Header Ads



நிகழ்கால அரசியலுக்குத் தேவைப்படும் மர்ஹும் அஷ்ரப்

 
கலாபூஷணம் எஸ். எம். சஹாப்தீன்
முன்னாள் தேசிய அமைப்பாளர் - ஸ்ரீ ல.மு.கா

நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் மக்களுக்கு அவநம்பிக்கையை அன்றாடம் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அரசியற் தலைமைத்துவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவனவாகயில்லை. நாளுக்கொரு அறிக்கைளூம், ஆளுக்கொரு கட்சி  கொள்கை - திட்டம் என்று, பிரிந்தும் - உறவுகள் முறிந்துமே காணப்படுகின்றனர். காரியமாற்றுகின்றனர். இந்நிலையினால் மக்களின் நம்பிக்கை நாளிலும் பொழுதிலும் நசிந்தும் - நலிந்துமே போயக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் மக்கள் - குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் தம் எதிர்காலம் குறித்து அச்சம் அடைந்தவர்களாய் - மிச்சம் மீதமிருக்கும் உரிமைகளையும் இழந்து விடுவோமோ என்ற விரக்தியில் மனம் வெதும்பி காணப்படுகின்றனர். இத்தகு சூழலில், 'கடந்த காலங்களில் எப்படியெல்லாம் வாழ்ந்தோம்? எம்மைத் தலைவர்கள் எவ்வாறெல்லாம் வழி நடத்திச் சென்று கரைச்சேர்த்தார்கள்? அரசியல் உரிமைகளை எந்த வழிகளில் எல்லாம் பெற்றுப் பெரும்பயன் அடைந்தோம்? என சமுதாயம் பழைய காலத்தைத் திரும்பிப் பார்ப்பது தவிர்க்க முடியாதது மட்டடுமல்ல, தட்டிக்கழிக்க முடியாததும் ஆகும்.

இப்படித் திரும்பிப் பார்க்கும்போது, இன்றைய சூழலில் - சுழன்றடிக்கும் அரசியல் சூறாவளியில் சிறுபான்மை சமூகங்கள் - அதிலும் 2ஆவது சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும்? எவ்வாறான அரசியல் பாதையை வகுக்க வேண்டும்? எத்தகைய பயணத்தை மேற்கொள்ளவேண்டும்? என்ற வினாக்கள் எம்முன் எழுகின்றன. இந்த வினாக்களுக்கு விடை காணத்துணியும் போது, ஒரு கப்பலுக்கு மாலுமி போலும், ஒரு படையணிக்குத் தளபதி போலும், சமுதாயத்தை தக்க வழியில் வழிநடத்திச் சென்று, கரை சேர்க்க பொருத்தமான ஒருவர், தலைவராக வரவேண்டுமே என்ற கவலை சார்ந்த எதிர்பார்ப்பு ஏற்படுவது சகஜமேயாகும்.

நம் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய தலைவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் மனத்தராசில் வைத்து எடைபோட்டுப் பாரத்தால், உண்மையின் யதார்த்தம் சற்றென புரிந்துவிடும். அரசியலின் அலங்கோலத்தின் அசைவுக்கேற்ப, தலைவர்கள் காய் நகர்த்துவதும் - காரியம் பாரப்பதும் நடைமுறையில் பின்பற்றத்தகும் நடைமுறைகள்தாம் என்றாலும் - எந்த நடவடிக்கையானாலும் சமுதாயத்தின் நன்மை கருதியதாகவே செயற்பாடுகள் அமையவேண்டும். அப்படி அமையாவிட்டால், சமுதாயம் மென்மேலும் சோதனைகளையும் - வேதனைகளையும் சந்திப்பதே வழக்கமாகத் தொடருமானால், சமூகம் நிகழ்காலத் தலைமைகளை பழைய தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து 'அவர் இருக்கும் காலத்தில் நிலைமை இப்படியில்லையே' என ஒப்பிட்டறியத் துவங்கிவிடும்.

இப்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போது 'நிகழ்கால அரசியல் நிலவரங்களை சாணக்கியமாகவும், சாதுர்யமாகவும் சமாளித்து, சமூகத்திற்கு நன்மைகளை தேடித்தர தனித்துவத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் இன்றில்லையே' என ஏங்கும் நிலை ஏற்படவே செய்கிறது. இது இயல்பான  சிந்தனையுமாகும்.
 
