Header Ads



சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சிந்தும் வியர்வை மிகப் பெறுமதியானது..!

(அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்)

மே மாதம் பிறந்துவிட்டால் அங்கே தொழிலாளர்களை வைத்து விழாக் கொண்டாடுவதும், அவர்களை அரசியல் வாதிகள் தெய்வமாக மதிப்பதும் தற்காலத்தில் கைவந்த கலையாக உள்ளது. உண்மையில் இந்த மேதினமானது தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கான ஒரு தினமாகவும், அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதிலிருந்து பொருள்மேன்மைத்துவ வாதிகளிடமிருந்து தன்னை விடுவித்து, உண்மையான உழைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட ஒரு போராட்டத்தின் வெற்றித் தினமாகவும் தொழிலாளர்களால் கொண்டாடப்படுதல் வேண்டும் என்பதை உலகுக்குப் பறைசாற்றவேண்டி தினமாகவே இத்தினம் காணப்படுகின்றது. இவ்வாறாகப்பட்ட இத்தினத்தை பல அரசியல் கட்சிகளும், ஆளும் கட்சிக்காரர்களும் தங்களுடைய பலத்தைக் காண்பிப்பதற்காகவும், தங்களுடைய பக்கம் முழுத் தொழிலாளர்களும் அணிவகுத்துள்ளனர் என்பதைக் காண்பிக்கவும் போட்டி போட்டுக் கொண்டு மே தினத்தைக் கொண்டாடுவதும் ஒருவகையில் தொழிலாளர்களின் வியர்வையை அனைவரும் மதிக்கின்றனர் என்றும் கருதலாம்.

இவ்வாறாக கொண்டாடப்படும் மேதினத்தின் ஆரம்பகால வரலாறுகளைப் பார்க்கின்றபோது ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த காலத்திலிருந்தே கொண்டாடி வந்துள்ளனர். அதுமட்டுமா? ரோமானியர்கள் பிரித்தானியாவுக்குள் குடியேறிவேளையில் மேதினத்தை கொண்டாடியதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் நாம் தற்போது கொண்டாடப்படுகின்ற மேதினம் 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் எட்டுமணியாகக் குறைக்கப்படவேண்டும் என போராட்டம் நடாத்துவதற்காக ஹெயிமார்க்கட் என்கிற இடத்தில் நடாத்திய ஒன்று கூடலின் நினைவாகவே இந்தப் பேராட்ட வரலாறு தொழிலாளர்களின் உரிமைப்போராட்டமாக வடிவம் கண்டது. இதன் விரிவாக்கம் உலகம் முழுவதும் வியாபித்தபோது அங்கொல்லாம் இப்போராட்டத்திற்கு பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு, தொழிலாளர்களுக்கு பலத்த உயிர்ச்சேதமும்;, பொருள் சேதம் ஏற்பட்டன. இருப்பினும் அவர்களது கோரிக்கைகள் வெற்றிக் கொள்ளப்பட்டன. அத்தினத்தை நினைவாடல் செய்யும் ஒரு தினமாகவே இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

உண்மையில் இன்றைய மேதினம் சுரண்டப்படும் வர்க்கத்தின் விடியலைநோக்கிய பயணத்தின் முடிவுறாத கட்டம் ஏகிவிடப்பட்டுள்ளதை அரசுகளுக்கும், உழைப்பைச் சுரண்டி வயிறு வளர்க்கும் மேலிடத்திற்கும் எத்திவைக்கின்;ற, செய்திகளைச் சொல்லுகின்ற ஒரு தினமாகவே பார்க்கப்படுதல் வேண்டும். அதேவேளை, சமூக எழுச்சிக்கும், பொருளாதாரத்தின் முதுகொழும்புக்கும் தன்னை உருக்கொடுத்து வியர்வை சிந்தி உழைக்கின்;ற தொழிலாளர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஆய்ந்தறிந்து நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்கின்ற ஒருதினமாகவும் மாற்றம் அடைதல்; வேண்டும். ஆனால் இது நடைமுறைச்சாத்தியப்பாடுகள் அற்ற நிலையில், தொழிற்சங்கள் தங்களது உரிமைப்போராட்டங்கள் பற்றிய பல்வேறுவிதமான நினைவாடல்களையும், மாபெரும் பேரணிகளையும் இறுதியில் அறிக்கைகளாகவும், மாபெரும் மேடைக்கூட்டங்களாகவும் நடாத்தப்பட்டு வருகின்றமை சம்பிரதாயமான ஒருவிடயாமாகும். மறுபுறம். கட்சிகளும், நாடாளும் அரசுகளும் இப்போராட்டத்தில் தம்முடைய சார்பான தொழிலாளர் சங்கங்களின் ஊடாக கட்சிகளின் பிரச்சாரங்களையும், கவர்ச்சிகளையும் காட்டி தொழிலாளர்களின் பேரால் கொண்டாடப்படுகின்ற நிலைமைகள் மாற்றம் காணவேண்டியதன் அவசியத்தையும், வியர்வை சிந்துகின்ற தொழிலாளியின் சமூகப்பெறுமானம் வெளிக்காட்டப்படுதலும் அவசியமாகும்.

