தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் இஸ்மாயிலுடன் பிரத்தியேக நேர்காணல்
(ஏ.எல்.ஜுனைதீன் + உமர் அலி)
இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் எமது www.jaffnamuslim.com இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி,
கேள்வி:- தென்கிழக்கு பல்கலைகழகத்தின் இன்றைய நிலை பற்றி நீங்கள் கூற விரும்புவது?
பதில்: ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அது ஆரம்பிக்கப்பட்ட இலக்கின் பாதையிலே பயணிக்கின்றது , இதன் பலனை மக்கள் நுகரத்துவங்கி விட்டனர் .என்று கூறமுடியும்.
கேள்வி:- தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி அதன் முன்னேற்றம் பற்றி கூறுங்கள்?
பதில்:- இப் பல்கலைக்கழகமானது இலங்கையில் காணப்படுகின்ற 14 தேசியப் பல்கலைகழகங்களில் இதுவும் ஒன்றாகும். இப் பல்கலைக்கழகம் அண்மைக் காலமாக பல அபிவிருத்திகளைக் கண்டு வருகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். இதற்கு பிரதான காரணம் என்னவெனில் இப் பிரதேசத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்ட இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து விடுபட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரைக்கும் எங்கள் நாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் ஒரு துரித வளர்ச்சியும் அபிவிருத்தியும் கண்டு வருவதனால் இந் நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கு மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இன்று இலங்கையில் ஐந்து துறைகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தகம், துறைமுகம், ஆகாய விமானப் போக்குவரத்து இவைகளோடு கல்வியை மத்தியப்படுத்திய ஒரு அபிவிருத்தித் திட்டம்தான் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கு மேலாகச் சுற்றுலாத் துறையையும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கின்ற போது அரசாங்கம் கல்வியை மையப்படுத்திய ஒரு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டுள்ளதனால் இதனூடான ஒரு அபிவிருத்தியில் கல்வி நிறுவனங்களுக்கான உதவிகளும் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு சிறந்த சிந்தனையும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.
இதற்கு எங்களுடைய உயர் கல்வி அமைச்சர் திரு.எஸ்.பி திஸ்ஸநாயக்க அவர்கள் கூட அண்மைக் காலங்களில் பல் வேறுபட்ட மாற்றங்களை உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தி வருகின்றார். புதிய கல்வித் துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. கூடுதலான நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பல்கலைகழகங்களில் புதிய துறைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பல் வேறுபட்ட புதிய மாற்றங்கள் ஏற்படுவதன் காரணமாக எங்களுடைய தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அண்மைக் காலங்களில் உட் கட்டமைப்பு வசதிகள் அதே போன்று புதிய பாட விதானங்கள் மற்றும் புதிய கற்கை நெறிகளை அறிமுகப்படுத்துவதில் எமது பல்கலைக்கழகமும் ஆர்வம் காட்டி வருகின்றது. அதன் அடிப்படையில் எங்களுடைய பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அதாவது கடந்த பெப்ரவரி மாதம் இயந்திரவியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 99 மாணவர்கள் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் எங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களின் வருகையோடு எங்களின் இயந்திரவியல் பீடம் இன்று சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கென போதுமான விரிவுரையாளர்களைப் பெற்றுள்ளோம். உதாரணத்திற்கு குறிப்பிட்டுக் கூறப்போனால் இலங்கையிலிருந்து 71 விண்ணப்பதாரிகள் இந்த பீடத்திற்கு விரிவுரையாற்றுவதற்கு தமது விண்ணப்பங்களை அனுப்பியிருந்தார்கள். ஆனால் எங்களுக்கு முதலாவது வருடத்திற்கு 11 விரிவுரையாளர்கள்தான் நியமிப்பதற்கான அனுமதி கிடைத்தது. இதில் எங்களது ஆட்சேர்ப்புக் கோவையில் இருக்கின்ற முதலாவது வகைப்படுத்தலின் கீழ் வருகின்ற 41 விண்ணப்பதாரிகளை வரவழைத்திருந்தோம். அதிலிருந்துதான் 11 பேரை நாம் தெரிவு செய்துள்ளோம். அதில் இலங்கையிலுள்ள எல்லா இனத்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