இந்த இடத்தில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற சமுதாய இயக்கத்தை (1981ல்) துவக்கி, ஐந்தாண்டுகளின் பின் அதனை அரசியற் கட்சியாக தேர்தல் ஆணையாளரால் (1986ல்) அங்கீகரிக்கச்செய்து, எத்தனையோ அரசியல் சூறாவளிகளையும், சுனாமிகளையும் எதிர்நோக்கி, வெகு நிதானமாக காய் நகர்த்தி, தொடரான சேவைகளை சமூகத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாக அடுக்கிச் சென்ற தனித்துவத்தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின்  வாழ்வையும் - அவர் வாழ்ந்த வரலாற்றையும் திரும்பிப் பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

நம் நாடு சுதந்திரம் (1948) பெற்றதுமுதல் 1986 வரையிலான காலப்பகுதியில் - அதாவது 38 வருடங்களாக இந்நாட்டு முஸ்லிம்கள் பேரினவாதக் கட்சிகளின் கரைகளிலேயே ஒதுங்கியும் - ஓரமாகியுமே தேர்தற் காலங்களில் மட்டும் தேடப்படும் பொக்கிஷங்களாகக் கருதப்பட்டுவந்த முஸ்லிம்கள், மற்ற காலங்களில் மிச்சசொச்சங்களை எதிர்பார்த்து நிற்கும் அரசியல் ஏழையர்களாகவே இருந்துவந்தனர். சிறுபான்மையிலும் சிறுபான்மை இனத்தவர்களாக வாழந்து வந்த முஸ்லிம்கள் இப்படியே ஒட்டி வாழ்ந்தாலே போதும் என்ற எண்ணப்பாங்கே, சமுதாயத்தின் சகல மட்டங்களிலும்  நிலைநிறுத்தப்பட்டது.

இந்த சராசரி மனநிலையை மாற்றவோ - மாற்றுச் சிந்தனையைத் தேடவோ எந்தத் தலைவரும் துணியாத  சூழலில் தான், ஒருவர் சிந்தித்தார்ளூ செயல்பட்டார்ளூ செயற்கரிய செய்து, தலைவர்களில் செம்மலாகத் திகழ்ந்து மறைந்தார். அவர்தான் - இன்று நினைவு கூரும், 12 வருடங்களுக்கு முன் நம்மையெல்லாம் விட்டு மறைந்த மர்ஹும் எம்.எச். எம். அஷ்ரப் ஆவார்.

இந்தத் தனித்துவத் தலைவர் அஷ்ரப் செய்த சேவைகளுள் தலையாயது என்ன தெரியுமா?

இங்கும் மங்குமாக சிதறிக்கிடந்த முஸ்லிம்களின் அரசியல் சக்திகளை ஒன்றுதிரட்டி, இந்நாட்டில் ஏற்படும் ஆட்சிகளை தீர்மானிக்கும் சக்திகளாக முஸ்லிம்களை பலப்படுத்தி, ஆட்சிப் பங்காளிகளாக மாறி, பேரம் பேசி, உரிமைகளை பெறுதலே, இனிவரும் காலங்களுக்கு ஏற்புடைய அரசியல் ராஜபாட்டையாக அமைய முடியும் எனத் தலைவர் அஷ்ரப் தூரநோக்கோடு சிந்தித்துத் தெளிந்தார்ளூ அதிலே தேர்ச்சியும் பெற்று சாத்தியப்படுத்திக் காட்டினார். இதுவே தலைவர் அஷரப் ஆற்றிய சேவைகளுள் சிறப்பானதாகும்.
இந்த மாற்றுவழிச் சிந்தனை நம் தலைவர் அஷரபுக்கு எப்படி வந்தது?

பக்கத்தே இருக்கும் இன்னொரு சிறுபான்மை இனத்தவர்களான நம் தமிழ் சகோதரர்கள், தங்களது எதிர்காலம் குறித்து சிந்திக்க தலைப்பட்டுவிட்டனர். தங்களுக்கான உறுதியான, உரிமையுடனான, உத்தரவாதமான ஓரிடத்தைப் பெறுவதற்காக பல்வேறு வழிகளில் (சத்தியாகிரகம் - பகிஷ்கரிப்பு- பேச்சுவார்த்தை - போராட்டம் எனப் பல வழிகளில்) முயற்சிக்கத் துவங்கி விட்டனர். அப்படியானால் இந்நாட்டிலுள்ள 2ஆவது சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம்களின் நிலை என்ன? இந்த சமூகத்தின்  எதிர்காலத்திற்காக பேரினவாதத் தலைவர்களையே தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருப்பது சாத்தியமாகுமா? சரிபட்டு வருமா?

'ஒரு சமூகம் தன்னிலையைத் தானே உணர்ந்து மாற்றத்தை நோக்கி நகராதவரை, அல்லாஹ் அச்சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை' என்ற - நாம் எல்லோரும் அறிந்து வைத்துள்ள அல்குர்ஆனின் சிந்தனை, நம் தலைவர் அஷ்ரபின் மனதில் ஆழப்பதிந்து, சதாவும் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டேயிருந்திருக்க வேண்டும்! சன்மார்க்க இஸ்லாமே இப்படி உறைக்கும்படியாக உருப்படியான சிந்தனையை, 1433 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கும் போது, நாம் சிந்திக்காதிருப்பது பெரிய துரோகமல்லவா?