நாட்டுக்காகவும், சமூதாயத்திற்காகவும் சிந்துகின்ற வியர்வைக்குரிய சரியான பெறுமானத்தை ஊதியம் வழங்குவோன் சரியான முறையில் கண்டுகொண்டானா? இவ்வாறான தொழிலாயின் இன்றைய நிலைகளைப் பற்றி ஓரளவுக்காவது ஆளும் அரசுடனும்சரி, தொழில் வழங்குநருடனும்சரி சரியான உறவைக் கட்டிக்காத்து உண்மையான ஊதியத்தைப் பெறுவதற்கு வியர்வை சிந்துகின்ற தொழிலாளி பேசுகின்றானா? இவைகள்தான் இன்றைய மேதின நினைவாடல்களில் தடம்பதிக்க வேண்டியவைகள் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. இத்தகைய நினைவு நாளில் தொழிலாளர்களின் சுயநலம் பாதுகாக்கப்படுதல் வேண்டும். எப்படிப்பட்ட தொழிலாளியாயினும் அவனது ஊதியம் சுரண்டப்படுவதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். ஆனால் அன்று தொட்டு இன்றுவரை பல்வேறு பெயர்களில் ஏதோர் வடிவத்தில் சுரண்டப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. இதனைத்தான் அன்று அதாவது 1890ஆம் ஆண்டு மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடணப்படுத்தப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரையிலும் சம்பள உயர்வுகளும், தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் சலுகைகளும் போராட்டத்தையே களவடிவமாக்கி வெற்றிகொண்ட வரலாறுகள்தான் நம்முன்னே விரிந்து கிடக்கின்றன.

மதம், நிறம், கலாசாரம், மொழி, போன்ற வர்க்கவேறுபாடின்றி தொழிலாளரது உரிமையினை பேராட்ட வடிவில் ஒருமித்து, தன்தொழில் தருநரிடம் கோரிக்கைகளை முன்வைத்து ஒப்புவிக்கும் ஓர் தினமாவே இத்தினம் பார்க்கப்படுகிறது. தன் எஜமானர்களினது தாங்கொண்ணா கஷ்டங்களை வேரோடு அறுத்தெரிந்து தொழிலாளர் சமூகத்தின் உரிமைகளை வெண்றெடுத்து அதன்மூலமாக அதிகார வர்க்கமும் தொழிலாளர் வர்க்கமும் சரிசமமாக ஒன்றிணைந்து சீர்மிகு பண்பாட்டினைக் கொண்டமைந்த மாணிடத்;துவத்தினை ஏற்படுத்துவதில் இன்றைய மேதினம் அன்று வழிசமைத்துக் கொடுத்துள்ளதை அறியவிளைகின்றபோது மிகப்பெரியதோர் எழுச்சிப்போராட்டம் அதனுள் வடிவமைக்கப் பட்டுள்ளதை வரலாற்றுப்பாடங்கள் கற்றுத் தந்துள்ளன என்பதையும் தொழிலாளர் வர்க்கம் இலகுவில் மறக்க முடியாது.

