அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் - முஸ்லிம்கள் கூடி ஆராய வேண்டும்
(மஸிஹுத்தீன் இனமுல்லாஹ்)
அரசியலமைப்பின் மீதான 13 ஆவது திருத்தச் சட்ட மூலமும் அதனடியாக மேகொள்ளப்பட்ட மாகாண அலகுகளுக்கான அதிகாரப் பரவலாக்கமும் : முஸ்லிம்களின் அடைவுகளும் பின்னடைவுகளும், இருந்தவற்றையெல்லாம் இழந்த பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் ஏன் இன்று தென்னிலங்கையிலும் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலையில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.. ?
"மேலெழுந்தவாரியாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் தென்னிலங்கை கைவைக்கக் கூடாது " என்ற நிலைப்பாட்டை எடுப்பது சுலபமாக இருந்தாலும் பல்வேறு கோணனங்களில் இந்த விவகாரம் ஆய்வுக்கு உற்படுத்தப் படல் வேண்டும்.
முதலாவதாக இலங்கையின் உள்விவகாரமாக மாத்திரம் எண்பதுகளின் ஆரம்பம் வரை இருந்த இனப்பிரச்சினை 1987 ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டுடன் மொத்த தேசத்தினதும் வெளிவிவகாரத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற பிரதான காரணியாக மாறியுள்ளது.
குறிப்பாக போருக்குப் பின்னரான இலங்கையில் தேசிய பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் போட்டா போட்டிகளின் மையக்கருவாக மாறிவிட்ட இந்த விவகாரத்தை உள்நாட்டு அரசியலுடன் மட்டுப் படுத்தி பார்ப்பதனை விட முதற்படியாக வெளிநாட்டு இராஜ தந்திர நெருக்கடியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இந்திய நலன்களை பிராந்தியத்தில் பேணுகின்ற இந்திய இலங்கை உடன்பாட்டிலிருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை வேறு படுத்திக் கையாள்வது எவ்வாறு கடினமானதோ அவ்வாறே 13 ஐயும் மாகாண சபை முறையையும் இந்தியாவையும் நிராகரித்து மேலை நாடுகளில் அபயம் தேடிய தமிழ் தேசியம் வரவளைத்துள்ள சர்வதேச சமூகத்தின் தலையீடுகளை நெருக்குதல்களை புறந்தள்ளியும் இந்த விவகாரத்தை முடியாதுள்ளது.
மேலே சொன்ன இரண்டு தரப்பினரையும் தவிர தென்னிலங்கை அரசியல் மற்றும் தமிழ் தேசிய அரசியல் இவை இரண்டுடனுமான கடந்த கால அனுபவங்களை கரிசனைக்கு எடுத்தே முஸ்லிம்களது நிலைப்பாட்டை முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்று பட்டு எடுக்க வேண்டும்.!
விரிவாக எதனையும் கூறாது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற பிரேரணைகளை முன்மொழிந்த அமெரிக்கா இஸரேல் நோர்வே போன்ற நாடுகளும் அதற்கு ஆதரவளித்த இந்தியாவும் தத்தமது நலன்களை பேசித் தீர்த்துக் கொண்டு கிட்டிய எதிர்காலத்தில் இலங்கை விவகாரத்தில் தலையிட இந்த ௧௩ ஐ அறிய வாய்ப்பாக பயன் படுத்திக் கொள்வார்கள் என்று மட்டும் ஊகிக்கலாம்.
பிரதான தரப்புக்களான இந்தியாவும், நோர்வேயும், தமிழ்த் தேசியமும், இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியும் ஆரவாரமில்லாது திரை மறைவில் காய் நகர்த்துகின்ற பொழுது நிதானமிழந்து குறுகிய அரசியல் இலக்குகளுடன் கொக்கரிப்பது முஸ்லிம்களை இந்த விவகாரத்தில் பலிக்கடாவாக்க எடுக்கப் படும் முயற்சிகளுக்கே துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை.!

Post a Comment