கசினோவும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும்..!
நமது பாராளுமன்றில் நடைபெற்ற மனித பண்பாட்டுக்கு, விழிமியத்திற்கு கேடாகலாம் எனக்கருதும் சட்டகத்திற்கு இந்நாட்டின் மதத்தோடு தொடர்புபட்ட அரசியல்வாதிகளில் சிலர் தங்களுடைய பங்களிப்பினை காண்பிக்கவில்லை. காரணம் அந்தச் சட்டமூலத்தின் உண்மைத் தன்மையானது சில மறைமுகமான செயற்பாடுகளை ஊக்குவிக்கின்றது என்பதனால் உண்மையான மதப் பற்றுள்ளவர்கள் அந்தச் சட்டமூலத்திற்கு அபயமளிக்கவில்லை. அப்படியானால் அந்தச் சட்டமூலம் இந்நாட்டுக்கு என்ன தேவைக்காக பயன்படுத்தப்படப்போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இந்நாட்டின் ஆளும் அரசியல்வாதிகளுக்குண்டு.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த 24, 25ஆம் திகதிகளில் நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தச் சட்டத்தினுள் புதைந்துள்ள கசினோ எனப்படும் சூதாட்ட விவகாரம் சமூகக்கேட்டினை விளைவிக்கும் என்பதால் பௌத்தவாதிகளும், முஸ்லிம்களின் தலைவர்கள் என்கிற ஆளும் கட்சிக்குள்ளே இருக்கின்ற சில கட்சியாளர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இது கடுமையான ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்கும் என்பதால் ஆளும் கட்சிக்குள் இருந்து குழிபறிக்கின்ற இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை பட்டியிலிட்டு ஜனாதிபதியின் கைகளில் வழங்கப்போவதாக ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து இலங்கைவாழ் முஸ்லிம்களின் வாக்குகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்குள் இதன் தாக்கம் விரைந்துவிடுமோ என்கிற பயமேலீட்டினால் உடனடியாகவே அறிக்கை தயாரிக்கப்பட்டு அக்கட்சியின் செயலாளர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 'கசினோ என்ற பதம் அதில் இல்லை அதானால் நாம் எதிர்க்கவில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையும் எதிர்ப்பது என்றே அர்த்தப்படும். கசினோ என்ற பதம் உள்ளடக்கப்பட்டிருந்தால் எதிர்த்து வாக்களித்திருப்போம். அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டு நிறைவேறியுள்ள இக்கட்டளை தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது' எனவும்; செயலாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், 'அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இக் கட்டளைக்கு நாம் வாக்களிக்காது இருந்தமை இதனை ஆதரிப்பதற்காகவோ அரசாங்கத்தை வலுப்படுத்தவோ அல்ல. முன்னர் இக்கட்டளை கொண்டு வந்த போது கசினோ என்ற பதத்தினை வலுப்படுத்தியிருந்தனர். எனினும் இம்முறை கசினோ என்ற பதம் அகற்றப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வேறு மாற்று வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாம் வாக்களிக்காது இருந்தோம். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருந்தமையும் எதிர்ப்பு என்றே அர்த்தப்படும். இதில் எம்மை விமர்சிக்கும் அளவில் பெரிய விடயமெதுவும் இல்லை. அதே போல் கசினோ என்ற பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் நாம் நிச்சயமாக இதனை எதிர்த்தே வாக்களித்திருப்போம். கசினோ உள்ளடக்கிய சட்ட மூலம் கொண்டு வரப்படுமாயின் அதனை ஆதரிக்கப் போவதில்லை என்ற கருத்தினை ஆரம்பம் தொடக்கம் ஊடகங்களில் தெரிவித்து வந்தோம். இப்போதும் அதே முடிவிலேயே இருக்கின்றோம். சமூகத்தினை சீரழிக்கும் நோக்கம் எப்போதும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இருந்ததில்லை.
இக்கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இக்கட்டளையில் எமக்கு சந்தேகம் உள்ளது. செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்களின் கீழான கட்டளை என இதனைக் கொண்டு வந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மையென்பது கேள்விக்குறியே. அதி சொகுசு ஹோட்டல்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவற்றில் சூதாட்டம் தவிர்க்கப்படுவதென்பதும் நம்பக்கூடிய வகையில் இல்லை' எனவும் முகாவின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது சமூகத்திற்கு நன்மை பயக்காத இந்தவிடயத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. வாக்களிக்காது வெளியேறினோம். அப்படியானால் இச்சட்ட மூலத்தைக் கொண்டுவருவதற்கு முன்னர் இதனைப்பற்றிய தெளிவின்மை இவர்களிடம் இருக்கவில்லை. எதிர்த்து வாக்களித்தால் அரசு வெளியேற்றிவிடும் என்பதனால்தான் என்னவோ வாக்களிக்காது விலகியிருந்துள்ளனர்.
