Header Ads



பொதுபலசேனாவும், இலங்கை முஸ்லீம்களும்



(கழுகுப்பார்வை)

இஸ்லாம் ஐக்கியத்தையும், சகோதரத்துவத்தையும், மற்ற மனிதரின் உரிமையில் கைவைக்காது இன உறவினை பேணும் மார்க்கமாக உலகம் படைக்கப்பட்ட காலம்முதல் இறுதிநபியாக முகம்மது (ஸல்)அவர்கள் வரையிலும், புனித இஸ்லாம் மார்க்கம் கடந்த 1434 ஆண்டுகளாக இவ்வுலகின் நாலா பக்கமும் வியாபித்து வருகின்ற பலதரப்பட்ட சமயங்களுள் முக்கியமான ஒரு சமயமாகவும், உலகின் நான்கில் ஒருபங்கினராக இஸ்;லாமியத்தை பின்பற்றுகின்ற மக்களை மேம்படுத்தும் ஒருமார்க்கமாகவும் இருந்து வருகின்றது. அது இலங்கையிலும் வியாபித்து சிங்கள அரசர்களது காலத்திலிருந்து இந்தியாவிலிருந்தும், நேரடியாக அராபிய நாடுகளிலிருந்தும் இலங்கைக்குள் முஸ்லீம்கள் வரத்தொடங்கினர். உலகின் நாலா பக்களிலிருந்தும் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகளாகவும், சிங்கள அரசர்களின் காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப்போர்களில் யுத்த வீரர்களாக இணைத்துக்கொள்ளவும் இந்நாட்டு வாழ் முஸ்லீம்களின் வரலாறுகள் ஆரம்பமாகின. இதற்கும் மேலாக உலகின் முதல் மனிதனாக முஸ்லீம்களால் போற்றப்படும் ஆதம் நபி அவர்கள் வாழ்ந்தாக நம்பப்படும் பாதச்சுவடி அமைந்துள்ள மலை அமையப்பெற்றுள்ள ஸ்ரீபாதமலையும் இங்குள்ளதனால் அராபிய நாடுகளில் இலங்கை எப்போதுமே சிறப்புப்பெற்று விளங்கியமைக்கு இவை காரணமாக அமைந்தன என்பது வரலாறு.

அண்மைக்காலமாக இலங்கையில் வாழும் மூவின மக்களுக்கிடையிலான நம்பிக்கையில் அடிவிழத் தொடங்கியுள்ளதாகவே எண்ணத்தோன்றுகின்றது. அமைதியாக வாழ்ந்த நாடு, சமய சம்பிரதாயங்களில் மிகவும் அடிப்படையான தோற்றப்பாடுகளை மேற்கொண்டுவந்திருந்த இச்சிறுநாட்டை, பல்வேறு ஒற்றுமையற்ற தன்மைகளை ஊடறுத்து சமய அடிப்படையில் சமங்களுக்குள்ளான கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றுக் கருத்துக்;களை போராட்டவடிவில் எடுத்தியம்பக்கூடியளவு இன்று நாடு சமய உரிமைகளில் தான்தோன்றித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றமை கண்கூடாகப் பார்க்கின்றோம். சுதந்திர இலங்கையைப் பெறுவதற்காக அன்று ஒரே நாட்டு மக்கள் என்றும், நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து பறித்துக் கொள்வதற்கான போராட்ட வடிவங்களில் தமிழர் என்றோ, முஸ்லீம் என்றே அன்று பார்க்கவில்லை. அவ்வாறு இன்றுள்ள நிலைமைகள் இந்த நாட்டின் பேரினவாதிகளினால் உருவாகும் எண்ணங்கள் இராமநாதன் பொன்னம்பலத்திடமோ, ரீபி.ஜாயாவிடமோ இருந்திருந்தால் ஆங்கிலயரிடமிருந்து இலங்கையை மூன்று கூறுகளாக்கி ஒன்றைத் தமிழருக்கும், மற்றயதை முஸ்லீம்களுக்கும் பிரித்து துண்டாடி இருப்பார்கள். 