அது மாத்திரமல்லாமல் கலாநிதிதி கற்கைகளை மேற்கொண்டவர்கள் இலங்கையிலிருந்து மாத்திரமல்லாமல் சிங்கப்பூர், ஹொங்கோங் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் இதற்கு விண்ணப்பங்களை அனுப்பியிருந்தார்கள். அவர்களும் இந்த புதிய பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு இன்று இயந்திரவியல் பீடம் சிறப்பான முறையில் இங்கு இயங்கிக்கொண்டிருக்கிறது. அதே போன்று புதிய கற்கை நெறிகளை நாங்கள் ஆரம்பிக்க இருக்கின்றோம். குறிப்பாகக் கலைப் பட்டதாரிகளுக்கு அதுவும் இப் பல்கலைக்கழகத்தில் அண்மைக் காலங்களில் இடம் பெற்று வருகின்ற மாற்றமாக இருக்கின்றது. இதற்கு மேலாக உட் கட்டமைப்பு வசதிகளை நாம் சொல்லுகின்ற போது மாணவர்களுக்கான விடுதி வசதிகள், சிற்றுண்டிச்சாலை வசதிகள், விரிவுரையாளர்களுக்கான விடுதி வசதிகள், பீட கட்டடங்கள், மற்றும் கட்டடத் தொகுதிகள், வீதி வசதிகள், மின்சார வசதிகள், நீர் முகாமைத்துவம் போன்ற வகைகளை எல்லாம் இப் பல்கலைக்கழகத்திற்குள் நாங்கள் சிறப்பான முறையில் செய்வதற்கான வசதிகள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
இவ்வாறு பல் வேறுபட்ட மட்டங்களில் எங்களது பல்கலைக்கழகம் அபிவிருத்தி கண்டு வருகின்றது. அத்தோடு உயர் கல்வி அமைச்சின் ஊடாகக் கிடைக்கும் நிதிக்கும் மேலதிகமாக உலக வங்கி அதேபோன்று குவைத் நிதியம் போன்ற நிறுவனங்களிலிருந்தும் எங்களுக்கு அபிவிருத்தி வசதிகளுக்காகக் கிடைக்கப்பெறுகின்றது. அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள், மற்றும் சமூகத்திலுள்ள நலன் விரும்பிகள் இப் பல்கலைக்கழகத்தைப் பார்க்கின்றபோது இதன் வளர்ச்சியைக் காணக்கூடியதாக உள்ளது. அது மாத்திரமில்லாமல் இங்கு ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை பல் வேறுபட்ட சமூகத்தினரும் எங்களிடம் மிகவும் பெருமையாக நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருவதாகக் குறிப்பிட்டுப் பேசுகின்றார்கள். இதனைப் பார்க்கின்றபோது இப் பல்கலைக்கழகத்தில் பல் வேறுபட்ட மாற்றங்கள் அது கல்வித் துறையாக இருந்தாலும் சரி கற்றலுக்கான துறையாக இருந்தாலும் சரி ஆய்வுத் துறையாக இருந்தாலும் சரி மாணவர்களின் நலனைப் பொறுத்தவகையாக இருந்தாலும் சரி விளையாட்டுத் துறையாக இருந்தாலும் சரி பல் வேறுபட்ட துறைகளிலும் இப் பல்கலைக்கழகம் அண்மைக் காலமாக பாரிய வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.
கேள்வி: தங்களது உபவேந்தர் பணியை தொடருவதில் ஏதாவது இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றீர்களா?
பதில்: இல்லை, அப்படி எதுவுமில்லை எனது நிருவாகத்துக்கு கல்விசார் அணியினரும், கல்விசாரா அணியினரும் பூரண ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.அவர்களது ஒத்துழைப்புடனேயே வெற்றிகரமாக கல்விப்பணியும், நிருவாகமும் நடைபெறுகின்றது.
கேள்வி: பேரினவாத சக்திகள் இந்த பல்கலைக்கழகம் பற்றி துவேசம் மிக்க கருத்துக்களை வெளியிடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில்: இது ஒரு தேசிய பல்கலைக்கழகம், தேசிய பல்கலைக்கழகத்தின் தாற்பரியங்கள் பற்றி தெரியாமல் அப்படியானவர்கள் கூறும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை, நாம் அவற்றிற்கு செவிசாய்க்கவும் தேவையில்லை. இங்கு எல்லோரும் சமமாகவே நடாத்தப்படுகின்றார்கள். உண்மையை உணரும் போது குறிப்பிட்ட கருத்துக்களை வெளியிட்டவர்கள் வெட்கித்தலை குணிவார்கள்.
கேள்வி:- கலைப் பட்டதாரிகள் அண்மைக் காலமாக தொழில் வாய்ப்புக்கள் பெறுவதில் கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர். இதற்கு உங்கள் பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பதில்:- உண்மையில் இலங்கையில் பல்கலைக்கழகத்திற்குள் உள் வாங்கப்படுகின்ற மாணவர்களில் அரைவாசிக்கும் மேலான மாணவர்கள் கலைத் துறைக்குத்தான் உள் வாங்கப்படுகின்றார்கள். இலங்கையைப் பொறுத்த வரையில் கலைத் துறையில் பட்டம் பெற்று வெளியேறுகின்ற பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்களைப் பெறக்கூடிய துறைகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த காலங்களில் கூட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைப் பட்டதாரிகள் அரச தொழிலுக்கு உள் வாங்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இன்னும் போதியளவிலான வசதிகளோடு தொழில்களைக் கொடுப்பதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றது.
