Header Ads



முஸ்லிம் சமூக ஒற்றுமை அரசியலும், மரம் சிறுத்து 'இரட்டை இலை' ஆகுதலும்

(நவாஸ் சௌபி)

முஸ்லிம் சமூகத்தின் உரிமைத்துவ அரசியல் அடையாளத்துடன் தேசிய அரசியலில் வேரூன்றிய முஸ்லிம் காங்கிரஸ், அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் தலைமைத்துவ நெருக்கடிகளாலும், அதிகாரத்தை மையப்படுத்தும் போட்டிகளாலும் பல கூறுகளாகப் பிளவுபடுத்தப்பட்டது. 

இதன்காரணமாக, ஒற்றைத் தன்மையான முஸ்லிம் சமூக உரிமைக் குரலை எழுப்பிக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் சவாலாக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களின் பல கட்சி அரசியல் நகர்வுகள் எழுந்து நின்றன.

இதன் விளைவாக, முஸ்லிம் சமூகத்தினுள் பல கட்சிகள் இருப்பது பலமானதா? பலவீனமானதா? எனும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட வாதப் பிரதிவாதங்களும் சமகால அரசியலில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல்ரீதியாக ஏற்படுகின்ற ஆபத்துக்களையும் அடக்குமுறைகளையும் எதிர் கொள்வதில் இத்தகைய பல கட்சிமுறைகளும் அவை கொண்டுள்ள முரண்பாடுகளும் பெரும் தடையாகக் கருதப்பட்டும் விமர்சிக்கப்படுகின்றன. 

இத்தகைய விமர்சனங்கள் யாவும் முஸ்லிம் சமூகத்தில் ஒன்றுபட்ட ஒரு கூட்டு அரசியல் வேண்டுமென்ற பொதுவான ஒரு முடிவினைச் சுட்டிக்காட்டுவதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுமிருக்கின்றன. இவற்றுள் மிக முக்கியமாக, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அழிவுகளையும் இழப்புகளையும் தட்டிக் கேட்பதற்கும், அதிலிருந்து அரசியல் பாதுகாப்புத் தேடுவதற்கும், அதேபோன்று முஸ்லிம்கள் சிதறி வாழும் சிறு பிரதேசங்களில் தேர்தல் மூலமான முஸ்லிம் பிரதிநதித்துவங்களை அதிகரிப்பதற்கும் என இவ்விரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் அரசியலில் ஒற்றுமையான ஒரு கூட்டுப் பொறுப்பு அவசியம் என்ற வாதம் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. 

இதனை அடிப்படையாகக் கொண்டு சமூகத் தளத்திலிருந்து பல கோஷங்கள் கடந்தகாலங்களில் எழுந்த போதும், முஸ்லிம் கட்சிகளுக்குள்ளிருந்த தலைமைத்துவ அதிகார வாதங்களும் வியாபாரமாக அரசியலை காய்நகர்த்தும் போக்குகளும் முஸ்லிம் அரசியலின் ஒற்றுமையான போக்கை மேலும் சிதைக்கவே செய்தன. 

இதனால், கடந்தகாலங்களில் முஸ்லிம் அரசியலின் ஒற்றுமைக்காக எழுந்த உரிமைத்துவக் கோஷங்கள் யாவும் வெற்றுக் கோஷங்களாக காற்றோடு கலந்தன. இத்தகைய பின்புலத்தின் நகர்ந்த முஸ்லிம் அரசியலின் ஒற்றுமையில் இன்று எதிர்பாராத ஒரு திருப்பமாக பட்டமரம் பூத்தது போல் பாலைவனம் மழை கண்டது போல், ஊவா மாகாண சபைத் தேர்தல் முஸ்லிம் அரசியலின் ஒற்றுமைக்கான ஒளியை வெளிச்சமிட்டிருக்கிறது.

ஊவா மாகானசபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கான ஆரம்ப நிலையிலிருந்து முஸ்லிம் கட்சிகள் பொதுவான ஒரு சின்னத்தில் அல்லது கூட்டில் இத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்ற கருத்தும் வாதமும் அப்பிரதேசத்தின் முக்கிய முஸ்லிம் அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டு அத்தகைய நல்ல எண்ணத்தினால் எடுக்கப்பட்ட அயராத முயற்சியினால் இதனை சாத்தியமாக்க முடிந்திருக்கிறது.