ஆனால் அன்று இருந்த நிலைமை மாறி  அரசியல் அதிகாரங்களும், நாட்டை ஆளுகின்ற அதிகாரங்கள் மற்றும், சகலவிதமான உரிமைகளையும் தனக்கே அளிக்கப்பட வேண்டுமெனவும், இந்நாடு தனித் சிங்கள மக்களுக்கான நாடு என்பதை உலகிற்கு பறைசாற்றவும் 'பொது பல சேனா' என்கிற அமைப்பு அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கு எதிராக அவர்களது கொள்கையில் அதாவது மதத்தின் அடிப்படையான வாதத்தில் கையை வைத்துள்ளது. இது உண்மையான முஸ்லீமான ஒருவரால் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு காரியமாகும். இந்நாட்டை சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் குறிப்பாக இன்றைய அரசுவரையாhன காலங்களிலும் ஏதோர் அடிப்படையில் மூவின மக்களும் இணைந்தே அரசின் நடவடிக்கைகளை பங்கெடுத்து நடாத்தி வருகின்றனர். நாட்டின் பெரும்பாண்மைச் சமூகத்திலுள்ளவர்கள் அதிகமாகவும், குறிப்பிட்ட ஒருசிலர் தமிழர்களாகவும், முஸ்லீம்களாகவும் இருந்து ஆட்சியமைப்பில் பங்களிப்பினை செய்து வருவதையும் நாம் அறிந்துள்ளோம். 

ஆனால் அண்மைக் கால நடவடிக்கைள் குறிப்பாக உள்நாட்டில் யுத்தம் முடிவடைந்து மூவினமும் ஒற்றுமையாக வாழும் காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மார்தட்டிப்பேசிய அரசும், பெரும்பான்மைச் சமூகமும் இன்று அதனை முழுமையாக மறுதலித்து இந்நாட்டில் எங்கும் எப்பகுதியிலும் புத்தரின் சிலையையும், பௌத்த மதத்தைப் பின்பற்றுவவர்கள் வாழவும் முடியும் என்றும், இந்நாட்டின் உரிமையாளர்கள் நாங்களே இதில் உங்களது கொள்கைகளை எல்லாம் விற்கவோ, தேசிய மயப்படுத்தவோ முடியாது. உங்களுக்குள்ளாகவே உங்களது கொள்கைகளை வைத்துக் கொள்ளுங்கள் என்கிற மமதையும், வெறித்தனமும் தலைகால் புரியாமல் நாட்டின் சிறுபான்மையினரின் மீது பாய்வது நாட்டை அழிவுக்குள்;ளாக்கும் செயலாகவும், நியாயத்தை உணர்ந்து கொள்ளும் மக்களின் கருத்தாகவும் கருதப்படுகின்றது. இந்நிலைமை தொடரக்கூடாது என்று அண்மையில் நாட்டின் ஜனாதிபதி அலரி மாளிகையில் இந்த அமைப்பினரை அழைத்து நேரடியாகத்  தெரிவித்திருந்தார். 

அதேவேளை கடந்த சுதந்திர தின நிகழ்வில் அதிகௌரவ ஜனாதிபதி உரையாற்றும்போது 'இன, மத பேதங்கள் எதுவுமில்லை. இந்நாட்டு மக்கள் அனைவரும் சமஉரிமையோடு வாழ்வதுதான் நல்லதோர்தீர்வு. இனபேதம்போலவே மதபேதமும் நாட்டில் அழிவைத்தான் உருவாக்கும். யாராவது இந்த பேதத்தை உருவாக்கினால் அது நாட்டில் பிரிவினையை உருவாக்கும் நாம் அதற்கு இடமளிக்க மாட்டோம். இந்நாட்டு மக்கள் சிங்கள, தமிழ், முஸ்லீம்களே அவர்களுக்கான கலாசாரத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் சுதந்திரம் உண்டு' எனத் தெரிவித்திருந்தார். ஆனால் முஸ்லீம்களுக்கு எதிராக பௌத்த துறவிகளால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த விஷமத்தனமான போக்குகள் இறுதியில் மீண்டும் இந்நாட்டில் யுத்த மேகங்களைக் கருக்கட்டுவதற்கான முன்முயற்சிகளாகவே இது அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.

