Header Ads



பலி கொடுத்து விளையாடுதல்..!



(தம்பி)

'வின்னர்' என்கிற பெயரில் ஒரு தமிழ் திரைப்படம் வெளிவந்தது நினைவிருக்கிறதா? நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் வடிவேலுதான் நடித்திருந்தார். படத்தில் வடிவேலுவின் பெயர் கைப்புள்ள. அவருடன் எப்போதும் இரண்டு மூன்று பேர் ஒட்டிக் கொண்டு திரிவார்கள். அவர்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கிறது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்பது அதன் பெயர். கைப்புள்ள என்கிற வடிவேலுதான் சங்கத்தின் தலைவர். ஊருக்குள் கைப்புள்ள என்றாலே மக்களுக்கு ஒரு வகைப் பயம். கைப்புள்ள என்கிற வடிவேலுவை கத்தியும் கையுமாகக் கண்டால் 'இன்னிக்கு எத்தனை தலை உருளப் போகுதோ' என்று மக்கள் அச்சத்துடன் பேசிக் கொள்வார்கள். ஆனால், கதை வேறு. மக்கள் நினைப்பது போல் வடிவேலு அப்படியொரு சண்டினே அல்லர். தன்னை ஒரு சண்டியன் போல் மக்களிடம் அவர் காண்பித்துக் கொள்வார். அவ்வளவுதான். ஆனால், சண்டை என்று வந்து விட்டால், எதிராளியிடம் வடிவேலு - ஏகத்துக்கு அடி வாங்கிக் கட்டுவார்.

முஸ்லிம் அரசியல் அரங்கிலும் இதுபோன்ற 'கைப்புள்ள' பாத்திரங்கள் நிறையவே உள்ளன. இந்த 'கைப்புள்ள'கள் தம்மை அரசியல் ஜாம்பவான்களாகவும், வீரபுரிஷர்களாகவும் மக்களிடம் காண்பித்துக் கொள்கின்றனர். மக்களும் அதை நம்ப வேண்டுமல்லவா? அதனால், இடைக்கிடையே உரத்த குரலிலே இவர்கள் அறிக்கைகளை விடுகின்றனர். மக்களும், 'ஏதோ ஒன்று நடக்கப் போகிறது' என்று அப்பாவித்தனமாக நம்புகின்றனர். ஆனால், தமது அறிக்கைகளால் ஒரு முடியைக் கூட அசைக்க முடியாது என்பதை 'கைப்புள்ள'களே மிக நன்றாக அறிவார்கள். 

அறிக்கை அரசியல்

நாட்டில் நிகழும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை. குறையும் என்பதற்கான அறிகுறிகள் அல்லது நம்பிக்கைளும் இல்லை. ஃபெஷன்பக் மீதான தாக்குலில் ஈடுபட்டவர்கள் வெகு சாதாரணமாக வெளியில் வந்து விட்டனர். இந்நிலையானது - இனவாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்களுக்கு உற்சாகமாளதொரு மனநிலையினை உருவாக்கியுள்ளது. 

ஆனால், இது தொடர்பில் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழமைபோல் போக்கணம் கெட்டவர்களாகவே உள்ளனர். முஸ்லிம் விரோத செயற்பாடுகளைக் கண்டித்து முஸ்லிம் அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ செயல் ரீதியாக எதையும் செய்யவில்லை. சிலர் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருக்கின்றனர் - சிலர் அதற்கும் தயாரில்லை. 

'முஸ்லிம்களுக்கு எதிராக இத்தனை நடக்கின்றதே - இந்த முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்கே போனார்கள்?' என்று மக்கள் திட்டத் தொடங்கி விட்டனர். எனவேதான், மக்களை சமாதானப்படுத்துவதற்காக மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் உள்ளிட்ட ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர். ஆனால், அமைச்சர் அதாஉல்லா மற்றும் பௌஸி போன்றோர் அதைக்கூடச் செய்யவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுளைக் கண்டித்து அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருப்பதால் - ஆகப்போவது எதுவுமேயில்லை. முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களை இடுப்பில் தூக்கி வைத்து - கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பது அரசுதான் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனாலும், இதைக் கூறி - அரசை எதிர்ப்பதற்கும், அரசிலிருந்து விலகுவதற்கும், ஆட்சியிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் துணிச்சலில்லை.

துணிவற்ற தலைமை

மு.காங்கிரசின் அதியுயர்பீட உறுப்பினர்களின் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை (30 ஆம் திகதி) கொழும்பில் இடம்பெற்றது. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் தொடர்பில் கூடி ஆராய்வதற்காகவே – அந்தக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டதாக மு.காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆயினும் 05 மணித்தியாலங்களுக்கும் மேலாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் – எதுவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என்பதுதான் வேடிக்கையாகும்.  

மேற்படி உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு தொகையானோர் - அரசிலிருந்து மு.கா. விலக வேண்டுமென வலியுறுத்தினார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து தமது கடுமையான கோபத்தினையும், அதிருப்தியினையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால், அரசிலிருந்து மு.கா. விலக வேண்டும் என்கிற கருத்துடன் தலைவர் ஹக்கீம் உடன்பாடற்றவராக இருந்தார் என்பதை - அவரின் பேச்சினூடாகப் புரிந்து கொள்ள முடிந்தது என உயர்பீட உறுப்பினர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். 

