இலங்கை முஸ்லிம்கள் பண்பாட்டு போராட்டத்திற்கு தயாரா..?
(சாதிகீன் அப்துல் கபூர்
இஸ்லாமிய பல்கலைக் கழகம் - மதீனா)
இலங்கைத் தாயின் மடியில் பிறந்து வளர்ந்த சொந்தக் குழந்தைகளான இலங்கை முஸ்லிம்கள் மீதான அண்மைக் கால நிகழ்வுகளை நோக்குமிடத்து பல்வேறு வேண்டப்படாத நிகழ்வுகள் அரங்கேற்றப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. இது இனவாதம் எனும் பெயரில் தொடங்கி ஒரு சமூகத்தை வேரறுக்கும் முயற்சியா? எனும் சந்தேக வினா எழுந்துள்ள இன்றைய சூழலில் தொடர் பாதிப்புக்களை எதிர் நோக்கி வரும் முஸ்லிம் சமூகம் அனுதாபத்துக்குரியது என்பதனை யாரும் மறுக்க முடியாது.
எனினும், 'சிறுபான்மைச் சமூகம்' எனும் அடை மொழியோடு அடையாளப்படுத்தப்பட்ட இச் சமூகம் திடீர் முடிவுகள், போராட்ட உணர்வுகள் என்பவற்றை அவசரப் பட்டு முன்னெடுக்க முடியாது என்பதும் தெளிவான விடயம். இந்நிலையில், ஆயுத ரீதியான போராட்டத்தை முன்னெடுக்க முடியாவிடினும் பண்பாட்டு ரீதியான போராட்ட யுக்திகளை வடிவமைத்து அவற்றுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் மூலம் எதிரிகளைக் கூட தம்பக்கம் அழைக்க முடியும்.
வரலாற்று ஓட்டத்தில் இஸ்லாமும் முஸ்லிம்களும் எவ்வளவு எதிர்ப்புக்களை தாண்டி வந்தார்களோ அதைவிட அதிகமான அளவு பண்பாட்டு விழுமியங்களை இந்த உலகிற்கு விட்டுச் சென்றார்கள். தூய இஸ்லாத்தை மண் மீது சுமந்து வந்த மகத்தான தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வல்லவன் அல்லாஹ் மாமறையில் துதிபாடுகின்ற போது அவரது அழகைவிட அந்தஸ்தை விடஇ வீரத்தை விட பண்பாட்டை முன்நிறுத்தியே துதிக்கின்றான்.
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (68:4)
எனப்புகழும் இறைவன் தனியொரு நபராக இருந்து மிகப்பெரும் கூட்டத்தை ஒன்றிணைக்கும் இவ்வாற்றல் இறை அருளினால் நீர் பெற்ற பண்பாட்டினூடாகவே முடிந்தது எனவும் கூறுகின்றான்.
இதுமட்டுமன்றி, இஸ்லாமிய வரலாற்றை வாசிக்கும் எவறும் அண்ணலாரினதும் அவரது பாசறையில் வளர்ந்த தோழர்களினதும் பண்பாட்டு வளர்ச்சியானது எதிர்ப்புகளைத் தாண்டி எவ்வளவு தூரம் தூய இஸ்லாம் வளர வழிகோலியிருக்கின்றது என்பதனை உணர்ந்து கொள்வர். யுத்தகளம் தொடங்கி கடைத்தெரு வரைக்கும் இஸ்லாமியப் பண்பாட்டு விழுமியங்கள் விரிந்து கிடப்பதை அவதானிக்க முடிகின்றது. தன்மேல் தினமும் குப்பை கொட்டும் மூதாட்டி நோயுற்ற போது அவளை நோய் விசாரிக்கச் சென்றதிலிருந்து இரத்தம் சிந்தாமல் மக்கத்து மண்ணை வெற்றிகொண்ட பின் பொது மன்னிப்பு வழங்கியது வரைக்கும் இஸ்லாம் குறித்து இதயங்களிலிருந்த அழுக்கை பண்பாடு எனும் சவர்க்காரம் இட்டு அண்ணலார் தூய்மையாக்கினார்கள் என்பது வரலாறு சொல்லும் மிகப்பெரும் சான்றாகும்.