இருப்பினும் எங்களுடைய உயர் கல்வி அமைச்சு பல் வேறுபட்ட முன் மாதிரியான திட்டங்களைக் கலைப் பட்டதாரிகளுக்கு முன்னெடுக்கப்படல் வேண்டும் என எங்களிடம் அடிக்கடி பல் வேறுபட்ட வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டிருப்பது போன்று எங்களுடைய கலைப் பட்டதாரிகளுக்கும் புதிய துறைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசணைகள் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கலைப் பட்டதாரிகளுக்கு கணனித் துறையில் பட்டங்களை வழங்குவது அதே போன்று மொழித் துறையில் குறிப்பாக ஆங்கில மொழியை அடிப்படையாக வைத்து பட்டங்களைக் கொடுப்பது, இன்னும் சுற்றுலாத்துறை இம் மூன்று துறைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எங்களுக்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கு மேலாக சில பல்கலைக்கழகங்களில் கலைப் பட்டதாரிகளை தாதியர் கற்கை நெறிகள் போன்ற துறைகளுக்கு உள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இருப்பினும் எங்களுடைய பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் நாங்கள் கலைப் பட்டதாரிகளுக்கு எதிவரும் ஆண்டிலிருந்து கணனித் துறையையும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பட்டப் படிப்பினையும் அதே போன்று சுற்றுலா முகாமைத் துறையையும் நாங்கள் ஆரம்பிக்க இருக்கின்றோம். இதில் ஆரம்பத்தில் கூடுதலான மாணவர்களை எடுக்காவிட்டாலும் ஆகக் குறைந்தது 10 க்கும் 20 க்கும் இடைப்பட்ட மாணவர்களை எடுத்து நாங்கள் பயிற்றுவிக்க இருக்கின்றோம். ஆங்கில ஆசிரியர் பற்றாக் குறை இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமுள்ள பாடசாலைகளிலும் பற்றாக்குறை காணப்படுகின்றது. அதே போன்று சுற்றுலாத்துறை இன்று இலங்கையில் துரித வளர்ச்சி அடைந்து வருகின்ற காரணத்தினால் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அறுகம்பை, பாசிக்குடா போன்ற இடங்களை மயப்படுத்தி சுற்றுலாத்தளங்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்றது. அதற்காக வேண்டி உள்நாட்டிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றார்கள். அவர்களை உள் வாங்கக்கூடிய ஹோட்டல் வசதிகள் குறைவாகக் காணப்படுகின்றது. அதே போன்று அவர்களை வழிகாட்டி நடத்தக்கூடியவர்களும் குறைவாகக் காணப்படுகிறார்கள்.
அவர்களோடு சேர்ந்து வேலை செய்வதற்கான ஆளனிப் பற்றாக்குறையாகக் காணப்படுகின்றது. இவ்வாறு பல் வேறுபட்ட குறைபாடுகள் காணப்படுவதன் காரணத்தால் நாம் சுற்றுலாத்துறையையும் எங்களது பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனக் கருதி இத் துறையை இங்கு ஆரம்பிக்க இருக்கின்றோம். இதற்காக வேண்டி எங்கள் பல்கலைக்கழகத்தில் மாதிரி ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க இருக்கின்றோம். சுமார் 30 படுக்கை அறைகளைக் கொண்டதாக இது அமைக்கப்படும் இதனை இரண்டு நோக்கங்களுக்காக ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறோம். இக் ஹோட்டலை வைத்து மாணவர்களுக்கு எவ்வாறு ஹோட்டல் பயிற்சி பெறுவது என்பதற்கான பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். மற்றது பல்கலைக்கழகம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் நோக்கமாக இங்கு வருகின்ற உல்லாசப் பயணிகளை இந்த ஹோட்டலில் தங்க வைத்து அதனூடாக வருமானத்தைப் பெறுவதற்கும் உத்தேசித்துள்ளோம்.
அதே போன்று கணனித் துறையோடு தொடர்பு பட்ட ஆசிரியர்கள் இலங்கையின் பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலாக தனியார் துறைகளிலும் வெளிநாடுகளிலும் கணனி சார்ந்த உத்தியோகத்தர்களுக்கு. அதிகமான வேலை வாய்ப்புக்கள் உள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இவர்கள் கணனித் துறையில் நிபுணத்துவம் பெறுகின்ற போது அவர்கள் தானாகவே சென்று கூடுதலான சம்பளங்களுக்கு தொழில்களைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனால் இந்த மூன்று துறைகளையும் நாங்கள் எங்களுடைய கலைப் பட்டதாரிகளுக்கு ஆரம்பிக்க இருக்கின்றோம். எதிவரும் காலங்களில் இன்னும் சில புதிய கற்கை நெறிகள் அதாவது கட்டடத் துறையில் எவ்வாறு உள்ளக அழகுபடுத்தல், ஆடைகளை எவ்வாறு வடிவமைத்தல் போன்ற துறைகளைச் செய்வதற்கு நாங்கள் முயற்சிகள் எடுத்து வருகின்றோம். இவ்வாறு புதிய கற்கை நெறிகள் மூலம் கலைப் பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்குவதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்தலாம் என்ற ஒரு நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது.