இதேவேளை, 'முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்குள் அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலானதொரு கடிதமொன்றினை மு.காங்கிரஸ் எழுத வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட வேண்டுகோளொன்றினைக் கூட, மு.கா. தலைவர் ஹக்கீம் தட்டிக் கழித்து விட்டதாகக் கூறி, கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பரெருவர் கவலைப்பட்டார்.

நாட்டில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இனவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய மேற்படி உயர்பீடக் கூட்டத்தில் - மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், ஹரீஸ், தௌபீக், அஸ்லம் மற்றும் முத்தலிப் பாறூக் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது இங்கு கவனத்துக்குரிய விடயமாகும். இதேவேளை, கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர்கள் மன்சூர், தவம், ஹசன் மௌலவி மற்றும் அன்வர் ஆகியோரும் இந்தக் கூட்டத்துக்கு வருகை தரவில்லை. 

கொசுறுத் தகவல்              
                                                      
மேற்படி உயர்பீடக் கூட்டம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கடந்த சனிக்கிழமை இரவு ஆரம்பித்து - ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதேதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் - கொழும்பு ஹெவ்லொக் மைதானத்தில் இடம்பெற்ற ரக்பி போட்டியொன்றினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவுடன் இருந்து மு.கா. தலைவர் ஹக்கீம் பார்த்து ரசித்தார். இலங்கை மற்றும் சீன தாய்பே அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி 39 – 8 எனும் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றியீட்டியது. இலங்கை அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ தலைமை தாங்கினார் என்பதுதான் இங்குள்ள சுவாரசியமான தகவலாகும்.

அரசியல் வியாபாரிகள் 

முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் - அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிக்காட்டும் வகைப் பொறுப்பானது மிகவும் இழி நிலையானதாகும். குறிப்பாக, முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒப்பிடுகையில் அரசாங்கத்திலுள்ள மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓர் அறிக்கையினைக் கூட வெளியிட்டிருக்கவில்லை. குறிப்பாக, அமைச்சர்கள் அதாஉல்லா, பௌஸி உள்ளிட்டோர் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வித எதிர்வினைகளையும் வெளிக்காட்டியதாகத் தெரியவில்லை.

ஹலால் விவகாரம் சூடு பிடித்திருந்தபோது, அமைச்சர்கள் அதாஉல்லா, பௌஸி, றிசாட் பதியுத்தீன் மற்றும் ஹக்கீம் ஆகியோர் இணைந்து செயற்படவுள்ளனர் என்று ஒரு கதை ஊடகங்களில் உலவியது. முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் அதாஉல்லாவுடன் தொலைபேசியில் - தான் பலமுறை பேசிக்கொண்டதாக மு.கா. தலைவர் ஹக்கீம் ஊடகங்களுக்குக் கூறியிருந்தார். ஆனால், அமைச்சர் அதாஉல்லா இதுகுறித்து மூச்சுவிடவில்லை. சிங்கள சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் தம்பல அமில தேரர் போன்றோர் முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாகப் பேசிய போது, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் அதாஉல்லா மௌனமாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அரசுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டும் இருந்தார்கள் என்பதே, நமது கேடுகெட்ட அரசியலைப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.

ஆபத்தில் தமக்கு உதவாத நடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் முஸ்லிம் சமூகம் தனது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து வைத்துள்ளது. முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் லாப நஷ்டக் கணக்கினூடாகவே அனைத்தையும் அளந்து பார்த்துப் பழகி விட்டனர். இவ்வாறானவர்களை நம்பிக் கொண்டு - இனி, முஸ்லிம் சமூகம் எவ்வாறு அரசியல் தளத்தில் இயங்கப்போகின்றது என்பதை நினைக்கையில் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

அஷ்ரப் - ஃபுட்போல், ஹக்கீம் - கிரிக்கெட்

அரசியல் என்பது ஒரு வகையான வியாபாரமாகும். இதை வைத்துக் கொண்டுதான் மக்களின் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்ளும் பலர் - பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும், ஆளுந்தரப்போடு இணைந்து கொண்டு இந்த வியாபாரத்தைச் செய்யும் போது கிடைக்கும் லாபம் அதிகமாகும். எனவே, அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அத்தனை சுலபத்தில் - ஆட்சியை விட்டு விலகி, தமது லாபத்தைக் குறைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மு.கா.வின் உயர்பீடக் கூட்டத்தில் - கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் - 'அரசியல் வியாபாரம்' குறித்து விளங்கிக் கொள்வதற்கு போதுமானதாகும்.

மு.காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரப் மற்றும் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் பற்றியும் அவர்களின் அரசியல் குறித்தும் மிக எளிய இரண்டு உதாரணங்களினூடாக தன்னுடைய கருத்துக்களை ஜவாத் முன்வைத்தார். 

