Header Ads



இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி: சிந்தனைகள், ஆளுமைகளுக்கு வடிவம் கொடுத்த பாசறை

(அஷ்ஷெய்க். எஸ். முஹம்மத் இர்ஸாத் இஸ்லாஹி)

25 வருட நிறைவை கடந்து இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பாதையில் காத்திரமான பங்களிப்புகளைச் செய்து வேகமாக எழுச்சியுற்றுச் செல்லும் மாதம்பை, இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு கல்லூரியின் 8ம் தலைமுறை சார்பாக சில கருத்துக்களை பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 2002ம் ஆண்டு இஸ்லாஹிய்யா வளாகம் எம்மை தன் முதுகில் சுமந்து கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கல்லூரியில் எமது பிரவேச நாள் முதல் எமது சிந்தனைகளும், ஆளுமைகளும் உயிர்த்தெழத் தொடங்கின. எமது ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாஹிய்யாவின் கல்வித்திட்டமும், மாணவர் புறச் செயற்பாடுகளும் துடிப்புடன் காணப்பட்ட பொழுதுகளில் எமது செயற்பாடுகளும் அங்கிருந்தே விழுதாகின. 

ஆரம்ப வருடம் இன்றும் பசுமையாக அவ்வப்போது பலருடன் நினைவு கூறும் எமது வாழ்வின் திருப்புமுனையாகும். ஷரீஆத்துறை மற்றும் பாடசாலைக் கல்வியை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள நாடி இங்கு வந்தடைந்த போது இஸ்லாஹிய்யா தன் மாணவர்களை தஃவா, கல்வி, கலை, பண்பாடு, ஆளுமை விருத்தி என்ற பல்வேறு கோணங்களில் பயிற்றுவிப்பதையிட்டு மிகுந்த சந்தோஷமடைந்திருக்கின்றோம். மட்டுமன்றி, ஆசிரியர் குழாம் சக மாணவர்களுக்கிடையில் காணப்படுகின்ற அந்நியோன்ய உறவும், மாணவர்களுக்கிடையிலான சகோதரத்துவ வாஞ்சையும், மாணவர்களது நலன்களில் ஆசிரியர்களது அதீத ஈடுபாடும் எம்மை பல சந்தர்ப்பங்களில் ஈர்த்துள்ளன.

உண்மையில் ஆரம்ப வருடம் எமது அறிவுத்துறையும், ஆளுமை விருத்தியும், தஃவா ஈடுபாடும் இஸ்லாஹிய்யா வளாகத்தில் விதையாக இடப்பட்ட மறக்க முடியாத அந்திம பொழுதுகள். அன்று தொடக்கம், எமது பல்துறை ஆற்றல்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர் மன்ற அரங்குகள், கவியரங்குகள், கலை விழாக்கள் போன்ற அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் அரங்கேற்றப்பட்டன. 

இஸ்லாஹிய்யா வளாகத்தில் காணப்படும் முக்கிய சிறப்பம்சம் யாதெனில் அது மாணவர்களது அறிவு விருத்தியை நோக்குவது போன்றே பல தளங்களிலும் வினைத்திறன்மிக்க ஆளுமையுடன் கூடிய மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் முனைப்புடன் மாணவர்களை ஊக்குவிப்பதாகும். இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்கள் மத்தியில் செயற்பட்டு வரும் தஃவா, கல்வி, கலை, விளையாட்டு, சுகாதாரம், சூழலியல், இலத்திரணியல் ஊடகம் போன்றவற்றிற்கான பல்வேறு அலகுகள் நிறுவப்பட்டு மாணவர்கள் ஊடாகவே நிருவகிக்கப்பட்டு வருகின்றமை நோக்கத்தக்கதாகும். இத்தகைய அலகுகள் ஊடாகவே கடந்த நாட்கள் முதல் இன்று வரை கலையரங்கம், மாணவர் மன்றம், எழுத்துக்களம், விளையாட்டுப் போட்டிகள், சுவாரஸ்ய பாடல் போட்டிகள், விவாத அரங்குகள், நூல் அறிமுகம், நாடக அரங்கம், கவியரங்கம், தஃவா பயணங்கள், நூல் வெளியீடுகள், பத்திரிகை ஆக்கங்கள் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகள் தொடராக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மட்டுமன்றி, கல்லூரியின் வளாகத்தில் மாணவர்கள் விவகாரங்களை நிருவகிப்பதற்கான தலைமைத்துவம் மற்றும் நிருவாக, முகாமைத்துவ ஆளுமைமிக்க மனிதர்களாக மாணவர்கள் கல்லூரியின் ஆரம்ப நாள் முதலே புடம்போடப்படுவது மாணவர்களது வளர்ச்சிப் பாதையில் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