கேள்வி:- குவைத் நிதி ஊடாக இப் பல்கலைக்கழகம் அபிவிருத்தி அடைந்து வருகின்றது எனக் கூறப்படுகின்றது. அது பற்றி குறிப்பிட்டுக் கூற முடியுமா?
பதில்:- ஆம் உண்மையில் குவைத் நிதி இப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது.முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் குவைத் தூதுவராக பதவி வகித்த போது இந் நிதியைப் பெறுவதற்கான வழிகாட்டல்களை எமது பல்கலைக்கழகத்திற்கு எடுத்துக் கூறியிருந்தார். அவர் காட்டிய வழியில் இந்நிதியைப் பெறுவதற்கான முயற்சியை இப் பல்கலைக்கழகத்திலிருந்த நிர்வாகிகள் மேற்கொண்டதன் காரணமாக இரண்டு கட்டமாக இவ்வுதவி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
இந்நிதியுதவியின் முதல் கட்டம் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரைக்கும் எங்களுக்கு நிதி உதவி செய்யப்பட்டிருந்தத. அந்தக் காலப்பகுதியில் நாங்கள் இரண்டு பீடங்களுக்கான கட்டடத் தொகுதிகளையும் மாணவர் மத்திய நிலையம், விளையாட்டு மைதானம், மாணவர்களுக்கான விடுதி வசதிகள், வைத்திய நிலையம் போன்றவற்றை அமைத்திருந்தோம். 2013 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாம் கட்ட நிதியம் எங்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்நிதியைக் கொண்டு நாங்கள் சர்வதேச ஒன்று கூடல் மண்டபம் ஒன்றையும் மாணவர்களுக்கான விடுதி வசதிகளையும் இது போன்று விரிவுரையாளர்களுக்கான விடுதி வசதிகள் மற்றும் உள்ளக கட்டமைப்புக்கள், மாணவர்களுக்கான சிற்றுண்டிச்சாலை வசதிகள் இவ்வாறு பல் வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு எண்ணியுள்ளோம்.
இந்நிதியத்தை அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் என்று கூறுவார்கள் இந்நிதியம் வெறும் உதவித் தொகை என்று கூற முடியாது. அரசாங்கத்திற்கு கிடைக்கின்ற இலகுக் கடன் என்றே இதனைக் கூறவேண்டும். இலகு கடன் அடிப்படையில் எமது அரசாங்கத்திற்கு இந்நிதியம் கிடைக்கப்பெறுகின்றது. அந்த நிதியை அரசாங்கம் எங்களுடைய பல்கலைக்கழகத்திற்கு தந்து இதன் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு முதலில் நன்றியைச் செலுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இந்த நிதியம் உயர் கல்வி அமைச்சின் ஊடாகத்தான் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. இந்நிதி வெறுமனே பல்கலைக் கழகத்திற்கு நேரடியாக வருவதில்லை எங்களுடைய உயர் கல்வி அமைச்சில் இதற்கான திட்டச் செயல் பிரிவு ஒன்று செயல்படுகின்றது. எமது பல்கலைக்கழகத்தின் தேவைகளை அறிந்து சகல நிதி முகாமைகள் மற்றும் இது தொடர்பான செயல்பாடுகளை அப் பிரிவு மூலமாகவே இடம்பெறுகின்றது. இது சம்மந்தமாக அண்மையில் எங்களுடைய மூதவை உறுப்பினர்களுக்கு செயல் திட்டப் பணிப்பாளர்களினால் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இந்நிதி செயல்பாடு இப் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ஒரு பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது.
கேள்வி:- மாணவர்களின் ஒழுக்க, உளவியல் சார்ந்த நடவடிக்கைகளில் இப் பல்கலைக்கழகத்தில் எவ்வாறான நடைமுறைகள் காணப்படுகின்றன.?
