Header Ads



ஒலுவில் துறைமுக திறப்பு விழாவும், இறுதி நாள் கண்ணீர் அஞ்சலியும்.

(ஓலுவில் ஊரான்)

ஓலுவில் கிராமம் அம்பாரை மாவட்டத்தில் புராதன வரலாற்றை கொண்ட ஒரு பிரசித்தி பெற்ற இடமாக இருந்து வருகிறது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் இன்றுவரை அதன் நிலப்பரப்பை சூரையாடுகின்ற திட்டம் சுதந்திரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1981ம் ஆண்டிலிருந்து இதன் வெளிப்படையான ஒரு செயற்பாடாக பொன்னன்வெளிக்காணியின் சூரையாடல் இராஜமரியாதையுடன் அன்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் ஏறத்தாழ 500 ஏக்கர் நெற்காணி புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டு பெரும்பான்மை இனத்தவருக்கு தாரைவார்க்கப்பட்டது. இதற்கு மாற்றுக்காணி வழங்கும் திட்டத்தின் கீழ் மறைந்த பெருந் தலைவர் அஸ்ரப்பினால் பொன்னன்வெளிக்காணி இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி வழங்குவம் கோசத்தில் சுவரொட்டிகள் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை என்ற தோரணையில் 1997ம் ஆண்டு ஒலுவில் மக்களுக்கு சொந்தமான 800 ஏக்கர் குடியிருப்பு, என்ற உறுதியின் அடிப்படையில் சேனைப்பயிரிச்செய்கை காணி மலர்த்தட்டில் வைத்து பெரும்பான்மை இனத்தவருக்கு தாய் வீட்டுச் சீதனமாக வழங்கப்பட்டு எல்லைக்கற்களும் போடப்பட்டது. இது கிணறு வெட்டப்  போய் பூதம் வந்தாற்போல்.

இதைத் தொடர்ந்து தொல் பொருள்  ஆராய்ச்சி என்ற வடிவத்தில் ஒலுவில் மேற்குப்புற பகுதியில் பல நூற்றுக்கணக்கான நிலங்கள் சூரையாடப்பட்டது.

1995ம் ஆண்டு பெருந் தலைவர் அஸ்ரப் அவர்களினால் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடமாக ஒலுவில் வடக்குப் பக்கம் இனங்காணப்பட்டது. செல்வச் செழிப்பும் ஏழைக்குடுப்பங்களின் உயிர்நாடியாக இருந்த சிறு மீன்பிடி, கிடுகு இழைத்தல், தெங்கு செய்கை போன்றவற்றில் ஈடுபட்டு தங்களது வயிற்றுப்பசியை கழுவிய ஏறத்தாழ 300 குடுப்பங்களின் வயிற்றிலே தீயை வார்த்து விட்டு 250 ஏக்கர் தென்னங்கானி சுவீகரிக்கப்பட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு பேரின பிரதேச வாதிகளின் கைகளில் ஒப்படைக்பட்டது. அவர்கள் செய்த கைவரிசை கைநாட்டு வைக்கத்தெரியாதவர்கள் மழைக்குக் கூட பாடசாலை கூரையின் கீழ்ஒதுங்காதவர்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்பட்டது.

பேரின பிரதேசவாதிகளினால் சொந்தவூர் உறவினர்களுக்கே பல்கலைக்கழகத்தில் தொழில் வழங்கப்பட்டது. ஆனால் ஒலுவில் கிராமத்தில் நன்றாக கல்வி கற்ற திறமையான இளைஞர்கள் இருந்தும் கூட தொழில்வாய்ப்பும் வழங்கப்படவில்லை. நிலம் பறிகொடுத்து தொழிலிழந்த எம்மவர்களின் நிலமையோ மிகப்பரிதாபம்.

அந்த வழியில் 1994ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பொது ஜன ஐக்கிய முன்னனி அரசாங்கத்தின் பங்காளி கட்சியின் துறைமுக அமைச்சராகவிருந்த பெருந்தலைவர் அஸ்ரபின் கனவில் உருவான ஒலுவில் துறைமுகத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் இடைநடுவில் அவரின் மரணமும் ஏற்பட்டது.

