ஆருடம் கூறியும், அலட்சியப் போக்கில் இருந்த பாதுகாப்புத்துறை...!
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
சீண்டிவிட்டு வலிந்து தாக்கிய சம்பவமாகவே அளுத்கம, பேருவளை, தர்ஹா நகர் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் மீது பொதுபல சேனாவினால் மேற் கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவங்கள் காணப்படுகின்றன.
சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்படும் என்ற அவாவில் இருந்த மக்களுக்கு அவை காணல் நீராகவே ஆகிவிட்டது. அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என சகல முஸ்லிம் சமுகம் தமது கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.
விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றுவிடக் கூடாது என்ற நன்நோக்கத்தில் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் பாதுகாப்புத் தரப்பினரால் புறந்தள்ளப்பட்டு கண்டும் காணாததுபோல் இருந்தமையே அளுத்கம பகுதி சம்பவத்திற்கான முதல் காரணமாகும் என பலராலும் கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி விடயத்தில் இருந்து அரசும், பாதுகாப்புத் தரப்பினரும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் தப்பித்துவிட முடியாது. தற்போதைய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பும் சட்ட ரீதியற்ற பயங்கரவாத அமைப்பான பொதுபல சோனா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட பேரணியை பாதுகாப்புத்துறையினர் தடுக்காது அதற்கு அனுமதி வழங்கி முஸ்லிம்கள் மீது அவர்கள் அடாவடித் தனம் புரிவதற்கு வழி சமைத்துக் கொடுத்தமையை பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாகவே கண்டு விட்டனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி பொதுபல சோனாவின் பேரணி நடவடிக்கை முழு முஸ்லிம்களுக்கும் எதிரானது என்றும் அதனால் பாரிய பின் விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்றும் நாட்டின் ஐக்கியத்தைக் கருதியும் உடநடியாகவே பொலிஸ்மா அதிபர், இராணுவத் தரப்பினருக்கு எழுத்து மூலமான கோரிக்கையை விடுத்ததுடன் மேற்படி பேரணியை தடை செய்யுமாறு நேரடியாகவே கோரியதுடன் அதன் உறுதிப்பாட்டிற்கு பொலிசில் முறைப்பாடு ஒன்றையும் கூட செய்தும் எந்தவித பலனும் கிட்டவில்லை. மாறாக முஸ்லிம்களின் உயிர்ப் பலிகளுக்கும், அப்பாவி முஸ்லிம் மக்கள் படுகாயமடைவதற்கும், பல கோடி ரூபாய்கள் பெறுமதியான வீடுகள், வர்த்தக நிலையங்கள், பொது கட்டிடங்கள், மதஸ்தலங்கள், வாகனங்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் இழப்புக்களுக்கும், மக்கள் சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டும், அவளப்படுவதற்கும், அவர்கள் பாதிக்கப்படுவதற்கும் வழி வகுத்துவிட்டது.
இவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்ப வழங்காமல் பாரபட்சம் காட்டியதுடன் முஸ்லிம்களும் அவர்களின் உடமைகளும் தீயிட்டுக் கொழுத்துவதற்கும், காடையர்களால் பொருட்களை சூறையாடுப்படுவதற்கும் அவர்கள் தடை விதிக்காது பார்த்துக் கொண்டிருந்த நிலைமைகள், மற்றும் முஸ்லிம்களை மட்டும் கட்டுப்படுத்திய நிலைமைகள் நேரடியாகாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுகத்தை ஆத்திர மூட்டச் செய்துள்ளதுடன் மேற்படி நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினர் மீதும் அரசின் மீதும் நம்பிக்கையிழக்க வைத்துவிட்டது.
பாதுகாப்பு வழங்க வேண்டிய சீருடை தரித்த பாதுகாப்புத் தரப்பினர் தமது கடமையை காடையர்களுக்கு சார்பாகவும், அவர்களின் தீய செயற்பாட்டை தடுக்காது காணப்பட்டமை, காடையர்கள் ஆயுதங்கள், வால்கள் வைத்திருப்பதற்கும் அவற்றின் மூலம் முஸ்லிம்களைத் தாக்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கியமை போன்றவை அவர்கள் தமது சீருடைக்கு மதிப்பளிக்காது அரச துரோகம் இழைத்து விட்டனர் என பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர். இதுவே உண்மை.
