Header Ads



முஸ்லிம் காங்கிரஸ்: மடையும், மந்திரமும்..!



(தம்பி)

'ஆப்பிழுத்த குரங்கின் கதை' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பிரச்சினையை நாமே தேடிச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு உதாரணமாக அந்தக் கதையைச் சொல்வார்கள். அரசாங்கம் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் உள்ளதாக கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் மேடைகளில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பேசிக் கொண்டு திரிந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆப்பிழுத்த குரங்கின் கதையை மிகச் சுருக்கமாக, 'நெருப்பை அள்ளித் தலையில் கொட்டுதல்', 'சொந்தச் செலவில் சூனியம் வைத்தல்' என்றும் சொல்வார்கள். 

அரசியல் அரங்கில் தற்போது மு.கா.வின் நிலையும் இதுதான். மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அரசாங்கத்தோடு ஒட்டி விடுவார்கள் எனும் பயம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு இருந்தது. அதைத் தடுக்க வேண்டும் என்று கூறி மு.காங்கிரசை இந்த ஆட்சியில் அவர் இணைந்துக் கொண்டார். அந்த தீர்மானம்தான் மு.காங்கிரசை இன்று மாபெரும் புதை குழியில் வீழ்த்தி விட்டிருக்கிறது.  

ஆப்பிழுத்த குரங்குக்கும் - அரசாங்கத்தோடு இணைந்து கொண்ட மு.கா.வுக்கும் இன்று அதிக வித்தியாசமில்லை. அரசு 'வெட்டு'கின்ற 'மடை'க்கு - மு.காங்கிரஸ் இன்று மந்திரம் ஓதிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களைக் குஷிப்படுத்துவதற்காக மு.காங்கிரசின் தலைவர் தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை - ஏகத்துக்கு காவடியெடுத்தாடுகின்றனர். மு.கா.வின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, சிலவேளைகளில் கோமாளித்தனமாகவும் தெரிகிறது.

'கட்சியைப் பாதுகாத்தல்' என்பதற்கும் 'கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாத்தல்' என்பதற்கும் வித்தியாசம் புரியாமல் - அரசுக்கு முட்டுக் கொடுக்கப் போனதால் மு.கா. தலைவருக்கு வந்த வினைதான் இதுவாகும். 

இதன் காரணமாக அரசும், ஆட்சியாளர்களும் எதைச் செய்தாலும் எதிர்த்துப் பேச முடியாத நிலைக்கு இன்று மு.கா. தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் மு.கா.வால் மூச்சு விடக்கூட முடியாமலுள்ளது. அனுராதபுரம் மல்வத்து ஓயா பகுதி பள்ளிவாசல் மீது அண்மையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அங்கிருக்கும் முஸ்லிம்களை வெளியேறிச் செல்லுமாறு சிங்கள இனவாதிகள் அச்சுறுத்தல் விடுத்தனர். ஆனால், மு.காங்கிரஸ் இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எவற்றினையும் இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள இனவாத நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் அரசும், ஆட்சியாளர்களும் தொடர்பு பட்டுள்ளார்கள் என்கின்ற குற்றச்சாட்டொன்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதனால் இவ்விவகாரத்தினை 'பாம்புக்கும் நோகாமல் கம்புக்கும் நோகாமல்' மு.காங்கிரஸ் கையாள நினைக்கிறது. 

உதாரணமாக, சிங்கள இனவாதிகள் மேற்கொண்டு வரும் முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளை மு.காங்கிரசின் அண்மைய பேராளர் மாநாட்டில் கண்டிப்பதாகக் கூறி தீர்மானமொன்றினை நிறைவேற்றியிருந்தார்கள். அந்தத் தீர்மானத்துக்கான வார்த்தைகள் தெரிவுசெய்யப்பட்ட விதத்தினை வைத்தே, மு.கா.வின் மனநிலையினை நாம் புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது, 'தேசிய இனமான முஸ்லிம்களுக்கு எதிராக சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் இன, மத, பொருளாதார, பண்பாட்டுத் தளத்திலான அச்சுறுத்தல்கள் குறித்த ஒரு மெல்லிய அவதானத்தினையும், தமது அதிருப்தியையும் மு.கா. வெளிப்படுத்துகிறது' என்பதுதான் அந்தத் தீர்மானமாகும். 