ஒலுவில் மக்களின் மிகப்பெரிய ஜீவனோபாய வருமானவழியாகவிருந்த மீன்பிடித் தொழில் 'ஏழை மக்களின் நிரந்தர வருமானம், முதியவர்களின் சேமலாப நிதியம், விதவைளின் வாழ்வாதாரம், அங்கவீனர்களின் நிதியீட்டம், பள்ளிவாசல்களின் பரிபாலனம்,  பொது நிறுவனங்களின் நிதியீட்ட மூலகம், ஒலுவில் கிராமத்தின் பைத்துல் மால்(திறைசேரி)' மேற்கூறப்பட்டவர்களுக்கு அடிக்கப்பட்ட முதலாவது சாவு மணி.

துறைமுக நிர்மாணிப்புக்காக ஏறத்தாழ 300 ஏக்கர் நிலம் சுவீவரிக்கப்பட்டு ஓரு சிலருக்கு நஷ்ட ஈடாக பிச்சைப்பணம் வழங்கப்பட்டது. ஏனையோர் இன்று வரை நடுத் தெருவிலே நஷ்ட ஈடு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்கள்.

காணியிழந்தவர்கள், தொழிலிழந்தவர்கள் ஏனைய சொத்துக்கள் இழந்தவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. ஆனால் ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மானத்தின் போது ஆடம்பர வீடுகள், மாதாந்த மானியக் கொடுப்பனவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு துறைமுகத்தில் தொழில் வாய்ப்பு எழுத்து மூல ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்டது.

உண்மையில் இறைவனால் இம் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மீன்பிடித் தொழில், விவசாயம், தெங்குப் பயிர்ச்செய்கை போன்றவை காட்டிக்கொடுப்போராலும் அரசியல்வாதிகளாலும் சில துறைமுக கூலிப்படை ஒட்டர்களாலும் உயர்மட்ட அரச அதிகரிகளினாலும் பறிமுதல் செய்யப்பட்டது.

அது மாத்திரமா? பாதுகாப்புப்படையினரின் முகாம்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் பல ஏக்கர் காணிகள் இப்பொழுது சூறையாடப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமான எமது அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்ன? ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்ற கீதங்களுடனும், அரசுடன் பேசித் தீர்க்கலாம் என்ற பசப்பு வார்த்தைகள் பிரதேச அரசியல் வாதி இவர்களின் நிழலில் கூட மிதிப்பது மிகப் பெரிய பாவம் மக்களை ஏமாற்றுகின்ற பெரும் பாவிகள். இவர்களின் அனுசரனையில் 2013.09.01 இன்று திறக்கப்படும் ஓலுவில் துறைமுகத்தினால் இக்கிராமத்திற்கு கிடைக்கப்போகின்ற பயனோ மீதமுள்ள நிலப்பரப்பையும் தொழிலில்லாத இளைஞர்களையும் உருவாக்குவது மட்டுமன்றி ஒலுவில் கடற்கரையிலிருந்து இலங்கையின் தலைநகர் வரை சங்கிலித் தொடர்ச்சியில் பேரினவாதிகளை குடியேற்றுகின்ற திட்டம் ஆரம்பிக்கப்படும் நாளாக இத் திறப்பு விழா அமையப்போகின்றது.

இக்கட்டுரை ஒலுவில் துறைமுக திறப்பு விழாவுக்காக கண்ணீர் அஞசலியாக எழுதி பிரசுரிக்கப்படுகிறது.

3 comments:

  1. Toooooo late my friend!
    Anyway we will pray for Oluvil poor people.
    But one thing I couldn't undestand that why still you Oluvil people going behind these cheap politicians specially SLMC?

    Good luck brothers.

    ReplyDelete
  2. முஸ்லிம் காங்கிரஸ் இல் மட்டும் பழி போடுவது மடத்தனம் ஆகும் விமர்சிப்பது என்றால் அது முஸ்லிம் காங்கிரஸ் ஐ மட்டும் விமர்சிக்கக் கூடாது பொதுவாக எளுத வேண்டும்

    ReplyDelete
  3. Mr Kamran Butt please let me know who is the better politician?????

    Others cheeeeeeper then SLMC.

    ReplyDelete

Powered by Blogger.