அண்மையில் மஹரகமவில் பொதுபலசேனா நடாத்திய முஸ்லீம்களுக்கு எதிரான பத்து தீர்மானங்களில் ஹலால் சான்றுதல்களை உடனடியாக தடைசெய்ய வேண்டும். முஸ்லீம் நாடுகளில் இருந்து கிடைக்கும் நிதிகளை கொண்டு பள்ளிவாசல்களை அமைப்பதை தடைசெய்தல், வெளிநாட்டு இஸ்லாமிய போதகர்களை தடைசெய்தல் போன்றவைகள் உட்பட பத்து அம்சம்கள் முன்வைக்கப்பட்டதுடன் இதற்கு காரணமாக இருக்கின்ற முஸ்லீம்களின் உலமா சபையைக் கலைக்கவும் அதனைத் தடைசெய்யவும் காலக்கெடுவும் வழங்கப்பட்டன. இது இவ்வாறிருக்க சிங்கள உரிமையாளர்களைக் கொண்ட உற்பத்தி நிறுவனங்கள்கூட தங்களது ஹலால் சான்றிதழை பெறுவதிலிருந்து விலகி உள்ளன. முஸ்லீம்களுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழைப் பெற்று அவர்களிடமே விற்பனை செய்யுமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பொதுபலசேனா அமைப்பும் முஸ்லீம்களும் நடாத்திய உரையாடல்களிலிருந்து தெரியவருவதாகக் செய்திகள் கூறுகின்றன. 

இந்நடவடிக்கையால் இந்நாட்டில் வாழும் முஸ்லீம்கள் விடயத்தில் அரசின் நடவடிக்கையும், பொதுபலசேனாவின் செயற்பாடுகளும் சிறுபான்மைச் சமூகத்தை நசுக்கும் செயலாகவே பார்க்கப்படுகின்றது. அண்மையில் குருநாகல் பிரதேசத்து முஸ்லீம்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல முஸ்லீம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. நாட்டில் இனத்துவ வாசம் தலைவிரித்தாடுகின்றது. நாட்டின்தலைவர் கூட்டிய முஸ்லீம் அமைப்புக்களிடம் புதிய பள்ளிகள் கட்டப்படுவதாகவும், அதனை உடைக்கவேண்டுமெனவும் முஸ்லீம்களே வந்து கூறுகின்றனர். நாட்டின் உயர் சபையான பாராளுமன்றிலும், அமைச்சரவைக் கூட்டத்திலும் பகிரங்கமாகவே அமைச்சர்களாலும், நாட்டின் தலைவரினாலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்படவில்லை என்றும், இறைவனிடம் தொழுகையின்போது (வணகத்தின்போது) இரு கைகளையும் உயர்த்தி துஆ(வேண்டுதல்) ஆயுதம் பெற்றுக் கொள்ளவா? என்றெல்லாம் கூறி நாட்டின் சுதந்திரமான ஒரு சிறுபான்மை சமூகத்தையே சீர்குலைக்கும் சகல நடவடிக்கைகளும் அரசினால் முன்னெடுக்கப்படுகின்றன என்கிற வாதங்களும் எதிர்க்கட்சியால் பேசப்படுகின்ற இச்சந்தர்ப்பங்களிலும் இந்த முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த நாட்டின் அரசுடன் ஒட்டிக் கொண்டு தங்களது பைகளை நிறப்பவும், அமைச்சுப்பதவிகளை கைவிடாது அம்பாரைக்கு ஒன்றும், திருகோணமலைக்கு ஒன்றும் என்று அரசின் காலில் குப்புறப் படுத்துக் கொண்டு மத்தளம் போடும் வேசதாங்கிகளை முஸ்லீம் சமூகம் இனங்காணவேண்டும். 

கடந்த வருடத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அராபிய நாடுகள் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காக இங்கிருந்து உலமாக்களும், அரசின் பங்காளி முஸ்லீம் காங்கிரசும் இணைந்து பேச்சுவார்தை நடாத்தி வெற்றிபெற்றனர். ஆனால் இம்முறை இத்தவறை செய்யாதிருக்க இந்த முஸ்லீம் அமைச்சர்கள் முன்வருவார்களா? பொதுபலசேனாவின் அட்டகாச நடவடிக்கைகளை ஜெனீவாக் கூட்டத்தொடரில் தெரிவிக்க முன்வருவார்களா? இதற்கும் அமைச்சுப் பதவிகளை அரசு வழங்கி முஸ்லீம்களை காலடியில் வீழ்த்துமா? என்பதை இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும். இவ்வாறு நாட்டின் மதசுதந்திரத்திற்கு எதிராக செயற்படும் பொதுபலசேனாவை நிராகரிக்கவோ, தடைசெய்யவோ முடியாத அரசு அவர்களை அழைத்து ஆசீர்வாதம் வழங்குகின்றன. ஆனால் காத்தான்குடியில் முஸ்லீம் உலமாக்கள் அடங்கிய அமைப்பு நடாத்தவிருந்த கூட்டத்தை பொலிசார் இறுதிநேரத்தில் தடைசெய்தமைக்கு யார் காரணம். அண்மையில் அமைச்சுக்களைப் பெற்றுக் கொண்ட இரண்டு முஸ்லீம் அமைச்சர்கள் இப்பிராந்தியத்தில் இருந்தும் தடைசெய்யப்பட்டமைக்கான காரணத்தைக்கூட கேட்டார்களா? இன்றைய நாட்டின் அரசியலில் முஸ்லீம் அமைச்சர்களும், பொதுபலசேனா அமைப்புக்கும் என்னதான் வித்தியாசம் என்று தெரியாமலே உளருகின்ற நடைமுறையை மக்கள் மாற்றியமைக்க வேண்டும்.

