Header Ads



இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வேண்டி நிற்பது..!!

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

சிங்கள மக்களுக்கு விடுதலைப் புலிகள் எதிரிகளாக இருந்ததுபோல் பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக மாறிவிட்டனர். பொதுபலசேனா முஸ்லிம்களின் சமய விழுமியங்களில் ஒன்றான ஹலால் என்ற விடயத்தில் எதிர்ப்புத் தெரிவித்து அரசையும் மக்களையும் குழப்பி அதனை சாதகமாக் கொண்டு அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான தந்திரோபாயத்தை தற்போது மேற்கொண்டுள்ளது.

சுத்தமான உணவுக்குப் பதிலாக பழுதடைந்த மற்றும் புழுத்த உணவுகளை மக்கள் உண்ணவேண்டும் என்ற கண்டுபிடிப்பே ஹலால் எதிர்ப்பு. ஹலால் என்பது நோய்கள் மற்றும் பிணிகள் வராது மனித உடலுக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வதே இஸ்லாத்தில் ஹலாலான உணவு என்பதாகும். நல்ல உணவு தெரியாது மனித மலத்தை உண்ணும் பன்றி இறைச்சியை உண்ணுங்கள் அதன் மூலம் நோய்கள் பீடிக்கப்பட்டு அழிவடையுங்கள் என்ற செய்திதான் பொதுபலசேனா விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. பொதுபலசேனா என்னதான் தலைகீழாக நின்று ஹலாலை ஒழித்தாலும் இலங்கையில் முஸ்லிம்கள் ஹலாலையே உண்பர். இதுதான் இன்று முஸ்லிம்களுக்கும் பொதுபலசேனாவுக்கும் உள்ள யுத்தமாகும்.

இந்த யுத்தத்தில் ஒரு அணுவளவேனும் பொதுபலசேனா வெற்றிபெறாது என்பதே இஸ்லாமியர்களின் ஒரே நம்பிக்கை. பொதுபலசேனா ஹலாலில் இறுக்கமாக நடந்தால் இலங்கையின் ஏற்றமதிப் பொருட்களை இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்ப முடியாத ஒரு சூழலும் அப்பொருட்களை தாமே உண்ணவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் இனவாதக் குழுக்களுக்கு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. தற்போது பல நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் இல்லாமல் தமது உற்பத்திகள் முடங்கி விட்டதாக போர்க்கொடி தூக்கியுள்ள நிலைமைகள் தற்போது ஏற்பட்டுள்ளதையும் காணக் கூடியதாகவுள்ளது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமாதான விரும்பிகளும் இன்று பொதுபல சேனா உள்ளிட்ட சட்டவிரோத இனவாதக் குழுக்களின் விரும்பத்தகாத செயற்பாடுகளை வெறுப்பதோடு அவர்களுக்கு எதிரானவர்களாகவும் மாறிவருகின்றமை காணக்கூடியதாகவுள்ளது.

மனிதன் மனிதனாக வாழவேண்டும் மனிதன் மிருகத்தின் செயற்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறிவிட்ட பல சகாப்த காலம் கடந்த பின்னர் மீண்டும் அந்த காட்டுமிராண்டி வாழ்க்கை முறையையே பொதுபலசேனா கடைப்பிடிக்கின்றன. பொதுபல சேனா சமயத்தைப் பாதுகக்கின்றோம் என்று தமது சமயத்தில் இல்லாதவற்றையெல்லாம் கூறிக் கொண்டு உண்மையான பௌத்த தர்மத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மிருகத்தனமான வாழ்க்கைக்கு வந்தவிட்ட இனவாதக் குழுக்களாகவே மேற்டிக் குழுக்கள் பார்க்கப்படுகின்றனர்.

