Header Ads



யாழ்ப்பாண சோனகதெரு ஜனாஸா பள்ளியின் காணியை என்ன செய்யலாம்..?


(எம்.எஸ்.ஜே) 

1744 ஆம் ஆண்டு நல்லூரிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் யாழ்ப்பாண சோனகதெரு பிரதேசத்தில் குடியிருந்தனர். அக்காலத்தில் அவர்களில் யாராவது மரணித்தால் அப்போது காட்டுப் பிரதேசமாக விளங்கிய குளத்தடி பிரதேசத்தில் மையத்துக்கள் அடக்கப்பட்டு வந்தது. மையத்துக்கள் அடக்கப்படும் இடம் தாழ்ந்த பிரதேசமாக இருந்ததால் சின்னக்குளம் மற்றும் பெரிய குளம் என்பன வெட்டப்பட்டு அங்கிருந்து அள்ளப்பட்ட மண் தற்போதுள்ள மையவாடியின் மேல் கொட்டப்பட்டு மையவாடி உயர்த்ப்பட்டது. 

1950களில் ஏற்பட்ட ஒரு வாக்கு வாதத்தை அடுத்து பெரியதெருவைச் சேர்ந்தவர்கள் குளத்தடி பிரதேசத்தில் மையத்துகளை அடக்கம் செய்வதை தவிர்த்து பெரிய பள்ளிவாசல் வளவில் அடக்கம் செய்தனர். இவ்வாறு சில மையத்துக்கள் அடக்கப்பட்ட நிலையில் இடப்பற்றாக்குறை ஏற்படும் எனக் கருதிய சிலர் சின்னப்பள்ளி ஜனாஸா பள்ளி நிர்வாகி மர்ஹும் எம்.சேகு மதார்  தலைமையிலான குழுவைச் சந்தித்து மீண்டும் மையத்துக்களை குளத்தடி பிரதேசத்தில் அடக்க இடமளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதற்கு பதிலாக மையவாடிக்கு சில காணிகளை வாங்கித்தருவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இந்த உடன்பாட்டின் பிரகாரம் வாங்கப்பட்டதே பெரிய குளத்துக்கு முன்னாலுள்ள ஜனாஸா பள்ளிக்கு பக்கத்திலும் பின்னாலுமுள்ள நிலங்களாகும். இந்நிலங்களை வாங்குவதில் மூன்று பேர் பெரும்பாடு பட்டனர். அவர்களில் மர்ஹும் நீதவான் அப்துல்காதர் முன்னின்று செயற்பட்டார். மற்றவர்களின் பெயர்கள் ஞாபகமில்லை. 

அவ்வாறு வாங்கப்பட்ட காணியின் ஒரு பகுதி மண் நிரப்பப்பட்டு உயர்த்தப்பட்டதுடன் அங்கு பெரியதெருவைச் சேர்ந்தவர்களின் ஜனாஸாக்கள் மட்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது.  குளத்தடிப் பிரதேசத்தில் இருந்த அப்போதைய இளைஞர் குழு  இந்தச் செயற்பாட்டை ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் எனக் கருதி பெரியதெரு மையத்துக்களை மற்றைய பகுதிகளில் அடக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.  இதனால் தெருப் பாகுபாடுகள் சற்று தனிந்து ஊர் ஒற்றுமையாக இருந்தது. இக்காலத்தில் மையவாடிக்காக வாங்கியிருந்த எஞ்சியிருந்த காணித்துண்டுகள் யாழ் சின்னப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அந்தக் காணிகளுக்கான உறுதியில் அந்தக் காணி மையத்துகளை அடக்க மட்டுமே பாவிக்கப்பட பட வேண்டுமென்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டுள்ளது. 1980களில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் சனத்தொகை 16000 பேர்களைக் கொண்டதாக விளங்கிய நிலையில் ஏற்கனவே உள்ள மையவாடி பல வருடங்களுக்கு போதுமானதாக இருந்தது. இந்நிலையில் மேலதிக இடம் அப்போது தேவைப்படவில்லை. 

