Header Ads



'என்மீது சேறடிப்பு' - ஊடகவியலாளர் மப்றூக்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்துக்கு – நான் பொறுப்புணர்வுடன் கடமையாற்றியிருந்த போதும், என்மீது சேறடிக்கும் நடவடிக்கையில் சம்மேளனத்தின் தலைவரே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் - இந்தச் சம்மேளனத்தில் தொடந்தும் ஓர் அங்கத்தவராக இருக்க முடியாது எனும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். சாக்கடையில் குளித்து விளையாடவோ, அழுக்குகளை என்மீது அப்பிக் கொள்ளவோ நான் விரும்பவில்லை. எனவே, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்துவத்திலிருந்து நான் விலகிக் கொள்கின்றேன் என ஊடகவியலாளர் மப்றூக் தெரிவித்துள்ளார். 

சம்மேளனத்தின் செயலாளர் ஐ.எல்.எம். றிசானுக்கு அனுப்பி வைத்துள்ள ராஜிநாமா கடிதத்திலேயே ஊடகவியலாளர் மப்றூக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சம்மேளத்திலிருந்து தான் விலகுவதைத் தெரியப்படுத்தியும், அதற்கான காரணங்களை வெளிப்படுத்தியும் ஊடகவியலாளர் மப்றூக் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் விபரம் வருமாறு,

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன அங்கத்துவத்திலிருந்து நான் விலகிக் கொள்வதை தங்களுக்கு - இந்தக் கடிதத்தின் மூலமாக தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

1.    அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளமானது, அதன் - அங்கத்தவர்களின் தொழில் இடர்களிலும், நலன்புரி விடயங்களிலும் தோள் கொடுக்கும் என்கிற நம்பிக்கையிலேயே - இந்த அமைப்பில் ஓர் அங்கத்தவராக இணைந்து செயற்பட்டு வந்தேன். ஆயினும், அந்த நம்பிக்கை இப்போது என்னிடமில்லை. அங்கத்தவர்கள் பிரிந்து நின்று, தங்களுக்குள் வகுப்பு வாத மனநிலையோடு செயற்படுகின்றதொரு நிலையினை கடந்த வருடாந்த கூட்டத்தில் காணக் கூடியதாக இருந்தது. இந்த மனநிலையை – அங்கத்தவர்களிடையே சம்மேளனத்தின் தலைவரே உருவாக்கி விட்டமைதான் வருத்தத்துக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், இந்த சம்மேனத்தில் தொடர்ந்தும் ஓர் அங்கத்தவனாக இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. 

2.    நமது சங்கத்தில், தலைவரின் அன்பைப் பெற்றவர்களும் - அவரின் நடத்தைகளின் பின்னால் நிழல்போல் தொடர்பவர்களுமே நல்லவர்களாக அடையாளம் காணப்படும் ஒரு மோசமான நிலைவரமொன்று உருவாகியுள்ளது. நான் பொருளாளராக செயற்பட்ட காலத்தில் நிதி கையாளுகையில் - தலைவரின் விருப்பத்துக்கிணங்க செயற்படாமையினால், 'பொருளாளர் மப்றூக் தலைவருக்கு ஒத்துழைப்பதில்லை' என்கிற பிரசாரமொன்று சம்மேனள அங்கத்தவர்களிடையே பரப்பப்பட்டுள்ளமை குறித்து நான் அறிவேன். துரதிஷ்டவசமாக, நமது சம்மேளன அங்கத்தவர்களில் குறிப்பிட்ட சிலர் இந்தப் பரப்புரைகளை நம்பினார்கள். எனது அங்கத்துவ நண்பர்களின் இவ்வாறான மனநிலை எனக்கு கவலையளிக்கிறது. நாளை என்மீது மிக மோசமான குற்றச்சாட்டு ஒன்றினை தலைவர் முன்வைத்து பரப்புரை செய்யும் போதும் - அங்கத்தவர்கள் அதனையும் நம்பி விடுவார்களோ என்று நான் அச்சம்படுகிறேன்.

3.    நான் பொருளாளராகக் கடமையாற்றிய காலங்களுக்குரிய வரவு – செலவுகளுக்கான கணக்கறிக்கையினை, வருடாந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்த வேளை, அதனை சபையிலிருந்த அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டார். ஆனால், தற்போது - நான் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சம்மேளனத்தின் தலைவர் - என்மீது கீழ்தரமான குற்றச்சாட்டுக்களைக் சுமத்தி அவரின் நண்பர் ஒருவருடைய இணையம் ஒன்றில் - அந்தக் குற்சாட்டினை செய்தியாகவும் வெளியிட்டுள்ளார். இது பாரதூரமான விடயமாகும்.

