Header Ads



ஊடகப் பணி, ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

(அஷ்ஷெய்க் MI அன்வர்)

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முழு உலகையும் தன் விரல் நுனியால் ஆட்டிப்படைக்கிறது ஊடகம். 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதிவேக தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேறிவருகின்றன. சமூகத்திற்கு தொலை தூரத்திலிருந்த ஊடகம் இன்று எம் வீட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு அடுக்களைக்கும் குளியலறைக்கும் கூட வந்துவிட்டது. 

தொடர்பறுந்து காணப்பட்ட மனித சமூகத்தை  நாட்டு மக்கள் என்று மட்டுமல்லாது உலக மக்கள் என்ற உறவுமுறையில் கூட பிணைப்பை ஏற்படுத்திவிட்டது இவ்வூடகங்கள். யாரும் யாருடனும் எங்கிருந்தும் கணப்பொழுதில் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை அறியவும் கருத்துப் பரிமாறவும் என பல்வேறு வசதி வாய்ப்புக்களைப் பல பரிமாணங்களில் இவ்வூடகங்கள் அமைத்து தருகின்றன. 

ஊடகங்களின் மூலம் மனித சமூகம் அளவில்லா நன்மைகளை அனுபவிப்பது கண்கூடு. எனினும் தற்போதைய நிலையை அவதானித்தால் ஊடகங்களின் மூலம் நன்மைகளை பெறுவதை விடவும் தீமைகளை பெறுவதே அதிகம் என்பதை மறுக்க முடியாது. 

முன்பு ஏகாதிபத்திய அரசுகள் இராணுவப் படை எடுப்பின் மூலம் பிற நாடுகளை காலணியாதிக்கம் செய்து தமது மதத்தையும் சிந்தனையையும் திணித்தன. வளங்களை சூரையாடின. ஆனால் இன்று ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாடுகளின் ஒத்துழைப்புடன் மதப் பிரச்சாரமும் கலாசார திணிப்பும் வளச் சுரண்டல்களும் தங்கு தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன. 

நாட்டின் மக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவதிலும் அரசுக்கெதிராக அவர்களை ஒன்று திரட்டுவதிலும் பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் இனங்களுக்கிடையே மோதலை ஏற்டுத்துவதிலும் பாரிய பங்கு வகிப்பவை ஊடகங்களே என்பதை நாம் மறுக்க முடியாது. மத்திய கிழக்கு நாடுகளில் அண்மையில் வெடித்த மக்கள் புரட்சிகளுக்குப் பின்னால் பாரிய அளவில் ஊடகங்களே தொழிற்பட்டன என்பதை நாம் அறிவோம். 

அந்தவகையில் தற்போது நடைமுறையிலுள்ள ஊடக ஒழுங்கானது அதனை உருவாக்கியவர்களையே உதறித் தள்ளிவிட்டு சட்டதிட்டங்கள் உச்சவரம்புகள் ஒழுக்ககோவைகள் என்பவற்றை புறந்தள்ளிவிட்டு தட்டிக்கேட்க எவருமில்லை என்ற வகையில் தறிகெட்டு அலைகிறது என்பது கண்கூடு. இதன் விளைவாக முழு உலகமும் தார்மீகத்தினதும் சத்தியத்தினதும் பலி பீடமாக மாறி வருகிறது.

அந்தவகையில் புதிய ஊடக ஒழுக்க கோவையொன்றை விரைவில் இலங்கை அரசாங்கமும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் உத்தேசக் கோவை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் வெகுசன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் ரம்புக்கல்ல தெரிவுத்துள்ளார்.

இவ்வாறு நாடுகளும் அமைப்புக்களும் எப்படி ஊடகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கின்றன. இது பற்றி தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல தரப்பட்ட வாதப்பிரதிவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் இஸ்லாம் மனித சமூகத்தின் அனைத்து துறைகளுக்குமான வழிகாட்டி  என்ற வகையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த முறையில் பொருத்தமான வகையில் உரிய ஊடக செல் நெறியை முன்கூட்டியே வகுத்து தந்து விட்டது.  ஊடகங்கள் கொண்டிருக்கவேண்டிய பண்புகள் ஒழுக்கங்கள் குறித்து குர்ஆனும் ஹதீஸூம் மிகச் சிறப்பாகப் பிரஸ்தாபிக்கின்றன. அவற்றில் மிகப் பிரதானமான ஒரு சிலவற்றை மாத்திரம் இங்கு நோக்குவோம். 

