முஸ்லிம்களை பலிக்கடாவாக்குவதில்...!
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
அரசியல் சதுரங்க ஆட்டத்தில் யுத்தம்,சமாதானம்,பயங்கரவாத ஒழிப்பு,என சகல காய்களும் ஏற்கனவே நகர்த்தப்பட்டுள்ள நிலைமையில் இனி வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது இன-மத வெறி அதன் உச்ச கட்டத்தில் காய்களாக நகர்த்தப் படலாம்.
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக பிரயோகிக்கப் படுகின்ற அழுத்தங்களை சிங்கள பௌத்த தேசத்திற்கும், தேசப்பற்றுள்ள தலைமைக்கும், தேசப்பற்றுள்ள இராணுவத்துக்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பாரிய சதிமுயற்சிகளாக ஏற்கனவே பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
என்றாலும் மேற்படி பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகளின் பொதுவான மற்றும் கூட்டான அரசியல் செயற்பாடுகள் நாட்டின் முற்போக்கு சக்திகளின் மற்றும் ஊடகங்களின் தொழிற்பாடுகள் மிகவும் மும்முரமாக முறியடித்து வருகின்ற நிலைமையில் உள்நாட்டில் மற்றுமொரு பிரதான எதிரி இருப்பதற்கான மாயை தோற்றுவிக்கப் படுகிறது.
இஸ்லாம், முஸ்லிம்கள், சனத்தொகையில் மாற்றங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம என்பவற்றிலிருந்து இனத்தை மதத்தை சாசனத்தை பொருளாதாரத்தை காப்பாற்றவேண்டிய அறப்போர் இருப்பதாக இட்டுக்கட்டப்பட்ட , புனையப்பட்ட மிகவும் நன்றாக திட்டமிடப்பட்ட காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இலங்கையில் பொதுவான எதிர்க்கட்சிக் கூட்டணி அமையப் பெறின் அல்லது அரசுக்கெதிரான ஜனநாயக சக்திகளின் செல்வாக்கு அதிகரித்துச் செல்கின்ற சூழ்நிலையில் நாட்டில் ஒரு கலவர சூழ்நிலை இருப்பின் மாத்திரமே அவசரகால நிலைமைகளில் நாடு முழுவதும் அதிரடிப்படை மற்றும் இராணுவ முகாம்கள் பரவலாக்கப் படுவதற்கான நியாயங்கள் ஏற்படலாம் என்பதனை யதார்த்தமான கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.
தேசத்திற்கு எதிரான சர்வதேச சக்திகளிடமிருந்து தேசத்தையும், தேசப்பற்றுள்ள இராணுவத்தையும், வென்றெடுத்த சுதந்திரத்தையும், சிங்கள பௌத்த மக்களையும் பாதுகாப்பதென்ற கோஷங்களுடன் உள்நாட்டில் இஸ்லாமிய தீவிர வாததுக்கு முகம் கொடுத்தல் என்ற பெயரில் இராணுவ மயமாக்கலும் இடம் பெற்று அடுத்தடுத்த தேர்தல்கள் வெல்லப்படலாம் என அரசியல் கணிப்பீடுகள், மற்றும் அரசியல் நகர்வுகள் உணர்த்துகின்றன.
ஆக மொத்தத்தில் முஸ்லிம்களை பலிக்கடாவாக்குவதில் தமக்கு இலாபமிருப்பதாக சிலர் தப்புக் கணக்கு போட்டிருப்பதாக உணர முடிகிறது, முஸ்லிம் சமூகம் அடுத்தவர் நகர்வுகளை அஞ்சி அஞ்சி விரல் நீட்டும் அரசியலை செய்து கொண்டிருக்காது மேற்படி தப்புக் கணக்குகளை, அவை தப்பானவை என சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரிடமும், நிரூபித்துக் காட்டும், உணர்த்தும் நடவடிக்கைகளிலும் காலதாமதமின்றி இறங்க வேண்டும்.
எனவே தான் தற்பொழுது முஸ்லிம்கள் முகம் கொடுக்கும் சவால்களை இனரீதியான அல்லது மத ரீதியிலான சிறிய வட்டத்திற்குள் மட்டுப்படுத்த வேண்டாம் என்றும் தேசத்தின் சகல முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து அவற்றிற்கு நாம் முகம் கொடுக்க வேண்டும் என்றும் எமது அரசியல் தலைமைகளிடம் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம்கள் பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.
.jpg)
Post a Comment