Header Ads



வாக்காளர்களின் கவனத்திற்கு...!

 
06-09-2012 அன்று வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்
 
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவிருக்கின்றன. தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களிலேயே தேர்தல்கள் நடைபெறுகின்றன. இருந்தபோதிலும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலே அதிகம் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.
 
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த மாகாணத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் சகல தரப்புகளுமே உறுதியாகவுள்ளன. கிழக்கை மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம் சிறுபான்மை மக்கள் தமக்கு ஆதரவாகவே உள்ளார்கள் என்பதை சர்வதேசத்துக்குச் சொல்ல வேண்டும் என்பதில் அரசாங்கம் குறியாகவே இருக்கிறது. ஆனாலும் அரசாங்கத்தைத் தோற்கடித்து தாமே வெற்றி பெற வேண்டும் என்பதில் சிறுபான்மைக் கட்சிகள் உறுதியாகவுள்ளன.
 
அரசாங்கத்தால் தனித்து நின்று ஆட்சியமைக்க முடியாத நிலையில் நிச்சயம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை அரசு கோரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகபட்ச ஆசனங்களைக் கைப்பற்றும்பட்சத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் கைகோர்க்குமாயின் இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடக்கி வைக்கக் கூடியதாகவிருக்கும். ஆனாலும் மத்திய அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் எந்தளவு தூரம் துணிச்சலானதொரு முடிவை எடுத்து கூட்டமைப்புடன் கைகோர்க்கும் என்பது கேள்விக்குறியே.
 
கிழக்கு மாகாணமானது சிறுபான்மை மக்கள் தம்மைத் தாமே ஆள வேண்டும் என்பதற்காக இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலம் தோற்றுவிக்கப்பட்டதேயாகும். ஆனால் இன்று கிழக்கையும் ஆளுவது பெரும்பான்மையினர்தான் என்பதே கசப்பாயினும் உண்மையாகும்.
 
இறுதியாக ஆட்சியிலிருந்த கிழக்கு மாகாண சபையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே முதலமைச்சராக அரசாங்கம் நியமித்த போதிலும் அவருக்கு எந்தவித குறிப்பிடத்தக்க அதிகாரங்களையும் வழங்கியிருக்கவில்லை. மாறாக அவர் ஒரு பொம்மை ஆட்சியாளராகவே செயற்பட்டு வந்தார். இம் முறை தேர்தலிலும் அரசாங்க தரப்பு ஆட்சியமைக்குமாயின் முதலமைச்சராக நியமனம்பெறும் சிறுபான்மையினத்தவரும் அங்கு பொம்மை ஆட்சியையே நடத்த வேண்டிய நிலை வரும் என்பது திண்ணம்.
 
கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபையானது இன்று அதன் நோக்கத்திலிருந்து முற்றாக மாறி வெறும் அபிவிருத்திக்கான நிதிஒதுக்கீடு செய்கின்ற சபையாகவே செயற்பட்டுவருவது கவலைக்குரியதாகும். புதிதாக அமையப் பெறவுள்ள மாகாண சபையும் இவ்வாறான நிதிஒதுக்கீட்டு நிறுவனமாகவே செயற்படுமாயின் அவ்வாறானதொரு மாகாண சபைக்காக மக்கள் வாக்களிப்பதில் பயனேதுமில்லை.
 
இன்று மாகாண சபை உறுப்பினர் பதவி என்பது பணம் சம்பாதிப்பதற்கும் கொந்தராத்து வழங்குவதற்குமான ஒரு பதவியாகவே நோக்கப்படுகிறது. அதனால்தான் அப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக பல இலட்சங்களைச் செலவு செய்து ஆளையாள் அடித்துக் கொண்டு தேர்தலில் வாக்குப் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
அடுத்த சகோதரனின் இரத்தத்தை ஓட்டி உடைமைகளுக்கு சேதம் விளைவித்தேனும் மாகாண சபையில் இடம்பிடித்துவிட வேண்டும் என துணிந்து நிற்பதற்கான காரணம் அப்பதவி மூலம் கிடைக்கும் அதிகபட்ச இலாபங்களைக் கருத்திற் கொண்டயோகும். இந்த துரதிஷ்டநிலை அடுத்த மாகாண சபையிலேனும் மாற்றம் பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
 
அவ்வாறானதொரு மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் பணத்திற்கும் பதவிகளும் சுகபோகங்களுக்கும் விலை போகாத மக்களின் உரிமைகளுக்கான குரல் கொடுக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.  கடந்த காலங்களில் நாம் வாக்களித்து மாகாண சபைக்கு அனுப்பிய பிரதிநிதிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை சீர்தூக்கிப் பார்த்து தற்போது களத்தில் நிற்பவர்களின் தரம் தராதரம் கடந்த கால அரசியல் பதிவுகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டே நாம் வாக்களிக்க வேண்டும்.
 
தெற்காசிய நாடுகளில் இன்று தலைதூக்கியுள்ள ‘நோட்டுகளுக்காக வாக்குகளை விற்கும்’ கலாசாரத்திற்கு நாமும் ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது. அவ்வாறானதொரு இழிநிலைக்குள் நாம் அகப்படுவோமாயின் நமதும் நமது சந்ததியினதும் எதிர்காலத்திற்கு நாமே படுகுழியைத் தோண்டுவதாக அமைந்துவிடும்.
 
தேர்தலைப் பொறுத்தவரையில் முஸ்லிம் வாக்காளன் ஒருவன் ஏனைய சமூக வாக்காளனைவிடவும் கூடுதலான பொறுப்புக்களைச் சுமந்துள்ளான். வாக்களித்தல் என்பது அல்லாஹ்வின் முன்னிலையில் சாட்சி சொல்வதாகும். ‘நான் இந்தத் தேர்தல் மூலம் தெரிவு செய்யும் பிரதிநிதி அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றமாக செயற்படமாட்டார் என உறுதியளிக்கிறேன்’ என்றே நாம் வாக்களிப்பதன் மூலமாக மறைமுகமாக சாட்சி சொல்கிறோம்.
 
துரதிஷ்டவசமாக நாம் தெரிவு செய்யும் பிரதிநிதி அல்லாஹ்வுக்கு மாறு செய்பவராக இருப்பாரேயானால் அவர் செய்யும் அத்தனை பாவங்களுக்கும் நாமும் பொறுப்பாளிகள் என்பதை மறந்துவிடக் கூடாது.
 
வாக்காளர்கள் மேற்சொன்ன விடயங்களை கவனத்திற்கொள்வார்கள் என நம்புகிறோம்.

No comments

Powered by Blogger.