இதனைக் கருத்தில் கொண்டு அப்போதிருந்த சின்னப்பள்ளிவாசல் நிர்வாகசபை அக்காணிகளில் தற்பாலிக கொட்டில்களை அமைத்து வீடற்ற சிலருக்கு அவற்றை வழங்கியிருந்தது. இந்தக்காணிகளை மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் காலப்பகுதியில் அந்தக் காணிகளை வழங்கிய சிலர் சின்னப்பள்ளி நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததுடன் அவர்களில் ஒருவர் பள்ளி நிர்வாக சபையிலும் இருந்தார் என நினைக்கின்றேன்.   இதனையறிந்தும் அக்காணிகளில் ஒரு பகுதியை வழங்கியிருந்த  அப்போது உயிருடனிருந்த நீதவான் அப்துல்காதர் (ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி) போன்றவர்கள் எதுவும் சொல்லவில்லை. அவர் யதார்த்தத்தை உணர்ந்து சம்மதத்தை மௌனமாக காட்டியிருக்கலாம். முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 1990 ஓக்ரோபர் 30ஆம் திகதி வரை அப்பிரதேசத்தில் சில குடும்பங்கள் குடியிருந்தன. ஆனால் யாருக்கும் உறுதிகள் வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கவும் சட்டப்படி இடமில்லை. 

அண்மையில் சிலர் அக்காணிகளை பிடித்ததால் மீண்டும் இவ்விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மையவாடிக்கென அன்பளிப்புச் செய்யப்பட்ட இடத்தில் மக்களை குடியேற்றலாமா என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகிறது. இந்தக்காணிகள் வழங்கப்பட்டு நான்கு தசாப்தங்களை கடந்து விட்ட றிலையில் அங்கு மையத்துகள் எதுவும் அடக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. உண்மையில் காணி வாங்கப்பட்ட நோக்கம் மையத்துகளை அடக்குவதாக இருந்தாலும் தற்போதைய சூழ் அடுத்த இருபது, முப்பது வருடங்களுக்கு அந்தக் காணிகள் மையத்துக்களை அடக்க தேவைப்படாது. சில வேளை முற்றாக தேவைப்படாமலும் போகலாம். ஏனெனில் ஏற்கனவே அடக்கப்பட்ட இடத்தில் ஐந்து வருடங்களின் பின்னர் மீண்டும் மையத்துகளை அடக்க முடியும் என்பது நோக்கப்படல் வேண்டும். இதனால் திரும்பத் திரும்ப இப்போதுள்ள மையத்துகள் அடக்கும் பிரதேசத்தை சுழற்சி  முறையில் பாவிக்க முடியும். எனவே மையத்துக்கென வழங்கப்பட்ட காணி தற்போதைக்கு தேவைப்பட மாட்டாது.

இக்காணிகளை மக்களுக்கு வழங்குவதாயின் அது வாங்கப்பட்ட நோக்கம் அதன் நன்மைகளும் வாங்கியவர்களுக்கு போய்ச் சேருமா என்ற கேள்வி எழும்புகின்றது. உண்மையில் இறைவனுக்காக செய்யப்படும் செயல்கள் அம்மனிதர்களின் உள்மனதிலுள்ள எண்ணத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இக்காணிகளை வழங்கிய மூதாதையர்களின் நோக்கமும் மக்களுக்கு பிரயோசனப்பட வேண்டும் என்பதாக இருந்துள்ளது. ஆனாலும் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக அவற்றிலிருந்து எந்த பிரயோசனத்தையும் மக்கள் அனுபவிக்கவில்லை என்பது உணரப்பட வேண்டும். தொடர்ந்தும் அக்காணிகள் யாருக்கும் பிரயோசனமற்றதாக இன்னும் பல தசாப்தங்கள் இருக்க வேண்டுமா என்ற தீர்மானத்தை மக்கள் தான் எடுக்க வேண்டும்.   

அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுகின்றான்: 

''இறைவழியில் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும் அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருப்பவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு. இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துக்கமும் அடைய மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 2:262)

மாற்றுத் திட்டம் என்ன?