உண்மையில் முஸ்லிம்களுக்கெதிராக சமகாலத்தில் நடத்தப்பட்டு வரும் சிங்களப் பேரினவாதிகளின் செயற்பாடுகள் ஆழமான அவதானிப்புகளுக்குரியவை, மிகக் கடுமையான கண்டனங்களுக்குரியவை. ஆனால், மு.காங்கிரஸ் மெல்லிய அவதானத்தினையும், அதிருப்தியினையும் மட்டுமே வெளிப்படுத்தியிருந்தது. 

வெளிப்படையாகக் சொன்னால், சிங்களப் பேரினவாதச் செயற்பாடுகளை உரத்த குரலில் கண்டிப்பதற்கு மு.கா. தயங்குகிறது. அவ்வாறு கண்டித்தால் ஆட்சியாளர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்று அந்தக் கட்சி அச்சப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்துக்குள் மு.காங்கிரசின் தேவை எதற்காக உணரப்பட்டதோ, அதை நிறைவேற்றுவதில் இருந்து மு.கா. விலகிச் சென்று கொண்டிருக்கிறது. தனித்துவமான அரசியல் கட்சியாக இருந்த மு.காங்கிரஸ் இன்று – பத்தோடு பதினொன்றாகியுள்ளது. 

தமிழ் மக்களிடையே த.தே.கூட்டமைப்பு எப்படியோ – அதுபோலதான், முஸ்லிம்கள் மத்தியில் மு.காங்கிரஸ் என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பல தடவை கூறியிருந்தார். ஆனால், த.தே.கூட்டமைப்பின் கொள்கைப் பிடிப்பும், ரோசமுள்ள அரசியல் போக்கும் மு.காங்கிரசிடம் இருக்கிறதா என்றும் தலைவர் ஹக்கீம் தேடிப்பார்த்தல் வேண்டும் என்று நம்மிடம் கூறிச் சிரித்தார் நண்பரொருவர். 

தமது அரசியல் எதிராளிகளான கருணா அம்மானும், பிள்ளையானும் அரசுடன் இணைந்து அரசியல் செய்கிறார்கள் என்பதற்காக – த.தே.கூட்டமைப்பு அதே மாதிரியான அரசியலை செய்து பார்க்க விரும்பவில்லை. ஆனால் அதாஉல்லாவும் றிசாத் பதியுத்தீனும் அரசோடு ஒட்டிக் கொண்டு செய்கின்ற அரசியலைத்தான் - மு.காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பார்த்தால், அமைச்சர் அதாஉல்லா மற்றும் றிசாத் பதியுத்தீன் ஆகியோரது அரசியலைத்தான் மு.கா.வும் செய்கிறது – என்றுதானே அர்த்தமாகிறது. 

இன்னொருபுறம் அரசாங்கத்தோடு மு.காங்கிரஸ் எத்தனை நெருக்கம் காட்டினாலும், மு.கா.வை ஆட்சியாளர்கள் கரண்டிக் காலுக்குக் கீழேதான் வைத்துப் பார்க்கின்றனர். மு.கா. தம்மோடு இணைந்ததால்தான் இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு எனும் பலத்தினை நாடாளுமன்றத்தில் பெற முடிந்தது. 18 ஆவது அரசியல் திருத்தத்தினை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. திவிநெகும சட்டம் அமுலுக்கு வந்தது. ஷிராணியுடனான கௌரப் போரில் வெற்றி கொள்ள முடிந்தது. இத்தனையிருந்தும், முஸ்லிம் சமூகத்துக்குத் தேவையான அல்லது மு.கா. ஆதரவாளர்களுக்கு வேண்டிய எதையும் மு.கா.வால் நிறைவேற்றிக் கொள்ள முடியவேயில்லை. 