இத்தகைய குர்ஆனிய சிந்தனையும், கண்முன் அல்லாஹ் தமிழ் சகோதரர்கள் மூலம் காட்டித்தரும் சூழ்நிலையுமே, நம் தலைவர் அஷ்ரபை, முஸ்லிம்களின் தனித்துவம் பேணி, அரசியற் பலத்தை  ஒன்றுதிரட்டி, எதிர்காலப் பயணத்தை நிர்ணயிக்கத் தூண்டின. அதன்விளைவே - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியற்கட்சி.

இன்றைய நிலை என்ன?

உள்ளங்கை நெல்லிக் கனிபோல, எல்லோருக்கும் பகிரங்கமாகத் தெரியும்படியாக, முஸ்லிம் அரசியற் சக்திகள் உதரிக் கட்சிகளின் நிழலில் சிதறிக் கிடக்கின்றன. எந்தத் தனிமனிதனையும் குறைகூறும் நோக்கிலன்றி, சமுதாய நலன்கருதி முன்வைக்கப்படும் யதார்த்த நிலை சிந்தனையே இதுவாகும். இந்த சிதறலின் விளைவாக  சின்னாபின்னமாகிப் போன முஸ்லிம்களின் சகோதரத்துவம் அரசியல் சக்தி கடந்த சில நாட்களுக்கு முன் அக்கறைப்பற்றில் இப்தார் குழப்பமாக - சகோதரர்களே கைகலக்கும் துர்பாக்கிய நிலையாக மாறியுள்ளது. 'இது தலைவர் அஷரப் இன்றிருந்தால் நடக்குமா?;' என்று சமுதாயத்தின் அடிமட்டத்து அங்கத்தவன் பாமரத்தனமாக சிந்தித்தால், அதில் கூட தவறில்லை அல்லவா?

'அரசியல் நிலைமைக்கேற்ப நிறம்மாறும் தன்மையுடையது. அரசியல் தலைவர்கள் இந்த மாற்றத்திற்கேற்ப மாறி மாறி நடப்பர். அதன்பின் ஒரே மேசையில் இத்தலைவர்கள் ஒன்று கூடி கை குழுக்குவர். இந்த நெகிழ்ச்சி நிலைமையைப் புரிந்து மக்கள் நடக்க வேண்டும். இந்த நெகிழ்ச்சி அரசியலுக்காக சொந்த சகோதரர்களைப் பகைத்துக் கொள்வதோ, சண்டையிடுவது புத்திசாலித்தனமல்ல.

நம் தலைவர் அஷ்ரப் அரும்பாடு பட்டு, அயராதுழைத்து முஸ்லிம்களை ஒன்றுபடுத்தினார். அரசியல் ரீதியில் சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம்களை சிந்திக்கத் தூண்டினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியற் கட்சியாக (1986ல்) அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து, ஆரம்ப காலத்தில் எதிர்நோக்கிய சில தேர்தல்களில் போதிய ஆசனங்களைப் பெறாதபோதும், இதன்வழி முஸ்லிம்கள் சிந்தித்து அரசியல் விழிப்புணர்ச்சி கண்டாலே போதும் எதிர்காலம் அவர்களுக்கு வெளுத்த வானம்போல் பளிச்செனத் திகழும் எனக் கனவு கண்டார் மர்ஹுமான தலைவர் அஷ்ரப்.

இந்தக் கனவை முஸ்லிம்கள் நிலையாகக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவர் ஆரம்பந்தொட்டு தான் மறையும்வரை, ஏறும் மேடைகள் தோறும் ஒன்றை வலியுறுத்தியே வந்தார். 'ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அக்கயிற்றை விடாதவரை உங்களில் எவரும் வழிதவற மாட்டீர்கள்.' என்ற நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சிந்தனையை வற்புறுத்தி முழங்கியதை, நாம் எல்லோரும் கேட்டோமே! அந்தக்குரல் இன்னும் நம் உள்ளங்களில் எதிரொலித்தவாறு இருக்கிறது என்பது உண்மையானால், அண்மையில் அக்கறைப்பற்றில் இப்தார் குழப்பம் ஏன் நடந்தது? எதற்காக நடந்தது?