இலங்கையில் எப்பாகத்திலாவது ஒரு சிறு பேரணி ஏற்பாடு செய்தால் அதன் மூலம் இயல்பு நிலை பாதிக்கும் என்ற காரணத்தைக் காட்டி பொலிஸார் அதனை தடுக்க நீதிமன்ற ஆணையைப் பெற்று தடுத்த சம்பவங்கள் எண்ணிலடங்காது. இவ்வாறான ஒரு நிலையில் அளுத்கமையில் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவார்கள் என்ற ஆருடத்துடன் அஸாத் சாலி செய்த முறைப்பாட்டையும், அளுத்கம விகாரையின் தேரர் அளுத்கம பொலிசில் குழப்பம் ஏற்படும் எனக் கருதி முறையிட்ட விடயங்களை குறைந்தபட்சமாவது பொலிஸார் கவனம் எடுத்திருந்தால் இன்று உயிர்ப்பலிகள் உள்ளிட்ட முஸ்லிம்களின் இழப்பக்களை தடுத்திருக்கலாம் ஆனால் பொலிஸார் சிறுபான்மையினர் என்ற அகர்வத்தால் செய்த தவறு இன்று பொலிஸ் துறையின் அக்கறையற்ற மற்றும் சுயநலத் தன்மைகள் உலகிற்கு வெளியாகிவிட்டதுடன் சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட சமுகம் மட்டுமல்லாது சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் சகல தரப்பினராலும் அரசின் மீதும் பாதுகாப்புத்துறை மீதும் கண்டனங்களும், விஷனங்களும் தெரிவிக்கப்படுகின்றன காரணம் முன்கூட்டியே தகவல்கள் வழங்கியும், சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவற்றை கவனத்திற் கொள்ளலாது அலட்சியம் செய்தமையேயாகும்.
மேற்படித் தரப்பினர் என்னதான் திருவுதாளங்கள் சொன்னாலும் இனி இவர்களை சமாதானத்தை விரும்பும் தரப்பினர் நம்புவதற்கு தயாரில்லை என்பதுடன் அடுத்த தேர்தல்களில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது பாதிக்கப்பட்ட சமுகத்தினால் விடப்பட்டுள்ளது.
மேற்படிச் சம்பவத்தால் அப்பாவி முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்புக்கள், உடமைகளின் இழப்புக்கள், பலர் காயப்பட்டமை, மக்களின் இயல்பு நிலைமைகளைக் குழப்பி மனநிலைமைகள் பாதிக்கப்படவும் வைத்ததுடன் சமுகங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்திய விடயங்களுக்குப் பொறுப்பான பொதுபல சேனாவின் ஞானசார தேரர் மற்றும் அதன் அமைப்பினர், அவர்களுடன் காடைத்தனம் செய்தவர்கள் அனைவரையும் கைது செய்து நாட்டின் சட்டத்தை மீறியமைக்கான தேசத் துரோக தண்டனையை வழங்க வேண்டும் அத்துடன் முஸ்லிம் சமுகத்திற்கு ஏற்பட்ட சகல இழப்புக்களையும் அரசு பாரபட்சமின்றி முஸ்லிம் சமுகத்திற்கு முழுமையாக வழங்க வேண்டும் என முஸ்லிம்கள் அரசினை வழியுறுத்தி நிற்கின்றனர்.
தற்போது இந்த அரசு மனித உரிமைகளை தாராளமாகவே மீறுகின்றது என்பதற்கு சூடான ஆதாரமாக அளுத்கம மற்றும் தர்ஹா நகர் உள்ளிட்ட இடங்களின் சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுவதுடன் அவை இன்று சர்வதேசத்தின் முன் அரசை மேலும் சர்வதேசம் இறுக்குவதற்கு வழி சமைத்து விட்டது.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மேற்படிச் சம்பவங்கள் இனி என்றும் அழியாச் சின்னங்களே இதுவே இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சர்வதேசத்திற்கு பதில் சொல்ல வைக்கும் பொறியாகும் என பாதிக்கப்பட்ட அளுத்கம முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி உலக நாட்டை சாந்தப்படுத்தவே சட்டத்தை மீறியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளதாகவும் அது மக்களை ஏமாற்றும் அரசின் நாடகத்தில் ஒரு சிறுபாத்திரம் எனவும் முஸ்லிம் புத்தி ஜீவிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது அப்பட்டமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள் அனைத்துக்குமே ஜனாதிபதி சொன்ன வார்த்தை சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்பதுதான். ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்றே ஜனாதிபதியின் பேச்சு என அனுபல ரீதியாக பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் கவலை வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம் சமுகம் இதுவரை காலமும் பொறுத்துவிட்டது போதும் இனி பொறுமையை அந்தளவிற்கு கைக்கொள்வார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கையை விடுக்கின்றனர்.