தற்போதைய விஞ்ஞான உலகத்தில் மனிதன் மனிதனுக்காக சாதிக்கவேண்டியவையும், கண்டுபிடிக்கவேண்டியவையும் இருக்க பொதபலசேனா உள்ளவற்றையும் நல்லவற்றையும் அறியாமையின் அரைகுறை மூளையுடன் செயற்படும் விதத்தைப் பார்க்கும்போது இவர்கள் அழிவின் விளிம்புக்குச் செல்வதையே கோடிட்டுக் காட்டுகின்றது. இன்று இலங்கையின் இனவாதக் குழுக்களுக்கு மற்றய சமயத்தின் சமய விழுமியங்களைக் கண்டு  நிம்மதியற்ற நிலை தோற்றம் பெற்றுள்ளதையே காணக் கூடியதாகவுள்ளது. ஏனெனில் இன்னும் அவர்களுக்கு அவர்களின் சமயத்தில் பூரண நம்பிக்கை ஏற்படவில்லை அல்லது அவர்கள் பௌத்த தர்மத்தை புத்தர் போதித்த விதத்தில் கற்றுக் கொள்ளவில்லை என்பதனையே புலப்படுத்துவதாக அமைகின்றது.

இலங்கையின் கடந்த கால வரலாற்றில் வடமாகாணத்தில் விடுதலைப் புலிகள் அவர்களது பகுதிகளில் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி சர்வதேசம் வரை ஒரு பாரிய இயக்கமாக உலக நாடுகளையே பேரம்பேசும் ஒரு அமைப்பாக காணப்பட்டபோதிலும் இன்று அவர்களின் மக்கள் ஒன்றும் கிட்டாதவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறு ஆயுத பலம் மற்றும் போராளிகள் என அவர்கள் இருந்து தமது இனத்தின் விடுதலைக்காக பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கும், இலட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கவீனமாவதற்கும், இடம்பெயர்வதற்கும் அவர்களின் போராட்டம் வழிவகுத்து தற்போது எந்தவித பலனும் மக்களுக்கு கிட்டாத ஒரு விடயமாக அவர்களின் ஆயுதப் போராட்டமே வழிவகுத்துவிட்டது.

இவ்வாறானதொரு நிலைமைகள் எதிர்காலத்தில் தோற்றம் பெறுவதற்கு பொதுபலசேனா தற்போது முஸ்லிம்களின் சமய மற்றும் கலை, கலாச்சார விடயங்களில் கைவைத்துள்ளதானது இலங்கையின் எதிர்கால சமாதானத்திற்கும், அமைதிக்கும் ஆக்கபூர்வமான விடயங்கள் அல்ல என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என புத்தி ஜீவிகள் கவலை தெரிவிக்கின்றனர். பொதுபல சேனா நினைக்கின்றது தாமும் விடுதலைப் புலிகள் போல் வருவதற்கும் தற்போதுள்ள அரசை வீழ்த்தி தாம் ஒரு இனவாத அரசை தோற்றுவித்து இலங்கையில் சிறுபான்மை மக்களை கொன்று குவிப்பதே அவர்களின் அடித்தளமாகும் என கல்விமான்களும், சமாதான விரும்பிகளும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் கடந்த கால யுத்த வடுக்களை நல்லதொரு பாடமாகவும், உதாரணமாகவும் கொண்டு எதிர் கால அமைதியான இலங்கையை குழப்புவதற்கும் வீணான பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கும், தெற்கில் சிங்கள முஸ்லிம் குழப்பத்தை ஏற்படுத்தவே கங்கனம் கட்டிக் கொண்டு தற்போது முளைத்துள்ள பொதுபலசேனா போன்ற சில இனவாத குழுக்களை அரசு அசுர வேகத்தில் கட்டுப்படுத்தவேண்டும் என கமாதான விரும்பிகள் வெண்டுகோல் விடுக்கின்றனர்.

இந்த நடவடிக்கைகளை உடன் செயல்வடிவத்தில் கொண்டு வராவிட்டால் விரைவில் இலங்கையின் இறைமைக்கும், ஜனநாயகத்திற்கும் கலங்கத்தையும், இழுக்குகளையும் மேற்படி இனவாத குழுக்கள் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பொதுபலசேனாவின் தற்போதைய நடவடிக்கைகளை அவதானிக்கும்போது மற்றயவர்களையும் அவர்களின் சமயங்களையம் ஏன் பௌத்த தர்மத்தையே மதிக்காத சண்டியர்கள்போல் இலங்கையின் அரசியல் யாப்பு மற்றும்  பொலிஸ்,  நீதி மன்றச் சட்டங்களை என்பனவற்றை மீறி சட்டத்தை கையில் எடுக்கும் நிலையே அவர்களிடத்தில்  தோற்றம் பெற்றுள்ளதை காணக் கூடியதாகவுள்ளது.