அத்தோடு, மாணவர்களது அறிவுப்பணியுடன் தஃவாத் துறை மிக முக்கிய மைற்கல்லாகும். அவ்வப்போது கல்லூரிக்கு வெளியிலும், உள்ளேயும் இடம்பெற்று வரும் பல்வேறு தஃவா நிகழ்ச்சிகளில் மாணர்வகளது அதீத ஈடுபாடும், பங்களிப்பும் இன்றியமையாதன. அல்குர்ஆன் வகுப்புக்கள், ஜம்இய்யாவின் முஅஸ்கர் பயணங்கள், இஜ்திமாக்கள் போன்ற பல்வேறு தஃவாச் செயற்பாடுகள் உட்பட சமூக சேவை பணிகள் என்பவற்றின் ஊடாகவும் மாணவர்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்வதனை கல்லூரி மேலாகக்கருதுகின்றது. 

இஸ்லாஹிய்யாவின் கல்விப் பயணத்தில் மாணவர்களது ஊடகத்துறை ஈடுபாடு வியக்கத்தக்க சான்றாகும். எமது சக வகுப்புத் தோழர்களது முயற்சிகளுடன் முதன் முதலாக பிரசவமான 'தூர்' சஞ்சிகை இங்கு நினைவுகூறத்தக்கதாகும். அத்துடன் முனைப்புப் பெற்ற எழுத்துக் களம், மற்றும் கலை இலக்கிய மன்றம் இன்று கல்லூரியில் மாணவர்களிடையே வீரியமிக்க எழுத்தாளர்களை, புத்தாக்க சிந்தனையுடன் கூடிய மாணவர்களை உருவாக்கியுள்ளது. மட்டுமன்றி இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் எழுத்தியல் புரட்சியும், சிந்தனைப் பரவலாக்கமும் சர்வதேச ரீதியாக எழுச்சி பெற்றும் வருகின்றது.

இத்தகைய பின்னணிகளுடன் பல பரிமாணங்களில் மாணவர்களை ஈடுபாடு கொள்ளச் செய்வதில் கல்லூரியின் நிருவாகம் உட்பட ஆசிரியர் குழாமினது அயராத முயற்சிகள், அர்ப்பணங்கள் பாராட்டத்தக்கதாகும். மாணவர்களது அகன்ற வாசிப்பையும், புத்தாக்க சிந்தனைகளை வெளிக்கொணர்வதிலும், தங்களை பல பொழுதுகளில் மாணவர்களாக்கிக் கொண்ட ஆசிரியர்களது வழிகாட்டல்கள் கல்லூரியின் எழுச்சிப் பாதையில் என்றும் நினைவுகூறத்தக்க தடயங்களாகும். 

கல்லூரியின் வரலாற்றில் 8ம் தலைமுறையான எம்மை அறிவூட்டி, தெளிவூட்டி, பல்துறை ஆளுமைகளை உரமூட்டி  செதுக்கிய இஸ்லாஹிய்யா வளாகத்திற்கு என்றும் எமது நன்றிகள் சமர்ப்பணம்.

No comments

Powered by Blogger.