சுற்றறிக்கை மீறல்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அறிவுறுத்தப்பட வேண்டியதா..?
(நவாஸ் சௌபி)
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்வி அமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக 'தவறிழைக்கும் மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்களுக்கு தண்டனை' எனும் தலைப்பில் மே 17 சனிக்கிழமை ஜப்னா முஸ்லிம் செய்தி வெளியிட்டுள்ளது.
தவறிழைக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் கையாள வேண்டிய வழிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கைகள் பற்றி அதிபர், ஆசிரியர்கள் போதியளவு அறிவுறுத்தப்படாமல் இருப்பதனை ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் குறிப்பிடுவது போன்று 2005 இல் மாணவர்களைத் தண்டிப்பதுதொடர்பாக வெளியான சுற்றறிக்கையானது 'பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாத்தல்' எனும் தலைப்பில் 2005ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சுற்றறிக்கையாக (2005ஃ17) 2005.05.11 ஆம் திகதி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இதற்கு முன்னரான 1961 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க 1961.07.21 ஆம் திகதிய சுற்றுநிரூபமும் அதேபோன்று 2001 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க 2001.03.30 ஆம் திகதிய சுற்றுநிரூபமும் இரத்துச் செய்யப்பட்டே மேற்படி 2005 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சுற்றறிக்கைக்கு அப்பால் பாடசாலைகளில் மாணவர்களைத் தண்டிக்காது அவர்களின் ஒழுக்கத்தை மேலொங்கச் செய்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய வேண்டிய கட்டாயம் இன்றைய கல்விப் புலத்திற்கு அவசியமாகின்றது.
இது ஒருபுறமிருக்க சுற்றறிக்கைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மட்டும்தான் அறிவுறுத்தப்பட வேண்டுமா? எனும் வினா ஜோசப் ஸ்ராலின் கோரிக்கையிலிருந்து எழுகிறது. பொதுவாக இன்றுள்ள கல்விச் சூழலில் சில சந்தர்ப்ப சம்பவங்களில் சுற்றறிக்கை மீறல்கள் இடம்பெறுவதனை அவதானிக்க முடிவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே சுற்றறிக்கைகள் பற்றி அதிபர் ஆசிரியர்கள் மாத்திரமன்றி முழுக் கல்விச் சமூகத்திற்கும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற தேவை இன்றுள்ள கல்விச் சூழலில் அவசியமாகின்றது.
கல்வி நிர்வாகத்தில் ஈடுபடுகின்ற பணிப்பாளர்கள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்விப் புலத்தினை ஆளுகை செய்கின்ற சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் அறிந்து செயற்பட்டு கல்வி நிருவாகத்திலும் கல்வியின் பண்புத் தரத்திலும் சிறப்பான செயலாற்றத்தினை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதை வழிப்படுத்தும் நோக்குடன் கல்விச் சுற்றிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
இதற்கமைய இன்று கல்வித் துறைக்கும் அதன் நிர்வாக ஒழுங்குகளுக்குமாக வெளியிடப்படுகின்ற சுற்றறிக்கைகளின் செயல் வடிவம் அதன் நோக்கத்திற்கு அமைய எந்தளவிற்கு வெற்றியளிக்கிறது என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இதற்கு அதிபர் ஆசிரியர்கள் மாத்திரமல்லாமல் மறுபுறம் கல்வி நிர்வாகமும் பொறுப்புக் கூறும் தேவையும் இருக்கிறது.
