உஸ்மான் ரழி அவர்களும், மக்கள் நலனும்
(ஹபீபுல்லா பாயிஸ் - எகிப்து அல் அஸ்ஹர் பல்கழைக்கழகம்)
ஏற்கனவே நாம் எழுதிய ஆக்கத்தில் உஸ்மான் ரழி அவர்கள் வீட்டு முற்றுகையில் இருக்கும் போது அலி ரழி அவர்களுக்கு அளித்த பதில் என்னவென்பதை பார்த்தோம் . அந்த பதில் மூலம் உஸ்மான் ரழி அவர்கள் தன்னுடைய ஆட்சியில் சுய நலமற்ற ஒருவராக இருந்தார்கள் என்பதை அந்த உரையாடல் எமக்கு படம் பிடித்து காட்டியது . அது போல உஸ்மான் ரழி அவர்கள் அதே முற்றுகையில் இருக்கும் போது முஆவியா ரழி அவர்களுக்கு அளித்த பதில் அவர்கள் மக்கள் நலனில் எந்தளவு அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதையும் எமக்கு படம் பிடித்து காட்டுகின்றது.
அந்த வகையில் அதே கடைசி நேரத்தில் உஸ்மான் ரழி அவர்கள் இருக்கும் போது அதாவது வீட்டு முற்றுகையில் இருக்கும் போது உஸ்மான் ரழி அவர்கள் முஆவியா ரழி அவர்களுக்கு கொடுத்த பதில் தான் இந்த தலைப்பின் கருப்பொருளாகும் . மிகப்பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு ஜனாதிபதியாக இருந்த உஸ்மான் ரழி அவர்கள் தனது வீட்டை முற்றுகை இட்டிருந்த ஒரு சிறு கும்பளை ஏன் அவர்கள் அடக்கி ஒடுக்கவில்லை ? நிச்சயமாக இந்த கும்பளை அடக்கி ஒடுக்க அவர்களால் முடிந்திருக்கும் . ஏனென்றால் அந்தளவுக்கு அனைத்து சஹாபாக்களும் அவர்கள் பக்கம்தான் இருந்தார்கள் .அப்படி இருக்கும் போது அவர்கள் ஏன் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை ?
இதற்கெல்லாம் ஒரே பதில் தான் சொல்ல முடியும். அது தான் அவர்கள் அரசியல் சுய நலமற்றவர்களாக இருந்ததும் மக்கள் நலனை கருத்தில் கொண்டதும் தான் அவர்களை இவ்வாறு முடிவெடுக்க செய்தது . இதற்கு ஒரே காரணம் அவர்கள் ஆன்மீகத்துடன் கலந்த அரசியலை நம் மாமனிதர் நபியவர்களின் பாசறையில் கற்றது தான் என்பதை மறுக்க மனம் இடம் கொடுக்கவில்லை . ஆனால் இந்த தன்மையை நம் இன்றைய ஆட்சியாளர்களிடமோ, அரசியல் வாதிகளிடமோ நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு நம்மவர்கள் அரசியல் சாக்கடையில் ஆட்சி வெறிபிடித்து மிதந்து கொண்டு இருக்கிறார்கள் . ஏனென்றல் இன்றைய நம்மவர்கள் ஆட்சியை தக்க வைக்க எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை நம் உள்ளம் ஆளப்பதிந்து வைத்துள்ளது .நம்மவர்களுக்கு ஆட்சிதான் முக்கியமோவொளியே மக்கள் நலன் கிடையாது . இதைத்தான் இன்று நாம் கண்கூடாக பார்க்க கூடியதாக உள்ளது .
சரி நாம் நம் விடயத்திற்கு வருவோம் .அப்படி என்னதான் உஸ்மான் ரழி அவர்கள் முஆவியா ரழி அவர்களுக்கு சொன்னார்கள் . சொன்ன அந்த வார்த்தையை கேட்டவுடன் வியந்து மூக்கில் கை வைக்காமல் இருக்க முடியவில்லை . ஆம் உஸ்மான் ரழி அவர்கள் வீட்டு முற்றுகையில் இருக்கும் போது அனைத்து சகாபாக்களும் தங்களை பாதுகாக்கிறோம் என்று அனுமதி கேக்கிரார்கள் ஆனால் அதை அனைத்தையும் உஸ்மான் ரழி அவர்கள் மறுத்து விடுகிறார்கள் . அந்த வகையில் தான் முஆவியா ரழி அவர்களும் உஸ்மான் ரழி அவர்களை பாதுகாக்க அனுமதி கேக்கின்றார்கள் .ஏனென்றால் முஆவியா ரழி அவர்கள் உஸ்மான் ரழி அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஷாம் நகரின் கவர்னராக இருந்து கொண்டு இருக்கிறார்கள் .அது மட்டுமல்லாமல் பெரிய ஒரு இராணுவ படையும் அவர்களின் கீழ் இருக்கின்றது . நிச்சையமாக உஸ்மான் ரழி அவரகள் அனுமதி கொடுத்து இருந்தால் முஆவியா ரழி அவர்கள் தங்களை பாதுகாக்க முடியும் என்பதும் அவர்களுக்கு தெரியும் .ஆனால் அவர்கள் சொன்ன பதில் தான் அவர்களும் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதை நிருபித்து கொண்டு இருக்கிறது .