இதற்கு மிக எளியதொரு உதாரணத்தைக் கூறலாம். நாடு பூராகவுமுள்ள பிரதேச செயலகங்களில் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரசாங்கம் இணைத்துக் கொண்டமை பற்றி நீங்கள் அறிவீர்கள். அவர்களில் ஒரு தொகுதியினருக்கு பொருளாதார அமைச்சுடன் இணைத்து நிரந்தர நியமனம் வழங்கப்பட்டன. ஆனாலும், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்திலுள்ள சில பயிற்சிப் பட்டதாரிகள் மேற்படி நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறினார்கள். தாங்கள் மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதாலேயே இவ்வாறு புறக்கணிக்கப்பட்டோம் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்கள். இப் பிரதேசத்திலுள்ள அமைச்சர் அதாஉல்லா மற்றும் அவரின் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை அமைச்சர் உதுமாலெப்பை ஆகியோர் அவர்களின் கட்சி ஆதரவாளர்களான பயிலுநர் பட்டதாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிரந்தர நியமனத்தினை வழங்கி விட்டதாகவும் புகார் தெரிவித்தனர். 

உண்மையில், இந்த நியமனமானது அரசியல் ரீதியாக வழங்கப்பட்டது என்பது உண்மைதான். அமைச்சர் அதாஉல்லா அபிவிருத்திக் குழுத் தலைவராக உள்ள பகுதிகளில் தனது ஆதரவாளர்களுக்கு இந்த நியமத்தில் முன்னுரிமை வழங்கினார். அதேபோன்று, மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அபிவிருத்திக் குழுத் தலைவராக உள்ள கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகங்களில் மு.காங்கிரஸ் ஆரவான பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 

ஆனாலும், அட்டாளைச்சேனை என்பது மு.காங்கிரசின் கோட்டையாகும். மு.காங்கிரசின் ஆட்சியில்தான் அட்டாளைச்சேனை பிரதேச சபை உள்ளது. இவ்வாறானதொரு பகுதியில் அமைச்சர் அதாஉல்லா வந்து எவ்வாறு மு.கா. ஆதரவாளர்களைப் புறக்கணிக்க முடியும் என்பதுதான் - பாதிக்கப்பட்டோரின் ஆதங்கமாகும். ஒருவகையில் இந்த ஆதங்கம் நியாயமானதுதான். ஆனாலும், இந்த விவகாரத்தில் அமைச்சர் அதஉல்லா மீது எவ்வித குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது. தனது கட்சியின் ஆதரவாளர்களை மேற்படி நியமனத்தில் அதாஉல்லா முன்னிலைப்படுத்தியதில் தவறேதும் இல்லை. முடிந்தால் மு.கா. தலைவர் ஹக்கீமும் அதைச் செய்திருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யவேயில்லை. 

சரி விடயத்துக்கு வருவோம். நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படும் பட்டதாரிகள் இது விடயமாக மு.கா. தலைவர் ஹக்கீமை கொழும்பு சென்று சந்தித்தனர். தமக்கு நீதி பெற்றுத்தருமாறு மன்றாடினார்கள். வழமை போல், அவர்களின் குரலினை ஹக்கீம் 'வலது காதால் கேட்டு இடது காதால் விட்டு விட்டார்'. இது விடயமாக, மு.காங்கிரசின் பேராளர் மாநாட்டில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் உள்ளிட்ட பலர் பகிரங்கமாக பேசினார்கள். ஆனால், ஆனது ஒன்றுமில்லை. 

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனைக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் வந்திருந்தார். கட்சி முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் தலைவருக்கு காலைச் சாப்பாடு. தலைவர் அங்கிருப்பதை பாதிக்கப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்கள் அறிந்து கொண்டார்கள். உடனே ஹக்கீம் இருந்த இடத்துக்கு கூட்டமாக வந்தனர். இந்த இடத்தில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்குமிடையில் வாக்கு வாதம் இடம்பெற்றது. ஹக்கீமுடைய இந்தப் பொடுபோக்குத்தனத்தினால் மு.காங்கிரசுக்கு ஆதரவான பல பட்டதாரிகள் அமைச்சர் அதாஉல்லாவோடு இணைந்து விட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. இப்படியே போனால், இன்னும் பல பட்டதாரிகள் அமைச்சர் அதாஉல்லாவோடு இணைந்து விடுவார்கள் என்று மு.கா. ஆதரவு பட்டதாரிகளால் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஹக்கீம் கூறிய பதில் என்ன தெரியுமா? 'கட்சியை விட்டுப் போகின்றவர்கள் போகட்டும். நோ ப்ராப்ளம். அதைப்பற்றிப் பிரச்சினையே இல்லை'. ஹக்கீமைச் சந்திக்கச் சென்ற பட்டதாரிகளில் ஒருவர் மு.காங்கிரசில் பித்துப் பிடித்தவர். ஹக்கீமை யாரும் விமர்சித்தால் தாங்கவே மாட்டார். நேற்று அவரைச் சந்தித்தபோது, மு.கா. தலைவர் ஹக்கீமை ஒருமையில் திட்டியவாறே நடந்தவற்றைச் சொன்னார். 

