Header Ads



'தம்புள்ளை முதல் மஹியங்கனை வரையான சமாச்சாரத்தில் அரசியல் வாதிகளை நம்பவேண்டாம்'

(அபூ ஆஸாத் - மூத்த ஊடகவியலாளர்)

தம்புள்ளைப் பள்ளி தாக்கப்பட்டது என்ற செய்தி கடந்த 50 வருடகால இடை வெளியில் நாம் கேள்விப்பட்ட ஒரு அதிர்ச்சிமிகு செய்தியாகும்.

இதன் காரணமாக தம்புள்ளைப் பள்ளிக்கு என்ன நடந்தது என்ற ஆதங்கம் சகல முஸ்லீம்களது உள்ளத்திலும் உதித்தது இயல்பானதே. 

அன்று பலர் பலவிதமாக வீரவசனம் பேசினர், பலர் பள்ளிக்கும் தம்புள்ளை முஸ்லீம்களுக்கும் எதுவும் ஆபத்து வந்து விடக் கூடாது என்று நோன்பு கூட நோற்றனர். தம்புள்ளைக்கு எதுவித உறவு முறையும் இல்லாதவர்கள் கூட நோன்பு நோற்றார்கள். அது அன்று. இந்நிலையிலேதான் வீரவசனங்கள் பறந்தன. கிழக்கு மாகாண அரசியல் மேடைகளுக்கு அலங்காரப் பந்தல்களோ மின் விளக்குகளோ தேவைப்படவில்லை. தம்புள்ளை சம்பவம்தான் பொறியாய்ப் பரந்தன. 

அதன்பின் ஆட்டைக்கடித்து மாட்டைக் கடிந்து மனிதனையும் கடித்து விட்டன. நாம் இன்னும் மௌனிகளாக இருக்கிறோம். அன்று எம்மில் இருந்த வேகம் இன்றில்லை. அப்படியாயின் நாளை மறுதினம் எமது வேகத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இது இவ்வாறு இருக்க இப்படியான விடயங்களைத் தேடிவாசிக்க சில முஸ்லிம்களுக்கு இந் நாடகளில் நேரமில்லை. காரணம் ரமலான் காலம் என்தால் அமல்கள் முக்கியமாகும். அது பற்றி கருத்துக்கூற முடியாது. 

அதே நேரம் முன்று மாகாணங்களில் தேர்தலைந் சந்திக்க உள்ளோம். இதில் பெரும்பாலும் தேர்தல் நடக்க சில தினங்கள் இருக்கும் போது வடமாகாண சபைத் தேர்தல் நீதி மன்றில் தாக்கல் செய்துள்ள மனுவின் படியோ அல்லது வேறு ஏதாவது பூச்சாண்டிகள் காட்டப்பட்டோ ஒத்தி வைக்கப் படலாம். மிகுதி இரண்டு மாகாணங்களிலும் வெற்றி பெற அரசுக்கு சில சவால்கள் உண்டு. அதனை இலகுவாக முறியடிக்க மகியங்கனை பள்ளி மட்டுமல்ல இன்னும் பல பள்ளிகள் இருக்கின்றன என்பதை மறந்து விடவேண்டாம்.

உலகப் பயங்கரவாதி, சர்வதேசப் பயங்கரவாதி, உலகிலே முப்படைகளையும் கொண்டுள்ள ஒரு பயங்கரவாத அமைப்பு, வல்லரசுகளுக்கு நிகரான இந்தியாவையே நிலை தடுமாற வைத்த ஒரு அமைப்பு என்றெல்லாம் பெயர் வாங்கிய புலிப் பயங்கரவாதத்தை மந்திரத்தால் வெல்லவில்லை. தந்திரத்தால் வென்றார்கள். அப்படியானவர்களுக்கு இரண்டு மாகாண சபைகளையும் வெற்றி கொள்வதென்பது நொறுக்குத் தீணி சாப்பிடுவது போன்றது. அதற்கு இப்படியான பள்ளிகள் மட்டுமல்ல இன்னும் இதனையொத்த விடயங்கள் மேலும் மேலும் இடம் பெறலாம்.

அப்படியான ஒரு நிலையில் பங்காளிக் கட்சிகளும், பிரத்தியேகமாக பதவிகள் வழங்கி நியமிக்கப்பட்டுள்ள ஒரு சில முகவர்களும் என்ன செய்வார்கள். தமது எசமானுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்துவார்கள். அதாவது ராமன் ஆண்டா என்ன? ராவனன் ஆண்ட என்ன? எனது காரியம் நடந்தால் போதும் என்று இருப்பார்கள். இதுதான் இயல்பு.

அப்படியானவர்களுக்கு அறிக்கைகள் விடுவதில் நல்ல பரிச்சியம் உண்டு. காரணம் அந்த அறிக்கையைக்கூட அவர்கள் வாசிப்பதில்லை. அதனை எழுதிக் கொடுக்க வேறு இணைப்புச் செயலாளர்களும், பிரத்தியேகச் செயலாளர்களும் ... இப்படிப்பலர் இருக்கிறார்கள். இவற்றை நம்பி நாம் ஏமாற வேண்டுமா? 