அதாவது இதுவரைகாலமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சகல அடாவடித் தனங்களுக்கும் பொதுபல சேனாவும் அதனோடு ஒட்டிய சில இனவாதக் கும்பல்களுடன் முக்கிய சூத்திரதாரியான பொதுபல சேனாவின் ஞானசார தேரருமாகும் முடிந்தால் இவரை கைது செய்து தண்டனை வழங்கட்டும் என்ற சவாலை முஸ்லிம் சமுகம் ஜனாதிபதியிடம் விடுக்கின்றனர்.
இன்று யாரிடம் கேட்டாலும் ஏன் சர்வமத தலைவர்கள் மற்றும் சமயத் தலைவர்கள், சமாதான விரும்பிகள், புத்தி ஜீவிகள், கல்விமான்கள் போன்றோரிடம் கேட்டால் ஞானசார தேரரை கைது செய்து தண்டனை வழங்கும்படியும் அவரின் இயக்கத்தை தடை செய்யுமாறுமே கோசமிடுகின்றனர். இவ்வாறு கருத்துக்கள் இருக்க அவர்களின் நாடகங்களுக்கு அனுமதி வழங்குகின்றமையானது அதற்கு அரசு ஆசீர்வாதம் செய்வதையே சுட்டிக்காட்டுகின்றது.
மனித நேயம், ஒழுக்கம், விட்டுக் கொடுப்புக்கள், மற்றவரை மதித்தல், பௌத்த தர்மம் அற்ற ஒரு அருவருக்கத்தக்க மனிதராக மட்டுமல்லாது சமுகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டிய ஒருவர் என்பதே உண்மை ஏனெனில் உண்மையான பௌத்த மக்களை தீவிரவாத்தின் பக்கம் இழுத்துச் செல்வதுடன் காவி உடையைக் காட்டி இனவாதத்தை வளர்ப்பதுடன் இனவாத கருத்துக்களைக் கக்கி அப்பாவி பௌத்த மக்களை சமுக விரோதிகாளக சந்திக்கு இழுத்து சண்டைக் காரர்களாகவும், காடையர்களாகவும் ஆக்கும் ஒருவரே ஞானசார தேரர்.
பல்லின சமுகம்கள் வாழும் இந்த நாட்டில் ஜனாதிபதி இனியும் இரட்டை வேடம் பூண்டு சிறுபான்மை மக்களை துண்டு போட நினைப்பது அவரின் அரியாசனத்தை இழப்பதற்கான ஆரம்பம் என்றே மக்கள் கூறுகின்றனர்.
அளுத்கம சம்பவம் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டு விட்டது. இந்த நிலைமைகள் மேலும் தீவிரமடைவதற்கு பொதுபல சேனா பல வழிகளிலும் சூழ்ச்சிகளைச் செய்து வருவதுடன் பௌத்த போதகர் என்ற கர்வத்துடன் இனவாத்தில் தாண்டவமாடுகின்றார் இது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் இவரால் ஏற்படப்போகும் ஆபத்தான திசையை நோக்கி நகர்கின்றது என்பதனையே ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் மேலும் இரத்வெறிக்கு இடமளிக்காது அனைத்து பௌத்தர்களும், அதன் உண்மையான பௌத்த தேரர்களும் கூறுவதுபோல் பௌத்தம் தர்மத்தையே போதிக்கின்றது. இந்தவகையில் அனைத்து சமயங்களின் நற்கோட்பாட்டில் மக்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும்.
மேற்படி அமைதிச் சூழலை ஏற்படுத்தாவிட்டால் தற்போது சர்வதேசம் விடுத்துள்ள கண்டனங்கள், நாடு பூராகவும் மேற் கொள்ளப்படும் ஹர்த்தால்கள், சட்டத்தரணிகளின் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் உலக நாடுகளின் இறுக்கமான பிடிக்குள் நாட்டையும், அதன் ஆட்சியாளர்களையும் கொண்டு போய்ச் சேர்க்கும் நிலைமைகளே ஏற்படும்.
எனவே அழிவும், அமைதியின்மையும் ஏற்பட்ட பிறகு அளுத்கம உள்ளிட்ட இடங்களில் அரசாங்கம் செயற்படும் நிலைமைகள் இனியும் ஏற்படாது மக்களின் நலன்களில் அக்கறை செலுத்துபவர்களின் கருத்துக்கள், முறைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகள் செயற்பட வேண்டுமே தவிர பெரும்பான்மை என்ற கர்வத்தில் நாட்டு மக்களுக்கு பாரபட்சம் காட்டி இனவாதத்திற்கு துணைபோக்க கூடாது என்பதனையே அளுத்கம, தர்ஹா நகர், பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற அனவாத அடாவடித் தனச் சம்பவங்கள் எடுத்தக்காட்டியிருக்கின்றன.
.jpg)
Post a Comment