இப்பிரதேசம் யாருக்கும் பிரயோசனமின்றி காணப்படும் இவ்வேளையில் அடுத்த நூற்றாண்டுக்கும் அது தரிசு நிலமாக இருக்க விடலாமா அல்லது அதன் மூலம் சமூகத்தில் சிலர் நன்மையடையட்டுமா என்ற முடிவை அக்காணிகளை அன்பளிப்புச் செய்தவர்களின் வாரிசுகள்  எடுக்க வேண்டும். இக்காணிகள் மையத்துகள் அடக்கும் காலம் வரை அப்பிரதேசம் ஏதாவது வருமானமொன்றை சமூகத்தின் பொதுச் சொத்து ஒன்றுக்கு வழங்க முடியுமாயின் அது ஒரு சிறந்த நடவடிக்கையாகும். இன்று பள்ளிவாசல்களுக்காக வழங்கப்பட்ட காணிகளில் எத்தனையோ வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளன. இது காலத்தின் தேவை ஏற்பட்ட ஒரு மாற்றம். ஆனால் இதை வழங்கியவர்களின் உள்ளத்திலிருந்த எண்ணத்துக் கேற்ப அந்தக் காணிகளை பள்ளிவாசல்களுக்கு வழங்கிய நன்மை அவர்களுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதே போன்றதான ஒரு தீர்மானத்துக்கு தற்போதைய வாரிசுகள் வரவேண்டிய கட்;டாயத்தில்  உள்ளனர். 

இந்தக் காணிகளில் வீடுகளைக் கட்டி அவற்றை வாடகைக்கு வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பள்ளிவாசலுக்கு  வழங்குவதன் அவர்களுக்கு கிடைக்கும் நன்மையை இரட்டிப்பாக்கலாம். முதலாவது வகை நன்மை காணியை மையவாடிக்கு வழங்கியதற்காக கிடைக்கும். இரண்டாவது வகை நன்மை பள்ளிவாசல் ஒன்றை நன்றாக  இயங்க வைக்க வருமானத்தை வழங்கியதற்காக சதகத்துல் ஜாரியா என்ற நிலையான நன்மை  கிடைக்கும்.  அவ்வாறில்லா விடின் அந்நிலத்தை விவசாயத்துக்காக வழங்கி அந்த நிதியை பொதுத் தேவைகளுக்கு பயன் படுத்தலாம். ஆனால் அந்நிலம் உப்புத் தரையாக காணப்படுவதால் விவாசாயம் எதுவும் அதில் செய்ய முடியாது. ஆனால் வீடுகளை பெரும் கட்டிடமாக கட்டாமல் சிறிய அமைப்பில் அறைச் சுவர் போட்டு நிலத்துக்கு கொங்கிறீட் இட்டு கட்டிக் கொடுக்கலாம். அல்லது வெறும் நிலத்தை சிறிய வாடகைக்கு கொடுத்து காணியை பாவிக்க விரும்புபவர்களே தமது தற்காலிக வீடுகளை அமைத்துக் கொள்ள அனுமதிக்கலாம். பள்ளிவாசல் மூலமாகவே சகல கட்டுப்பாடுகளையும் விதித்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தற்போது வாரிசுகள் இடம்பெயர்ந்துள்ளமையினால் ஏற்படக்கூடிய அனைத்து வசதிக்குறைவுகளையும் நிவர்த்தி செய்யலாம்.     

 மேலும் வக்ப் ஆக வழங்கப்பட்ட ஒரு சொத்தை விற்பது கூடாது. ஆனால் அதன் பிரயோசனம் முஸ்லிம் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் இறைவன் குறைபிடிக்க மாட்டான். இன்று யாழ்ப்பாண முஸ்லிம்களில் மீளக்குடியேறியுள்ள சிலர் காணிகள் இன்றி உள்ளனர். அவர்களில் தொழுகையாளிகளுக்கும் ஏழைகளுக்கும் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் காணிகள் அற்றவருக்கும் வசிப்பதற்காக இந்த காணிகளை கொடுக்கலாம். (அதன் வாடகை வருமானத்தை பள்ளிவாசலுக்கு அளிக்கலாம். அல்லது மையவாடியை பராமரிக்கும் செலவுகளுக்காக அப்பணத்தை செலவளிக்கலாம்). மேலும் உடனடியாக குடியேறக் கூடியவராகவும் அந்த நபர் இருக்க வேண்டும்.  அதன் மூலமாக யாழ்ப்பாணத்தில் புதிதாக இருபது குடும்பங்களை குடியேற்றலாம். இதன் மூலமாக தொழக் கூடியவர்கள் பெருகி மஸ்ஜிதுகள் செழிப்பாகும். ஒஸ்மானியா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். மக்களை மீளக்குடியேற்றுவதன் மூலமாக முஸ்லிம்களின் இடம் பாதுகாக்கப் பட வேண்டுமென்று விரும்பும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் எண்ணமும் நிறைவேறும். 