ஏழைத் தொழிலாளர்கள் பட்ட பல்வேறு இன்னல்கள் மற்றும் நோவினைகள் காரணமாக அன்று இங்கிலாந்தில் ஏற்பட்ட தொடரான தொழிலாளரது போராட்ட விளைவுகளினாலும், அந்நாட்டில் பல்வேறு தொழிற்சாலைச் சட்டங்கள் நிறைவேற்றக் காரணமாய் அமைந்திருந்தன. 1833ம்ஆண்டு, 1844ஆம் ஆண்டு, 1847ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இயற்றிய சட்டங்களினால் வேலை நேரங்கள் மீதான சில சலுகைகள் வழங்கப்பட்டன. ஆயினும் அமெரிக்காவின் பத்து மணித்தியாலய வேலை நேரமானது எட்டு மணித்தியாலய வேலைப் பேராட்டமாக உருவெடுத்ததன் விளைவாகப் பிறந்த இம்மேதினத்தை தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாகவும், தொழிலாளர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் தினமாகவும் கொண்டாடினர். இப்பேராட்டத்திற்கு பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களினது உயிர்கள் பறிக்கப்பட்டன. இரத்தம் சிந்திப் பெற்ற இப்போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் ஒற்றுமையாக இருந்து தமக்கான உரிமைகளை பெறவேண்டும். வேண்டுமென்று  அரசியல்வாதிகளுக்காகவும், முதலாளிகள் சுகபோகங்களை முழுமையாக அனுபவிக்கின்றபோது களத்திலிருந்து வியர்வை சிந்தி உழைக்கின்ற உழைப்பின் பெறுமானத்தை அவர்களுக்குக் காண்பிக்கவும், தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுக்கின்ற மேதினமாகவும் உருக்கொடுத்து அனுஷ்டிப்பதில் வெற்றி தங்கியுள்ளது. இவ்வாறு அன்று மகாத்மா காந்தியினால் வெளிக்கொணரப்பட்ட சாத்;;;;;;வீகப் போராட்டங்களும் ஒருவகையில் இதனையே உணர்த்திக் கொண்டதையும் நாம் பார்க்கலாம்.

உழைக்கும் வர்க்கத்தினரின் பெருநாளாக, தம்முடைய உரிமைகளையும், ஏனைய சலுகைகளையும் தமது எஜமானர்களிடமும், அரசிடமும் வேண்டிக்கொள்ளும் ஒரு நாளாகவே இவை பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவருடமும் மே தினம் வருகிறது. ஊர்வலங்கள், இறுதியில் மாபெரும் இசைநிகழ்ச்சி, கூட்டங்களுடன் முடிந்துவிடும். ஆனால் உழைக்கும் வர்க்கத்தினரின் இன்னொரு பிரிவினர் சமுதாயத்தின் அறிவுக்கண் திறக்க தன்னை முழுமையாக அர்ப்பனித்து தன்னை ஏணியாகவும், தோணியாகவும் தன்தோழ்மீது சுமந்து, எதிர்கால நற்பிரஜைகளை தோற்றுவிக்கின்றதும், உளரீதியானதும், வாண்மைத்துவம் நிறைந்ததுமான ஓர் தொழிலாளர் வர்க்கம் சமூகத்தினுள் இருக்கின்றது. அவர்களை பெரிதாக யாரும் கண்டுகொண்டதாகவோ, அவர்களின் பக்கம் எட்டிக்கூட பார்த்ததாகவோ இல்லை. இருந்தாலும் அவர்கள் தன்னுடைய தொழிலில் கண்ணியத்துடன், சாமர்த்தியமாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். சிறுபராய பிள்ளை தொடக்கம் எத்தனை வயதான சமூகத்தினருக்கும் தன்னுடைய அன்பான வாண்மைத்துவத்தை ஆதரவுடனும், இங்கிதமாய், ஈரெழுத்தை வழங்கி, உலகத்தினையே ஊடறுத்தும் செல்லும் தன்மையை வழங்கிக் கொண்டிருக்கும் ஒருவர்க்கமே இந்த ஆசிரியர் வர்க்கமாகும்.

உழைக்கும் வர்க்கத்தின் ஒருபிரிவினரான ஆசிரியர் பெருந்தகைளும் சமுதாய எழுச்சிக்கு அல்லும் பகலும் ஓயாது உழைக்கின்றனர். அரசினால் வழங்கப்படுகின்ற ஊதியம் பெறுகின்ற பெரும் தொகையினரைக் கொண்டமைந்த ஓர் அமைப்பாகவே விளங்குகின்ற ஆசிரியர்களும் இத்தினத்தில் பயனுள்ள விதமாக தம்மை இனங்காட்டி கொண்டாடவேண்டியதும் கட்டாயமாகும். ஏனெனில் சுமார் 2,25000க்கும் மேற்பட்ட தொகை கொண்ட மிகப்பெரியதோர் அமைப்பு இந்த ஆசிரிய வாண்மைத்துவ வாதிகளாகவே காணப்படுகின்றனர். இருப்பினும் ஆசிரிய சமுதாயத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து அறிக்கை செய்யவேண்டிய கடப்பாடு இச்சமுதாயத்தை பிரதிபலிக்கின்ற ஆசிரியர் தொழிற்சங்கங்களையே சாரும். ஆனால் நடைமுறை சாத்தியமுள்ள விடயங்களில் இச்சங்கங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாது மாணவர்களின் பரீட்சை நேரங்களில் சில கோரிக்கைளை விடுவதும், சிலர் அதனை எள்ளிநகையாடுவதும், சிலர் பேசாது விடுவதுமாய் ஒரு ஒற்றுமை படாத உழைப்பாளர்களை கொண்டுள்ள அமைப்பாக இருக்கின்றார்களே என்கிற ஆதங்கங்களும் பல ஆசிரியர்களிடம் காணப்படுகிறன.