மனித உரிமைகள் சாசனத்தில் உறுப்புரை 10இல் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் 'ஒவ்வொரு நபரும் தனது விருப்புரிமைக்கேற்ப நம்பிக்கை கொள்ளல் அல்லது விரும்பிய மதம் மாற்றிக் கொள்ளல் உட்பட மதச் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பவற்றுக்கான உரித்தினைக் கொண்டிருப்பார்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உறுப்புரை 14(1) (உ) வின் பிரகாரம் 'ஒவ்வொரு பிரசையும் தனியாகவோ, ஏனையோருடன் கூட்டாகவோ, பிரத்தியோகமாகவோ, பகிரங்கமாகவோ தனது மதத்தை வெளிப்படுத்திக் கொள்ள, வழிபாட்டு முறையில் நம்பிக்கை கொள்ள, அனுட்டானம் செய்ய, நடைமுறைப்படுத்த, போதிக்க உரித்துடையவராவார்' என்றும் கூறப்பட்டுள்ளது. சமயத்தின் அடிப்படையில் எந்தவொரு ஆளுக்கும் எதிரான ஓரம்கட்டுதலை தடுக்கும் உறுப்புரையான 12(2) உம் எந்தவொரு ஆளும் சமயம், சாதி என்பவற்றின் அடிப்படையில் ஏனைய விடயங்களான சொந்தச் சமயம் சார் வணக்கஸ்தலங்களுக்கு – உணவகங்களுக்கான அணுக்கம் தொடர்பில் ஏதேனும் நிபந்தனை, மட்டுப்பாடு, தகவீனம் அல்லது பொறுப்புடைமை போன்றவற்றுக்கு உட்படுத்தக்கூடாது என விளம்பும் உறுப்புரை 12(3) உம், மதச் சுதந்திரம், மனச்சாட்சிக்கான சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாக்கும் பாங்கில் வரைபு செய்யப்பட்டுள்ளதான ஏனைய உறுப்புரைகளாகும்.