அரசாங்கத்தில் மு.காங்கிரசின் நிலைவரமும், ஆதரவாளர்களுடன் மு.கா. தலைவரின் நிலைப்பாடும் இப்படித்தான் இருக்கிறது. மு.கா. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தங்கள் தட்டுக்களைக் காப்பாற்றிக் கொண்டாலே போதும் என்கிற நிலையில் உள்ளனர் என்பதுதான் யதார்த்தமாகும். 

விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக கதைகள் வருகின்றன. இந்த மாற்றத்தின் போது, அமைச்சு மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதே மு.கா. தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இப்போதைய ஒரே இலக்காகும். அப்படியொரு பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக இவர்கள் அடிக்கும் ஜால்ராக்களை ஊடகங்களில் நீங்கள் காணலாம். இதன் உச்ச கட்டம்தான், 'நீதிமன்றங்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் அருவருப்பாக உள்ளன'  என்று மு.கா. தலைவர் கூறியதாகும். ஷிராணி விவகாரத்தின்போது நாடாளுமன்றத்தில் வைத்து மு.கா. தலைவர் ஹக்கீம் இதைக் கூறினார். இப்படிக் கூறுவதால் ஆட்சியின் உயர்மட்டத் தலைவர்களை குளிர்விக்கலாம் என்று ஹக்கீம் எண்ணியிருக்கக் கூடும். ஆனால், ஒரு சிரேஷ்ட சட்டத்தரணியாகவும், இந்த நாட்டின் நீதியமைச்சராகவும் ஹக்கீம் அவ்வாறு பேசியமையானது பலரை அருவருக்கச் செய்திருந்தது. 

இவற்றினை நாம் எழுதுவதால், ஹக்கீமும், மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்குள் வருகின்றார்கள் என்று அர்த்தமல்ல. மு.காங்கிரசில் வந்து வாக்குக்களைப் பெற்றுக் கொண்ட உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாணசபைகளின் பிரதிநிதிகள் அதிகமானோரின் மனப்போக்குகள் இப்படித்தான் உள்ளன. 

அண்மையில், நண்பரொருவர் ஒரு விடத்தைக் கவலையோடு பகிர்ந்து கொண்டார். கிழக்கு மாகாணசபையின் சில மு.காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருக்கும் நேரத்தை விடவும் கன்ரீன் (சிற்றுண்டிச்சாலை) அருகே புகைத்துக் கொண்டிருக்கும் நேரமே அதிகமாகும் என்கிறார். 'சபையில் இருந்தால் மட்டும் அவர்கள் எதைப் பேசிக் கிழித்து விடப் போகிறார்கள' என்று பதிலுக்குக் கேட்டார் அருகிலிருந்த மற்றைய நண்பர். 

இப்படித்தான் இருக்கிறது மு.கா.வின் நிலை. இதைப் படிக்கும் போது உங்களுக்கு நிச்சயமாகக் கோபம் வரும், அடுத்த தேர்தலுக்கு இவர்கள் வரட்டும் என்று நீங்கள் கோபப்படுவீர்கள். அல்லது, நாளை சந்தித்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க வேண்டும் போல் உள்ளுக்குள் ஒரு உசுப்பு ஏறும். ஆனால், 'ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்...' என்கிற பாடலை ஒலிக்க விட்டவாறு தலைவர் கைகை உயர்த்திக் கொண்டு வரும் போது, இந்தக் கோதாரிகளையெல்லாம் நீங்கள் மறந்து விட்டிருப்பீர்கள்!!
·




10 comments:

  1. 100% i am agree your statement brother

    ReplyDelete
  2. Superb............ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ............ ............. விட்டுக் கொடுக்கவும் மணமில்லை விடவும் மணமில்லை............. சிறந்த தலைமைத்துவம் இருந்தது போதும் என்று! இனியும் இல்லாமல் ஆகி விடுமோ ????

