Header Ads



சாய்ந்தமருதுக் கோட்டத்தில் பாடசாலைகள் சமப்படுத்தப்படல் வேண்டும்...!

(நவாஸ் சௌபி)

கடந்த 04.05.2014 ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை ஏற்பாடு செய்து நடாத்திய பரீட்சைகளில் சாதனைகளை வெளிப்படுத்திய  அப்பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான பாராட்டு விழா சாய்ந்தமருது பிரதேச கல்வி அபிவிருத்திக்கான சமூக விழிப்புணர்வையும் அதற்கான அக்கறைகளையும் உருவாக்குவதற்கான முதற்படியாக அமைந்திருக்கின்றது.

இவ்வாறு ஒரு பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியிலும் அதற்கான நடவடிக்கைகளிலும் பள்ளிவாசல்கள் நெருங்கிய ஈடுபாட்டைக் கொண்டிருப்பது வரவேற்ககூடிய ஒன்றாக இருக்கின்றது. அத்துடன் 'கல்வி அபிவிருத்திக் குழு' என்ற ஒரு பிரிவை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை கொண்டிருப்பது எமது பிரதேச பாடசாலைகளின் பல்வேறு தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உகந்த நீதியான நடவடிக்கைகளை அவர்களால் முன்னெடுக்க முடியும் என்பதையும் சமூகப் பற்றோடு எம்மால் நோக்க முடிகிறது.

எனவே மேற்படி கல்வி அபிவிருத்திக் குழு பரீட்சைகளில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிப் புகழத்தக்க பணி செய்தமை போன்று இன்னும் பல முன்மாதிரியான செயற்பாடுகளை முன்னெடுக்க அவசியமான சில ஆலோசனைகளும் கருத்துக்களும் குறிப்பிடப்படுகின்றன. 

01. சாய்ந்தமருது – மாளிகைக்காடுப் பிரதேசப் பாடசாலைகளில் கற்கின்ற 60 சதவீதமான மாணவர்கள் வசதி குறைவான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். இதனால் சிறப்பாக கற்பதற்குரிய கற்றல் உபகரணங்கள், மேலதிக வகுப்புக்களுக்குச் செல்லுதல், பயிற்சி நூல்களை வாங்கும் வசதி, சீருடைகள் சப்பாத்துக்களை வாங்க முடியாமை, பாடசாலை செல்வதற்கான போக்குவரத்துப் பிரச்சினை என்று பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஆளாகின்றார்கள். இதனால் பாடசாலையிலிருந்து இடைவிலகி கல்வியைத் தொடர முடியாத தடைகளும் அம் மாணவர்களுக்கு ஏற்படுகின்றது. எனவே இப்படியான மாணவர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு உதவும் வகையில் சக்காத் நிதியம் போன்று 'கல்வி நிதியம்' ஒன்றை ஆரம்பித்து நம்பிக்கையாளர் சபை தனது கல்வி அபிவிருத்திப் பணியை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். 

இதனை ஏனைய சமூக அமைப்புக்கள் செய்வதைவிடவும் பள்ளிவாசல் மேற்கொள்வது நம்பிக்கையாகவும் நீதியாகவும் தொடர்ச்சியானதாகவும் இருக்கும் என்பதால் இதனை மட்டும் சிறப்பாக திட்டமிட்டு சீராகச் செய்தால் இப்பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியில் பாரிய அபிவிருத்திகளை இக்குழு காணலாம்.

சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டுவதிலும் பார்க்க சாதனை படைக்கக்கூடிய மாணவர்களை உருவாக்குவது சமூகப் பொறுப்புவாய்ந்த பணியாகும். 

02. அடுத்து பாடசாலைகளில் காணப்படுகின்ற ஒழுக்கம், கலாசாரப் பாதிப்புக்கள் குறித்து இன்று அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதில் ஆண் பெண் தனியான பாடசாலைகள் குறித்து அதிக அக்கறை கொள்ள வேண்டியுமிருக்கின்றது. 

இதற்காக 'பாடசாலைகளைச் சமப்படுத்தும் திட்டம்' ஒன்றை இக் கல்வி அபிவிருத்திக் குழு உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். 

கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களின் கல்விக்கு சாஹிரா, பாளிகா என்பன தாய்ப் பாடசாலைகளாகும் இவை இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கும் அளப்பரிய பங்காற்றிக்கொண்டிருக்கின்றன அதன் புகழும், செயற்பாடுகளும் அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. 

ஆனாலும் சாய்ந்தமருது பிரதேசத்தைப் பொறுத்தவரை சாஹிரா, பாளிகா ஆகிய இருபாடசாலைகளுமே மேலும் மேலும் அக்கறையோடு பார்க்கப்படுகின்றன. ஏனைய பாடசாலைகள் யாவும் பாராமுகமாகவே இருக்கின்றன. 

எனவே, இவ்விரு பாடசாலைகளுக்கும் சமமாக எமது பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளையும் நாம் அபிவிருத்தியும் முன்னேற்றமும் அடையச்செய்ய வேண்டும். ஒரு சாஹிராவும் பாளிகாவும் எமக்குப் போதாது. அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் போதிய வசதிகளுடன் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளக்கூடிய வகையில்  சாய்ந்தமருதுப் பிரதேசத்தின் எல்லாப் பாடசாலைகளிலும் சமமான கல்வி வாய்ப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும். 

புகழ் பூத்த பாடசாலைகள் என்று எல்லோரும் மாணவர்களை கொண்டு இப்பாடசாலைகளில் ஒட்டுமொத்தமாகக் குவித்துவிடுகின்றார்கள். இதனால் சிலர் சித்தியை அடைய பலர் பரீட்சைகளில் தோற்றுப்போகின்ற நிலை உருவாகின்றது. எதிர்காலங்களில் இதன் விளைவுகள் இன்னும் பாதிப்பாகவே அமையும். 