முஸ்லிம் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஒற்றுமையான ஒரு நிலைக்கு கொண்டுவரும் தேவைக்கு அப்பால் ஊவா மாகாணசபைக்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதியை, முஸ்லிம் கட்சிகளின்  சார்பாக வென்றெடுக்க வேண்டும் என்ற தேவை இதில் மிகைத்ததாகவே இருக்கிறது. 

இதற்கமைய முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை ஜனநாயக ஐக்கிய முன்னணியின் (துஆ) இரட்டை இலைச் சின்னத்தில் ஒன்றாக போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இம்முடிவானது பேசுவதற்கும், பிரசாரம் செய்வதற்கும், ஊடகப்படுத்துவதற்கும் நல்ல செய்தியாக இருக்கும் எனபது இதிலுள்ள முதல் திருப்தியாகும். முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு ஒரு சின்னத்தில் போட்டியிடுகின்றன என்று எல்லோரும் பரபரப்பாக எங்கும் எதிலும் பரிமாறுகின்ற ஒரு மகிழ்ச்சியான செய்தியாகவும் இதனைக் கூறலாம். 

என்றாலும், ஊவா மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்ட நிலையில் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் இணைந்துகொள்வதில் இறுதியாக எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவானது முஸ்லிம் அரசியலின் எண்ணத்தை ஒருவகையில் பிரதிபலித்தாலும் அதனை அடைந்துள்ள முறையும், கூட்டுச் சேர்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள துஆ கட்சியும் எமக்குள் மாற்றுக் கேள்விகளையும் நடைமுறைசார் பிரச்சினைகளையும் எழுப்புவதாகவே இருக்கிறது.

முஸ்லிம்களின் உரிமைத்துவ அரசியலின் தனித்துவ அடையாளமாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் மரச் சின்னமும் ஒற்றுமையான இத்தேர்தல் உடன்படிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸை ஒரு தாய்க்கட்சியாக வைத்துக்கொண்டு மரச்சின்னத்தில் இணைவதே இதில் நியாயமாக இருந்திருக்கும்.

இத்தேர்தல் கூட்டு உடன்படிக்கையில் முஸ்லிம் காங்கிரஸூம் அதன் மரச்சின்னமும் எடுத்துக்கொள்ளப்படாமைக்கு பொதுச் சின்னம் ஒன்றின் அவசியம் இருந்ததாகக் கருதப்பட்டாலும் அது இவ்வுடன்படிக்கையில் நிறைவேற்றப்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.
ஏனெனில், குறிப்பிட்ட தேர்தலுக்கான பதுளை மாவட்ட வேட்பாளர்களுக்கான பட்டியலிலுள்ள 21 வேட்பாளர்களுள் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 11 பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக 06 பேரும் நிறுத்தப்பட்ட நிலையில் மிகுதி 04 பேர் துஆ கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எனவே இவ்வேட்பு மனுவின் பிரகாரம்  இது மூன்று கட்சிகளின் தேர்தல் உடன்படிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். மாறாக பொதுக்கட்சி, பொதுச் சின்னம் என்ற தோற்றப்பாடு இதில் கிடையவே கிடையாது.

இத்தகைய மூன்று கட்சிகளைக் கொண்ட ஒரு தேர்தல் உடன்பாட்டில் முஸ்லிம் சமூகக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக துஆ கட்சியினுள் தஞ்சம் புக வேண்டும்? முஸ்லிம் அரசியலின் ஒற்றுமையானது முஸ்லிம் காங்கிரஸை மையமாக வைத்து மரத்தின் கீழ் கொண்டுவரப்படுவதே ஆகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அல்லது அதன் உயர்பீடம் என்ன நியாயத்தை வைத்திருக்கிறதோ தெரியாது.