    ReplyDelete
  3. இவனுகள் அப்பவே அந்தமாதிரி
    தேர்தலும் முடிஞ்சி...
    இனி கேக்கயா வேணும் ..!
    இதை தான் செய்வார்கள் எறும் தேர்தலின் முன்னும் சொல்லி இருந்தோம் யாரும் கேட்கவில்லை.
    இதனால் தான் அக்கரைப்பற்று மக்கள் நயவஞ்சக மு.கா. தலைவர் நோன்பு திறக்க வருவதையே தடுத்தார்கள் . அட்டாளைச்சேனை மக்கள் இன்னும் புரியவில்லை இந்த மு.கா. தலைவரை பற்றி என்பது தான் வருத்தத்திற்கு உரிய விடையம்.

    ReplyDelete
  4. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - பாராளுமன்ற உறுப்பினர்கள்

    1) ரவூப் ஹக்கீம் - தலைவர்
    2) பசீர் சேகு தாவூத் - தவிசாளர்
    3) ஹசன் அலி - செயலாளர்
    4) பைசல் காசீம்
    5) ஹரீஸ்
    6) தௌபீக்
    7) அஸ்லம்
    8) ஹுனைஸ் பாரூக்

    இவ்வளவு பேரும் எத்தனை கட்சியில், எத்தனை முறை இணைவீர்கள் ?


    இவர்களின் கதை "ஆப்பு இழுத்த குரங்குகள்" அல்ல இவர்களின் கதை "ஆப்புடன் சென்று ஆப்பு இழுத்த குரங்குகள்"

    நாளைய இவர்களின் அறிக்கை -

    மு.கா பா.உ -
    நாங்க ஓடுகிற பஸ்சிலேயே "GAN" மாதிரி நிப்போமில்ல.

    வடிவேலு - யாருக்கு இப்ப நஷ்ட்டம் ?

    மு.கா பா.உ - வாக்குப்போட்ட பாவப்பட்ட மக்களுக்கு.

    ReplyDelete
  5. இது ஒரு கசப்பான உன்மை.

    ReplyDelete
  6. neengal solwathu oru wagaiyil sari entraalum,ithu saaththiyam aagatha wali. en entraal entraya arasaippagaiththukkondu ethuwum panna mudiyaathu...!

    ReplyDelete
  7. குறைந்த பட்சம் . தலைவரின் வார்த்தை ஜாலங்களை குறைத்தால் நல்லது ...

    ReplyDelete
  8. ஆம் சகோதரர் ஹமீத் இது கசப்பான உண்மைதான் வெட்கமில்லாத தன்மானம் இல்லாத கோமாளித்தனமான அரசியல் செய்கிறார் றவூப் ஹகீம் அல்லாஹ்வைப்பயப்படுகிறாரோ இல்லியோ அவர் மஹிந்த கொம்பனிக்கு அடிமையாகவே இருக்கிறார் சகோதரர் இனாமுல்லாஹ் சொன்னதுபோல் முஸ்லீம்கள் அரசியல்வாதிகளின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் இறங்கவேண்டும் தேவைப்பட்டால் அவர்களை கல்லெறிந்து கொள்ளவும் தயங்க கூடாது

    ReplyDelete
  9. கதையில் வரும் குரங்குகள் - ஆப்பை இழுக்கும்போது வாலை விட்டன .

    இப்படித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் - ஆப்பை இழுக்கும்போது தலையை உள்ளே விட்டார்கள்.

    இதில் யார் புத்திசாலி கதையில் வரும் குரங்குதானே?

    ReplyDelete
  10. karuthu therivikkum neenkal inth naaddil inraiya sool nilai therinthal velankum, oodikkundiruppavanukkuthan therium aathan vethanai

    ReplyDelete

Powered by Blogger.