4.    அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் பொருளாளராக நான் கடமையாற்றிய போது, நிதி விடயங்களில் எவ்வளவு நேர்மையாகச் செயற்பட்டேன் என்பதையும், தலைவர் மீரா இஸ்ஸதீன் அவர்கள் - நிருவாகத்தினரின் தீர்மானத்தினையும் மீறி, நிதியை எப்படியெல்லாம் தான்தோன்றித்தனமாகக் கையாண்டார் என்பதையும் நிருவாகக் குழுவின் முன்னைய உறுப்பினர்களான நண்பர்கள் பகுர்தீன், சகாப்தீன், செயலாளர் றிசான் மற்றும் றியாஸ் ஆகியோர் நன்கு அறிவார்கள். ஒரு கட்டத்தில், நிருவாகத்தினரின் தீர்மானத்தினையும் மீறி தலைவர் மீரா இஸ்ஸதீன் தான்தோன்றித்தனமாக போக்குவரத்து என்ற பெயரில் 07 ஆயிரம் ரூபாவினை செலவு செய்ததாகக் கணக்குக் காட்டி பணம் பிடுங்கிக் கொண்டார். செயலாளர் றிசான் அவர்களின் வீட்டில் இடம்பெற்ற ஒரு நிருவாகசபைக் கூட்டத்தின்போது, மீரா இஸ்ஸதீனின் இந்த செயற்பாட்டினை நான் கடுமையாக எதிர்த்தேன். சபையின் தீர்மானங்களை மீறி நிதி விடயத்தில் இவ்வாறெல்லாம் தான்தோன்றித்தனமாக தலைவர் நடந்தால், பொருளாளர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று கூறியபோது, நண்பர்கள் பகுர்தீன் றிசான் ஆகீயோர் என்னை அமைதிப்படுத்தினார்கள். அதேபோன்று, தனது கைத்தொலைபேசி மூலமாக சம்மேளன விடயங்கள் பேசியதாகக் கூறி, தொடர்பாடல் என்கிற பெயரில் ஒரு தொகைப் பணத்தினையும் சம்மேளன நிதியிலிருந்து தலைவர் மீரா இஸ்ஸதீன் எடுத்துக் கொண்டார். அதற்காக அவர் எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இதற்கும் – மேலே கூறிய நிருவாகசபை உறுப்பினர்களான நண்பர்கள் சாட்சியாக இருந்தனர். 

5.    தலைவர் மீரா இஸ்ஸதீன் நிதி விடயத்தில் இவ்வாறு தவறாக நடந்து கொண்டமை குறித்து – வருடாந்தப் பொதுக் கூட்டத்தின்போது அங்கத்தவர்கள் மத்தியில் பேசுவதற்கு தீர்மானித்திருந்தேன். ஆனால், நண்பர்கள் பகுர்தீன், றியாஸ் போன்றோர் அவ்வாறு பேச வேண்டாம் என்றும், அடுத்தவரின் பிழைகளை அம்பலப்படுத்த வேண்டாம் எனவும் கூறினர். அவர்கள் நமது சம்மேளனத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்கிற வகையில் அவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து – இவ்விடயங்களை நான் கூட்டத்தில் பேசாமல் விட்டேன். 

6.    தலைவர் என்மீது சுமத்தியுள்ள அபாண்டங்களில் ஒன்றை உதாரணத்துக்குச் சொல்லி விளக்கம் தருகின்றேன். சம்மேளனத்தில் புதிதாக இணைந்து கொண்டு அங்கத்தவர்கள் 06 பேர் தலா 200 ரூபாய் வீதம் 1200 ரூபாவினை செயலாளர் றிசானிடம் ஒப்படைத்திருந்தனர். மேற்படி 1200 ரூபாவில், சம்மேளனத்தின் தபால் செலவுக்காக 1000 ரூபாவினை றிசான் எடுத்துக் கொண்டு - மீதி 200 ரூபாவினை என்னிடம் கையளித்தார். மேலும், மேற்படி 1000 ரூபாயினை தான் எடுத்துக் கொண்டதை உறுதிப்படுத்தும் கடிதமொன்றினையும் செயலாளர் றிசான் என்னிடம் வழங்கினார். இவ்வாறு செயலாளர் கையளித்த 200 ரூபா பணத்தினையும், பணத்தினைப் பெற்றுக் கொண்டமைக்கு சான்றாக வழங்கிய கடிதத்தினையும் - புதிய பொருளாளர் காதர் அவர்களிடம் ஒப்படைத்தேன். விடயம் இப்படியிருக்க, புதிய பொருளாளரிடம் நான் 200 ரூபாய் பணம் மட்டுமே ஒப்படைத்ததாகவும், மிகுதி 1000 ரூபாவினையும் நான் கையாடி விட்டதாகவும், சம்மேளனத் தலைவர் மீரா இஸ்ஸதீன் என்மீது அபாண்டம் சுமத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து செயலாளர் றிசான் அவர்களிடமே அங்கத்தவர்கள் விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். 