துஆ கட்சியின் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தற்போது முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராகவும், கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு அமைச்சராகவும் இருப்பதனால் அவர் முஸ்லிம் காங்கிரஸின் உள்வீட்டில் இருப்பவர் என்ற நியாயம் இதில் சரி காணப்பட்டாலும், அவ்வாறான ஒருவர் எதற்காக தனது சார்பில் 04 வேட்பாளர்களை நிறுத்தியிருக்க வேண்டும்? முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு ஏன் அனுமதியளித்தது? இந்த இடத்தில் முஸ்லிம் காங்கிரஸ்காரராக ஹாபிஸ் நஸீரை எப்படிப் பார்க்க முடியும்?

ஆகவே, ஒன்றுபட்டுக் கேட்கும் இவ்வுடன்பாட்டில் துஆ கட்சியை மட்டுமே பயன்படுத்தியிருக்க வேண்டும். மாறாக அதன் வேட்பாளர்களை உள்ளடக்கியது கட்சிக்குள் கட்சி நடத்தும் கைங்கரியத்தையே வெளிப்படுத்துகிறது.

இதில் மற்றுமொரு முக்கிய விடயம், ஹாபிஸ் நஸீரை முஸ்லிம் காங்கிரஸ் இணைத்துக் கொள்வதில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்றாக துஆ கட்சி கலைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்தது. ஆனால் அது கலைக்கப்டாமலும் அதற்கான கட்டாயம் வலியுறுத்தப்படாமலும் அவ்விடயம் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் நன்கு தெளிவாகிறது.

மேலும், ஒரு அரசியல் கட்சி தொடர்ச்சியான செயற்பாட்டில் இல்லாதபோது காலவதியான அடிப்படையில் அதன் பதிவு இரத்துச் செய்யப்படும் என்ற விதிமுறைகளுக்கும் உட்படாதவாறு துஆ கட்சியைப் புதுப்பித்துக் கொண்டிருக்கவும் இது ஒரு வாய்ப்பினை அளித்திருக்கிறது. இவ்வாறு துஆ கட்சிக்கு உயிர் கொடுத்து வைத்திருக்கும் கடமைப்பாடு முஸ்லிம் காங்கிரஸூக்கு ஏன் ஏற்பட்டிருக்கிறது?

இவ்வாறானதொரு தேர்தல் ஒற்றுமையை கடந்த 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜமியத்துல் உலமா போன்ற பொது அமைப்புக்கள் ஏற்படுத்த முயன்றும், இறுதியாக மரச்சின்னத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்ற முஸ்லிம் காங்கிரஸின் பிடிவாதத்தினால் அம்முயற்சி இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது.

இப்படி எதற்காகவும், எப்போதும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு அரசியலுக்காக மரச்சினத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று வாதாடிய முஸ்லிம் காங்கிரஸ் ஊவா மாகாணசபைத் தேர்தலில் மரத்தைச் சிறுக்க வைத்து இரட்டை இலையாகச் சுருங்கியது ஏன்?

இதில் நடைமுறை சார்ந்த இன்னுமொரு ஆபத்தும் இருக்கிறது. அதாவது தேர்தலில் வெற்றிபெறுகின்ற வேட்பாளர் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக இல்லாதவிடத்து அவரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருடையதாக இருக்கும்? அந்த வேட்பாளர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு விசுவாசமாக இருப்பாரா? தனது கட்சியின் நேரடியான தலைமைக்கு விசுவாசமாக இருப்பாரா? உடன்படிக்கை மூலம் இதை எழுதிக்கொண்டாலும் துஆ கட்சியைக் கலைக்க வேண்டும் என்ற நிபந்தனை போன்றுதான் இதுவும் காலப்போக்கில் ஆகிவிடலாம்.

அத்துடன், எதிர்காலங்களில் இதுபோன்ற தேர்தல் உடன்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்ற போது மரச்சின்னத்தை விட்டுக்கொடுக்கும்படி வாதாடுகின்ற ஏனைய தரப்பினர்களுக்கு இது ஒரு முன்உதாரணமான ஆதாரத்தையும் கொடுத்திருக்கிறது.

எது எவ்வாறு இருப்பினும், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையின் மூலம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஒரு ஆசனத்தைப் பெற முடியும் என்ற நோக்கம் வெற்றிபெறுகிறதோ இல்லையோ, அதற்கான வேட்பு மனு ஹாபிஸ் நஸிரை பெரும் வெற்றியடையச் செய்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

மரம் உதிர்ந்து சருகானால் இலை வளரும் என்ற நம்பிக்கையில் எல்லாம் நடக்கிறதோ?