முஸ்லிம் என்பவன் தாக்கப்படலாம், துன்புறுத்தப்படலாம், துயரங்களை எதிர் நோக்கலாம். ஆனால் எந் நிலையிலும் அவனது பண்பாட்டை மட்டும் இழந்து விடக் கூடாது என்பது இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும். இதனால்தான் யுத்தங்களுக்கு அனுப்பும் போது கூட, மரங்களை வெட்டாதீர்கள். பெண்கள், சிறுவர்கள் போன்றோரைத் துன்புறுத்தாதீர்கள். நேருக்கு நேர் களத்தில் சந்திக்காத எவரையும் அநியாயமாகக் கொன்று விடாதீர்கள் என்றெல்லாம் இஸ்லாம் அறிவுரை வழங்குவதைப் பார்க்கின்றோம்.
ஏனெனில், ஒரு முஸ்லிமின் எதிர்பார்ப்பு இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் நாம் இந்த மண்ணைப் பிரிந்து மறுமையை சந்திக்கப் போகின்றோம். அன்று, வெற்றியடையும் கூட்டத்தில் நானும் எனது நண்பனும் இருக்க வேண்டும். இது தான் ஒரு முஸ்லிமின் கனவு. சுவனம், அங்கு உலக மக்கள் எல்லோரும் செல்ல வேண்டும் என்பதே ஒரு முஸ்லிமின் இலக்கு.
எனவேதான் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுவதை விட்டும் பண்பாட்டு எழுச்சியை நோக்கி ஒரு முஸ்லிம் அழைக்கப்படுகிறான். இந்தக் கருப்பொருளை மையமாக வைத்து தான் எமது தேசியத்தின் இன்றைய நிலையை நோக்க வேண்டியுள்ளது. எமது நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையின் போக்கினைப் பார்க்கின்ற பொழுது இதற்கான தீர்வினை வெறுமனே அதிகார வர்க்கத்திடமோ அல்லது சமூக நிறுவனங்களிடமோ மட்டும் ஒப்படைத்து விட முடியாது. முஸ்லிம் என்று தன்னை அறிமுகப்படுத்தும் அனைவருக்கும் இதன் மீதான பொறுப்பு உள்ளதனையே அவதானிக்க முடிகின்றது. அதாவது, தனிநபர் பண்பாட்டியல் விருத்தியினூடான மாற்றத்தை வேண்டி நிற்பதனையே காண முடிகின்றது.
ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை சோதனை வருகின்ற பொழுது இயல்பிலேயே இறைவனை நோக்கி மீளும் பண்புள்ளவனாகவே இருக்கின்றான். எனவேதான் இன்று இஸ்லாத்தை எதிர்க்கும் கூட்டம் முதல்கட்ட தோல்வியை சந்திக்க வேண்டுமாக இருந்தால் ஒவ்வொரு தனிமனிதனும் இஸ்லாமிய வரையறைகளை அணுவணுவாகப் பின்பற்ற முன்வர வேண்டும். இந்த உள ரீதியான மாற்றம் வாழ்வில் மிகப் பெரும் பண்பாட்டியல் தாக்கத்தினை உண்டு பண்ணும். அடுத்து தனது வியாபாரம், தொழில், குடும்பம், பேச்சு, மூச்சு அனைத்திலும் தான் ஒரு முஸ்லிம் எனும் உணர்வு பரந்தோட வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அல்லாத எமது சகோதரர்கள் எமது பண்பாட்டினூடே இஸ்லாத்தை உணர வேண்டும். இஸ்லாம் என்பது வெறும் சட்டக் கோவையல்ல. அதுவொரு வாழ்க்கைத் திட்டம் எனும் உணர்வு பண்பாடுகளால் வடிவமைக்கப்பட வேண்டும்.
