Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மந்திரக் கோல்..!

(தம்பி)

மாயாஜாலம் செய்கின்றவரைப் பார்த்திருப்பீர்கள். அவரின் கையில் ஒரு கோல் இருக்கும். அந்தக் கோலினை, அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டேயிருப்பார். அதற்கு 'மந்திரக்கோல்' என்று பெயர். தொப்பிக்குள் வைத்த பூக்கொத்து முயலாக மாறுவதும், கைக்குட்டை – குடையாக மாறுவதும் மந்திரக் கோலால் நிகழும் அதிசம் என்றுதான் மாயாஜாலம் பற்றி அறியாதவர்கள் நினைத்துக் கொள்வதுண்டு.  

உண்மையில், மாயாஜாலம் என்பது வெறும் தந்திரமாகும். உதாரணமாக, மாயாஜாலக்காரரின் தொப்பிக்குள் - வெளியில் தெரியாதவாறு ஒரு முயல் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அந்தத் தொப்பியை நமக்குக் காட்டுவார். உள்ளே ஒன்றுமில்லை போல்தான் தெரியும். பின்னர் அந்தத் தொப்பிக்குள் மாயாஜாலக்காரர் ஒரு பூங்கொத்தை கொண்டு செல்வார். அந்தக் கணத்தில், மிக நுணுக்கமாகவும் வேகமாகவும் தொப்பிக்குள் மறைத்து வைக்கப்பட்ட முயலை வெளியே எடுப்பார். அதேவேகத்தில், முயல் இருந்த இடத்தில் பூங்கொத்தை மறைத்தும் விடுவார். 

தொப்பிக்குள் நடக்கும் இந்த சூட்சுமத்தினை பார்வையாளர்கள் கவனித்து விடக்கூடாது என்பதற்காக, மாயாஜாலக்காரர் - தனது கையில் உள்ள கோலினை அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டேயிருப்பார். பார்வையாளர்களின் கவனமும் மந்திரக் கோலின் பக்கமாகத் திரும்பி விடும். அப்போது, மாயாஜாலக்காரர் - பூங்கொத்தாக 'மாற்றிய' முயலை கையில் எடுத்து, உயர்த்திக் காட்டுவார். பிறகென்ன – கரகோசம்தான்! 

ஆக, மாயாஜாலக்காரர்களின் கையில் இருக்கும் மந்திரக்கோல் என்பது உண்மையில் - அதிசயங்கள் எவற்றினையும் நிகழ்த்துவதில்லை. பார்வையாளர்களின் கவனத்தினைத் திருப்புவதற்காக மட்டுமே - அந்தக் கோல் பயன்படுகிறது. 

அரசியல்வாதிகளிடமும் இவ்வாறான மந்திரக் கோல்கள் உள்ளன. தமது ஆதரவாளர்களின் கவனங்களை திசை திருப்புவதற்காக – தங்களிடமுள்ள மந்திரக் கோல்களை இடைக்கிடையே வெளியில் எடுப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் எப்போதும் - ஒரே மாதிரியான மந்திரக்கோல்களைப் பயன்படுத்துவதில்லை.

மு.காங்கிரசின் தலைவர் இப்போது ஒரு மந்திரக்கோலினை கையில் எடுத்துள்ளார். நடந்து முடிந்த மூன்று மாகாணசபைத் தேர்தல்களிலும் மு.காவுக்கு மோசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களெல்லாம் விமர்சித்து வருகின்றன. மு.கா.வின் ஆதரவாளர்களுக்கும் தங்கள் கட்சிக்குக் கிடைத்துள்ள ஆசனங்களின் தொகையில் திருப்தியில்லை. கட்சிக்குள் இருப்பவர்கள் முணுமுணுக்கத் தொடங்கி விட்டார்கள். 

