Header Ads



அமைச்சர் அய்யாவுக்கு..!


(கவிஞர் காத்தூரி)

அரசியல் பயணத்தின் 
அசராத சாதனைகள் 
அடுக்கடுக்கா எழுதி எம்மை
அசர வெச்ச 
அமைச்சர் அய்யா !

உங்க 'சோர்விலாச் சொல்' பார்த்து 
வாழ்த்த உட்கார்ந்தா 
வந்த கவித இது 
வழுவாம எழுதிப்புட்டேன் 

ராமருக்கு பாலம் கட்ட 
மண்சுமந்து சேவசெஞ்ச 
அணிலுக்கு அடுத்தபடி 
புத்தகம் வித்த காசில் 
பாலஸ்தீனப் பாலருக்கு 
பால்மா கொடுத்து நீங்க 
வரலாற்று ஏட்டோரம் 
வரியொண்ட போட்டிகளோ ?

'சோர்விலாச் சொல்' எழுதி 
பாராளு மன்றத்தில 
பகன்ற கத சொல்லிட்டீக 
'செதுக்கிய செயல்' எழுதி 
செயல் வீரம் 
சொல்வதெப்போ ?

அரசாளு மன்றத்தில 
அசராம பேசுறது 
எதிர்கட்சி வேலையெண்டு 
எக்குத் தப்பா நினச்சிட்டனோ ?
ஆளும்கட்சி ஆனாலும் 
ஆழமாப் பேசி
இருபது வருசத்துல 
இதமட்டும் செஞ்சு நீங்க 
புதுவிதி படைச்சிகளோ!
புரிய வைப்பீகளா?

எப்பவுமே ஆளும்கட்சி 
என்றே  இருப்பதல 
இருக்கும் இடம் மறந்திடிச்சோ? 
புரியாமக் கிடக்கெனக்கு  
புரிஞ்ச யாரும் சொல்லுங்கப்பா?

நீங்க பேசியத 
வாசிக்க வாசிக்க 
மயிர்காலும் உயிர்த்துப் போயி
உணர்வோட எழுந்து நிற்கும்
உங்க வாய்ச்சொல்லோ 
வானளாவ உயர்ந்து நிற்கும்!  

உருப்படியா இதுவரைக்கும் 
ஊருக்கு  செஞ்சதென்ன 
கேள்வி வந்தவுடன்
உணர்சிகளோ நாணி நிற்கும்
எழுந்த மயிர் கோணி நிற்கும்.

அமைச்சுப் பதவியில 
அசையாம உட்கார்ந்து 
புரியாத சொல்பேசும் 
புரட்சி வீரன் 
நீங்க அய்யா!  

உங்க பக்க நியாயங்கள் 
ஒருபோதும் பிழைக்காம 
கதைகதையா சொல்லி எங்க 
கல்பிலேயே இருக்குறீங்க. 

இருபது வருசத்து 
அரசியல் பேச்சுகள 
இருநூறு பக்கத்து 
புத்தகமா போட்டீக 
உங்க எழுத்தெல்லாம் 
சொல்லும்கத பார்கேக்க
ஒண்டு மட்டும்  
உண்மை அய்யா !

நீங்களும் எங்க பசி 
போக்குவதாச் சொல்லி சொல்லி  
என்கவீட்டுச் சட்டிக்குள்ள
அள்ளி அள்ளி போட்டதெல்லாம்  
கறிக்கு உதவா
வெறும் ஏட்டுச் சுரக்காதான். 

இலக்கியத்து வாசி நீங்க 
இருக்கிற இடத்தால 
எப்பவுமே சுகவாசி 
வக்குப்போட்ட சனத்துக்கு  
புரிஞ்ச பணி 
குறஞ்சது பத்துப்பக்கம்  
புத்தகமா போட்டுடுங்க 
பாழாப் போன 
மனசு கொஞ்சம்
பதறாம ஆறிப்போக.


4 comments:

  1. Welcom.thank you .poruththamana warikal .ithayallam parkka awarkalukku neram illai.

    ReplyDelete
  2. கவிஞ்சர்காத்தூரி
    கள்ளமில்லா மனசுக்காரர்
    காலம் அறிந்து
    கவியால கேட்டுவிட்டார்

    வாக்கு போட்ட சனத்துக்கு
    வாய்க்கரிசி காத்திருக்கு
    பத்துப்பக்கம் எழுத அத
    பக்குவம் இல்ல எனக்கு

    கொடி பிடிச்சவன்
    கொள்கை வாதி எண்டு
    வாக்களித்தது உங்க தப்பு

    தெரிஞ்ச தொழிலெல்லாம்
    தூக்கி எறிந்துவிட்டு
    சுகத்த கண்டுட்டன்
    சுதந்திரமா இருந்திட்டன்

    இருக்கின்ற காலம் வரைக்கும்
    இப்படியே இருந்திர்றன்
    கேள்வி மட்டும் கேக்காதிங்க

    வாக்கு மட்டும் போடுங்க
    வாய்க்கரிசி நான் தாறன்..!


    இப்படிக்கு
    உண்மையுள்ள
    அமைச்சர் ஐயா

    ReplyDelete
  3. Excellent. I love it. More & more are welcome. May Allah bless you with this talent.

    ReplyDelete
  4. இரத்தின சுருக்கமாக நல்ல ஆழமான, உண்மையான, யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. மிக்க நன்றி

    ReplyDelete

Powered by Blogger.