எமது எழுத்துக்கள், ஊடகப் பயன்பாடுகளில் கூட இந்தப் பண்பாடு இழையோட வேண்டும். இன்று இணையத்தளங்கள், முக நூல், டுவைட்டர் போன்ற சமூக வளைத்தளங்களைப் பயன்படுத்தும் முஸ்லிம் சகோதரர்கள் மாற்றுமதத்தவர்களின் வணக்க முறைகளையும் அவர்களது கடவுளர்களையும் மிகக் கீழ்த் தரமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு விமர்சிப்பதைப் பார்க்கின்றோம்.
இது அல்குர்ஆனுக்கும், இஸ்லாமிய பண்பாட்டுக்கும் எதிரான செயற்பாடாகும் 'அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள் (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல் வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்'( 6:108) என்கிறது அல்குர்ஆன்.
அறியாமைச் சமூகம் தன்னை எதிர்த்த போது கூட பண்பாடு எனும் அழகிய வழிமுறையால் அணைத்தெடுத்த முன்மாதிரி மிக்க இந்த மார்க்கம் அறிவோடு துள்ளும் இவர்களை ஆட்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அன்றிருந்த பண்பாட்டியல் வளர்ச்சி இன்றும் வேண்டும். அமானிதம் பேணல், விருந்தோம்பல், நலம் விசாரிக்கச் செல்லல், அழைப்புக்குப் பதிலளித்தல் எனத் தொடங்கி கால சூழல் தனிநபர் வேறுபாடுகளுக்கு ஏற்ப எமது மாற்றுமதத்தவர்களை பண்பாட்டால் அணுகும் போது மீண்டும் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கிய மக்களின் பயணத்தை காண முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
இதற்கென சமூக அமைப்புக்கள் தொடங்கி தனி நபர்கள் வரைக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து செயற்படவேண்டும். குறிப்பாக, மாற்றுமதத்தவர்களோடு நண்பர்களாக, சகோதரர்களாக, பங்காளிகளாக பழகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை மிக நிதானமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த இடத்தில்தான் எமது கல்வியியல் சமூகம் குறித்து கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகள், தொழிநுட்பக் கல்லூரிகள் என விரிந்து செல்லும் கல்விப்பரப்பில் இருக்கின்ற முஸ்லிம் சகோதர சகோதரிகள் மாற்றுமத நண்பர்களோடு மிகவும் ஈடுபாட்டோடும் சகோதர வாஞ்சையோடும் பழகுவதனை அவதானிக்கின்றோம். இந்நிலையினை எமக்கு சாதகமானதாகப் பயன்படுத்த முன்வர வேண்டும். பண்பாட்டு வளர்ச்சி என்பதும் மார்க்க அழைப்புப் பணி என்பதும் மேடைகளிலும் மௌலவிமார்களாலும்தான் செய்யப்பட வேண்டியவை எனும் சிந்தனையை மாற்றியமைத்து ஒவ்வொரு முஸ்லிம் தனிநபரும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், மேற்சொன்ன கல்விப்பரப்பில் உலாவரும் பலர் இஸ்லாம் குறித்த தெளிவற்றிருப்பதும் சிலர் அன்னிய சகோதரர்களை விட பண்பாட்டில் வீழ்ச்சி மிக்கவர்களாக காணப்படுவதும் மிகவும் கவலைக்குறிய விடயமாகும். எனவே, மேற்குறித்த சமூகத்தை வழிப்படுத்துவதில் தஃவா அமைப்புக்களும் சமூக நிறுவனங்களும் முழுமையான அர்ப்பணிப்பினை மேற்கொள்ள வேண்டும். அப்போது அங்கிருந்து சமூகப்பண்பாட்டுச் சூரியன் முழு நாட்டையும் மட்டுமன்றி முழு உலகையும் மூடிக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் அன்று அல்லாஹ்வுக்காய் உதிரத்தை கொடுத்து வளர்த்த இஸ்லாமிய விருட்சத்தை பாதுகாக்க இன்றைய சமூகம் தமது உணர்வுகள் ஆசைகள், மோகங்கள் இவற்றையேனும் விட்டுக்கொடுக்குமா என்பதே என்முன்னுள்ள வினாவாகும்...??

insha allah
ReplyDelete