ஆதலால் இவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வாக பாடசாலைகளைச் சமப்படுத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சாய்ந்தமருதுக் கோட்டத்தில் கணித விஞ்ஞானப் பிரிவுகளுடன் கூடிய உயர்தரப் பிரிவுக்கான ஒரு பெண்பாடசாலையும் அதே போன்று ஒரு ஆண் பாடசாலையும் உருவாக்கப்படுவது காலத் தேவையாகும். இதற்குப் பொருத்தமாக மழ்ஹறுஸ் ஸம்ஸ் ஒரு பெண் பாடசாலையாகவும், அல் ஹிலால் அல்லது அல்-ஜலால் ஒரு ஆண் பாடசாலையாகவும் மாற்றப்படுவதற்கான தரமான வசதிகள் இங்கு உருவாக்கப்படல் வேண்டும்.

மேலும் இன்று கல்வி அமைச்சினால் 1000 இடைநிலைப் பாடசாலைத் திட்டம். 5000 ஆரம்ப பாடசாலைத் திட்டம் என்று பாடசாலைகள் பிரிக்கப்பட்டு அபிவிருத்திகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன்படி எமது பிரதேசத்தின் பாடசாலைச் சமமப்படுத்தல் திட்டத்தினையும் நாம் மாற்றியமைக்க வழிகளுண்டு. 

இதன்கீழ் மாளிகைக்காடு அல்-ஹுசைன் மற்றும் சபீனா ஆகிய இருபாடசாலைகளுக்கிடையிலும் ஒரு முன்னேற்ற மாற்றத்தை நாம் உருவாக்கலாம். அதாவது ஒன்றை ஆரம்ப பிரிவுப் பாடசாலையாக வைத்துக்கொண்டு மற்றையதை தரம் 6 யிற்கு மேற்பட்ட இடைநிலைப்பாடசாலையாக மாற்றலாம். இன்று மாளிகைக்காடு பிரதேசத்தில் ஒரு உயர்வான பாடசாலையை உருவாக்க வேண்டிய பொறுப்பும் எமக்கு இருக்கிறது. 

இதுபோன்ற பாடசாலைச் சமப்படுத்தல் நடடிவடிக்கைகள்தான் சாய்ந்தமருது பிரதேச கல்வி அபிவிருத்தியின் அடிப்படையான தேவையாக இருக்கின்றது. இவ்வாறு செய்வதுன் மூலம் பாடசாலைகளில் மாணவர் தொகைகளை அதிகரிக்கச் செய்யலாம் அதனால் ஆசிரியர் மிகை தவிர்க்கப்படும். இளம் இரத்தமுள்ள துடிப்பான புதிய ஆசிரியர்களையும் நாம் வெளியில் செல்ல விடாது எமது பாடசாலைகளுக்கு நியமிக்கலாம். 

இதுஇவ்வாறு இருக்க சாய்ந்தமருதுக் கோட்டத்தில் மேலதிகமான ஆசிரயர்கள் இருப்பதாகவும் அதனைச் சமப்படுத்த இக்கல்வி அபிவிருத்தக் குழு ஆலோசித்துவருவதாகவும் அறிய முடிகிறது. இந்நிலையில்  மேற்கூறிய இப்பாடசாலைகளை உரியவாறு போதிய மாற்றங்களுடன் உருவாக்கினால் ஆசிரியர்களை சமப்படுத்தும் பணியும் சீராக அமைந்துவிடும். இதனைச் செய்யாது பாடசாலைகள் இருக்கின்ற நிலையிலேயே ஆசிரியர்களைச் சமப்படுத்துவது இன்னும் புதிய பிரச்சினைகளை உருவாக்கும். 

மாத்திரமன்றி ஆசிரியர் மிகை என்பது சாய்ந்தமருது கோட்டத்தின் பிரச்சினை அல்ல அது கல்முனை வலயத்தின் தலையிடியான ஒரு பிரச்சினை. இந்த மேலதிகம் கல்முனை வலயத்திலுள்ள பல ஊர்ப் பாடசாலைகளில் இருக்கிறது. இது மாவடிப்பள்ளியில் இருந்தால் என்ன? மாளிகைக்காட்டில் இருந்தால் என்ன? மருதமுனையில் இருந்தால் என்ன? அது பற்றி கல்வி அமைச்சுதான் கவனம் எடுக்க வேண்டும் இவற்றையெல்லாம் எம்மால் சீராக்கிக் கொண்டிருக்க முடியாது.

எனவே இங்கு அவசியப்படுவது ஆசிரியர்களின் சமப்படுத்தல் அல்ல பாடசாலைகளின் சமப்படுத்தலே ஆகும். அதனை ஒரு பொது அமைப்பு மிக இலகுவாகச் செய்ய முடியும். பள்ளிவாசல் என்பது பொறுப்புமிக்க ஒரு இறை இல்லம் அது ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்குமிடமாக இருக்க வேண்டுமே தவிர புதிய பிரச்சினனைகளை உருவாக்குமிடமாக மாறிவிடக் கூடாது. அடுத்து பள்ளிவாசல் ஊரில் பலமிக்க ஒரு அமைப்பு அது குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டாமல் மிகவும் விரிந்த தளத்தில் சிந்தித்து எதிர்கால சந்ததிகளும் பயன்பெறும்வகையில் நீண்டகாலம் நிலைத்திருக்கும் அபிவிருத்திகளைச் செய்வதில் கவனம் கொள்வது சமூகத்திற்கு பயனுடையதாக இருக்கும். அது நிலைத்திருக்கும் தர்மத்தைச் செய்ததாகவும் ஆகிவிடும். 

No comments

Powered by Blogger.