பதில்:- இது நல்லதொரு கேள்வி பல்கலைக்கழத்திற்கு வருகின்ற மாணவர்களைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும் டீன் ஏஜின் கடைசிக் காலகட்டத்தில் அதாவது கொதித்த இரத்தமுள்ள 22 - 23 வயதில்தான் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொண்டிருக்கிறர்கள். இவ்வாறான மாணவர்களின் ஒழுக்க உளவியல் ரீதியாகப் பார்க்கின்ற போது பல்வேறுபட்ட பிரச்சினைகள் இலங்கையில் மாத்திரமல்ல எல்லா நாடுகளிலும் இந்த வயதுள்ள மாணவர்களுக்கு இருக்கின்றது. அது ஒரு வழமையான விடயம். இதனை நாம் நிதானமாகக் கையாள வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஒழுக்கம் சம்மந்தமாகப் பார்க்கின்ற பொழுது பல்கலைக்கழகம் பல கலைகளைக் கொண்ட ஒரு சுதந்திரமான கல்வி மையம். இருப்பினும் எங்களுடைய சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை மதித்து நடக்கக் கூடிய ஒரு மையமாக இது இருக்க வேண்டும். அந்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப எங்களது மாணவர்களை ஒரு ஒழுக்க ரீதியானவர்களாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அது மாத்திரமல்லாமல் அந்தந்த குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்கான எதிர்காலத்தில் ஒரு நற் பெயரை ஈட்டிக் கொடுப்பதிலும் இந்த மாணவர்களின் ஒழுக்க நடைமுறைகளும் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. அதே போன்று உங்களுக்குத் தெரியும் இங்கு கற்க வருகின்ற
மாணவர்கள் பொருளாதார ரீதியாக பல் வேறு மட்டங்களில் இருந்து வருகின்றார்கள். அப்படியான மாணவர்களிடையே உள ரீதியான பல் வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றது. சமூக ரீதியான மாற்றங்கள் அல்லது வருமான ரீதியான பல்வேறு பட்ட மாற்றங்கள் அல்லது கல்வி ரீதியான மாற்றங்கள் ஏன் சமய ரீதியாகக் கூட பல் வேறுபட்ட மட்டங்களிலிருந்து வருவதன் காரணத்தால் இவர்களைச் சரியான முறையில் இவர்களுக்கு ஏற்படுகின்ற உள ரீதியான பிரச்சினைகளை சரியான முறையில் வழி நடத்தப்பட வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது எங்களுடைய பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய சவாலாக இருந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும் எங்கள் பல்கலைக்கழகத்தில் தற்போது பல் வேறுபட்ட நடைமுறைகள் காணப்படுகின்றது உதாரணத்திற்கு குறிப்பிடுவதானால் மாணவர்களுக்கான உதவிகளும் சேவைகளும் மற்றும் நலனுக்கான பணிப்பாளர் ஒருவரை இங்கு வைத்திருக்கிறோம். அந்த பணிப்பாளர் மாணவர்களின் நலன்களுக்கும் ஒழுக்கங்களுக்கும் பொறுப்பாக இருப்பார். அவர் உண்மையில் மாணவர்களின் பிரதிநிதியாகவும் நலன் சார்ந்தவராகவும் இருந்து செயல்படுவார்.
இதற்கு மேலாக மாணவர்களிடையே வாக்குவாதங்கள் மற்றும் ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் வருகின்ற போது அவற்றை விசாரித்து அவற்றிற்கான தண்டனைகள் அல்லது எவ்வாறான பரிந்துபகாரங்களைச் செய்யலாம் என்பது சம்மந்தமாக புரக்டர் கூடிய கரிசனை காட்டுவார்.
அடுத்தது சிரேஷ்ட மாணவ ஆலோசகர்கள் என்று காணப்படுகின்றார்கள். இவர்களும் மாணவர்களுக்கான ஆலோசணைகளையும் மற்றும் ஒழுக்கம், உளநலம் சார்ந்த நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு மேலாக அவர்களுடைய தொழில் வாய்ப்பு சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்குவதற்கும் ஒரு பணிப்பாளர் இருக்கின்றார்.. மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஆலோசகர்களும் செயல்படுகின்றார்கள்.
இவ்வாறு பல் வேறுபட்ட மாணவர்களின் ஒழுக்க, உளநலம் சார்ந்த பல அமைப்புக்கள் இப் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்றது. இது வளர்ச்சியடைந்த பல்கலைக்கழகங்களில் சற்று உயர்ந்த மட்டத்தில் இவ்வாறானவர்கள் நிபுணத்துவ அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். எங்களுடைய பல்கலைக்கழகத்தில் நாங்கள் ஒரு குறிப்பிட்ட பயிற்சிகளைக் கொடுத்து இவ்வாறானவர்களை வைத்திருக்கிறோம். அந்த வகையில் இவர்கள் மாணவர்களோடு நெருங்கிப் பழகுகிறார்கள். மாணவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவர்களால் முடியுமான தீர்வுகளைச் சொல்லிக் கொடுக்கின்றார்கள். இவ்வாறான பதவிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் மாணவர்களை தங்களுடைய பிள்ளைகளைப் போன்று அல்லது தமது சகோதரர்களைப் போன்று அல்லது தங்கள் மாணவர்களைப் போன்று இரக்க மனப்பாண்மையாகக் கையாள்வார்கள். சில வேளைகளில் மாணவர்கள் வேறு வழிகளில் பார்ப்பதற்கும் இடமிருக்கிறது. அதாவது பெற்ற தகப்பன் தனது மகனை “டேய் இங்கு வாடா” என்று கூப்பிடுவதற்கும் இன்னொரு