1. கருத்துச் சுதந்திரம்

இஸ்லாம் மனிதனுக்கு கருத்துச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

“விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் கூறுவதை தெளிவாகவே கூறுங்கள்” (33-70) ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் மிகச் சிறந்த ஜிஹாத் எது என்று வினவப்பட்டது அப்போது தீய ஆட்சியாளன் முன்னிலையில் சத்தியத்தை எடுத்துரைப்பதாகும் என பதில் கூறினார்கள். (அபூ-தாவூத்)

மனிதனுக்கு பேசுவதற்கு சுதந்திரத்தை அளித்த இஸ்லாம் அதற்கு சில ஒழுங்குகளையும் விதித்துள்ளது. கருத்தை வெளிப்படுத்துகையில் பிறர் உள்ளமும் உணர்வுகளும் புண்படாதிருக்கவேண்டும் அவை மதிக்கப்பட வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகிறது. மென்மையையும் நளினமான போக்கையும் கடைப்பிடிக்குமாறு அது உபதேசிக்கிறது. “நீங்கள் அவர்களுடன் மிகவும் அழகிய வழிமுறையிலேயே விவாதம் புரியுங்கள்” (16-125)

2. தகவல்களை ஊர்ஜிதப்படுத்தல்

ஊடகவியலாளன் தனக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் அவற்றை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாதவரை வெளியிடலாகாது.  “உங்களிடம் ஒரு பாவி ஒரு செய்தியை எடுத்து வந்தால் (அதனை) தீர்கமாத விசாரித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் அறியாமையின் காரணமாக ஒரு சமூகத்தை பாதிக்கும் முடிவுகளுக்கு வந்துவிடக் கூடும். அப்போது நீங்கள் செய்ததை நினைத்து கைசேதப் படுவீர்கள்.” (49-06)

நபி (ஸல்) அவர்கள் “ஒருவன் தனது காதுக்கு கிட்டும் தகவல்கள் அனைத்தையும் எடுத்துக் கூறுவது (அவற்றை ஊர்ஜிதப்படுத்தாமல் வெளியிடுவது) அவன் பொய்யன் என்பதற்கு அதுவே போதுமானதாகும்” என்றார்கள். (முஸ்லிம்) 

மேற்குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் ஓர் ஊடகவியலாளன் ஆதாரதமற்ற செய்திகள் வதந்திகள் சமுதாயத்தில் உலாவரும் போது அவற்றை நன்கு ஆராய்ந்து உண்மைகளை துல்லியமாக கண்டறிந்து அவற்றை மாத்திரமே வெளியிடவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

3. இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

பத்திரிகைச் சுதந்திரம் அல்லது தகவல் அறியும் தந்திரம் என்ற போர்வையில் தனி நபர்களின் இரகசியங்களை பகிரங்கப்படுத்தும் அரட்டைச் சந்தைகளாக ஊடகங்கள் தொழிற்படலாகாது. இஸ்லாம் பிற மனிதர்களது  மானத்தை களங்கப்படுத்துவதை அந்தரக்கத்தை வெளிப்படுத்துவதை கடுமையான குற்றமாகப் பார்க்கிறது. 

“யார் ஒருவர் தன் சகோதரனின் குறையை (குற்றத்தை) மறைக்கிறாரோ அல்லாஹ் மறுமையில் அவரது குறையை மறைப்பான்.” (இப்னுமாஜா)

4. நீதமான செய்தி

தற்காலத்தில் ஊடகங்கள் வாயிலாக பெரும்பாலும் பக்கச் சார்பான செய்திகளே வெளியிடப்படுகின்றன. தமக்கு வேண்டியவர்களின் செய்திகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதும் அவர்களின் தவறுகளைக் குறைத்துக் காட்டுவதும் போன்ற நீதமற்ற நடைமுறைகள் தான் ஊடகத் துறையில் கடைப் பிடிக்கப்படுகின்றன. இஸ்லாம் இப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. 