இதேவேளை தமிழர் தரப்பிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முஸ்லிம்களின் கட்சியாளர்கள் தாமே என்கிற தலைமைகளைப்பார்த்து முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று கூறியிருப்பதன் மூலம் இந்நாட்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களினதும் மானத்தைக் காக்க ஏன் வாக்களிக்காது ஓடி ஒளிந்து கொண்டனர் என்பதுதான் இன்று இவர்களுக்கு வாக்களித்த மக்களின் கேள்வியாகும். என்றைக்கும் மக்களை ஏமாற்ற முடியாது 'ஒருநாள் வண்ணானை முதலை பிடித்த கதைபோல' என்றைக்காவது ஒருநாள் மக்கள் நிராகரித்துவிடுவார்கள். அப்போது மூலைகளில் நின்று மூக்கைச் சிமிட்டவேண்டிவரும்.
எம்.ஏ. சுமந்திரன் ஐயா கூறிய விடயம் இதுதான் அதாவது 'கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய்விட்டது. அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கட்டளையான கசினோ சூதாட்டம் கொண்ட நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இங்கு அமைச்சர்களால் கூறப்படுகின்றது. அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கதைகளைக் கூறி மக்களை திசை திருப்புவதாகவும் அமைச்சர்கள் கூறுகின்றனர். எனினும் மாநாயக்க தேரர்களே இவ்விடயத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை திருத்தியமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆகவேதான் மனச்சாட்சி உள்ள ஆளும் கட்சி உறுப்பினர் சூதாட்டத்தைக் கொண்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் நின்று விடாது ஆளும் கட்சியின் பங்காளியான அத்துரலியே ரத்னதேரர் எதிர்த்து வாக்களித்தார். இந்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகின்ற நான்கு மதங்களுமே சூதாட்டத்தை வெறுக்கின்றன. சூதாட்டத்தின் மூலம் மனைவியை இழந்தமை, சொத்துக்களை இழந்தமை, சகோதரங்களுக்கிடையே கொலைகள் இடம்பெற்றமை என்பவற்றை வரலாறுகள் கூறுகின்றன. அப்படியிருந்தும் முஸ்லிம்களது பிரதிநிதிகள் இதன் உண்மைத் தன்மை தெரிந்திருந்தும் எதிர்த்து வாக்களிக்காது விலகியிருந்தமை முதுகெலும்பற்றவர்களாகவே தெரிகின்றனர் என்று சுமந்திரன் ஐயா பாராளுமன்றத்திலேயே இக்கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இக்கருத்துக்கு முகாவின் செயலாளர் ஹசன் அலி ஐயா தெரிவித்திருக்கும் கருத்து மக்களை ஏமாற்றுவதாகவே அமைகின்றது.
சூதாட்டம் (புயஅடிடiபெ) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டாகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு சில நாடுகள் இதனைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றன.
பல சமூகங்களில் சூதாட்டமானது ஒரு தீய பழக்கமாகவும், விலக்கி வைக்கவேண்டிய ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது. கத்தோலிக்க, யூத மரபுகளில் சூதாட்டத்துக்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடைய மதங்கள் சூதாட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சூதாட்டத்தினால் விரும்பத்தகாத பல சமூக விளைவுகள் ஏற்படுகின்றன. இதனாலேயே பல நாடுகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இஸ்லாமிய நாடுகளும், வேறு சில நாடுகளும் சூதாட்டத்துக்கு முற்றாகவே தடை விதித்துள்ளன. இந்து சமய நூல்களும், தமிழில் தோன்றிய நீதி நூல்கள் பலவும் சூதாட்டத்தில் ஈடுபடாடாதிருக்கும்படி அறிவுறுத்துகின்றன. இந்தியாவின் பழைய நூல்களான மகாபாரதக் கதையும், நளன் கதையும் சூதினால் விளைந்த கேட்டையே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றமை யாவரும் அறிந்;திருக்கின்ற விடயங்களாகும்.