மாற்றான் மகனை இப்படிக் கூப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. அதாவது தனது மகனை வாடா என்று கூப்பிடுவது அதித பாசத்தினால்தான் என்று குறிப்பிடுவார்கள். அவ்வாறான நடவடிக்கைகள் எங்களுடைய விரிவுரையாளர்கள் மாணவர்களிடம் செய்கின்ற பொழுது சில வேளைகளில் அவர்கள் அதனை வித்தியாசமாக நோக்குகின்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றது. இருப்பினும் இந்த உத்தியோகத்தர்கள் மாணவர்களின் நலனில் மிகவும் அக்கறை காட்டுகின்றார்கள். முடியுமானவரைக்கும் விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஏனைய உத்தியோகத்தர்களுக்கான இடைவெளிகளைக் குறைப்பதில் அவர்கள் எந்நேரமும் கரிசனை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் மேலாக சமூகங்களோடு புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதற்கும் நன்மதிப்பைப் பெறுவதற்கான பல் வேறுபட்ட திட்டங்களை இவர்கள் அமுல்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள். ஏன் அண்மையில் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் பெரிய இரத்ததான நிகழ்வு ஒன்றைச் செய்து இருந்தது. நான் நினைக்கின்றேன் இது போன்று இந்நிகழ்வுகள் இரண்டு மூன்று தடவைகள் இப் பல்கலைக்கழகம் செய்திருக்கின்றது. அந்த அடிப்படையில் எங்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அது போன்று சமூகத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களோடு எங்களுடைய மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுகின்றார்கள். எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாடசாலைகள் மற்றும் சில பொது இடங்கள் என்பனவற்றில் சிரமதானம் செய்யவிருக்கின்றோம். இவ்வாறு எங்களுடைய மாணவர்களையும் சமூகத்தையும் பல்கலைக்கழக சமூகத்தையும் ஒரு உடன்பாட்டுக்கும் நெருக்கப்பாட்டுக்கும் எடுத்து வருவதில் இவ்வாறானவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இதனை இன்னும் சிறப்பாக செய்யவுள்ளோம்.
கேள்வி:- மாணவர்களிடையே பிரச்சினைகள் ஏற்படின் உப வேந்தராகிய நீங்கள் தலையிட்டு அவர்களுடன் நேரடியாகவே பேசி தீர்வு காண முயற்சிப்பீர்களா?
பதில்:- எங்களுடைய பிரதான முதலீடாக இருந்தாலும் சரி அல்லது சொத்தாக இருந்தாலும் சரி அல்லது இப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு நற் பெயரை எடுத்து தருபவர்களாக இருந்தாலும் சரி அது எங்களுடைய மாணவர்கள்தான். ஆகவே, எங்களுடைய மாணவகளை நல்வழிப் படுத்துவதில் இந்தப் பல்கலைக்கழகத்தின் முழுச் சமூகமும் மிகவும் ஆர்வமாக இருக்கின்றது குறிப்பாக உப வேந்தர் உள்ளடங்களாக.
நீங்கள் கேட்ட கேள்வி உப வேந்தராகிய நான் மாணவர்களோடு நேரடியாகப் பிரச்சினைகள் வருகின்ற போது கலந்தாலோசித்து இதற்கான தீர்வுகளைக் காண்பீர்களா என்று கேட்டிருந்தீர்கள். உண்மையில் மாணவர்களோடு அடிக்கடி சந்திக்கின்ற வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றேன். அதாவது மாணவர்கள் விரும்பிய நேரம் அவர்களுடைய ஏதாவது தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பின் அதனோடு தொடர்புடைய நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று எங்களுடைய மாணவ ஆலோசகர்கள் அல்லது புரக்டர், பணிப்பாளர்களோடு வந்து என்னோடு அனுகி அவர்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களைத் திருப்தி படுத்தக்கூடிய தீர்வுகளை நங்கள் முன் வைப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றோம்.
அண்மையில் கூட சில மாணவர்கள் என்னைச் சந்தித்து கேட்டார்கள் நான் அவர்களிடம் கூறியிருக்கின்றேன் மாதத்திற்கு ஒரு தடவை முக்கியமாக இருக்கின்ற சில பிரச்சினைகளை அடையாளப்படுத்திக் கொண்டு வாருங்கள் அதனை நாங்கள் தீர்த்து வைப்போம் அல்லாமல் எல்லாப் பிரச்சினைகளையும் கொண்டு வராமல் முக்கியமான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும்போது வருடத்திற்கு சுமார் முப்பதுக்கு மேற்பட்ட பிரச்சினைகளை எம்மால் தீர்க்கக்கூடியதாக இருக்கும். இவ்வாறானதொரு சிறந்த இணக்கப்பாட்டுக்கு எங்களுடைய மாணவர்கள் வந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் இங்கிருக்கும் மாணவர்களுக்கும் உப வேந்தராகிய எனக்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று காணப்படுகின்றது. மாணவர்கள் அவர்களுடைய பிரச்சினைகளையோ அல்லது அவர்களின் உள ரீதியான பிரச்சினையையோ அல்லது ஒழுக்க சார்ந்த பிரச்சினைகளையோ அல்லது வருமானம், கல்வி கற்றல் போன்ற பிரச்சினைகளையோ நேரடியாக வந்து என்னிடம் கதைப்பார்கள். இதற்கான உதவிகளைச் செய்வதில் நாங்கள் மிகவும் அக்கறையாக இருந்தும் செயல்படுகின்றோம்.