“உங்களுக்கு ஒரு சமுதாயத்தில் இருக்கும் பகையானது நீங்கள் நீதியாக நடந்து கொள்வதற்கு ஒரு போதும் தடையாக இருக்க வேண்டாம். நீதியாக நடவுங்கள். அப்படி நடப்பது இறைபக்திக்கு மிக நெருக்கமானதாகும்.” (05-08)
5. ஞானமும் சமயோசிதமும்

சில தகவல்களை உடனுக்குடன் வெளியிடுவது மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டுபண்ணும் என்றிருந்தால் அவற்றை மறைப்பது அவசியமாகும். ஏனெனில் நாம் தகவல்களை பரிமாறும் போதும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் போதும் அறிவு மற்றும் உளவியல் அணுகுமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும். 

“நபியே! நீர் உமது இரட்சகனின் பாதையின் பால் (ஹிக்மா) அறிவு ஞானத்தை பிரயோகித்தும் அழகிய உபதேசங்களை கொண்டும் அழைப்பு விடுப்பீராக” (16-125)இங்கு குறிப்பிடப் படும் ஹிக்மா என்ற சொல் அவர்களது சூழல் அறிவுப் பின்னணி போன்ற விரிந்த கருத்துக்களை தருகிறது.

06. மானக்கேடான தகவல்களைப் பரப்புவதை தவிர்ந்து கொள்ளல்

சமூகத்தில் இடம்பெறும் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் குற்றச் செயல்கள் தாறுமாறாக அம்பலப்படுத்தப்படும் போது குற்றச் செயல்கள் புரியும் விதம் அவற்றிலிருந்து தப்பும் வழிகள் பற்றி அறிவதற்கும் குற்றச் செயல்களில் ஈடுபடவும் வழி பிறக்கின்றது. எனவே மனிதர்களது கற்பொழுக்கம் தொடர்பான செய்திகளை மிகவும் கவனமாக ஊடகவியலாளர்கள் சமூகத்தில் முன்வைக்க வேண்டும்.

“விசுவாசிகளுக்கு மத்தில் மானக்கேடான செயல்களை பரவவேண்டுமென யார் விரும்புகின்றாரோ! அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனையுண்டு.” (24-19)

07. அச்சமூட்டும் செய்திகள்

அச்சத்தையும் பதட்டத்தையும் தரும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் தேவையின்றி பரப்புவது சமூகத்தை பேராபத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது சிறுபான்மையாக இருக்கும் சூழலில் பதட்டமான செய்திகளை பரப்பிவிடுவதனால் சமூகத்தில் அமைதி குலைந்து பீதியும் அச்சமும் நிலவி இறுதியில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். 

“மேலும் பாதுகாப்பு அல்லது பீதியை ஏற்படுத்தும் செய்தி அவர்களிடம் வந்துவிட்டால் அதை அவர்கள் பரப்பிவிடுகின்றார்கள்” (4-83)

மேற்கூறப்பட்டவற்றைத் தவிர மேலும் பல ஊடகவியல் ஒழுக்கங்களை அல-குர்ஆன் அஸ்ஸூன்னா அடிப்படையில் நாம் காண முடியும். எனவேதான் இன்று ஊடக சாதனங்களால் சமூகத்தில் ஏற்படும் தீங்குகளை கட்டுப்படுத்த முடியாது சர்வதேசமே தடுமாறிக்கொண்டிருக்கும் வேளை இஸ்லாம் சிறந்த்தொரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது.


3 comments:

  1. இன்று உலகளாவிய ஊடகங்கள் தான் ஆதிக்க சக்தி எது என தீர்மானிக்கிறது. அமெரிக்கா மற்ற நாடுகளின் நிகழ்வுகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்றால், உலகளாவிய ஊடகங்கள் அமெரிக்காவில் இருந்து உலகை இயக்குவதால் தான் சாத்தியமானது.

    மனிதனின் குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், நாகரிகங்கள் எல்லாமே புற சிந்தனைகளின் கருத்துத் திணிப்புகளால் உருவாக்கப்படுகிறது. தொடர் பதிவுகளின் மூலம் உருவாக்கப்படும் புறக்கருத்து திணிப்புகளே பிறகு சுய சிந்தனைகளாகவும், சித்தாந்தங்களாகவும் உருமாற்றம் அடைகிறது.

    பொதுவாக ஒளி, ஒலி மற்றும் எழுத்து- ஊடகங்களின் தொடர் பிரச்சாரங்களின் பாதிப்புகள் காலங்கள் கடந்தும் நம் சமுக வாழ்வியலில் பலவித நேர், எதிர் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மனித சமுகத்தின் எல்லா சமுக மாற்றங்களுக்குப் பின்னாலும் ஊடகங்களின் பெரும் பங்களிப்பு இருக்கிறது. இந்த ஊடகங்கள் தனக்குள் உள்வாங்கி மென்று துப்பும் கருத்தாக்கங்கள்தான் மனித சமுகத்தை தீர்மானிக்கின்றது.