இன்று கல்விச் சமூகத்தில் இடம்பெறும் சில சம்பவங்களை நோக்கும் போது அவை சுற்றிக்கைகளை பின்பற்றி நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
01. 2007 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க 2007.12.13 ஆம் திகதிய சுற்றிக்கையானது தேசிய ஆசிரிய இடமாற்றக் கொள்கை என்ற தலைப்பில் ஆசிரியர் இடமாற்றம் தொடாபாக முழுமையான விடயங்களை குறிப்பிட்டுள்ளது. இது 2001 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க 2001.10.26 ஆம் திகதிய சுற்றறிக்கையை திருத்தியதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் ஆசிரியர் இடமாற்றச் சபைகளின் ஊடாக வருடாந்த ஆசிரியர் இடமாற்றமாக நடைபெற வேண்டும் என்று இச்சுற்றறிக்கை அதற்கான காலக்கெடுவையும் விதித்திருக்கிறது. இதன்படி ஆசிரிய இடமாற்றக் கொள்கை சுற்றறிக்கையின் பிரிவு 4, இடமாற்றம் செய்யப்படும் கால எல்லை எனும் தலைப்பில் பின்வருமாறு இடமாற்ற காலத்தைக் குறிப்பிடுகிறது.
... ஆசிரியர்களின் இடமாற்றச் செயற்பாடு காரணமாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படக் கூடிய அசௌகரியங்களைக் குறைப்பதற்காக ஆசிரியரிடமாற்ற வேலைகள் ஒவ்வோராண்டிலும் மே மாதம் 31 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்ட நவம்பர் 01 ஆந் திகதி முடிக்கப்பட வேண்டும். (அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆந் திகதி தொடக்கம் அமுல் நடத்தப்பட வேண்டும்)
என்று இடமற்றக் காலத்தை வரையறுத்து இக்காலமான மே மாதம் 31 தொடக்கம் நவம்பர் 01 ஆந் திகதிவரைக்குமாக மேற்கொள்ள வேண்டிய இடமாற்ற செயற்பாடுகளுக்கும் சுற்றறிக்கை பிரிவு 4.1 இல் அட்டவணைப்படுத்தப்பட்ட காலக்கெடு வழங்கப்பட்டிருக்கிறது.
சுற்றறிக்கை இவ்வாறிருக்க ஜனவரி தொடாக்கம் டிசம்பர் வரை வருடம் முழுவதும் எந்தக் காலக் கெடுவும் இல்லாது ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெறுமாயின் அதனை எதனடிப்படையில் நியாயம் காண முடியும்?
02. அடுத்து 2001 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க 2001.10.20 ஆம் திகதிய சுற்றறிக்கை அரசாங்க பாடசாலை அதிபர்களினதும் ஆசிரியர்களினதும் இடமாற்றங்கள் எனத் தலைப்பிட்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் அரசாங்கப் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் என்போர் ஆண்டுபூராகவும் இடமாற்றங்களைப் பெற்றுச்செல்வதால் பாடசாலை நிர்வாகம் மற்றும் கற்றற் கற்பித்தற் செயற்பாடுகள் என்பனவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதனால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்போரின் இடமாற்றங்களை ஆண்டு பூராகவும் நடாத்துவதை இயன்ற அளவில் குறைத்துக்கொள்ளவும் குறிக்கப்பட்ட ஒரு கால எல்லைக்குள் மாத்திரம் அவ்விடமாற்றங்களைச் செய்யவும் கல்வி உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. என்று முன்னுரை எழுதி அதிபர் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பாக பின்வரும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு சுற்றறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளரினால் வலியுறுத்தப் பட்டிருந்தது.
1. அதிபர்களின் இடமாற்றங்கள்
1.1 எந்த ஒரு அதிபருக்கும் ஆண்டின் மத்தியில் இடமாற்றம் வழங்கப்படக் கூடாது.
2. ஆசிரியர்களின் இடமாற்றங்கள்
2.1 1 தொடக்கம் 11 தரங்கள் வரையுள்ள வகுப்புக்களில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரயர்களின் இடமாற்றங்கள் டிசம்பர் மாத ஆரம்பத்திலிருந்து ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலத்தில் மாத்திரம் செய்யப்பட வேண்டும்.
2.2 க.பொ.த உயர்தர வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மே மாதத்தில் மாத்திரம் செய்யப்பட வேண்டும்.