இருப்பினும் சில அமைச்சர்கள் அந்த முஸ்லிம் நாட்டில் உண்டு. இந்த நாட்டில் உண்டு என்கிற கதைகளையும் கூறி மக்களை திசைதிருப்பப்பார்க்கின்றனர். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க அமைச்சராக இருந்த போது 1988 ம் ஆண்டே ஜக்போட் கசினோ சூதாட்டம் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டது. அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் கொண்டு வந்த சூதாட்ட சட்டமூலமே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி கொண்டு வந்த சூதாட்டச் சட்டம் காரணமாக இலங்கையில் 50 முதல் 60 வரையான கசினோ நிலையங்கள் உள்ளன. நாட்டின் கசினோ நிலையங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 50 மில்லியன் ரூபா வரி விதிப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 100 மில்லியன் ரூபாவாக அதிகரித்ததால், நாட்டில் கசினோ நிலையங்கள் வரையறுக்கப்பட்டன.
வரையறுக்கப்பட்ட கசினோ நிலையங்கள் இன்றும் கொழும்பில் இயங்கி வருகின்றன. 1988ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன கொண்டு வந்த சட்டம் காரணமாவே அவை இன்றும் இயங்கி வருகின்றன. ஜே. ஆர் கொண்டு வந்த சூதாட்டச் சட்டமூலம் இன்னும் நாட்டில் அமுலில் இருக்கின்றது. இதனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிதாக கசினோ நிலையங்கள் எதனையும் அமைக்க இடமளிக்க போவதில்லை. சாதாரண மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடம் இருந்து இவை தூர விலக்கி வைக்கப்படும். பௌத்தபிக்குகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததனால், புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள ஹோட்டல்களில் கசினோ வசதிகள் இல்லை. இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் ஹோட்டல்களில் தங்குகின்றனர். அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
மலேசியா முஸ்லிம் நாடு, அங்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலில் உள்ளது. எனினும் அந்த நாட்டில் தனியான தீவொன்றில் கசினோ வசதிகளுடன் கூடிய ஹோட்டல்கள் உள்ளன. அதேபோல் அரபு முஸ்லிம் நாடான டுபாய் நாட்டிலும் சகலமும் இருக்கின்றன. மாலைதீவுகளில் போதைப் பொருள் தடைச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுகிறது. அங்கு 187 சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்களில் மதுபானம், போதைப் பொருள், கசினோ என சகலமும் உள்ளன. எமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை வழங்கவேண்டும். நாம் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து மட்டத்திற்கு முன்னேற வேண்டும் எனவும் கல்விக்குப் பொறுப்பான அந்த அமைச்சர் தெரிவித்துள்ளமை உண்மையாகவே இச்சட்டகத்தினுள் கசினோ எனப்படும் சூதாட்டமையம் உண்டு என்பது புலனாகின்றது.
அப்படியானால் சில ஆளும் கட்சிக்குள் இருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. இவர்கள் முஸ்லிம் பள்ளியினுள் சென்று முஸ்லிம்கள் மத்தியில் நல்லது கெட்டது பற்றி பேசத்தான் முடியுமா? போகிற போக்கைப்பார்த்தால் மதமாறினால்தான் அமைச்சர் பதவி தருவோம் என்றாலும் கொஞ்ச நாளைக்குத்தானே மதத்திலிருந்து மாறுவார்கள் போலும். எனவேதான், இன்று ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டு ஆட்சியாளர்களுக்கும், பௌத்த தீவிர வாதிகளாக பொதுபலசேனாவும் சிம்ம சொப்பனமாகக் காட்சிதரும் ஸ்ரீலமுகா உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் றிஷான் பதியுதீன் ஆகியோர் அரசின் சலுகைகளை ஒதுக்கிவிட்டு சமுகத்திற்கான பணியினை முன்னெடுப்பார்களா? அல்லது கடந்த தேர்தலின்போது பேசியவைகள் எல்லாம் மறந்ததுபோல சில நாட்களின் பின்னர் இரகசியமாக ஆதரவு வழங்கி ஆட்சியாளர்களின் காலில் விழுவார்களா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். எப்படியானாலும் முஸ்லிம் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தச்சட்ட மூலம் திரிசங்கு நிலையினைத் தோற்றுவித்துள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.
(ஒளியான்)

Post a Comment