    எல்லைகள் தாண்டி, வக்கிரங்களை விதைத்து, உயிர்கள் பறித்து, நாடு பிடித்து வளங்கள் சுரண்டிய காலங்கள் எல்லாம் வரலாற்று தடயங்களாகிவிட்டது. எல்லா நாடுகளுமே அணுகுண்டினை முழுங்கி விட்டு தொட்டால் வெடித்து விடுவேன் என்ற சராசரி மிரட்டலுடன் இருக்கும் இந்த காலகட்டத்தில் உலகம் தழுவிய பெரும் போர்கள் என்பது சாத்தியம் இல்லை. எல்லை தாண்டும் பயங்கரங்கள் இல்லை, உலகை அழிக்கும் பேரழிவு ஆயுதங்களுக்கு வேலை இல்லை, இரத்தமும் இல்லை, சத்தமும் இல்லை. ஆனாலும் உலகத்தை தனதாக்கி கொள்ளும் பயங்கரவாதம் ஊடகங்களின் துணையுடன் நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை மனித இனம் சந்திக்காத பேரழிவு ஆயுதங்கள் என்றால் அது இன்றைய ஊடகங்கள் தான்.

    ஊடகத்தின் ஆக்கமும் அழிவும் எடுத்தவன் கையைப் பொறுத்து அமைகிறது. உலக ஊடகங்கள் அமெரிக்க சியோனிஷ்டுகள் கையில் இருப்பதால் 20ஆம் நூற்றாண்டும், 21ஆம் நூற்றாண்டும் அமெரிக்க- யூத சியோனிஷ்டுகளின் இரும்புப் பிடிக்குள் உள்ளது.

    இந்த நூற்றாண்டில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல்கள் எல்லாம் தீவிரவாதக் குரலாக மாற்றப்படுகிறது. முதலாளித்துவத்தின் மலக்குளியலை நாட்டின் வளர்ச்சிக்கான சந்தன குளியலின் குறியீட்டு அடையாளமாக காட்டப்படுகிறது. இவையெல்லாம் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ ஊடகங்களின் மாயக்கண்ணாடி விளையாட்டில் சாத்தியமாக்கப்படுகிறது.

    சியோனிஸம் என்பது ஒரு யூதப் பரவலாக்க இயக்கம்; உலகை யூதர்களின் நிழலில் இயக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருப்பவர்கள். இஸ்ரேல் என்று தான் கையகப்படுத்திய நிலப்பரப்புடன் நின்று விடாமல் அமெரிக்க ஐரோப்பா கண்டங்களை தங்களது ஆட்சி அதிகாரங்கள் மூலம் தன் வசமாக்கி வைத்திருக்கிறார்கள். மேலும் உலகம் முழுவதும் ஒரே ஏகாதிபத்திய யூத ஆட்சி வரவேண்டும் என்று திட்டத்துடன் பூமியின் எல்லா இடங்களிலும் அவர்களின் எல்லைகளை விரித்து வருகிறார்கள்.

    சியோனிஸம் என்பதை மிகவும் துல்லியமாக விளக்கினால் அது மனிதர்களின் எண்ண‌ங்களையும் உணர்ச்சிகளையும் குறிவைத்து செயல்படும் வேலைத் திட்டங்களை கொண்டதாகும். அது ஒருவனின் இயல்பான வாழ்க்கைக்குள் ஊடுறுவி செயல்படும்.

    மனிதனின் எண்ண‌ங்களையும், உணர்ச்சிகளையும் தனது திட்டமிட்ட கருத்தாக்க ஊடுருவல்கள் மூலம் தாக்குவதால், சுய சிந்தனைத் திறனை இழந்த மனித இனமாக மாற்ற முயற்சிகள் நடந்தவண்ணம் உள்ளது.

    ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நாடுகளை பயங்கரவாதத்தின் கோர முகமாக காட்டும் 'புஸ்'ஸின் கருத்தாக்கம் ஊடக எந்திரங்களில் செறிவூட்டப்பட்டுள்ளது - இது ஊடகத் தீவிரவாதமாகும்.