கீழ் குறிப்பிடப்படும் மிக விஷேட சந்தர்ப்பங்களில் மாத்திரம் மேலே 1ஆம் 2ஆம் பந்திகளில் காட்டப்பட்டுள்ள வரையறைகளுக்குப் புறம்பாகச் செயற்படலாம்.
அ. சேவையின் தேவை அடிப்படையில்
ஆ. அதிபர் அல்லது ஆசிரியர் பற்றி எழும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது
இ. அதிபர் அல்லது ஆசிரியர் திடீர் விபத்தொன்றுக்காளாதல் அல்லது பாரதூரமான வியாதிக்குட்படல் ஆகிய சந்தர்ப்பங்களில் வைத்திய சபையின் தீர்மானத்தின் பேரில் வீட்டிற்கு அண்மையிலுள்ள ஓர் இடத்திற்கு வர வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில்.
எனவே மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்படும் விஷேட தேவைக்கான காரணம் எதுவுமில்லாது சில அதிபர் ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெற்றால் அதனை எவ்வாறு நோக்க முடியும்?
03. மற்றுமொரு சுற்றறிக்கையான 1998 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க 1998.07.03 ஆம் திகதிய, அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படுதல் எனத் தலைப்பிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரிவு 07 இல், குறைந்த தர அதிபர் ஒருவர் இருக்கும் பாடசாலை ஒன்றில் எக்காரணம் கொண்டும் கூடியதர அதிபர் ஒருவரைப் பிததி அதிபராக நியமிக்க கூடாது எனும் நிபந்தனை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் கூடிய தரத்திலான அதிபர் சேவையில் இருப்பவர்கள் குறைந்த தரத்திலிருக்கும் ஒரு அதிபரின் கீழ் பிரதி அதிபர்காளாக நியமிக்கப்படுகின்ற சம்பவங்கள் நிகழுமாயின் அதனை யார் பொறுப்புக் கொள்வது?
இப்படிச் கல்வி நடைமுறையில் சிக்கலும் ஒழுங்கீணங்களுமான செயற்பாடுகள் நடைபெறுவதனைத் தடுத்து நாட்டின் முழுக்கல்வியையும் சீர்படுத்தி சிறப்பாக செயற்படுத்தவே சுற்றறிக்கைகள் உருவாகின்றன. இது நபருக்கு நபர் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்ட அர்த்தங்களில் பின்பற்றப்படுதல் ஆரோக்கியமான ஒரு கல்வி நடைமுறை அல்ல என்றும் உணர்த்தப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் தேடி நீதிமன்றம் செல்வதற்கு மாத்திரம் தேடி எடுத்து ஆதாரப்படுத்துகின்ற ஒரு பொக்கிஷமாக சுற்றறிக்கைகளைப் பயன்படுத்தாது அவை கல்வி நடைமுறையின் அன்றாடச் செயற்பாடுகளுடன் பின்னிப்பிணைந்ததாக விரிவாக்கப்பட்டு பயன்படுவதனை கல்வி மட்டத்திலுள்ள சகல தரப்பினர்களும் பொறுப்புக் கொள்ள வேண்டும்.
எனவே கல்விச் சுற்றறிக்கைகளை அதன் நோக்கின்படி பின்பற்றும் ஒரு முன்மாதிரியை கல்விப் புலத்தின் உயர்மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை உருவாக்குதல் நன்று. அதற்காக கல்விச் சுற்றறிக்கை விதிகளின்படியும் அதன் ஒழுங்குகளின்படியும் நடந்து மேல் மட்ட நடைமுறைகள் மூலம் கீழ்மட்ட நடைமுறைகளை மாற்றியமைக்கும் பண்புகள் மிளிர அனைவரும் ஒத்துழைத்தலின் அவசியம் உணரப்படுகிறது.

Post a Comment