எனவே அன்பார்ந்த முஸ்லிம் வாசகர்களே!

அரசியல் வாதிகளைக் குறை கூறிக் கொண்டிருப்பதைவிட அவர்களது நேரம் வந்து கொண்டிருக்கிறது. அந் நேரத்தில் சரியான பாடத்தைப் புகட்டுவோம்.

சமகாலப்பிரச்சினைக்கு இவ்வாறான இணையங்களையும், இலங்கை முஸ்லிம்களின் கையில் இன்று இல்லாத ஒன்றான ஊடகங்களையும் இயன்றவரை பயன்படுத்துவோம். அதேநேரம் கடல் கடந்த இலங்கை முஸ்லிம்களால் இன்னும் பலமடங்கு சக்தி மிக்க தாக இப்பணியைச் செய்ய முடியும். அதாவது வெளிநாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலமே இந்த அராஜகர்களை அடக்க முடியும்.

இதற்கு சிறந்த ஒரு உதாரணம் '13' விவகாரமாகும். இலங்கைத் தமிழர்களுக்கு யுத்த முடிவை அடுத்து 13 பிளஸ் தருவோம் என்று தலைவர் உற்பட பலர் உலக நாடுகளுக்குச் சென்று சொன்னார்கள். இது தொடர்பாக ஐ.நா.சபை உற்பட அனைத்து அமைப்புக்களும் நாடுகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நாம் அறிவோம். என்ன நடந்தது. ஒன்றுமில்லை என்று தான் நினைத்தோம். பெரும்பான்மைச் சமூகமும் அப்படித்தான் மேலோட்டமாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இதனைவிட யுத்த வெற்றியின் மமதை கண்ணை மறைத்து விட்டது.

இலங்கையை தமது கைக்குள் வைக்க பல்வேறு வல்லரசுகளும் சக்தி படைத்த நாடுகளும் ஒவ்வொரு உபாயங்களை மேற்கொண்டன. இது பற்றிய விரிவு அவசிய மில்லலை என நினைக்கிறேன். இந்தியா மௌனமாக இருந்தது. ஐ.நா. சபை நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியா தான் தடையாக இருந்தது என்றும் இந்தியா மேற்கொண்ட கால அவகாச திருத்தம் காரணமாக சர்வதேச யுத்த நீதிமன்றில் நிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததாகப் பேசப்பட்டது. இது பற்றி நம் நாட்டுத் தமிழ் ஏடுகள், தமிழ் நாட்டுத் தமிழ் ஏடுகள் தாராளமாக எழுதின. சிலவாரங்களுக்கு முன் என்ன நடந்தது.

இந்தியா தெளிவாகக் கூறிவிட்டது.  '13 பிளஸ் தருவதாக வாக்குறுதி அளித்து, தற்போது 13 மைனஸா' தரப் போகிறீர்கள். (மாகாண சபையின் காணி,பொலீஸ் அதிகாரத்தை குறைப்பது). அப்படிச் செய்தால் ஏற்கனவே இரண்டு முறை இந்தியத் தலையீட்டால் ஐ.நா. சபையில் இலங்கை தப்பிப்பிழைத்தது. அடுத்த சுற்றில் இது நடக்காது என்ற அதட்டலால் இன்று சிலர் வாயடைத்துப் போயினர்.

வீர வசனம் பேசிய பேரின வாதிகள் வாய் மூடி அமைதியாகிவிட்டார்கள். தமது கையாலாகாத தன்மையை மறைக்க மேலும் ஏதாவது செய்ய வேண்டுமே. அதற்கு ஒத்த சமாச்சாரங்களை உருவாக்கி அதில் குளிர் காயமுற்படுவர். 

எனவே இயன்றவரை இஸ்லாமிய நாடுகளுக்கு இந்த அட்டுழியங்களை வேற்று மொழிகளில் எழுதி அவர்களுக்கும் எத்திவையுங்கள். அப்படியல்லாத சந்தர்ப்பத்தில் இன்று ஒரு மாகாண சபை அமைச்சர் செய்த வேலையை (பள்ளி மூடும் உத்தரவு) நாளை ஒரு பிரதேச சபை அங்கத்தவன் செய்வான். மத்திய அரசில் உள்ள எமது அமைச்சர்களால் அதனைத் இன்று போல் தடுக்க முடியாது போகும். அறிக்கையை மட்டும் செயலாளர் எழுதிக் கொடுப்பார். இதுதான் நடக்கும்.