அதாவது, 'அரசியலில் அஷ்ரப் அவர்கள் ஃபுட்போல் (காற்பந்து) விளையாடினார். ஹக்கீம் கிரிக்கெட் விளையாடுகின்றார். அஷ்ரப் அவர்களுக்கு கோல் (Goal) முக்கியமாக இருந்தது. ஹக்கீமுக்கு ரன் (Run) தான் முக்கியமாகும்'. என்றார் ஜவாத்.

இது, மிகச் சிறந்ததொரு உதாரணமாகும். ஹக்கீம் மட்டுமல்ல, நமது பிரதிநிதிகளில் அதிகமானோர் அரசியலில் கிரிக்கெட்தான் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.

தான் - அதிக ஓட்டங்களை (Run) பெறவேண்டும் என்பதற்காக, தனது அணியினை தோல்விக்குப் பலிகொடுத்த ஏராளமான வீரர்களை கிரிக்கெட்டில் நாம் பார்த்திருக்கிறோம்!

2 comments:

  1. Leadership Vacuum never been filled by anyone for Muslims.It is vacant over 13 years.All current muslim leaders are equally corrupt as current regime.
    We all need leader protect our rights and talk in public to media and parliament. We need to take this issue everywhere.
    We can not wait longer, we need next generation leader.
    All currents leader have issues and guilt in them. They are not clean.
    All we have to ask almighty , protect us and give us real chosen leader to replace vacuum.
    Insha allah, we will find soon, chosen new leaders.
    Stop talking about corrupts, all they need Portpolios and previllages.

    ReplyDelete
  2. கட்டுரையாளர் (தம்பி) என்ன எதிர் பார்க்கின்றார். அரசியல்வாதிகள் கட்சித்தலைவர்கள் களமிறங்கி வின்னர் பட பிரசாத் போல சண்டை போடவேண்டும் என்று எதிர்பார்க்கின்றாரா? // ஃபெஷன்பக் மீதான தாக்குலில் ஈடுபட்டவர்கள் வெகு சாதாரணமாக வெளியில் வந்து விட்டனர். // ஆம் இதன் பின்னனி என்னவென்று தெரியுமா கட்டுரையாளருக்கு? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கின்றாரா? http://lankaenews.rsf.org/English/news3ff2.html?id=13630 தயவு செய்து இந்த வலைத்தள முகவரியில் நடந்து முடிந்த கதையின் பின்னணி பற்றி விபரம் கிடைக்கும்.
    PC Faizer Mustafa who went and met the Fashion Bug owner the day following the attack, had in the midst of the discussion told, he wished to phone the President, the highest in the hierarchy of the marauding regime. He had used his mobile phone and spoken in a manner so that those around could hear. MaRa the despot who was at the other end had then spoken to the Fashion Bug owner on the mobile phone. After speaking softly first , he has threatened the owner, ‘ there are shops of yours around the whole country , aren’t there? You want to continue with your business? then don’t allow this issue to snowball , resolve it calmly.’ MaRa has then also threatened them not to produce the CCTV camera footage of the incident. As this mobile phone sound was kept at the maximum, those around also could hear the discussions and unlawful threats posed by a lawfully elected President of the country.
    From the very inception , when the BBS was trying to falsely claim that this hooliganism was not committed by them , and that they have evidence to substantiate it , the despotic MaRa and the war crime suspect Gota took initiatives to suppress this incident. With this in view , despite there being ample evidence to incriminate the culprits , by bringing in the notorious DIG Anura Senanayake from outside , and with a team of police officers the investigations were rigged to suit their own dastardly ends. The 17 so called suspects were not those apprehended by the police, rather they were those produced by the BBS according to their whims on instructions from Gota in order to camouflage the entire criminal scenario.
    அன்றியும் அரசிலிருந்து விலகுவெதென்பதும் வெளிநடப்பு செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அரசியல் சாணக்கியமல்ல மாறாக நீங்கள் சொன்ன கைப்புள்ள கதையாகத்தான் அமையும். மேலும் அரசைவிட்டு யார் வெளியேறினாலும் அந்த வெற்றிடத்தை நிரப்ப எமது சமுகத்திலேயே நயவஞககூட்டம் ஒன்று வாசலில் காத்துக்கிடக்கின்றது ஆகையால் அரசிலிருந்து விலகுவெதென்பதனால் ஆன பயன் ஒன்றுமில்லை. அதுமட்டுமல்ல இப்போது விலகினாலும் அது எத்துணை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறி. காரணம் அரசு எந்தவொரு சிறுபாண்மைக் கட்சியிலும் தங்கிருக்கவில்லை என்பதுதான் உண்மை. மேலும் //ரக்பி போட்டியொன்றினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவுடன் இருந்து மு.கா. தலைவர் ஹக்கீம் பார்த்து ரசித்தார். //என்று குறிப்பிட்டிருப்பதானது கருத்து முரண்பாடு கொண்ட அரசியல் தலைவர்கள் கட்டிப்பிடித்துக்கொண்டு சண்டை போடவேண்டும் என்று எதிர்பார்பததையே வெளிப்படுத்துகிறது. >>>

    ReplyDelete

Powered by Blogger.