யா அல்லாஹ் எனது கருத்துக்களில் தவறுகள் இருந்தால் அவற்றை மன்னித்தருள்புரிவாயாக! ஆமீன் .

7 comments:

  1. சகோதரர் m s j நீங்களே!வரலாற்றையும் சொல்லி,நீங்களே,காணி அன்பளிப்பு செய்தவர்களையும் சொல்லி,நீங்களே குர் ஆன் வசனத்தையும் சொல்லி ,என்ன செய்யலாம் என்று அழகான முறையால் விளங்க படுத்தி உள்ளீர்கள்.பொது சொத்து என்பதால் யோசனை கேட்டுள்ளீர்கள் {சிலர் கேட்பது இல்லை}கொடுத்தவர்கள் யாராவது இதை கேட்டு வருவார்களா?அல்லாஹ்விற்கு பயப்படுவார்களே!மைய வாடிக்கு அன்பளிப்பு செய்தது சின்னப்பள்ளிவாசளுக்கே உரியது.மையவாடியெய் பராமரித்தது சின்னப்பள்ளிவாசல் நிர்வாகம்தான்.எனவே அக்காணிகளை இடம் இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து அதன் வருமானத்தை
    பள்ளிக்கும்,மற்ற பொது தேவைகளுக்கும் பயன் படுத்தலாம்
    என்பது எனது அபிப்பிராயமாகும்..அல்லாஹ் மிக அறிந்தவ.ன்.

    ReplyDelete
  2. இந்த விவகாரத்தை பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பது நல்ல விடயம்தான்.

    எனினும், இந்த விடயத்தில் நமக்கிருக்கும் அறிவை மட்டும் வைத்துக் கொண்டு நாமாகவே ஒரு முடிவுக்கு வந்து விடுவது பொருத்தமாகப் படவில்லை. இதில் அவசரப் பட்டு முடிவு எடுக்கத்தேவையில்லை.

    இந்த விடயத்தை (வரலாற்றை அல்ல, விடயத்தை மட்டும்) அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் பத்வாக் குழுவுக்கு எழுதி, (அல்லது அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு) அவர்களின் தீர்ப்பைப் பெற்றுக் கொள்வதே சிறந்த வழிமுறையாக இருக்கும். நமது புத்திகளுக்கு எட்டிய விதமாக ஒரு தீர்வை எடுப்பது சரியாகப் படவில்லை.

    ஒரு தேவைக்காக, அதனை குறிப்பிட்டு வக்பு செயப் பட்டதை இன்னொரு தேவைக்காக பயன்படுத்த முடியாது என்றே கேள்விப் பட்டுள்ளேன்.
    நான் கேள்விப் பட்டதனால் மட்டும் இது சட்டம் ஆகிவிட முடியாது. உரிய முறையில் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  3. யாழ்ப்பாணம் குளத்தடி முஸ்லிம் மையவாடிக்கென வக்ப் செய்யப்பட்ட காணிப் பகிர்வோடு தொடர்புடைய ஒரு சில உண்மைத் தகவல்களை மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் தேவை எமக்கு இருக்கின்றது குறித்த விடயத்தோடு தொடர்புடைய ஒரு சிலரின் பெயர்களை அவசியம இங்கே குறிப்பிட்டாக வேண்டும் என்பதாலும், குறித்த விடயம் “வக்ப்” என்னும் மார்க்க விடயத்தோடு தொடர்புடையது என்பதாலும் அவர்களையும் அவர்களது ஈடுபாடுகளையும் இங்கே குறிப்பிடுகின்றோம். தனிப்பட்ட ரீதியில் நோக்காது சமூகரீதியில் இதனை நோக்க வேண்டும் எனவும் மிகவும் ஆரம்பத்தில் இங்கே குறிப்பிடுகின்றோம். குறிப்பிட்ட நபர்களுடன் தொடர்புபடுத்தி இங்கே தரப்படும் கருத்துக்களில் மாற்றங்கள், அல்லது வேறு விளக்கங்கள் இருப்பின் அவற்றை இங்கு பதிவிடவும்.