இவ்வாறு அடிப்படையான மதசுதந்திரங்களும், சிந்தனைச் சுதந்திரங்கள் காணப்பட்டிருந்தாலும் நாட்டின் பெரும்பான்மை இனத்திற்கு சுகபோகங்களை மாத்திரம் வழங்குவது இந்நாட்டின் ஜனநாயகப் பண்பாகுமா? ஒரு நாட்டில் ஒரு இனத்திற்கு எதிராக இன்னொரு இனம் வெறிகொண்டு ஒழித்துக்கட்ட தூக்கிப்பிடிக்கின்றது. அம்மதத்தின் அடிப்படையான கொள்கையில் கைவைத்துள்ளது. ஆனால் இதனை என்னவென்று பார்க்க, மக்களுக்கான விளக்கங்களைக் வழங்க வேண்டுமென ஒன்றுகூட்டப்பட்ட கூட்டங்களுக்கு தடைசெய்கின்ற ஒரு நிலைமை காணப்படுவதானது நாட்டில் மதரீதியான சுதந்திரத்திற்கு ஏற்பட்ட பாரிய அடியாகவே பார்க்கப்படுகின்றது. இன்று சுதந்திரமான ஒரு நிலைமை எதிலும், எவற்றிலும் இல்லை. நாட்டின் வெளிநாட்டு அந்நியச்செலாவணி சீனாவின் கைக்குள் அகப்பட்டுள்ளது. நாட்டின் அதிகமான பொருளாதார மையங்கள் சீனாவின் கைகளில் திணிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் சறுக்கல் நிலையிலேயே உள்ளது. நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாகக் கொண்டுவரப்பட்டுள்ள 'கற்ற பாடங்களும் நல்லிணக்கமும்' பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பலவற்றை அரசு நிறைவேற்றுவதாகக் கூறினாலும் அதில் அதிகம் அண்டப்புளுகாகவே காணப்படுகின்றன. முப்பது வருடங்கள் யுத்தத்தில் நிறைந்திருந்த சிறுபான்மைச் சமூகத்திற்கு நாட்டின் பெரும்பான்மைச் சமூகம்கொடுக்கும் பரிசு சிறுபான்மைக்குரிய பக்குவத்தையே அழித்து நாட்டின் முழுமையான கைப்பற்றலை மேற்கொள்வதுதான் என்கிற வகையில் நாட்டின் அரசேட்சி நடக்கிறதோ என நினைக்கும் அளவுக்கு இன்று மதரீதியான சுதந்திரம், நல்லிணக்கம் முற்றாகவே பறிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக முஸ்லீம் அமைப்புக்கள் தமிழ்பேசும் அமைப்புக்கள் ஒன்றினையும் காலம் நெருங்கிவிட்டது. பர்மாவில் சீருடை அணிந்த புத்தபிக்குகள் முஸ்லீம்கள் என்கிற பெயர்களைக் கேட்டாலே ஓடஓட விரட்டி கொல்லும் சமூகமாக பர்மிய முஸ்லீம்கள் காடுகளிலும், கடலிலும் வாழ்கின்றார்கள். இந்நிலைமையை இன்று இலங்கையிலும் ஏற்படுத்தி சிங்களப் பிரதேசத்திலிருந்து முஸ்லீம்களையும் விரட்டியடிக்க முயற்சிக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதாக முஸ்லீம் அமைப்புக்கள் தெரிவிகின்றன. இந்நிலைமையில் முஸ்லீம்கள் ஒன்றுமைப்படுவதற்கான காலம் கணிந்துள்ளதாக உணரப்படுதல் வேண்டும். மதரீதியான பிளவுகளும், கொள்கைகள் ரீதியான நிலைமைகளும் மாற்றப்பட்டு முஸ்லீம்கள் ஒற்றுமைப்படுதல் அவசியமும், அவரத்தேவையுமாகும். தௌஹீத் என்றும், சுன்னிகள் என்றும், இஹ்வானுல் முஸ்லீம்கள் என்றும், தப்லீக் என்றும், தரீக்கா என்றும் பலகோணங்களில் முஸ்லீம்களின் ஒற்றுமையை முஸ்லீம்களே கடந்தகாலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார்கள். எந்த பள்ளிவாசலிலாவது கொள்கை ரீதியற்ற முறையில் தொழுகை நடாத்தப்படுகின்றதா? மாற்று மத்தினரின் இந்தக் கடும்போக்குக்கு இந்த நாட்டில் வாழும் ஒருசில முஸ்லீம்களும் காரணமாக அமைந்திருக்கின்றார்கள் என்பதைத்தான் அன்று ஜனாதிபதி அவர்களும் கூறியிருந்தார். பேசாமடந்தையாக வாழும் நிலைமை மாறி சமூகப்பற்றார்களாக முஸ்லீம் சமூகம் அடிமட்டத்திலிருந்து விழித்தெழவேண்டும். 

அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள், அரசியல் அதிகாரங்கள் எல்லாம் இந்த சமூகத்தின் நலனைக் காக்கவில்லை என்றால் அதனை உதறித் தள்ளி எறிவதில் பிற்போக்காக இருக்கவே கூடாது. முஸ்லீம் சமூகமே எப்போது நீ விழித்தெழப் போகின்றாய். உண்னை குத்திக் குதறிவிடும்போது வாயில் சொட்டும் தேனின் இனிப்புக்காக குடல்வெளியே வந்தாலும் வாயில் இருக்கும் இனிப்பு முடிவதற்குள் எத்தனை நிமிடம்தான் உன் உயிர் இருக்கப்போகின்றது. மனிதா! உன்னையும் உனக்குப் பின்னாலுள்ள சமூகத்தின் இருப்புக்கும் களங்கம் ஏற்படுமாக இருந்தால் அதனைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் வாயிலிருந்து வெளியாகவில்லை என்றால் இதனால் நீ இருந்து என்ன பயன்? என்பதை நன்றாக சிந்தி! ஒற்றுமைப்பட்டு நமது குரலை மொத்தமாக உயர்த்துவோம்!  நமது ஒற்றுமையை நம்பிக்கையை கட்டியெழுப்புவோம்!!



1 comment:

Powered by Blogger.