இதற்கும் மேலாக மாணவர்களின் நலனில் நான் மிகவும் அக்கறையாக இருக்கின்றேன். அவர்களுக்கு சிறந்த விடுதி வசதிகளைக் கொடுக்க வேண்டும் இது போன்று விளையாட்டு வசதிகளைக் கொடுக்க வேண்டும். உணவு வசதிகளைப் பரிமாறக் கூடிய சிற்றூண்டிச் சாலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் மற்றும் சிறந்த போக்கு வரத்து வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பதில் நான் மிகவும் அக்கறையாக இருக்கின்றேன்.
கேள்வி:- மாணவர்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?
பதில்:- நான் ஒரு பெற்றோர் என்ற அடிப்படையில் அல்லது ஒரு பல்கலைக்கழக உப வேந்தர் என்ற அடிப்படையில் அல்லது சமூகத் தொண்டன் என்ற அடிப்படையில் மாணவர்கள் இந்நாட்டின் எதிர்கால முத்துக்கள். எதிகாலத் தலைவர்கள், நாட்டின் எதிர் காலத்தைத் தீர்மானிப்பவர்கள். ஆகவே அவர்கள் சிறந்த ஒழுக்கமிக்க சிறந்த அறிவுமிக்கவர்களாக வருகின்ற போது அந்த சமூகத்திலும் பல் வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படும். உதாரணத்திற்கு கூறுவோமேயானால் உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் இலவசக் கல்வி வழங்குவதில் இலங்கையும் முதன்மையான ஒரு நாடாகக் காணப்படுகின்றது. எமது நாட்டில் பாலர் பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி. சில வேளைகளில் இலவசக் கல்விக்குப் புறம்பாக வேறு பல சலுகைகளையும் நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். விடுதி வசதிகள் மற்றும் புலமைப் பரிசில் நிதியம், மகாபொல போன்ற நிதிகளையும் கொடுத்திருக்கிறோம். ஆகவே, உங்கள் மீது பல்கலைக்கழகம், அரசாங்கம், உங்களின் பெற்றோர் மற்றும் உங்களுடைய சமூகமும் மிகவும் அக்கறையுடன் ஏன் இந்நாட்டிலுள்ள வரி செலுத்துபவர்களின் பணம்தான் எங்களுக்கு இன்று வேறு ஒரு வழியில் பல்கலைக்கழக அபிவிருத்திக்கும் மாணவர்களின் அபிவிருத்திக்கும் செலவு செய்யப்படுகின்றது. ஆகவே பாரியதொரு எதிர்பார்ப்புடன் எல்லோரும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, மாணவர்கள் தமக்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை உங்களுடைய எதிகால வாழ்வை வழப்படுத்துவதற்கு ஒரு சிறந்த கல்வி அறிவை
மாத்திரமல்லாமல் ஒழுக்க ரீதியாக பண்பாட்டு ரீதியாக பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யக் கூடியவர்களாக வருகின்ற பொழுது இந் நாடும் இச் சமூகமும் எங்களது பல்கலைக்கழகமும் திருப்தி அடையும் சந்தோஷப்படும்
ஆகவே, இதனை விரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை இந்தக் கருத்துக்களிலிருந்து மாணவர்களுக்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மாணவர்கள் மீது இந்நாடு பாரிய எதிர்பார்ப்புக்களை வைத்திருக்கிறது. எதிர்பார்ப்புகளுக்கு சவால் கொடுக்கக் கூடியவர்களாக நீங்கள் உங்களை மாற்றி உங்களது சிந்தனைகள், ஆளுமைகள் மற்றும் ஏனைய பண்புகளை மாற்றி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதே எனதுவேண்டுகோளாகும்.
கேள்வி:- பெற்றோர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்:- பெற்றோர்களைப் பொறுத்த வரையில் உண்மையிலேயே ஒரு பெறுமானம் உள்ள பெற்றோர்களாகவே நாம் அவர்களை இந்நாட்டில் பார்க்கின்றோம். அதாவது வடித்தெடுக்கப்பட்ட முத்துக்களின் தந்தைகளாக இருப்பதையிட்டு நீங்கள் மிகவும் பெறுமைப்படல் வேண்டும்.
இலங்கையில் சுமார் 15 வீதத்திற்குட்பட்ட மாணவர்கள்தான் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சித்தியடைபவர்கள் பல்கலைக்கழகம் வருகிறார்கள். அவ்வாறான திறமையான பிள்ளைகளைப் பெற்றமைக்காக வேண்டி நீங்கள் சந்தோஷப்பட முடியும்.
இருப்பினும் உங்கள் பிள்ளைகளின் எதிகால வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்களாக அவர்களுடைய நடவடிக்கைகள் கல்வி முயற்சியில் அவர்கள் எவ்வாறு மேற்கொள்கிறார்கள் அவர்களின் ஒழுக்க ரீதியான நடவடிக்கைகள் எப்படி அமைந்திருக்கிறது என்பன போன்றவற்றில் நீங்கள் அக்கறையாக இருக்க வேண்டும்.
