Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கான ஊடக தேவை..!


(எம்.பௌசர் - லண்டன்)

மிக நீண்டகாலமாய் இலங்கை முஸ்லிம்களுக்கான சுயாதீன ஊடக தேவையும் அவசியமும் குறித்த கதையாடல்கள் நிகழ்ந்துவருகின்ற போக்கு நமக்குள் தொடர்கிறதே ஒழிய, அந்த முக்கிய தேவையை நிவர்த்திக்கின்ற வகையில் அதன் பெறுபேறுகள் அடையப்பட முடியாமல் போகின்ற கைதேசம் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தொடர்வதே நடைமுறை யதார்த்தமாக உள்ளது.

நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், உலகமயமாக்கல் விளைவின் பின்புலத்திலும் உலகின் பல்வேறு தேசங்களும், இனங்களும்,சமூகங்களும் தமக்கேயான சுயாதீன ஊடகங்களையும் தொடர்பாடல்,கருத்துப்பகிர்வு,கருத்துருவாக்க வலைப்பின்னல்களை கொண்டிருக்கின்ற நிலையில் இந்த முக்கியவெற்றிடம் இலங்கை முஸ்லிம் சமூக மட்டத்தில்  தொடர்ந்தும் நிலவுவது மிகவும் குறைபாடான போக்கேயாகும்.

ஆகக்குறைந்த அளவில் அச்சு ஊடகம் ஒன்றைத்தானும் பரந்துபட்ட வகையிலும்,பன்முகத்தளத்தில் நம்மால் ஸ்தாபிக்கமுடியாது இருப்பதற்கான சமூகவியல் காரணிகளையும் சமுகப்பலவீனங்களையும் கவனத்தில் எடுத்து அவற்றினை சீர்படுத்த முயற்சிப்பது முஸ்லீம் சமூக சக்திகளின் கடமையாகும். ஏலவே நமக்குள் வெளிவந்த,வெளிவந்து கொண்டிருக்கும் அச்சுப்பத்திரிகைகள் முஸ்லிம்களுக்கான ஊடகத்தேவையில் ஒரு பகுதியை பூர்த்திசெய்தாலும் முழுமையான பரிமானத்தினையும் வளர்ச்சியையும் இன்னும் எட்டவில்லை என்பது நமக்கு தெரிந்த உண்மைதான்.

மிகநெருக்கடியான அரசியல் சமூக நிலவரங்களை எதிர்கொள்ள வரலாறு நிர்ப்பந்திக்கின்ற இன்றைய காலகட்ட  இலங்கை முஸ்லிம்களுக்கு ,பலமான ஊடகம் என்பது அத்தியவசியமான உடனடித்தேவையாகும்.அரசியல் ,பொருளாதார,பண்பாடடுத் தளத்தில்  ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம், இந்த ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கும் தமது நியாயங்கள், அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கும், அகத்தினுள் உள்ள சமூக வெளியை மக்கள் மயப்படுத்துவதற்கும் தமக்கான ஊடகம் இன்றியமையாத அவசியத் தேவையாக உள்ளது.

இந்த ஊடகத் தேவையின் உருவாக்கம் நமக்குள் உள்ள முஸ்லீம் அரசியல் தலைமைகளால் உருவாக்கப்படும் என நம்பி இருப்பது இருட்டு அறையில் கறுப்பு மணியைத் தேடும் கதைதான். ஏனெனில்  இந்தப்பணியை இவர்கள் மேற்கொண்டு வருகின்ற குழப்பகரமான அரசியல் நிலைமைக்குள் செய்ய முடியாது. தமது இருப்பிற்கும் அரசியல் நலன்களுக்கும் எதிராக மாறிவிடும் சாதனத்தினை இவர்கள் உருவாக்கத் துணியர். ஆகவே இந்தப்பணியை சமூக சக்திகள்தான் முன்கை எடுத்து செய்ய வேண்டிஉள்ளது. 

இந்த இடத்தில்தான் நாம் யாழ் முஸ்லீம் இணையத்தளத்தினை திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதன் சமூகப்பணியும், சமூக அகத்தினுள் அது கிளர்த்துகின்ற உணர்வுகளும் அதன் வகிபாகமும் இன்றைய நிலையில் முக்கியத்துவமான ஒரு செயன்முறையாகவும் ,அதன் விரிந்த தளம் நமது ஊடக பணிக்கு முன்னுதாரணமான உள்ளகப் பண்புகளையும் கொண்டதாகவும் உள்ளது.

ஒரு அரசியல் சமூக மாணவன் என்கிற அடிப்படையில், .யாழ் முஸ்லீம் இணையத்தின் கடந்த இரண்டு வருட காலப் பணியையும் பங்களிப்பினையும்  பின்வரும் மூன்று முக்கியத்துவமான விடயங்களை முன்னிறுத்தி  மதிப்பிட  முடியும் என நினைக்கிறேன்.