இது தான் உஸ்மான் ரழி அவர்கள் முஆவியா ரழி அவர்களுக்கு சொன்ன பதில் .
அரபு வாசகம் :
أخشى أن أضيق الطرق والأرزاق بجندك على أصحاب رسول الله في المدينة.
இதன் தமிழ் வாசகம் :
“உன் படை மூலம் மதீனாவில் நபித்தோழர்கள் வீதியில் செல்ல முடியாமல் , தன் தேவைகளை நிறை வேற்ற முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாவதை நான் பயப்படுகிறேன்''
என்ன ஒரு பதில் இந்த பதிலே அவர்களின் அரசியல் சிந்தனையில் எந்தளவு பொருளாதார சிந்தனையும் , மக்கள் நலனும் இருந்தது என்பதை படம் பிடித்து காட்டுகின்றது . இப்படி ஒரு பதில் சாதாரண ஒரு நிலையில் வருவதே அதிசயமாக இருக்கும் போது தன் உயிரே போகப்போற நிலையில் உள்ள உஸ்மான் ரழி அவர்களால் இப்படி ஒரு பதிலை சொல்ல முடிந்தது என்றால் நிச்சயமாக இது ஆன்மீகத்துடன் கலந்த அரசியலின் எதிரொலி தான் என்பதை சிந்திக்கும் எவரும் மறுக்க வழி கிடைக்காமல் போய் விடும்.
இது இவ்வாறிருக்க இன்றைய நம் அரசியல்வாதிகளின் நிலையை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் வித்தியாசம் சூரியனை போல் தென்படும் . அந்தளவுக்கு வேறுபாடு கோடிட்டு காட்டுகின்றது . இன்று வீதியில் ஒரு அரசியல்வாதி வரப்போகின்றார் என்றால் அந்த வீதி , அந்த ஏரியா அனைத்தும் எந்தளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தல் என்ற தோரணையில் இராணுவம் குவிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு மக்கள் நலன் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்படுகின்றது என்பதை கண்டு கொள்ள முடியும். இதற்கு முஸ்லிம் உள்நாட்டு வெளி நாட்டு ஆட்சியாளர்களும் கூட விதிவிலக்கல்ல. இது அரசியல்வாதிகளின் வருகைக்காக மக்கள் நலன் உதாசீனப்படுத்தப்படுகின்றது. தன் உயிர் பாதுகாப்புக்கு கூட உஸ்மான் ரழி அவர்கள் இதை விரும்பவில்லை.
இவர்களிடம் பொருளாதார சிந்தனையும் கிடையாது , மக்கள் நலனும் கிடையாது . மாறாக பதவி மோகமும் , ஆட்சி தக்க வைப்பும் மட்டும்தான் இவர்களின் ஒரே குறிக்கோள் . இதற்கு தன் குடிமக்கள் பலியாகிகொன்றிருக்கிறார்கள் . இதற்கு அண்மையில் ஒரு சில அரபு நாடுகளில் நடந்த மக்கள் புரட்சிகளை கூட உதாரணமாக கொள்ள முடியும் . இந்த நாட்டின் பொருளாதாரம் , மட்டுமல்லாமல் மக்கள் நலனும் எந்தளவுக்கு நெருக்கடிக்கு உள்ளக்கப்பட்டதை யாவரும் மறுக்க முடியாது . அதை விட கஷ்டமான விடயம் என்னவென்றால் இந்த நிலை இன்று வரை தொடர்வதையாகும் . இதற்கெல்லாம் ஒரே காரணம் ஆட்சி தக்க வைப்பு மட்டும்தான் . தம் ஆட்சியை தக்க வைக்க எது வேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்கள்.
மக்கள் நலனுக்காக தன் உயிரை துச்சமாக நினைத்த உஸ்மான் ரழி எங்கே ? தன் நலனுக்காக மக்கள் நலனை குழி தோண்டி புதைத்த, இன்னும் புதைத்து கொன்றிருக்கும் நம் ஆட்சியாளர்கள் எங்கே ?
நல்ல ஆட்சியையும் , நல்ல சிந்தனை கொண்ட ஆட்சியாளர்களையும் அல்லாஹ் நமக்கு சாட்டி விடுவானாக !

Post a Comment