இதைச் சமாளிக்கும் வகையில் மு.கா. தலைவர் ஏராளமான அறிக்கைகளை விடுத்துப் பார்த்தார். 'மு.கா. மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களே – அந்தக் கட்சியை விமர்சிக்கின்றனர்' என்று பதிலடி கொடுத்தார். தேர்தல் முடிவுகள் தனக்கு ஆறுதல் அளிப்பதாக பி.பி.சி.க்கு செவ்வியும் வழங்கினார். எதுவும் எடுபடவில்லை. மு.கா. சரிவடைந்து விட்டதாக அந்தக் கட்சியின் இருதயமாகக் கருதப்படும் அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களே பேசிக்கொள்ளத் தொடங்கி விட்டனர்.

எனவே, நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மு.கா.வுக்கு ஏற்பட்டுள்ள சரிவிலிருந்து தனது கட்சி ஆதரவாளர்களின் கவனத்தைத் திருப்புவதற்காக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஒரு மந்திரக் கோலினைக் கையில் எடுத்துள்ளார். அதன் பெயர் 'இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் ராஜிநாமா' என்பதாகும்.  

இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் நைஸர். அவர்தான் அதிகபட்சமான விருப்பு வாக்குகளையும் தேர்தலில் பெற்றிருந்தார். ஆனாலும், இறக்காமம் பிரதேச சiபின் தவிசாளர் பதவிக் காலத்தை - இருவருக்கு பகிர்ந்தளிப்பேன் என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தேர்தல் முடிந்த கையோடு கூறியிருந்தார். 

இறக்காமம் பிரதேச சபை பிரிவுக்குள் பல ஊர்கள் அமைந்துள்ளன. அவற்றில் பெரிய ஊர் இறக்காமமாகும். தவிசாளராகத் தெரிவானவர் வரிப்பத்தான்சேனை கிராமத்தினைச் சேர்ந்தவர். இந்த நிலையில், பெரிய ஊரான இறக்காமத்துக்கே தவிசாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென அந்த ஊரிலுள்ள மு.கா. ஆதரவாளர்கள் கோஷமெழுப்பினர். இதனால், வரிப்பத்தான்சேனைக்கு இரண்டு வருடம், இறக்காமத்துக்கு இரண்டு வருடம் என – தவிசாளர் பதவி பகிர்ந்தளிக்கப்படும் என்று ஹக்கீம் வாக்குறுதியளித்தார். அதற்கிணங்கவே, இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளராக நைஸர் பதவியேற்றார். கடந்த மார்ச் மாதத்துடன் சபையின் அரைவாசி ஆயுட்காலம் முடிந்து விட்டது. ஆயினும், தற்போதுதான் தனது பதவியினை தவிசாளர் ராஜிநாமா செய்துள்ளார். கட்சித் தலைவரின் உத்தரவுக்கமைவாகவே – தான் ராஜிநாமா செய்துள்ளேன் என்று தவிசாளர் நைஸர் அறிவித்துள்ளார். இறக்காமத்தினைச் சேர்ந்த உதவித் தவிசாளர் ஜபீர் மௌலவி – வெற்றிடமாகியுள்ள தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு பிரதேச சபையின் ஆயட்காலம் 04 வருடங்களாகும். இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் 2011 மார்ச் மாதம் பதவியேற்றார். அந்தவகையில், குறித்த பிரதேச சபையின் அரைவாசி ஆயுட்காலம் காலம் - இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்து விட்டது.  தவிசாளர் நைஸர் ராஜிநாமா செய்வதென்றால் கடந்த மார்ச் மாதமே - செய்திருக்க வேண்டும். ஆனால், இப்போது அவசரமாக, இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளரை – மு.கா. தலைவர் ஹக்கீம் ராஜிநாமா செய்ய வைத்துள்ளார். இது ஏன் என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். மு.கா. தலைவருக்கு அவசரமாக ஒரு மந்திரக்கோல் தேவையாக இருக்கிறது.  