இவர்களின் இந்த நிலைமைகளைப் பார்க்கும்போது அரசின் ஆதரவுடன் தான்தோன்றித்தனமாக எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்பதனை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைகிறது என சந்தேகத்துடன் அனைவராலும் நோக்கப்படுகின்றது. இது ஒரு மாபெரும் ஆபத்தான நிலை என்பதனை இலங்கைவாழ் அனைத்து மக்களும் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கையில் அரசியலமைப்புச் சட்டங்களில் எந்தவொரு தனிமனிதனோ அல்லது குழுக்களோ சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது என்பதனையே வழியுறுத்துகின்றன. இதனையே சர்வதேசச் சட்டங்களும், மனித உரிமைச் சட்டங்களும் குறிப்பிடுகின்றன.

இவற்றை எல்லாம் மீறி ஒரு சட்டவிரோத அமைப்பு செயற்படுமானால் அது ஒன்று அரசின் ஆசீர்வாதத்துடன் அல்லது சர்வதேசத்தின் ஆசீர்வாதத்துடன்தான் செயல்பட முடியும். இந்தவகையில் மேற்படி இனவாதக் குழுக்களின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற் கொண்டு செயற்பாடுகளை ஒத்ததாகவே மக்களால் நோக்கப்படுகின்றது.

சமுகத்தில் சட்ட அந்தஸ்துப் பெற்ற விடயங்கள் மீது அத்துமீறல் மற்றும் பொலிஸார் செய்யவேண்டிய விடயங்களை காவி உடையுடன் அதன் மகிமைக்கு கிஞ்சித்தும் கௌரவம் கொடுக்காது செயற்படுவதும் அரசியால் அங்கீகாரம் பெற்றுள்ளதா? என பாதிக்கப்படும் மக்கள் கேட்கின்றனர். பொதுபலசேனா தற்போது இலங்கை முஸ்லிம்கள் மீது அபார எதிராளிகளாக மாறிவருகின்றனர். இவர்களின் முட்டாள்தனமான செயற்பாடுகள் அனைத்து சமாதான விரும்பிகளாலும் வெறுக்கப்படும் ஒரு செயற்பாடாகவே தற்போது அனைவராலும் பேசப்பட்டு வெறுக்கப்படுகின்றது.

உலகிலேயே புனிதமான மார்க்கமாக விளங்குவது இஸ்லாம் மதமாகும் அதன் ஒவ்வொரு கருத்து மற்றும் செயற்பாடுகளும் ஒவ்வொரு மனிதனையும் சமுகத்திலும். சமுதாயத்திலும் நல்ல மனிதனாகவும் பூரணத்துவம் உடையவனாகவும் ஏனையவர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ள ஒரு மார்க்கமாகும்.அது சொல்லும் செயற்பாடுகளை எதிர்ப்பவர்கள் எவரும் நிலையாக இருந்ததில்லை இருக்கவும் முடியாத என்பதே இஸ்லாமியக் கொள்கை.

இலங்கையில் வரலாற்றுக் காலம் தொடக்கம் இலங்கை முஸ்லிம்கள் அமைதியாக வாழ்பவர்களே தவிர இந்த அரசில் சண்டையிட்டு எதனையும் கேட்ட வரலாறுகள் இல்லை ஆனால் தற்போது இனவாத பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்களுக்கான உரிமைகளையும் அதற்குமேலான வி;டயங்களையும் சண்டையிட்டு பெறவேண்டும் என்ற சமிக்கையையே காட்டி நிற்கின்றது.