    1980களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் குளத்தடிப் பிரதேசத்தில் பொம்மைவெளியுடன் அண்டியதாக முஸ்லிம் மையவாடியின் தேவை கருதி 13 1/2ப் பரப்பு நிலத்தை மீராப்பிள்ளை ஹாஜியார் அவர்கள் மீரானியா அரபுக் கலாசாலை நிர்வாகத்தின் பொறுப்பின் கீழ் இருக்கும் விதத்தில் பாராதீனப்படுத்திக் கொடுத்தார் (வக்ப் செய்தார்).

    ReplyDelete
  4. குறித்த காணியினை சின்னப்பள்ளிவாயல் நிர்வாகத்தினர் மேற்பார்வை செய்யும் ஒழுங்கையும், மீராப்பிள்ளை ஹாஜியார் அவர்களே ஒழுங்குபடுத்திக்கொடுத்தும் இருந்தார். அப்போதைய காலத்தில் மையவாடிக்கான தேவைகளுக்கு குறித்த காணி தேவைப்படவில்லை என்பதனால் 1980களில் குறித்த காணியில் ஒருவருக்கு 1/2ப் பரப்பு என்ற அடிப்படையில் 16 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிவாயல் நிர்வாகத்தினர் பகிர்ந்தளித்தனர்.

    அவ்வாறு பகிரப்பட்ட காணிகளில் 16 குடும்பங்கள் 1990 ஒக்டோபர் வெளியேற்றம் வரை வசித்தும் வந்தனர். அவர்களிடம் மாதாந்தம் சந்தாப் பணமும் குளத்தடி சின்னப்பள்ளிவாயலினால் வசூலிக்கப்பட்டது. இதனை அப்போது சின்னப்பள்ளிவாயல் நிர்வாகத்தினர் மீராப்பிள்ளை ஹாஜியாருடன் இணைந்ததாக மேற்கொண்டு வந்தனர்.

    1990களின் வெளியேற்றத்தின் பின்னர் குறித்த காணி காடுபடர்ந்து கவனிப்பாரற்று காணப்பட்டது. 1997 யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியபோது ஒரு பாரிய மணல் அரணொன்றினை குறித்த காணியை அண்டியதாக அமைத்தனர். இதனால் குறித்த காணியானது மிகவும் தாழ்ந்த பிரதேசமாக மாற்றம்பெற்றது. மழைகாலத்தில் சிறிய ஒரு குளமாகவே இது காட்சியளிக்கும்.

    2003களில் ஏ9 வீதி திறக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த ஒரு சில சமூக ஆர்வலர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற விரும்பும் காணியற்றோர்க்கு குறித்த காணியினைப் பகிர்ந்தளிக்க முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். இருப்பினும் அது சாத்தியமற்றுப்போயிற்று.

    ReplyDelete
  5. 2010களின் ஆரம்பத்தில் மீளக்குடியேற அழைத்துவரப்பட்ட ஒரு சில குடும்பங்கள் யாழ்.கதீஜா கல்லூரி, மொஹிதீன் பள்ளி மதரஸா, சின்னக் கதீஜா போன்ற பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுள் 12 குடும்பங்களுக்கு குறித்த மையவாடிக்குரிய காணியினை பகிர்ந்து மௌலவி சுபியான் அவர்கள் வழங்கினார். குறித்த 12 குடும்பங்களுக்கும் வக்ப் சபையின் அனுமதியும் பெற்றுத்தரப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. இருப்பினும் எவ்வித எழுத்துமூல ஆவணங்களும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் குறித்த காணியானது மீரானிய்யா நம்பிக்கை நிதியத்தின் பொறுப்பில் இருக்கும் காணியாகும் இதில் எவரும் குடியேற்றப்படுவதாயின் மீரானிய கல்லூரி நிர்வாகத்தின் அனுமதிபெறப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அப்போது மௌலவி சுபியானினால் குடியேற்றப்பட்டவர்கள் நிரந்தரக்கட்டிடங்கள் அமைக்கவோ அல்லது காணிகளுக்கு எல்லைகள் அமைக்கவோ அனுமதிக்கப்படவில்லை