6 comments:

  1. கேவலம், அசிங்கம், விபச்சாரம், அநாகரிகம், நம்பிக்கைத்துரோகம், ஈனம், அவானச்சின்னம் போன்ற வார்த்தைகளை - வார்த்தைகளாக மட்டும் அறிந்திருந்த மக்களுக்கு - அவ்வார்த்தைகளை உருவங்களில் காட்ட இறைவன் இவர்களை இட்டுவைதிருக்கிறான்!

    ReplyDelete
  2. அல்லாஹ் இவர்கள் கரங்களை வலுப்படுத்துவானாக

    ReplyDelete
  3. Intha santharppaththil iwwarana katturaikalai eluthi makkalai kulappuwathu mihs mosamana sayal .maram ilai kulai yanai enra pirachchinai ippa thewai illai muslimkal ontru pada wendum.muslim pirathinithi wendum awwalawuthan katturaiyalarin karuththu ipothu yhewai illai iwwaraha eluthi waakkukalai sitharadikka wrndam ithu ippothaikku poruththam atrathu enpathai kawanaththil kollawum.!!!!!!

    ReplyDelete
  4. முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தின் மிகவும் பலகினத்தையும் அரசியல் தூரப்பார்வையும் அற்றதையுமே இது வெளிப்படுத்துகிறது.
    இந்த ஹபிஸ் நசீரின் பணம் எப்படி வந்தது என்பதையும் அதற்குரிய பலாபலனை அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் விட்டுது விடுவோம். ஆனால் இவர் முஸ்லிம் காங்கிரசை அழித்து, அரசியல் அதிகாரத்தை தனது கைக்குள் வைத்துக் கொள்ளுவதற்கு முயற்சி செய்து தோற்று, இப்போது தனது பணத்தின் மூலம் தலைமைத்துவத்தை வாங்கிக் கொண்டு தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொண்டு வருகிறார்.. எமது கணிப்பு என்னவென்றால் இவரை போன்றவர்களிடம் முஸ்லிம் மக்களும் ஆர்வலர்களும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    நல்ல தொரு கருத்தை எழுதிய நவாஸ் செளபிக்கு நன்றி.

    ReplyDelete
  5. முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தின் மிகவும் பலகினத்தையும் அரசியல் தூரப்பார்வையும் அற்றதையுமே இது வெளிப்படுத்துகிறது.
    இந்த ஹபிஸ் நசீரின் பணம் எப்படி வந்தது என்பதையும் அதற்குரிய பலாபலனை அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் விட்டுது விடுவோம். ஆனால் இவர் முஸ்லிம் காங்கிரசை அழித்து, அரசியல் அதிகாரத்தை தனது கைக்குள் வைத்துக் கொள்ளுவதற்கு முயற்சி செய்து தோற்று, இப்போது தனது பணத்தின் மூலம் தலைமைத்துவத்தை வாங்கிக் கொண்டு தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொண்டு வருகிறார்.. எமது கணிப்பு என்னவென்றால் இவரை போன்றவர்களிடம் முஸ்லிம் மக்களும் ஆர்வலர்களும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    நல்ல தொரு கருத்தை எழுதிய நவாஸ் செளபிக்கு நன்றி.

    ReplyDelete
  6. ..பட்டவர்த்தனதின் வார்த்தை பிரயோகம் சரிகாணப்பட வேண்டியதுதான்
    ஏனெனில் வேட்பாளர்களையும் கட்சிகளையும் அதிகரிப்பது எவ்வாறு பலமுள்ளதாக முடியும்?
    பலமான ஓர் 3ஆம் கட்சியின் உருவாக்கத்தை தடுக்கும் ஓர் முயற்சி காட்சிப்படுத்தபட்டு இவர்களை மேலும் நிரந்தரமாய் கூறு போடும் ஓர் செயற்திட்டம் இவர்களை அறிந்தும் அறியாமல் இவர்களின் தலைவர்களால் செயற்படுத்தப் படுகிறது.
    அல்லாஹ்வு அ'லம்..

    ReplyDelete

Powered by Blogger.