அம்பாறை மாவட்ட மு.கா. ஆதரவாளர்கள் இனிக் கொஞ்சக் காலத்துக்கு இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் விவகாரம் பற்றியே பேசுவார்கள். இது விடயத்தில் மு.கா. தலைவரின் நேர்மையினை மெச்சுவார்கள். நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மு.கா.வுக்கு ஏற்பட்ட சரிவு பற்றிய பேச்சுக்களை மறந்து விடுவார்கள். மு.கா. தலைவரின் மந்திரக்கோல் நன்றாக வேலை செய்யத் தொடங்கும்.  

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஹக்கீமுடைய இந்த அரசியல் ஆட்டம் - 'பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை'யாக மாறி விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. 

இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் பதவி விவகாரத்தினைப் போல், கல்முனை மாநகர சபை மேயர் பதவியிலும் - மு.கா. தலைவரால் வாக்குறுதியொன்று வழங்கப்பட்டது. கல்முனை மேயர் பதவிக் காலம் இரண்டாக வகுக்கப்படும். முதல் காலப் பகுதிக்கு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்படுவார். அடுத்த காலப்பகுதிக்கு தற்போது உதவி மேயராக உள்ள சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நியமனமாவார் என்று மு.காங்கிரஸ் அறிவித்திருந்தது. சிராஸ் மீராசாஹிப் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். நிஸாம் காரியப்பர் கல்முனைக்காரர். இரண்டு ஊர் மு.கா. ஆதரவாளர்களும் முட்டி மோதியதை அடுத்தே மேற்படி தீர்மானத்தினை மு.கா. தலைமை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். 

அந்தவகையில், கல்முனை மாநகரசபையின் மேயர் பதவியின் அரைவாசிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, இறக்காமம் பிரதேச சபை தவிசாளரைப் போல், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பும் தனது பதவியை இந்த மாதம் முடிவதற்குள் ராஜிநாமாச் செய்து கொடுக்க வேண்டும் என கல்முனை பிரதேச மு.கா. ஆதரவாளர்கள் கோசமிடத் தொடங்கலாம். ஆனால், சிராஸ் ராஜிநாமா செய்வாரா என்பதுதான் பெருத்த கேள்வியாகும். காரணம், நிஸாம் காரியப்பர் மேயராவதை தலைவர் ஹக்கீம் ஒருபோதும் விரும்ப மாட்டார் என்கிற பேச்சு கட்சிக்குள்ளேயே இருக்கிறது. 

நிஸாம் காரியப்பர் - மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப்பின் குடும்பத்தவர். அஷ்ரஃப்பைப் போலவே கல்முனைக்குடிப் பிரதேசத்தவர். இலங்கையிலுள்ள முன்னணி சட்டத்தரணிகளில் ஒருவர். பன்மொழிப் புலமை கொண்டவர். முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடத்தில் இருக்கின்றார். மு.கா. தலைவருடன் சில தடவை பகிரங்கமாக ஊடகங்களில் கருத்து மோதல்களிலும் ஈடுபட்டவர். 

இதனால், சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பற்றிய மனப் பீதியொன்று மு.கா. தலைவரிடம் இருக்கிறது. கட்சிக்குள் நிஸாம் காரியப்பர் தலையெடுத்து விடக் கூடாது என்பதில் மு.கா. தலைவர் ஹக்கீம் மிகக் கவனமாக இருக்கின்றார் என்று – மு.கா. பிரமுகர்களே பேசிக்கொள்வார்கள். 
இவ்வாறானதொரு நிலையில், கல்முனை மாநகரசபையின் மேயர் சிராஸை ராஜிநாமா செய்ய வைத்து - அந்த வெற்றிடத்துக்கு நிஸாம் காரியப்பரை ஹக்கீம் நியமிப்பாரா என்பதுதான் பலரின் கேள்வியாகும். 

கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, தற்போதைய மேயர் சிராஸ் மீராசாஹிப் ராஜிநாமாச் செய்வதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே தெரிகிறது. 'சிராஸ் தனது பதவியை ராஜிநாமா செய்ய முடியாது என்று கூறுவார். அல்லது ராஜிநாமா செய்வேன் என்று சொல்லிக் கொண்டே காலத்தை இழுத்தடிப்பார். இதற்குள் - மாநகரசபையின் ஆயுள் முடிந்து விடும். இதுதான் நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள்' - என்று மு.கா.வின் அம்பாறை மாவட்ட மு.கா. பிரமுகர் ஒருவர் நம்மிடம் அடித்துக் கூறினார். 

இன்னொரு புறம், 'இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் ராஜிநாமாச் செய்ய முடியுமென்றால், கல்முனை மேயர் ஏன் ராஜிநாமாச் செய்து கொடுக்க முடியாது' என்கிற கேள்ளி எழும். நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மு.கா.வுக்கு ஏற்பட்ட சரிவில் இருந்து மக்களின் கவனத்தினைத் திருப்புவதற்காக - இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளரை ராஜிநாமா செய்யச் சொன்னதன் விளைவினை – அப்போது ஹக்கீம் உணர்வார். தான் கையில் எடுத்த மந்திரக்கோலினால் வந்த ஆபத்துக் குறித்து ஹக்கீம் யோசிக்கத் தொடங்குவார். 

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழும். அதாவது, இப்படியெல்லாம் நீங்கள் யோசிக்கும் போது, ஒரு கட்சியின் தலைவர் ஹக்கீம் இதையெல்லாம் யோசித்திருக்க மாட்டாரா என்று நீங்கள் கேட்கலாம். 

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஹக்கீம் மிகவும் பலவீனமானவர். தன்னுடைய கையில் எது கிடைக்கிறதோ - அதையே பிரச்சினைக்கான தீர்வாக மாற்ற நினைப்பவர். அநேகமாக, அவரின் தீர்வுகள் நிரந்தரமானவையாக இருப்பதில்லை. தற்காலிகத் தீர்வுகளை வழங்கி விட்டு ஓடி ஒளிந்து கொள்வதில் ஹக்கீம் மன்னர். தலை வலிக்குத் தீர்வாக தலையணைகளை மாற்றினால் போதும் என்று நினைப்பவர். 

நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஏற்பட்ட சரிவு குறித்த விமர்சகர்களின் கவனத்தினைத் திருப்ப வேண்டும் என்பதுதான் ஹக்கீமுடைய அவசரத் தேவையாகும். அதற்காகத்தான் இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளரை ராஜிநாமாச் செய்ய வைத்தார். இதை ஓர் அரசியல் அதிரடியாகவும் ஹக்கீம் நினைத்திருக்கக் கூடும். ஆனால், அடுத்து கல்முனை மேயர் பதவி விவகாரம் என்கிற 'பலாப்பழத்தினை' தான் விழுங்க வேண்டியிருப்பதை மனிதர் ஏகத்துக்கு மறந்திருக்கக் கூடும்.  

இந்தக் கணக்கு வழக்குளையெல்லாம் தாண்டி, கல்முனை மேயர் பதவி – நிஸாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டு விட்டால் மட்டும் - அவர் ஒன்றையும் பெரிதாகக் 'கிழித்து' விடப் போவதில்லை என்கிற விமர்சனமும் ஒருபுறம் உள்ளது. 

சட்டத்துறையில்தான் நிஸாம் காரியப்பர் புத்திசாலி – விவேகமானவர். அரசியலில் ஒரு சோம்பேறி. இப்போதைய மேயர் சிராஸ் அளவு கூட, அரசியலில் நிஸாம் காரியப்பரால் பணியாற்ற முடியாது. அதை நிரூபிப்பதற்காக – சிலவேளை, கல்முனை மாநகரசபையின் மேயர் பதவியினை சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் மு.கா.வின் உயர்பீட உறுப்பினரான மிஸ்டர் எக்ஸ்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 

1 comment:

  1. HE IS THINKING THAT WHEN THE UNP PROBLEM WILL START TO ME. DON'T WORRY VERY SOON U WILL BE THROWN

    ReplyDelete

Powered by Blogger.