    இதனைக் கருத்தில் கொண்ட சுபியான் மௌலவி அவர்கள் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு பிரதேச செயலாளரின் உதவியுடன் குறித்த காணியில் 30 குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கவென வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டது. சுபியான் மௌலவி அவர்கள் வக்ப் சபைக்கு இது குறித்து அனுமதியளிக்கும்படி கடிதம் ஒன்றினையும் எழுதினார். எனினும் அதன்பிரகாரம் காணிகள் பகிரப்படவில்லை.

    இதற்கிடையில் சுபியான் மௌலவியின் பின்னணியைக்கொண்ட சின்னப்பள்ளிவாயல் நிர்வாகம் தோல்விகண்டு புதிய நிர்வாகம் வக்ப் சபையினால் நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக செடோ ஜினூஸ் அவர்கள் பதவியேற்றார். எனவே குறித்த காணி விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. சின்னப்பள்ளிவாயல் புனரமைக்கப்பட்டு மீள்திறப்பு செய்யப்பட்ட பின்னர் குறித்த காணிவிவகாரம் குறித்து சின்னப்பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்த தயாரானது.

    இது இவ்வாறு இருக்க யாழ்ப்பாணம் சம்மேளனத்தின் புதிய தலைவர் நிலாம் அவர்கள் தன்னால் சமூகத்து ஏதேனும் நல்லது நடக்கவேண்டும் என்று நாடுபவர், அவர் ஒரு இரும்பு வியாபாரி, பல இரும்பு வியாபாரிகளின் முதலாளி. பொம்மைவெளி பள்ளிவாயலின் அதிரடித் தலைவரும் இவரே. இவரைக்கொண்டு இந்தகாணியின் விவகாரத்தை முடுக்கிவிட ஒரு சிலர் நாடினர். எனவே விடயத்தை கையில் எடுத்த நிலாம் அவர்கள் குறித்த காணியில் 40 குடும்பங்களை குடியேற்ற முடிவு செய்தார்.

    மிகவும் அதிரடியாக 40 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டன. அவர்கள் குறித்த காணியில் குடியேறுவதற்கு பொறுத்தமானவர்களா இல்லையா என்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. மீரானியா நிர்வாகத்துடன் கலந்து பேசப்படவில்லை, சின்னப்பள்ளி நிர்வாகத்தின் கருத்து அறியப்படவில்லை, முறையான பயனாளிகள் தெரிவுகள் இடம்பெறவில்லை, வக்ப் காணியாது முறையாக அளக்கவோ பகிரப்படவோ இல்லை. எனவே இது ஒரு முறைகேடான நடவடிக்கையாகும். என மக்கள் கருதுகின்றனர். அத்துடன் 1990களுக்கு முன்னர் குறித்த காணியில் குடியேறியிருந்த 16 குடும்பங்களும் என்ன பதில் கிடைக்கப்போகின்றது என்ற கேள்வியோடு இன்னும்பல கேள்விகளும் இருக்கின்றன.

    ReplyDelete
  6. குறித்த காணிப்பகிர்வின்போது எழுகின்ற ஐயப்பாடுகள்
    01- வக்ப் செய்யப்பட்ட காணியானது பொத்துத்தேவைகள் தவிர்த்து தனிப்பட்ட தேவைகளுக்காக வழங்கப்படும்போது கைக்கொள்ளவேண்டிய முறைமைகள் இங்கே கவனிக்கப்பட்டதா
    02- ஏன் மழைக்காலத்தில் இவ்விடயம் சூடுபிடிக்கின்றது?
    03- பகிரப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளும் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்?
    04- ஒரு குடும்பத்திற்கு 3.5 பேர்ச் என்னும் சிறு அளவு நிலமே வழங்கப்படுகின்றது. இதனால் வடிகால், மற்றும் மலசகூடம், குடிநீர் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படப்போகின்றது? அத்துடன் ஒரு நெரிசலான குடுசனப்பரம்பல் குற்றச்செயல்களுக்கும் சமூக விரோத செயல்களுக்கும் வழிசெய்யாதா?