அமைதியையும்,சமாதானத்தையும் விரும்பும் ஒரு சமுகத்தை அச்சுறுத்தும் அல்லது தாக்கும் குழுக்களை அரசு ஆதரித்தால் அதனால் எதிர்காலத்தில் சர்வதேசம்வரை இலங்கையின் அராஜக செயற்பாடுகள் செல்வது மட்டுமல்லாது இலங்கையின் உயிர் நாடியாக இருக்கும் உதவிகள் நிறுத்தப்படுவதற்கும் இனவாதக் குழுக்களின் செயற்பாடுகள் வித்திடுவதற்கு வழிவகுக்கும் என அரசியல் பிரமுகர்கள் கூறுகின்றனர். மேற்படி நிலைமைகள் எற்பட முன்னர் அவர்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்ற அனைத்து மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு அதீத கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமை ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஹலால் தேவையா? அல்லது தேவை இல்லையா? என்பதனை தீர்மாணிக்கவும் பேசவும் அரசுக்கே உரித்தானது அதனை எந்தவொரு தனிமனிதனும் மேற் கொள்ள முடியாது அரசு முஸ்லிம்கள் விடயத்தில் தாராளமாக கலந்தாலோசிக்கலாம், கருத்துக்களைப் பெறலாம் அதற்கு சகல முஸ்லிம்களும் உடன்படுவர் ஆனால் சண்டியர்களுக்கு முஸ்லிம்களின் சமய விடயங்களில் தலையிடுவதற்கோ அல்லது கதைப்பதற்கோ அருகதையில்லை என முஸ்லிம் மத குருக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

முன்பு ஊடகங்கள் மூலமும் பின்னர் நகரப் பகுதிகளில் சிறு சிறு எதிர்ப்புக் கூட்டங்கள் தற்போது ஒரு மாகாணத்தில் இருந்து அன்னொரு மாகாணத்திற்கு பேரணிகள் நாளைஎன்னமான  இதற்கெல்லாம் ஒருபடியாக அலரிமாளிகையிலும், ஜனாதிபதிச் செயலகத்திலும் ஏன் பாராளுமன்றத்திலும் ஆக்கிரமித்து பின்னர் தமது பிரதான விடயமான ஆட்சியைக் கைப்பற்றுவதே நோக்கமாகும். ஒரு இனத்தின் சமய விழுமியங்களை ஒழிக்கவேண்டும் என பேரணி நடத்த விட்டு விட்டு கூத்துப்பார்க்கும் ஒரு நாடாகவே இலங்கை மாறியுள்ளது. இந்தவிடயங்களில் தடைகளை விதிக்காவிட்டால் முஸ்லிம் மக்கள் அரசின் மீது உள்ள நம்பிக்கைகளை  இழக்கவேண்டிய காலம் தூரத்தில் இல்லை எனலாம்.இவ்வாறானதொரு பேரணியை நடத்த இலங்கையின் எந்த அரசியல் சட்டத்தில் உள்ளது என முஸ்லிம் மக்கள் கேட்கின்றனர். இலங்கை வாழ் மக்கள் இலங்கையின் எந்தப்பாகத்திலும் வாழவும் விரும்பிய மதத்தை பின்பற்றவுமே உரிமையுள்ளதே தவிர எந்த மதமும் எந்த மதத்தையும் தாக்கவோ அல்லது தடை செய்யவோ அல்லது ஒரு மதத்தவர் மற்ற மதத்தில் தலையிடவோ உரிமை இல்லை என்பதனை அரசியல் சட்டம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ள நிலையில்.

ஒரு சமயத்திற்கு எதிராக இனவாதிகளின் பகிரங்கமான எதிர்ப்புப் பேரணி இடம்பெறுவது இலங்கையின் அரசியலமைப்பச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாமல் போவதையும் இச்செயற்பாடுகளின் விடயத்தில் சட்டம் செயழிழந்து செல்வதையுமே அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே இலங்கை அரசாங்கம் தமது அரசியல் மற்றும் சுயநல போக்குகளுக்கு அப்பால் எல்லா மக்களும் இந்த நாட்டு மக்கள் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை உறுதிப்படுத்தி அனைவரும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழுவதற்கு இவ்வாறான இனவாதிகளின் அராஜகங்களை ஒழிக்கவேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இந்நாட்டின ஜனாதிபதி அவர்களை வேண்டி நிற்கின்றனர். 

No comments

Powered by Blogger.