ஒரு மாகாண சபை அமைச்சருக்கு இவ்வளவு பெரிய அதிகாரம் எப்படி வந்தது. அரசியல் ரீதியாக அங்கு அவரை விட ஒரு முதலமைச்சர் இருக்கிறார். ஆளுநர் இருக்கிறார். அதற்கு மேலாக நாட்டில் அமைச்சர்கள் பிரதமர், ஜனாதிபதி என்று பலர் இருக்கிறார்கள். நிர்வாக ரீதியில் பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர், மகாண செயலாளர். சமய விவகாரங்களுக்கான பணிப்பாளர்,பாதுகாப்பு ரீதியில் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஏ.எஸ்.பி, எஸ்.பீ,  டி.ஐ.ஜீ, போலீஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் .... என்று அடுக்கிக் கொண்டு போகலாம். இவர்கள் எவராலும் இதை தடுக்க முடியாத அளவிற்கு ஒரு மாகாண அமைச்சருக்கு எங்ஙகனம் அதிகாரம் வந்தது. எனவே இது ஒரு சிறிய விடயமல்ல.

ஒரு மாவட்ட நீதவானின் உத்தரவைப் போன்றல்லாவா இது நடந்துள்ளது. அதனைவிட மகியங்களையில் என்ன நடந்தது? ஏதும் இரு குழுக்களுக்கிடையில் மோதல் வந்ததா? அல்லது வேறு ஏதும் தேவைகளுக்கு பள்ளிக் காணி தேவைப்பட்டதா? ஒன்று மில்லையே, எனவே இது திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் சில வெளிப்பாடுகள் மட்டுமே. 

இதனைவிடப் பாரதூரமனவைகள் நடக்க முன் வெளிநாட்டுத் தலைமைகளுக்கு எமது இஸ்லாமிய அமைப்புக்கள் இதனைத் தெரிவிப்பதுவே சாலப் பொருந்தும். உள்ளுர் அடி வருடிகளை நம்மவும் வேண்டாம். சந்தர்ப்பம் வரும் போது அவர்களை கைவிட்டு விட்டால் அது ஒரு நல்ல பாடமாக இருக்கும்.

மஹியங்கனையுடன் அதிக தொடர்புகளைக் கொண்ட மடவளையில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மடவளையில் ஒரு சகோதரர் மஹியங்கனையில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் மரணித்து விட்டார். அவர் சில வருடங்களாக மஹியங்கனையில் வியாபாரம் செய்து வந்தவர். மையம் கொண்டு வரப்பட்டது. முதல் இரவாகியும் ஊரவர்கள் சிலருக்கு மையத்தைப் பார்க்க முடியவில்லை. சுமார் 40 பஸ்வண்டிகளுக்கும் மேற்பட்ட மஹியங்கனை சிங்கள சகோதரர்கள், ஆண்கள் பெண்கள் என குழுமி வந்திருந்தனர். மடவளை எங்கும் மஹியங்கனை வாகமாகக் காட்சியளித்தது. சில சிங்கள மக்கள் கதரி அழுதார்கள். இது நடந்து சில மாதங்களில் அங்கு முஸ்லிம்கள் தொழக் கூடாது என்ற அளவுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு அதிகாரம் ஒரு வருக்கு வருமாயின் அல்லது பன்றியின் கழிவுகளை வீசி எரியும் அளவு தைரியம் வந்தது என்றால் அது அப்பிரதேச மக்கள் வழங்கிய ஆணையாக இருக்க முடியாது என்பதையே சுட்டிக் காட்டவே குறிப்பிட்டேன். இது ஒரு சிறிய உதாரணம். இது போல் மஹியங்கனையையும் முஸ்லீம்களையும் தொடர்பு படுத்திப் பக்கம் பக்கமாக உதாரணம் காட்ட முடியும்.

திட்டமிட்ட சதியை திட்மிட்டே வெல்ல வேண்டும். அரசியல் வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

3 comments:

  1. dear muslim,
    ALLAH'ukkaha arasudan oddikkondirukkum Arasiyal kadsikalukku MAHANA SAPAI ELECTION'IL VAAKKALIKKA VENDAM.

    ReplyDelete
  2. உண்மையான, உருக்கமான கட்டுரை ஆனால் எமது மரமண்டைகளுக்கு இதெல்லாம் புரியுமென்றா நினைக்கிறீர்கள்? இன்று நம்பர் வண் சுயநலவாதிகள் நமது முஸ்லிம்கள்தான். 99 வீத முஸ்லிம்களுக்கு சமுகத்தைப்பற்றி எந்தக்கவலையுமில்லை.

    ReplyDelete
  3. திட்டமிட்ட சதியை திட்மிட்டே வெல்ல வேண்டும்.உலகப் பயங்கரவாதி, சர்வதேசப் பயங்கரவாதி, உலகிலே முப்படைகளையும் கொண்டுள்ள ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதே உலக நாடுகளுடைய கருத்து எனவே இதை முறியடிக்க சமகாலப்பிரச்சினைக்கு இவ்வாறான இணையங்களையும், இலங்கை முஸ்லிம்களின் கையில் ஒன்றான ஊடகங்களையும் மூத்த ஊடகவியலாளர்கள் உருவாக்கி முஸ்லிம்கலை ஒன்று செர்த்தால் முடியும்.அராஜகர்களை .அராஜகங்களை அடக்க முடியும்.
    எனவே அன்பார்ந்த முஸ்லிம் வாசகர்களே!
    media அவசரமாக.அவசியமாக தேவை

    ReplyDelete

Powered by Blogger.