7.    அடுத்ததாக, நமது சம்மேளனத்தின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எனக்கு பணம் வழங்கியதாக – தலைவர் மீரா இஸ்ஸதீன் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் எழுதியிருந்தார். இவ்வாறு எழுதியதன் மூலம் அவருடைய அறிவு மட்டம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், தங்கள் நிதி ஒதுக்கினூடாக - நமது அமைப்புக்கு பல தடவை ஊடக உபகரணங்களை வழங்கி உதவி புரிந்துள்ளனர். மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப், நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் முகைதீன் (தொப்பி முகைதீன்), அமைச்சர் அதாஉல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உள்ளிட்ட பலர் இவ்வாறு நமது அமைப்புக்கு ஊடக உபகரணங்களை வழங்கும் பொருட்டு நிதியுதவி அளித்துள்ளனர். இவ்வாறு வழங்கப்பட்ட நிதியின் மூலம் நமது அமைப்பினைச் சேர்ந்த பல அங்கத்தவர்கள் - ஊடக உபகரணங்களைப் பெற்றுள்ளார்கள். அந்தவகையில் - நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸிடமிருந்து நமது அமைப்புக்கு கிடைத்த நிதியின் மூலம் ஊடக உபகரணமொன்றினை நான் பெற்றுக்கொண்டேன். (இது மூன்று வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது). நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடுகளை - பயனாளிகளுக்கு நேரடியாக பணமாக வழங்குவதில்லை என்கிற அடிப்படை விடயமே தெரியாமல் - மீரா இஸ்ஸதீன் உளறியிருப்பதை நினைக்கும் போது கவலையாக உள்ளது. 

8.    இவை ஒருபுறமிருக்க, நமது சம்மேளனத்தின் நிருவாகத் தெரிவின் போது, இடம்பெற்ற தேர்தலொன்றில் நான் போட்டியிட்டு தோற்றுப் போனதாகவும் - அவமானப்பட்டுப் போனதாகவும் மீரா இஸ்ஸதீன் எழுதியிருந்தார். இதில், வெட்கப்பட என்ன இருக்கிறது? நாம் ஒழுக்கக் கேடாக நடப்பதும் முறைதலை தவறி வாழ்வதும்தான் வெட்கப்படுவதற்குரிய விடயங்களாகும். நமது சம்மேளனத்தின் நிருவாகத் தெரிவின்போது, ஒரு தேர்தலை முகம் கொள்ளும் எண்ணத்தோடு நான் அங்கு வரவில்லை. பொருளாளர் பதவிக்கு மீரா இஸ்ஸதீன் திட்டமிட்டு களமிறக்கிய நபரை வெற்றி பெறச் செய்தார் என்பதுதான் உண்மையாகும். ஆயினும், நிருவாகசபைக்கு நண்பர்கள் என்னைத் தெரிவு செய்தபோதும், நான் மறுத்துவிட்டமை குறித்து நீங்கள் அறிவீர்கள். இந்த இடத்தில் எனக்கு ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பு வருடத்துக்கான நிருவாகத் தெரிவு இவ்வருடம் கொழும்பில் நடைபெற்றது. இதில் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக - சகோதரர் மீரா இஸ்ஸதீன் விண்ணப்பித்திருந்தார். குறித்த நிருவாகத் தெரிவு இடம்பெற்ற தினம் - மீரா இஸ்ஸதீன் அவர்கள் தனக்கு வாக்களிக்கும் பொருட்டு அம்பாறையில் இருந்து தனது செலவில் ஊடக நண்பர்கள் பலரை கொழும்புக்கு அழைத்துச் சென்றிருந்தார். ஆயினும், துரதிஷ்டவசமாக மீரா இஸ்ஸதீன் பொருளாளர் பதவிக்கான போட்டியிலும் தோற்றார், செயற்குழு உறுப்பினர் பதவிக்கான போட்டியிலும் படுதோல்வியடைந்தார். ஆயினும் மீரா இஸ்ஸதீன் அவர்களை நாம் தட்டிக்கொடுத்தோம். அவ்வாறு படுதோல்வியடைந்த மீரா இஸ்ஸதீன்தான் - இப்போது மற்றவரைக் கேலி செய்கிறார் என்பதை நினைக்கையில் சிரிப்பாக இருக்கிறது.  

9.    ஆக, நமது சம்மேளனத்துக்கு – நான் பொறுப்புணர்வுடன் கடமையாற்றியிருந்த போதும், என்மீது சேறடிக்கும் நடவடிக்கையில் சம்மேளனத்தின் தலைவரே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் - இந்தச் சம்மேளனத்தில் தொடந்தும் ஓர் அங்கத்தவராக இருக்க முடியாது எனும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். சாக்கடையில் குளித்து விளையாடவோ, அழுக்குகளை என்மீது அப்பிக் கொள்ளவோ நான் விரும்பவில்லை. எனவே, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்துவத்திலிருந்து விலகிக் கொள்ளும் எனது முடிவினை தங்களுக்கு இத்தால் உத்தியோகபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். 

10.    என்மீது அன்பு காட்டியவர்களுக்கும் - என்னை நேசிக்கத் தவறியவர்களுக்கும் எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.