மேதினத்தில் தொழிலாளர்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைக்கின்றபோது சமுதாயத்தின் எதிர்கால இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்களாக பரிணமிக்கச் செய்து நாட்டின் நற்பிரஜைகளை தோற்றுவிக்கப் பாலமாய் அமைகின்ற ஆசிரியர்களது பலவிதமான பிரச்சினைகளும் அவர்களது சமுதாயப் பெறுமானங்களும் வெளிக்கொணரப்படவேண்டியதும் அவசியமாகும். அதற்காக தொழிலாளர்களது தினமான மேதினத்தில் ஆசியரியர்கள்  சேவை செய்கின்ற ஒரு வர்க்கத்தினர் என்கிற அடிப்படையில் அவர்களது பிரச்சினைகளும் ஆராயப்பட்டு தீர்வுகாணுவதற்கான திட்டங்களை வடிவமைப்பதில் ஆசிரியர் தொழில் சங்கங்கள் முன்னின்று உழைக்க வேண்டும். அப்போதுதான் தீர்வுகளும் கிட்டும். தொழிலாளர்களின் ஒற்றுமை மிகவும் பலமானது என்பதை உணர்ந்து ஒற்றுமை மிக்கவர்களாக ஆசிரியர் சமுதாயம் காணப்படுகின்ற நிலைமையை இந்த மேதினத்தில் தோற்றுவிக்க முனைதல் அவசியமாகும்.

இன்று நாட்டில் அனைத்து பொருள்களினதும் விலையேற்றம் குறிப்பாக அரச ஊழியர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் ஆசிரியர்களினது வேதனம் அதிகரிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதில் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர். வேற்றுத் தொழில் புரிகின்ற நிலைமையில் அவர்களது ஆசிரியத்துவம் வடிவமைக்கப்பட்டு முழுநாளும் மாணவர்களின் மேம்பாட்டுக்கான தன்னை அர்ப்பணித்துள்ள ஆசிரியர்களின் வேதனங்கள், சலுகைகள், பதவியுயர்வுகள், சம்பளநிலுவைகள் போன்றன அதிகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்திடவேண்டிய தினமாக மேதினம் உருவகப்படுத்துதல் அவசியமாகும். பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட ஆசிரியர்களது சம்பளப்பிரச்சினைகள் முடிவுறாத கதைகளாகவே தொடர்கின்றன. ஆசிரியர்கள் கௌரவமான சேவையாளர்கள் என்கிற கௌரவமிக்கதோர் இடத்தில் வைத்திருந்தாலும், சம்பள ஆணைக்குழுக்களின் சிபாரிசுகள் முழுமையான அங்கீகாரத்தை முழுவடிவம் கொடுக்கப்படாத ஒரு வர்க்கத்தினராக ஆசிரியர்கள்; காணப்படுகின்றனர். புள்ளிகள் வழங்குவதிலும் சரியான நிலைமை வலயத்திற்கு வலயம், மாகாணத்திற்கு மாகாணம் மாறுபட்டே காணப்படுகின்றன. மாணவர்களின் உயர்வுக்கு தன்னை வருத்துகின்ற ஆசிரியர்களின் நிலுவைகள், உரிய திகதியில் வழங்கப்படவேண்டிய வருடாந்த சம்பள உயர்ச்சிகள் உரியமுறையில் வழங்கப்படுவதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்ற ஒருநிலையில் சரியான மனோநிலையுடன் ஆசிரியர்கள் தங்களுடைய சேவைகளை சரியான முறையில் செய்வார்களா? என்பதும் கேள்விக்குறியே.

மாணவர்களின் சிறப்பான கற்றலுக்குத் துணையாகின்ற ஆசிரியர்களது அதிகரித்த வேலைப்பளு காரணமாக அசௌகரியத்திற்குள்ளாகின்ற ஒருநிலைமையும் காணப்படுவதாக கூறும் ஆசிரியர் வர்க்கத்தின் பிரச்சனைகள் ஆராய்யப்பட்டு, தீர்வு காணப்படுதல் அவசியமாகும். இல்லையேல் மாணவர்களின் அடைவுகளுக்குரிய மேம்பாடுகளை பாடசாலைக்குவெளியே டியூஷன் பெயரில் பணத்தைக் கொடுத்துப் பெறவேண்டிய இக்கட்டான ஒரு சூழ்நிலைக்குள் மாணவசமூகம் தள்ளப்பட்டுள்ளமைக்கு ஆசிரியர்களின் குறைவான வேதனம், வேலைப்பளு காரணமாக அமைகின்றன என்கிற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ள நிலையில் ஆசிரியர் தொழிலின் மேன்மை உணரப்படுதல் வேண்டும்.

