Header Ads



முஸ்லிம்களின் கருத்துச் சுதந்திரம் ஆபத்தை நோக்கி..!

(எம்.எஸ்.எம்.சஹாப்தீன்)

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு மாநகர சபையின் பழரதி மேயர் ஆஸாத்சாலி கைது செய்யப்பட்டுள்ளார். இனவாதத்தைத் தூண்டினார். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார், இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல், முரண்பாட்டை தோற்றுவித்தல் போன்ற செயற்பாடுகளில் அஸாத்சாலி ஈடுபடுவதாக சி. ஐ. டிக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்ட்டுள்ளதாக அரசாங்கம் காரணம் கற்பித்தது. ஆயினும், ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் 10.05.2013 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு விடுவிக்கப்பட்டார். தற்போது, ஆஸாத்சாலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸாத்சாலி அரசியல் ரீதியாக பெரும் செல்வாக்குப் பெற்றவரல்ல. அத்தோடு, கொள்கைவாதியாகவும் அவர் இருக்கவில்லை. ஐ.தே.க மூலமாக அரசியலுக்கு நுளைந்த ஆஸாத்சாலி, ஐ.தே.கவின் தலைமைத்துவத்தோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தார். ஐ.ம.சு.முன்னணியின் சார்பில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆயினும், ஐ.ம.சு.முவோடு முரண்பட்டுக் கொண்டு கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.காவுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆதலால், ஆஸாத்சாலி கொள்கைப்பற்று அற்றவராகவும், தமது அரசியல் தேவைக்காக அணிகளை மாற்றி மாற்றிக் கொண்ட ஒருவராகவும் இருக்கின்றார்.

ஆயினும், முஸ்லிம்கள் மீது அண்மைக் காலமாக பொது பல சேன அமைப்பு மேற் கொண்ட கண் மூடித்தனமான குற்றச்சாட்டுக்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் போன்றவைகளுக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்தார். இதனால், அரசியலில் கொள்கைப்பற்று இல்லாத ஆஸாத்சாலிக்கு முஸ்லிம்கள் மத்தியில் மதிப்பும், மரியாதைமயும் ஏற்பட்டன. அதே வேளை, ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது கோபமும், எரிச்சலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டன.

இவ்வாறான ஒரு சூழ் நிலையில்தான் ஆஸாத்சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவரின் கைது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒன்றாகுமென்று மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இவரின் கைது பற்றி எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஆளுந் தரப்பு உறுப்பினர்கள் சிலரும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்கள். சர்தேச அமைப்புக்களும், நாடுகளும் ஆஸாத்சாலியின் கைது பற்றி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.

ஆஸாத்சாலி அரசியல் ரீதியாக அதிகாரங்களைக் கொண்டவராகவோ, அரசியல் சக்தியைக் கொண்ட கட்சி ஒன்றின் பின்னணியைக் கொண்டவராகவோ இருக்கவில்லை. அரசியல் அதிகாரங்கள் அற்றவராகவும், தனிநபராகவும் இருந்து கொண்டே முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தார். அவரின் கருத்துக்கள் பாரதூரமானதாக இருக்கலாம். ஆனால், அவரின் பின்னால் பயங்கரவாத சக்திகள் இருப்பதாக தெரியவில்லை.

முஸ்லிம்களுக்கு இன்று நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அவைகளைப் பற்றி பேசுவதற்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் எவருமில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இதே நிலையே காணப்படுகின்றன. இதனால், தங்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு அரசியல் தலைமைத்துவம் ஒன்று தேவை என்ற ஏக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

தங்களை மதரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிங்களப் பேரினவாதிகளும், தமிழ்ப் பேரினவாதிகளும் நசுக்கிக் கொண்டிருக்கின்றார்கள் அவைகளைப் பற்றி முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேசாது இருக்கின்றார்கள். அவர்கள் பதவிகளுக்காக சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற யதார்த்தத்தை முஸ்லிம்கள் மிகவும் தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தார்கள். ஆயினும், தாங்கள் சார்ந்து நிற்கும் கட்சியையும், அரசியல் தலைவரையும் விட்டுக் கொடுக்காது போற்றிப் புகழ்ந்து கொண்டும் இருந்தார்கள். ஆனாலும், தங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒருவர் தேவை என்பதிலும் உறுதியாகவே இருந்தார்கள். முஸ்லிம்களின் இந்த தேடலுக்கு விடையாகவே ஆஸாத்சாலி திகழ்ந்தார்.

