்றியமையாத வகிபாகம் அவசியமாகவுள்ளது.

நீடித்த தீர்வொன்றின் மூலமான மீள்குடியேற்றமே வடமாகாண முஸ்லிம் சமூகத்தின் நிலைத்தகு அபிவிருத்திக்கும் வாழ்வுரிமைக்கும் வழி சமைக்கும். அது ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் பரிந்துரை மூலமாகவே சாத்தியப்படும்.

அதுவரை இருண்ட ஒக்டோபர்  விடியாது. வெறும் தற்காலிக அபிவிருத்தி திட்டங்கள் தற்காலிக சுகமான நிலவின் வெளிச்சமாக வேண்டுமானால் இருக்கலாம், விடியலாகாது. வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில் குற்றவாளிகள் தப்பித்திருக்கலாம், ஆனால் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள்.

No comments

Powered by Blogger.