Header Ads



பிடுங்கி எறியப்பட்டவர்களின் கதை..!

(நன்றி - மப்றூக்)

சொந்த மண்ணை இழத்தலின் ஆத்ம வலி குறித்து – அந்த அனுபவமற்ற ஒருவரால் முழுமையாகப் பதிவு செய்ய முடியாது. அதுவும், எதிர்பாராத கணமொன்றில் தனது வாழ்விடத்திலிருந்து ஏதிலிகளாக விரட்டியடிக்கப்பட்ட மக்களின் துயர் நிறைந்த அனுபவங்கள் கொடுமையானவை. தாயை இழந்து தவிக்கும் ஒருவரின் கண்ணீருக்கு ஒப்பானது - சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை.

புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டமையானது வரலாற்றில் நிகழ்ந்த மிக கொடுமையானதும், அருவருக்கத்தக்கதுமான நிகழ்வாகும். எதையும் கொண்டு புலிகளின் அந்தக் குற்றத்தை நியாயப்படுத்தி விட முடியாது. இன்று உரத்துப் பேசப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கும், வடக்கு முஸ்லிம்களை அன்று - புலிகள் விடிட்டியடித்தமைக்குமிடையில் வித்தியாசங்கள் எவையுமில்லை. தமது எதிராளிகள் எதையெல்லாம் கொண்டு தம் இனத்தை அழித்ததாக புலிகள் நம்பினார்களோ, அவற்றினைக் கொண்டே தமது சகோதர இனமான முஸ்லிம்கள் மீது புலிகள் அநியாயம் புரிந்தனர்.

புலிகளின் தோல்வியானது இரண்டு புள்ளிகளில் இருந்து தொடங்கியதாக கூறப்படுவதுண்டு. 

1. முஸ்லிம்களுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் 
2. ராஜீவ்காந்தியை தற்கொலைத் தாக்குதல் மூலம் புலிகள் கொன்றமை

முஸ்லிம்களுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் ஏராளமானவை. அவற்றில் முதன் முதலாக நடைபெற்ற 'பாரிய' அட்டூழியம் – வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமையாகும். இதன் மூலமாக புலிகள் தமது தலையில் நெருப்பை தாமே அள்ளிக் கொட்டிக் கொண்டதை – வெகு பின்னராகவே உணரத் தொடங்கினர். 

தமிழ்பேசும் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிவந்த புலிகள், ஒரு கட்டத்தில் - தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீதே தமது ஆயுதங்களைத் திருப்பியமையானது பாரியதொரு முரண் துயராகும். முஸ்லிம்களை புலிகள் வலிந்து தமது எதிரியாக்கிக் கொண்டதன் மூலம் தமக்கான வட்டத்தைக் குறுக்கின் கொண்டனர். சிறிய வட்டத்துக்குள் சிக்கிக் கொண்ட புலிகளை பின்னர் சிங்கங்கள் வேட்டையாடுவது இலகுவாகிப் போன கதை பற்றி நீங்கள் அறிவீர்கள்.  

புலிகளால் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களின் புள்ளி விபரங்களையும், கதைகளையும் ஓர் சடங்குபோல் இந்தக் கட்டுரையில் நாம் பதிவு செய்ய விரும்பவில்லை. கடந்த 23 ஆண்டுகளாக நமது ஊடகங்கள் - போதும் போதும் என்னுமளவுக்கு அவற்றினை நிறைவேற்றியுள்ளன.

'வாழ்தல்' என்பதற்கும் 'வசித்தல்' என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. வடக்கில் தமது சொந்த நிலத்தில் 'வாழ்ந்து' கொண்டிருந்த முஸ்லிம்களை - புலிகள் அடாத்தாக விரட்டியடித்த பின்னர், அந்த மக்கள் இப்போது அங்கும் இங்குமாக வேறுவேறு இடங்களில் 'வசித்து'க் கொண்டிருக்கின்றார்கள். 'வாழ்தல்' என்பது - சொந்த நிலத்தில் மட்டுமே சாத்தியமானது என்பதை, அந்த மண்ணை இழக்கும் வரை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. 

புலிகள் இருக்கும் வரை வடக்கு முஸ்லிம்களால் தமது சொந்த நிலத்தில் மீள் குடியேற முடியவில்லை. புலிகளுக்குப் பின்னரும் - அது முழுமையாக நிறைவேறவில்லை. வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதுவதில் அரசு போதியளவு அக்கறை செலுத்தவில்லை என்பது இதற்கான காரணங்களில் ஒன்றாகும். இன்னொருபுறம், வடக்கிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களை அங்குள்ள தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் - இப்போது 'வேறு தேசத்தவர்'களாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதேவேளை, ஒருசில தமிழ் அரசியல்வாதிகள் - வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பதை 'ஓர் நில ஆக்கிமிப்பு' போல் காட்டி பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இவை போன்ற பல காரணங்களால், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது 24 வருடங்கள் கடந்தும் நிறைவேறாமலேயே உள்ளது. 

இருந்தபோதும், கடந்த  வருடங்களில் இருந்திராத புதியதொரு சூழ்நிலை இப்போது தோன்றியுள்ளது. வடக்குக்கென தனியானதொரு மாகாணசபை உருவாகியுள்ளது. அதன் முதலமைச்சராக முன்னாள் நீதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த முலமைச்சர் தன்னுடைய கன்னி உரையிலேயே – 'வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள்' என உறுதியளித்துள்ளார். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கையில், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்கிற கனவு நிஜப்படும் என்கின்றதொரு நம்பிக்கைக்கான முளை விழுந்துள்ளதுபோல் தெரிகிறது.  

'வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள்' என - வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸவரன் வழங்கியுள்ள உறுதிமொழியை முஸ்லிம் சமூகம் கூர்மையுடன் பார்க்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் கயமைத்தனமான அரசியலைச் செய்ய மாட்டார் என கணிசமானோர் நம்புகின்றனர். அரசியலுக்காகக் கயமைத்தனங்களைப் புரிகின்ற ஒருவராக விக்னேஸ்வரனைப் பார்க்கவும் முடியாது. 

ஆனாலும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உறுதி மொழிக்கிணங்க வடக்கு முஸ்லிம்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது லேசுபட்ட காரியமுமல்ல என்பதையும் இங்கு சொல்லி வைக்க வேண்டியுள்ளது. இந்த முயற்சியின் போது - தனது சபைக்குள்ளும், கட்சிக்குள்ளும் ஏராளமான சிக்கல்களை அவர் எதிர்நோக்க வேண்டிவரும். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை 'ஒரு நில ஆக்கிரமிப்புப் போல்' பார்க்கின்றவர்கள் முதலமைச்சரை இந்த விவகாரத்தில் மிகக் கடுமையாக எதிர்க்கத் தொடங்குவார்கள். ஆனால், இவற்றைச் சமாளிக்கும் திறன் என்பது முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் தாராளமாக உள்ளது. 

இன்னொருபுறம், வடக்கு முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில் வேறு சில விடயங்களின் தேவைகளும் உள்ளன. அவற்றில் நிதி முக்கியமானதாகும். குறிப்பாக, வடக்கு முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதற்கு பெருமளவு நிதி தேவைப்படும். ஆனால், 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அரசாங்கமானது மீள்குடியேற்றத்துக்கென்று மிகவும் குறைந்ததொரு தொகையினையே ஒதுக்கியுள்ளது. எனவே, வடமாகாண சபையின் நிதியும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கென செலவுசெய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.  

சரியாகச் சொன்னால், புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதென்பது அவர்களின் பிரச்சினைகளுக்கான முடிவல்ல. முடிவுகளின் ஆரம்பமாகும். மீள்குடியேற்றம் என்கிற பெயரில் ஒரு கொட்டிலை நிர்மாணித்துக் கொடுத்து விட்டு ஒதுங்குவதோடு, பொறுப்பானவர்களின் கடமை முடிந்து போவதில்லை. எந்த நிலையிலிருந்து அந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்களோ – அந்த வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்துக் கொடுத்தல் வேண்டும். அதையே மீள்குடியேற்றமாகக் கருதவும் முடியும். 

புலிகள் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவே சொல்லிக் கொண்டனர். அதனால்தான், தமிழர்களையெல்லாம் புலிகளாகவும் - புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களின் அங்கீகாரத்துடன் நடந்தவை போலவும் கணிசமான கண்கள் பார்த்தன. வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் விரட்டியதையும், இதே கண்களுடன்தான் உலகம் பார்த்தது. ஆனால், இந்தப் பார்வையில் கோளாறுகளும் இருந்தன. புலிகளின் தோள்களில் ஆயுதங்கள் தொங்கிக் கொண்டிருந்ததால், தமிழ் மக்களாலும் தமது நேர்மையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியவில்லை. வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் விரட்டியடித்தபோது, அதை மனதுக்குள் வெறுத்த தமிழர்கள் குறித்தும் நாம் அறிவோம். 

கூட்டிக்கழித்துப் பார்க்கையில், புலிகளால் புரியப்பட்ட வரலாற்றுத் தவறுக்கான பிராயச்சித்தங்களை நிறைவேற்றுவதற்குரிய தருணமொன்று வடக்குத் தமிழ் சமூகத்துக்குக் கிடைத்திருப்பதாகவே நாம் காண்கிறோம். தம்மைப் பிரதிநிதித்துவப் படுத்தியதாகக் கூறிக்கொண்ட புலிகள், வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிதை தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வடக்குத் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. 'வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்' என்பதில் வடக்குத் தமிழர்கள் காட்டுகின்ற அக்கறை வழியாக - அவர்கள் தம்மை வெளிப்படுத்த முடியும்.

சொந்த மண்ணை இழத்தலின் வலியை இந்தக் கட்டுரையை எழுதுகின்ற என்னால் முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆனால், வடக்குத் தமிழ் மக்களில் கணிசமானோர், தமது நாட்களை அந்த வலியோடு கழித்தவர்கள். வாழ்ந்த மண்ணை இழப்பதன் வலியை அவர்கள் மிக நன்கு அறிந்தவார்கள். அதே வலியை சுமந்து திரியும் - துரத்தியடிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் கண்ணீர் கதையை, வடக்கு தமிழர்களுக்கு நாம் சொல்லி வைக்கத் தேவை கிடையாது.

வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் கனவுகள் நிறைவேறப் பிராத்திப்போம்!

1 comment:

  1. good essey. We'll pray their brightfull future

    ReplyDelete

Powered by Blogger.