01.இலங்கை அரசாங்கம் தன்னை முழுமையாக சிங்கள சோவனிச அரசாக பண்பு மாற்றம் செய்து கொண்டதன் பின் விளைந்துள்ள, விளைந்து வருகின்ற நிலைமைகள்,

02 தமிழ் தேசியவாதத்தின் முஸ்லிம்கள் தொடர்பான அதன் செயற்பாடுகள்,கடந்தகால ஒடுக்குமுறை வடிவம்.

03.அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்,அதன் பின்னான போக்குகள்.

  இந்த நிகழ்வுகளில் தளத்தில், யாழ் முஸ்லீம் இணையம்

* சமூக அகத்தினுள் உள்ள பல்வேறு கருத்து நிலைகளை பகிர்ந்து கொள்வதற்கான தளமாக இருப்பது அதன் விசடத்துவமான பண்பாகும். முஸ்லீம் மக்களுக்குள்  பல்குரல்களை அது வெளிப்படுத்துகிறது

*.அரசியல் தலைமைகளின் அரசியல் தவறுகளை அது துணிச்சலாக சுட்டிக்காட்டி கேள்விக்குட்படுத்துகிறது. 

*. குரல் மறுக்கப்பட்ட மக்களின் உணர்வினையும்,அவர்களது கருத்துக்களையும் வெளிக்கொணரும் தளமாக இருக்கிறது.

* பல்வேறுபட்டவர்களை எழுத தூண்டுகிறது, கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது, அபிப்பிராயங்களை உருவாக்குகிறது,கட்டமைக்கிறது, ஏலவே உள்ள அபிப்பிராயங்களை குலைத்துப் போடுகிறது அல்லது மறு பரிசீலனை செய்யக் கோருகிறது.

இதன் விளைவாக நமது சமூகத்தளத்தில் புதிய சிந்தனை உருவாக்கத்திற்கும், கருத்தாடலுக்கும், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் விவாதிப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமான வாசலை திறக்கிறது. மக்கள் விழிப்புணர்வின் கண்ணிகளை முகிழ்க்கிறது

இதுவே ஒடுக்கப்படுகின்ற ஒரு மக்கள் திரளுக்குள் இருந்து எழுகின்ற  ஒரு தேசிய ஊடகத்தின்  இலட்சணமும் பண்பும் ஆக இருக்கமுடியும்,இந்த வகையில் யாழ் முஸ்லீம் இணையத்தின் பங்கு பெரிது. அதன் பணி பெரும்பாலான வாசகர்களால் உள்வாங்கப்படவும் இவை காரணமாக உள்ளது என்றே நம்புகிறேன்.

இறுதியாக, அறிஞர் சித்திலெப்பையால்  1882 இல் முஸ்லிம்களுக்கான சுயாதீன ஊடகத் தேவையின் தொடக்கமாக முஸ்லீம் நேசன் வெளிவந்தது. காலவோட்டத்தில் 130 வருடங்கள் கடந்தும் இன்னும் நம்மால் ஒரு தேசியப்பத்திரிகையை உருவாக்க முடியவில்லை.இந்த 130 வருடங்கள் என்பது இலங்கை முஸ்லீம் சமூகத்திற்குள் எவ்வளவோ வளர்ச்சியையும் மாற்றங்களையும் முன்னேறிய சமூகப் பிரிவினரையும் உருவாக்கியுள்ளது, ஆனால் ஏன் இன்னும் நம்மால் இந்த ஊடகத் துறையில் வளர்ச்சியை காண முடியாதுள்ளது என்கிற கேள்வியை நாம் எல்லோரும் சுயவிசாரணையாக தமக்குள் கேட்பது அவசியமானது என நான் நம்புகிறேன்.

 யாழ் முஸ்லீம் இணையம் தனக்கு முன்னுள்ள வரலாற்றுப் பாத்திரத்தினை உணர்ந்து மேல் செல்ல வேண்டும் என்பதே ஊடக முக்கியத்துவத்தினை உணர்ந்தோரின் வேண்டுதலாக இருக்கும். உங்கள் பணியை நாம் மதிக்கிறோம். தொடர்ந்தும் முன்நோக்கி செல்லுங்கள்..!

2 comments:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    யாழ் முஸ்லிம் இணையத்தளம் அனைத்து முஸ்லிம் கட்சிகளாலும் பல்வேறு கருத்து முரண்பாடுடையவர்களாலும்
    பாராட்டப்படக்கூடிய ஒரு ஊடகமாக வளர்ச்சியடைந்துள்ளது .அல்ஹதுலில்லாஹ். எனவே இவ்வூடகத்தை
    வழி நடாத்தும் சகோதரர்களே ஏனைய முஸ்லிம்களுக்கான பல்வேறு ஊடகங்களையும் ஆரம்பித்து
    வழி நடாத்தினால் அது இன்ஷா அல்லாஹ் வெற்றிகரமாக அமையும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும் .

    ReplyDelete
  2. Mr.Fouzer is in the right track. What he said is 100% correct. There are so-many Muslim rich investors in this country.Considering welfare of our community would they do something for this long felt need Muslim Media problem

    ReplyDelete

Powered by Blogger.