மக்களிடம் இந்தச் சிந்தனைகள் இருக்கின்ற சூழலில் ஆஸாத்சாலி முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி குரல் கொடுத்தார். இது முஸ்லிம்களுக்கு தாங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருந்த குரல் கிடைத்து விட்டதென்ற உணர்வினை ஏற்படுத்தியது. ஆஸாத்சாலி இன்று என்ன சொல்லியுள்ளார் என்று நாளாந்தம் மக்கள் எதிர் பார்க்கும் அளவிற்கு அவர் முஸ்லிம்களை தமது பக்கத்திற்கு திசை திருப்பி இருந்தார்.

இவ்வாறு, முஸ்லிம்கள் மத்தியில் ஆஸாத்சாலிக்கு ஏற்பட்ட மதிப்பும், மரியாதையும் அவரினால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுமல்ல. தற்செயலாக ஏற்பட்ட ஒன்றாகும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாணம் முழுவதும் ஆஸாத்சாலி பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். முஸ்லிம் எதிர்ப்பாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் எதிராகவும் அவர் முன் வைத்த கருத்துக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.காவிற்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தது. 

முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி குரல் கொடுத்ததன் மூலமாக கொழும்பிலும், அதற்கு வெளியிலும் தனக்கு கிடைத்துள்ள மதிப்பையும், மரியாதையும் நிரந்தரமாக்கிக் கொள்வதற்காக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு மேலும் காட்டசாட்டமான முறையில் கருத்துக்களை விலாசிக் கொண்டிருந்தார். அத்தோடு, மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியை தூசி தட்டி புத்துயிர் கொடுப்பதற்காக அக்கட்சியை தனதாக்கிக் கொண்டு, அதன் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார்.

ஆஸாத்சாலி தேசிய ஐக்கிய முன்னணியை தெரிவு செய்தமைக்கான காரணம், இன்றைய முஸ்லிம் அரசியல் தலைவர்களில் பலர் அஸ்ரப்; என்ற குதிரையிலேயே பயணம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வழி முறையையே ஆஸாத்சாலியும் பின்பற்ற எண்ணினார். அதன் காரணமாகவே தேசிய ஐக்கிய முன்னணியை கைப்பற்றிக் கொண்டார்.

இவ்வாறானதொரு பாதையில் பயணம் செய்து தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு ஆஸாத்சாலி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பது அரசாங்கத்திற்கு தெரியாத ஒன்றாக இருக்க முடியாது. ஏனெனில், இலங்கையின் புலனாய்வுப் பிரிவு விவேகத்துடனும், திறமையுடனும் செயற்படும் ஒன்றாகும் என்பது உலகறிந்ததாகும். ஆதலால், அவரின் கைது அரசியல் ரீதியானதாக இருப்பதாகவே கருதப்படுகின்றன. அரசியல் ரீதியான பழிவாங்கல் ஒன்றுக்காகவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதாகவே பலரினதும் அபிப்ராயமாகும்.

பயங்கரவாதத்தையோ அல்லது இனங்களுக்கிடையில் முரண்பாட்டையோ தூண்படுவதற்காக அரசாங்கம் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் அந்தப் பட்டியலில் ஆஸாத் சாலியை விடவும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். வெள்ளிக் கிழமை ஜூம்ஆத் தொழுகையை நடத்தவிடாது தம்புள்ளை பள்ளிவாசலை தாக்கியவர்கள் இன்றும் கௌரவாக சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களிடையே இனவாதத்தை பகிரங்கமாக தூண்டிவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரென்பதனை பட்டியல் போட்டுக் காட்ட வேண்டிய தேவையில்லை. அவர்கள் பற்றிய முழுத் தகவலும் பொலிஸாருக்கும், புலனாய்வுப் பிரிவுக்கும் தெரியும். ஆயினும், அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களைப் பற்றி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்  பாராளுமன்றதிதில எடுத்துக் கூறியும் கைது செய்யப்படவில்லை.

எனவே, இலங்கையின் அரசியல் நிலவரங்கள் சிறுபான்மையினருக்கு பாதகமாகவும், பெரும்பான்மையனருக்கு சாதகமாகவும் ஓடிக் கொண்டிருக்கின்றன. சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரம் முதல் வாழும் உரிமையும் ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. 

தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறி இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாசாரம், மனித உரிமை போன்ற எல்லாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டை சீரழித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் அமைதியுடன் சிறுபான்மையினர் வாழலாமென்று கனவு கண்ட போதிலும், சிறபான்மையினருக்கு எதிரான நடவடிக்ககைகள் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றன. தற்போது தமிழர்களை விடவும், முஸ்லிம்களை குறி வைத்துக் கொண்டே சிங்கள பௌத்த பேரினவாதம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படல் வேண்டும். ஒற்றுமைப்பட்டு தங்களின் அரசியல் அபிலாசைகளை அரசாங்கத்திற்கும், பேரினவாதிகளுக்கும் தெளிவுபடுத்தல் வேண்டும். அவர்களை அதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தங்களுக்கு நீதி வேண்டி உறுதியுடன் தமிழர்களும், முஸ்லிம்களும் உழைக்க வேண்டும்.


5 comments:

  1. இது ஒரு நல்ல கட்டுரை எழுதிய வருக்கு நன்றி இதை றிஷாத் அவர்கட்கு அனுப்பவும் அவர்தான் சிவப்பு சால்வையோடு சேர்ந்த தமிழ் முஸ்லிம் உறவை சீர் குலைப்பவர் அசாத் சாலி கூறுவது போன்று தமிழ் முஸ்லிம் இனைந்து சிறு பான்மை உரிமைக்காக ஜனநாயக வழியில் போராட வேண்டும் அதே வேளை முஜீபுர்ரஹ்மான் அவர்களையும் சமூகம் மறக்கக் கூடாது அவரும் முஸ்லிம்கள் சார்பாக குரல் கொடுப்பவர் நன்றி

    ReplyDelete
  2. ஆசாத்சாலி. சிங்கள மொழி ஞானமுள்ளவர்,தற்போதய அரசாங்கத்திலிப்பவர்களில் முக்கியஸ்தர்களின் பழைய நண்பர்.அரசாங்கத்தின்செல்லப்பிள்ளைகளான சில முஸ்லிம்?அரசியல்வாதிகளின்(பச்சோந்திகளின் அவ்லியாப்பக்த்ர்களின் )அணியைச்சேர்ந்தவர்.தலை நகரத்துச்செருக்கு. பண பலம்,பதவியை அடைய எடுக்கும் முயற்சிகள்,தற்போது பதவியிலிருக்கும் முஸ்லிம் தலைமைகளின் கையாகாலாகத்னம்,சூடு சொறணையற்றதனம்,அதை தனக்கு சாதமாக பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தில் ஒரு நிலையான இடத்தைப்பிடித்துக்கொள்ளும் இவரின் தி ட்டம் ,இன்னும் இன்னும் இத்தியாதிகாரணங்களே ஆசாத் சாலியவர்களை இவ்விதம் பேசவைத்தது எனக்கூறுவது மிகப்பொருந்தும் என நினைக்கிறேன்.எனினும் ஆசாத் சாலியின் முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த தியாகத்தினை குறைத்து எடை போடக்கூடாது,இவரே முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய பிரதான இதய ஆறுதல்.என்றாலும் இவர் தனது பேச்சிலேயுள்ள வேகத்தைக்குறைத்து விவேகத்தை முன்னெடுக்கெ வேண்டியது அவசியமாகும்.முஸ்லிம்களை ஆயுதங்களோடு தொடர்பு படுத்தி கடல் கடந்து கருத்து வெளியிட்டது,முஸ்லிம்களை வில்லங்கத்தில் மாட்டி விடும் வில்லத்தனத்தை மட்டுமல்ல, இவருக்கு அரசியல் முதிர்ச்சி இன்னும் ஏற்படவில்லை என்பதைத்தெளிவு படுத்துகிறது.மேலும் இவரின் தற்போதய அரசியல்பின்னணி யதார்த்தம் அற்றது.


    Reply • Like

    • Follow Post

    ReplyDelete
  3. கட்டுரையாளர் நண்பர் சஹாப்தீன் அவர்களின் இந்தப்பணி(ஊடகப்பணி) மேலும் சிறப்புடன் அமைய பிரார்த்திக்கின்றேன்.(அஷ்ரப் ஹாபிஸ் -யு,ஏ.இ

    ReplyDelete
  4. எம்மவர்கள் நன்றி மறந்தவர்கள் எவ்வளவு காலத்துக்கு ஆசாத் சாலியை நினைவில் வைத்திருக்க போகின்றார்கள் ????????

    ReplyDelete
  5. All Ceylon's Muslims must be followup Honorable Azath Salley. Insha Allah We can get a Grate Leader in the future.

    ReplyDelete

Powered by Blogger.