நீண்டகாலம் சேவையிலுள்ள ஒருவருக்கும், புதிதாக தொழிலில் இணைகின்ற ஒருவருக்குமிடையிலான சம்பள ஏற்றத்தாழ்வுகள் மிகவும் குறைந்தளவாகவே காணப்படுகின்றன. வருடாந்தக் கொடுப்பனவுகள், மேலதிகக் கற்றலுக்கான விசேடகொடுப்பனவுகள், முழுமையாக மாணவர்களுக்காக பாடசாலையில் வேலை செய்கின்ற ஆசிரியப் பெருந்தகைகளின் வேதனம் அதிகரிக்கப்படாத நிலையில் தன்னுடைய குடும்பத்தின் வாழ்க்கைச் சுமையை எவ்வாறு ஓட்டுவது என்பதில் அங்கலாய்க்கும் ஒரு வர்க்கமாகவே ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். ஆசிரியர்கள் ஒன்று சேர்கின்றபோது அங்கே சம்பளப்பிரச்சினைகள் பற்றிப் பேசாமால் கலையவே மாட்டார்கள். அந்தளவுக்கு சம்பளப் பிரச்சினைகள் கடந்த பல வருடங்களாக பேசப்பட்டு வருகின்ற ஆசிரியர்களின் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுகின்ற ஒரு நிலைமையை ஆசிரிய தொழில் சங்கங்கள் முன்னெடுத்து அதனை வெற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மேலும், வலயக் கல்வி அலுவலகங்களில் ஆசிரிய ஆலோசகர்கள் என்கிற பதவிகளில் இiணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுடைய அர்ப்பணிப்புக்குரிய வேதனங்களோ, உரிய சேவைத் திட்டங்களோ இன்றுவரையிலும் வழங்கப்படாத ஒரு கூட்டமாக காணப்படுகின்றனர். மாதம் முழுவதும் வலயக் கல்வி அலுவலகம் என்றும், பாடசாலைகள் என்றும் ஆசிரியர்களினதும் வாண்மை விருத்திக்காகவும், மாணவர்களின் சிறப்பான கற்றல் மேம்பாட்டுக்காகவும் புதிய புதிய நுட்பங்களை வழங்கி, அவற்றை சரியான முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பதை பார்க்கின்ற ஒரு பதவியாகவே சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் காணப்படுகின்றனர். அவர்களது அதிகரித்த வேலைப்பளு, மாகாணம் என்றும், மத்திய கல்வியமைச்சு என்றும், தேசிய கல்வி நிறுவகம் என்றும் ஓடியாடி புதிய விடயங்களை அறிந்து அவற்றை தங்களுடைய வலயத்திற்குட் பட்ட பாடசாலைகளில் வழங்கிவருகின்ற இவர்களின் விசேட கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இக்கொடுப்பனவுகள் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபட்டுக் காணப்படுகின்றமை மிகப்பெரியதோர் குறைபாடாகும்.  இதனை நிவர்த்திக்கும் வகையில் அவர்களது சேவைகள் புனிதமாக மதிக்கப்படுகின்ற ஒருநிலைமை ஏற்படுத்த இன்றைய தொழிலாளர் தினம் நல்ல வரப்பிரசாதமாக அமையும். குறிப்பாக இன்றைய மேதினம் அனைத்து தொழிலாளர்களினதும் சேவைகள், அவர்களது வியர்வைகளின் பெறுமானங்கள் பேசப்படுகின்ற ஒருதினமாக இன்றைய மேதினம் கொண்டாடப்படுதல் வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் 'தொழிலாளியின் வியர்வைத் துளிகள் வற்றுவதற்கு முன்னர் அவனது கூலி வழங்கப்படவேண்டும்' என்றுகூறியுள்ளார். இவ்வாறாக தொழிலாளிகள் மதிக்கப்படவேண்டியர்கள். அவர்களது வியர்வை இந்நாட்டின் உயர்வுக்கு படிகற்களாக அமைகின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட்டால் அதுவே மிகப்பெரிய சக்தியாகக் கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.