அரசியல் நாளை மாறிவிடும். தலைவர்கள் ஒரே மேசையில் கைக்குலுக்குவார்கள். அவர்களுக்காக - பரம்பரையாக வளர்ந்துவந்த உறவைப் பகைத்து, பகைமை பாராட்டி கைகலந்தோமே....... எங்கே முஸ்லிம்களின் சகோதரத்துவம்? எங்கே தலைவர் அஷரப் ஒன்றுதிரட்டித் தந்த ஒற்றுமை! நாம் நம் தலைவர் அஷ்ரபை உளமாற நேசித்தது - 'நாரே தக்பீர்' என முழங்கி வாழ்த்தியது எல்லாம் பொய்யா? வேஷமா? சமுதாயப் போராளிகள் ஒவ்வொருவரும் தம் நெஞ்சிலே கைவைத்துக் கேட்டேயாக வேண்டிய வினா இது!

இப்போதும் குடிமூழ்கிப் போகவில்லை. நம்மை எல்லாம் தட்டி எழுப்பி, விட்டுப் போன ஒற்றுமை என்னும் கயிற்றை மீண்டும் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் எனக் கூவி எழுப்பவே, தலைவர் அஷ்ரபின் நினைவு தினம் - 12ஆவது முறையாக நம்மை நோக்கி வந்திருக்கிறது என நம்புவோமாக!
 
இன்றைய நாட்டு நிலைமையை -சமுதாயம் எதிர்நோக்கும் சவால்களை நாம் எல்லோரும் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம்களை  அரசியல் ரீதியில் தீயசக்திகள் பிரித்து வைத்துள்ளன. பதவிகளையும், பட்டங்களையும், படாடோப வாழ்வையும் தந்து நம் தலைவர்களை பேசமுடியாத மௌனிகளாகக் கட்டிப்போட்டுள்ளன. முஸ்லிம்களின் காணிகள் ஒவ்வொரு காரணங்களைக் காட்டி, கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. விரட்டப்பட்ட முஸ்லிம்கள் வடபுலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பிறந்த மண்ணில், மீளக் குடியமரவிடாமல் தடுப்பதற்காக - அதற்காகப் பாடுபடும் சக்திகளை முடக்கும் தகிடுத்ததங்கள் அரங்கேற்றப்படுகின்றன. பள்ளிவாசல்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு தொழுகை முதலாய சமயக்கிரியைகள் செய்யவிடாது தடுக்கப்படுகின்றன. இது போன்று வெளிச்சத்திற்கு வராத நிகழ்வுகள் பல, அன்றாடம் நடைபெறுகின்றன.

'இது பௌத்த நாடு விரும்பினால் இருங்கள் - இன்றேல் வெளியேறுங்கள்' என்று கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறியுள்ளதான செய்தி கடந்த 16.08.2012 'விடிவெள்ளி' இதழில் முதற்பக்கத்தில் வெளியாகியிருப்பது, முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் தலைமைகள் அவசியம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

இப்படியெல்லாம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவரும் நிலையில், உதிரிக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படுவதும், சண்டைப் பிடப்பதும், காட்டிக்கொடுப்பதும் விரும்பத்தக்கல்ல. சமூகத்தின் எதிர்கால நன்மைகளை உத்தேசித்து - தலைவர் அஷ்ரப் உருவாக்கித் தந்த முஸ்லிம்களின் அரசியல் சக்தியை மீண்டும் ஒன்று திரட்டி, ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவாகும் நிலையை, முஸ்லிம் தலைவர்கள் ஏற்படுத்த வேண்டும். தம் சுயலாப அனுகூலங்களை தனிவாழ்விலும் சரி, கட்சிநிலையிலும் சரி பெறுவதை விடுத்து, சமூகம் என்ற சுவர் இருந்தால் தான், சித்திரம் வரையலாம்ளூ நாமும் அரசியல் செய்யலாம் என்ற பொதுப்பார்வையில் தூரநோக்கோடு முஸ்லிம்கள் தலைவர்கள் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதைத்தான் 12ஆவது ஆண்டாக மலர்ந்துள்ள தலைவர் அஷ்ரபின் நினைவு நாள் வலியுறுத்த வந்திருக்கிறது. தலைவர் அஷ்ரபின் மீது நாம் உளப்பூர்வமான நேசிப்பு கொண்டிருப்பது உண்மையானால், இன்றைய நினைவு நாளில் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியில் ஒன்றிணைக்க உறுதிபூணுவோமாக. இதுவே நம் தலைவர் அஸ்ரபுக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும். இது குறித்து நாம் சிந்திப்போமாக!

 
 

1 comment:

  1. veenahe vimersppetey niruthivittu onrey mattum purindu kollungel, SLMC katchiyum athen thalaimeum muslim samoohethin nalenukkahevey kasteppattu kondirukkinretu atey pole edukkinre iruthi theermanamum muttru mulutahe muslimgelin nalanukkahevey ameyum!!! veenhe vimersippetai niruthungal!

    ReplyDelete

Powered by Blogger.