    இந்த நிலையில் குறித்த காணியானது வக்ப் செய்யப்பட்ட பொதுத்தேவைக்குறிய காணியாகும் அப்படியாயின் யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் வட்டாரத்தின் வரலாற்றைப் பகிரும் ஒவ்வொருவருக்கும் இந்தக் காணியில் உரிமை இருக்கின்றது. நாம் எல்லோரும் இது குறித்து எமது நிலைப்பாடுகளை முன்வைக்கவேண்டும். அதன் பிரகாரம் இவ்விடயத்தினை யாழ்ப்பாணம் முஸ்லிம் சம்மேளனம் முன்னின்று தீர்த்துவைப்பதுவே சாலப்பொறுத்தம்.
    முஹம்மத்- நீர்கொழும்பிலிருந்து

    ReplyDelete
  7. தயவு செய்து மீரானியாக் கல்லூரியின் நிர்வாக சபையின் பொறுப்பாளர்கள் யார்? அவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா? அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களே இப்பிரச்சினையை தீர்க்கலாமே.
    வக்ப் செய்யப் பட்ட சொத்துக்கள் அத்தேவைக்காகவே பாவிக்கப் பட வேண்டும் என்பது சரியான கருத்து. ஆனால் அவ்வாறன காலம் வரும் வரை தற்காலிகமாக அவற்றை பிரயோசனப் படுத்துவது தானே நல்லது.
    மற்றது மூன்றரை பர்சஸ் காணி எதட்கும் போதாது. ஒரு ஆறு பேர்ச்சஸ் காணியாவது வழங்கப் படவேண்டும் என்ற கோரிக்கை சரிதான். ஆனால் அதைவிட இதை ஒரு தொடர் வீட்டுத்திட்டமாக ஒன்றுடன் ஒன்று சேர்த்து கட்டினால் கூடுதலானவர்களுக்கு வாடகைக்கு கொடுக்கலாம். (இந்தச் சொத்தை பங்கிட முடியாது) . அதே வேலை பெண்களுக்கு தனியான டோயிலட் தொகுதி ஆண்களுக்கு தனியான டோயிலட் தொகுதிகளை அமைப்பதன் ஊடாக கலாச்சாரத்தை பாதுகாக்கலாம். வீடுகளை தொடர் வீடுகளாக கட்டினாலும் ஒவ்வொரு இருபது அடி அகலமான வீட்டுக்கு முன்பக்கத்திலும் பின் பக்கத்திலும் கிடுகு வேலிகலையோ அல்லது தகரங்கலையோ பாவித்து வேலி அமைப்பதன் மூலமாகவும் கலாச்சார சீரழிவுகளை தடுக்கலாம். .
    கட்டுரையை ஆக்கிய எம் எஸ் ஜே சரியான ஒரு விடயத்தைத் தான் சுட்டிக் கட்டியுள்ளார். ல வாக்ஸ் சலீம் மொஹிடீன் போன்றவர்களின் கருத்தும் வரவேட்கக் கூடியதே. ஆனால் காணி சம்பந்தமான சகல தகவல்களையும் முகம்மது ஆர் நீர்கொழும்பு அவர்கள் கூறியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து குறிப்பிட்ட மீரானிய நிர்வாகத்தை சந்தித்து பேசி ஒரு முடிவுக்கு வரலாமே. செடோ ஜிநூஸ் பள்ளிவாசல் நிர்வாகத்தை இலகுவாக மேட்கொள்ள நியமிக்கப் பட்ட ஒரு பிரதிநிதி. பள்ளி நிர்வாகம் சம்பந்தமான சில முடிவுகளை எடுக்க (உதாரணமாக கதீபை நியமிப்பது போன்ற முடிவுகள்) மட்டுமே அவருக்கு முடியும். காணியை பங்கிடும் உரிமையோ அதிகாரமோ அவருக்கு கிடையாது. இவ்வாறன பல வழக்குகள் வக்ப் சபையில் உள்ளது. வக்ப் சட்டமும் அதைத் தான் கூறுகின்றது. மீரானிய நிர்வாகம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை செயத் படுத்த சின்ன பள்ளி நிர்வாகத்துக்கு முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.