    ஊடகங்கள் காட்டும் நிகழ்வுகள் என்பது எதுவும் தானாக நடப்பது இல்லை; அது செய்திகளாக உருவாக்கப்படுகிறது. தனக்கு சாதகமான அல்லது எதிரியென தீர்மானிக்கபட்டவர்களின் அழிவுக்கான வேலைத் திட்டமாகவும் சியோனிஸ ஏகாதிபத்திய கூட்டமைப்புகள் அதை பயன்படுத்திக் கொள்கிறது.

    ReplyDelete
  2. I hope, as a responsible media, the above advice should be well learned by Jaffnamuslim.com.

    While Jaffnamuslim.com serving the Muslim community in this county, there instances I have felt that the Editorial board did not consider Islamic view before it publishing the message.

    Please take the above article as a positive advice to correct the media and walk in accordance to Islam.

    Brother Muhammed

    ReplyDelete
  3. Anver,

    நமக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் எப்படியானது?

    இஸ்லாமிய அடிப்படையிலே மனிதர்களே ஒருவருக்கொருவர் சமத்துவமில்லாதவர்கள்.

    ஆம், பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல; முஸ்லிமல்லாதோர்கள் கூட தங்களுக்குள் அனைவரும் சமமானவர்கள் இல்லை. புத்தகத்தின் மக்கள் (யூதர்கள் & கிறிஸ்துவர்கள்) முஸ்லிம்களோடு அடங்கி இருந்து, பாதுகாப்பு வரியை (ஜிஸ்யா) செலுத்தினால், இரண்டாம் தர குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இஸ்லாமிய நாடுகளில் வாழ அனுமதிக்கப் படுவார்கள்.

    ஆனால், இயற்கையை வழிபடுபவர்கள், சிலையை வழிபடுபவர்கள், நாஸ்திகர்கள் போன்றோர் முழு மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். குர் ஆனின் கட்டளையின்படி சிலை வழிபடுபவர்கள் கண்ட இடங்களில் கொல்லப்படவேண்டியவர்களாவர். (குர்ஆன் 9:5)

    அடிப்படையே இப்படியிருக்கும்போது எப்படி அங்கு கருத்துச் சுதந்திரம் இருக்க முடியும்?

    ஒரே ஒரு வரியை அடைப்புக்குறிகளோடு இடுவதால் மட்டும் இன்றைய உலக வாழ்க்கை முறையினை மிஞ்சிய கருத்துச் சுதந்திரத்தை வழங்கியதாக நிறுவமுடியுமா என்ன?

    இன்னுமொரு அத்தியாயத்திலே மேலுள்ள வரிக்கு முற்றிலும் விரோதமான வரிகள் காணப்படும்.

    நம்மைப்பொறுத்தவரையிலே இறைவனின் கட்டளைகளுக்கு கேள்வியில்லாமல் கீழ்படிதல் வலியுறுத்தப் படுகிறது. பகுத்தறிவு என்பது தவறான தர்க்கம் என்று புறந்தள்ளப் படுகிறது.

    இதுவரையில் தோன்றிய மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞராக அறியப்படும் Abu Hamid Al- Ghazali, (A.D. 1058 – 1111), தனது 'தத்துவ ஞானிகளின் முரண்கள்' (Incoherence of the Philosophers) என்ற நூலில் அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ, சாக்ரடீஸ் மற்றும் பல கிரேக்க சிந்தனையாளர்களை பின்பற்றும் முஸ்லிம்களை இஸ்லாமை களங்கப் படுத்துபவர்கள் என்றும் கடுமையாக தாக்கினார்.

    அவர் பண்டைய கிரேக்க அறிஞர்களை பின்பற்றிய அவிசென்னா என்பவரை பகுத்தறிவுவாதியாக இருப்பதற்காக தாக்கினார்.

    'நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் உறவிருக்க முடியாது' என்று வலியுறித்தியதன் மூலம், அறிவற்ற நம்பிக்கைக்கு மதிப்பையும் முட்டாள்தனத்திற்கு பெருமையையும் கொடுத்தார்.

    இந்த லட்சணத்தில் கருத்துச் சுதந்திரத்தை எப்படி ஆதரிப்பதாக எழுதுகின்றீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை Anver.

    தயவு செய்து நீங்கள் கூறும் எல்லாவற்றையும் நம்பிவிடுவோம் என்று நினைத்து எல்லோரையும் தவறாக வழிநடாத்த வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.