நவீன தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் இக் கால கட்டத்தில் பல் வேறு பட்ட சமூக சீரழிவுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே பெறுமதி மிக்க பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளில் எவ்வளவு அவதானமாக இருக்கின்றீர்களோ அதே போன்று பல்கலைக்கழக உப வேந்தர் உள்ளடங்களாக விரிவுரையாளர்களோடு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி உங்களின் பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் சம்மந்தமாக அவதானமாக இருப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தின் சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும். பிள்ளைகளின் வளர்ச்சிதான் நாளை உங்களின் வளர்ச்சி. நாட்டின் வளர்ச்சி முழு உலகத்தின் வளர்ச்சியுமாகும்.
இன்று உலகில் பெறுமானமிக்க ஒரு சொத்தாகக் காணப்படுவது மனித வளமாகும். இந்த மனித வளத்தை பட்டை தீட்டி அல்லது செப்பனிட்டு எடுப்போமேயானால் அவர்கள் முழு உலகத்திற்கும் ஒரு பெறுமானம் உள்ள சொத்தாக இருப்பார்கள்.
கேள்வி:- ஜப்னா முஸ்லிம் இணையத்தைப் பற்றியும் அதில் வெளிவரும் செய்திகளைப் பற்றியும் பல்கலைக்கழக உப வேந்தர் என்ற வகையில் உங்கள் அபிப்பிராயம் என்ன? இது மேலும் வளர்ச்சி பெற உங்களிடம் ஆலோசனைகள் ஏதாவது இருப்பின் அது பற்றி கூறுவீர்களா?
பதில்:- ஜப்னா முஸ்லிம் இணையம் அண்மைக் காலங்களில் இலத்திரணியல் ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு இணையமாகக் காணப்படுகின்றது. நான் கடந்த காலங்களில் பல் வேறுபட்ட நாடுகளுக்கு எனது விஜயங்களை மேற்கொண்டிருந்த போது அந்நாடுகளில் காணப்பட்ட தமிழ் பேசுகின்ற எமது மக்களைச் சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் ஜப்னா முஸ்லிம் இணையச் செய்திகளை மையமாக வைத்து அவர்கள் இலங்கை சம்பந்தமான நிறைய விடயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..அந்த அடிப்படையில் மகத்தான ஒரு சேவையை ஜப்னா முஸ்லிம் செய்து கொண்டிருக்கிறது.இருப்பினும் சில வேளைகளில் பத்திரிகை தர்மம் என்று ஒன்று காணப்படுகின்றது. அதாவது சில செய்திகள் உண்மைத் தன்மைகளை சரியான முறையில் கண்டறியாமல் ஒரு பக்கச் செய்திகளை வெளியிடுவதாகவும் சில தரப்பினர்களால் குறை தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான குறைகளை நிவர்த்தி செய்து எதிர்காலத்தில் நீங்கள் ஒரு நடு நிலமையான உங்களுடைய அதிகமான ஆக்கங்கள் ஒரு நடுநிலமை வகிக்கினும் சில வேளைகளில் பக்கசார்பு இருப்பதாக ஒரு சிலவற்றைக் குறிப்பிடுகின்றார்கள். ஜப்னா முஸ்லிம் ஒரு நிலைப்பாட்டிலிருந்து ஆக்கங்களைப் பிரசுரிப்பீர்களேயானால் நிச்சயமாக பொது மக்கள் மத்தியில் குறிப்பாக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் வரவேற்பைப் பெறும் என்பது எனது தனிப்பட்ட எதிர்பார்ப்பாகும்.
அது மாத்திரமல்லாமல் குறிப்பாக சமூகத்தில் இருக்கின்ற பெறுமானமிக்க தாபனங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுகின்ற பொழுது ஜப்னா முஸ்லிமுக்கு செய்தி வழங்கும் நிருபர்கள் அல்லது குறிப்பிட்ட செய்தியை வழங்கியவர்கள் வழங்குகின்ற செய்தியோடு தாபனத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகளோடு தொடர்பு பட்டு அதன் உண்மைத் தன்மைகளையும் கேட்டு பிரசுரிப்பீர்களேயானால் நிச்சயமாக ஜப்னா முஸ்லிமோடு சவால் செய்வதற்கு யாராலும் வர முடியாது. அந்தளவுக்கு ஜப்னா முஸ்லிமில் வரும் ஆக்கம் பெறுமானமிக்கதாக இருக்கும். நான் எதிர் மறை நோக்கில் குறிப்பிட விரும்ம்பவில்லை. நேர் மறையாகத்தான் இதணை நான் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த இனையத்தளம் கருத்தில் கொள்ளும் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீடூழி காலம் ஜப்னா முஸ்லிமின் சேவை வளர வேண்டும் என இந்த இணையத்தை வாழ்த்துகின்றேன்.

Post a Comment