பிசாசுகளின் குகையில் ஒரு மந்திரவாதி..!
நூர் முஹம்மத்
கிழக்கு மாகாணசபை பற்றிய இறுதி தீர்மானத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நிலையில் மூன்று விதமான முடிவுகளில் ஒன்றைத்தான் எடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.
1. அரசுக்கு ஆதரவை வழங்குதல்
2. த.வி.கூ + ஐ.தே.க உடன் கூட்டணி அமைத்தல்
3. நடுநிலை வகித்து, தேவைப்படும் நேரங்களில் அரசுக்கோ எதிர்க்கட்சிக்கோ ஆதரவளித்தல்
இவை மூன்றிலும் உள்ள சாதக பாதகநிலைகளை அட்டவணைப்படுத்திப் பார்த்து அதனை தராசில் இட்டு, தீர்மானம் எடுப்பதே பொருத்தமானது.
1. அரசுக்கு ஆதரவை வழங்குதல்
சாதகம்
*மத்திய அரசில் தொடர்ந்து இருப்பதுடன் மேலதிக சில அமைச்சுக்களை பெறல். *மாகாண முதலமைச்சரை அல்லது இரண்டு மாகாண அமைச்சுக்களை பெற்றுக் கொள்ளுதல். *முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்த அணிகள் பலம் பெறுவதை தடுத்தல் *மத்திய அரசினதும் மாகாண அமைச்சினதும் நிதியுதவிகளுடன் அபிவிருத்திகளை மேற்கொள்ளல், தொழில் வாய்ப்புக்களை அளித்தல் * மத்திய அரசில் தொடர்ந்து இருப்பதுடன் மேலதிகமாக சில அமைச்சுக்களை பெறல் .
பாதகம்
*தமிழர் தரப்பினதும் எதிரணி அரசியல் வாதிகளினதும் மோசமான விமர்சனத்துக்கு முகம் கொடுத்தல். *முஸ்லிம்கள் மத்தியில் உள்ள அரச எதிர்ப்பு அலைக்கு ஆளாகி ஆதரவாளர்களின் கணிசமான தொகையினரை இழப்பது.
2. த.வி.கூ + ஐ.தே.க உடன் கூட்டணி அமைத்தல்
சாதகம்
*சிறுபான்மை மக்களின் ஆதரவு அரசுக்கு இல்லை என்பதை சர்வதேசத்துக்கு உணர்த்துதல் * இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுழற்சி முறையிலான முஸ்லிம் முதலமைச்சரை பெறுதல். *இரண்டு மகாண அமைச்சுக்களை பெறுதல் அல்லது ஒரு மாகாண அமைச்சரும் சபை முதல்வரையும் பெறுதல். *மாகாண அமைச்சு நிதி ஒதுக்கீடுகள் மூலம் அபிவிருத்திகளை முன்னெடுத்தல்.
பாதகம்
*மத்திய அரசு எடுக்கும் இனவாத அடக்கு முறையை தடுக்க முடியாத ஆனால் ஆர்ப்பாட்டங்களோடு அடங்கிபோக வேண்டிய துர்ப்பாக்கியம். *மு.கா விலிருந்து பிரிந்த அணியினருக்கு மத்திய அரசில் பலம் வாய்ந்த அமைச்சுக்களை பெற்றுக்கொடுத்தல். *மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் எதிரணி அரசியல் வாதிகள் செய்யும் அபிவிருத்திகள் காரணமாக ஆதரவாளர்களை இழத்தலும் எதிரணியை வளர்த்தலும். *பாதுகாப்பு படையினரினதும் பொலிஸினதும் அனுசரனையுடன் சிங்கள குடியேற்றங்களை அமைக்க வழிவகுத்தல்.
3. நடுநிலை வகித்து, தேவைப்படும் நேரங்களில் அரசுக்கோ எதிர்க்கட்சிக்கோ ஆதரவளித்தல்
சாதகம்
* அரசை தாஜா பண்ணுதல்.
பாதகம்
*வாக்களித்த முஸ்லிம் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை தவிடு பொடியாக்குதல். *முதலமைச்சர் பதவி உட்பட அனைத்து பதவி அமைச்சுப் பதவிகளையும் எதிரணிக்கு கொடுப்பதன் மூலம் அழிவைத் தேடுதல். * மத்திய அரசில் அங்கம் வகித்தாலும் தொடர்ந்தும் மாற்றாந்தாய் கவனிப்புக்கு ஆளாகி வருதல்.
மேலே அட்டவணை படுத்தப்பட்டவை முக்கியமான சில சாதக பாதகங்கள் மாத்திரமே தவிர இன்னும் பல காரணிகளை பட்டடியலிடலாம்.
மேலே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, அரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்பது தெளிவாகின்றது. இதை நிறுவுவதற்கு மேலும் சில விடயங்கள் பற்றி இங்கு சுருக்கமாக சொல்ல வேண்டியிருக்கிறது.
1. ஆட்சி அமைப்பதற்கான அறுதி பெரும்பான்மை 19 ஆசனங்களே. எதிரணியுடன் ஆட்சி அமைக்கும் பொழுது, ஆசன வித்தியாசங்கள் 4 மாத்திரமே (த.வி.கூ 11 + மு.கா. 7 + ஐ.தே.க 4 = 22, அரசு 14 + தே.மு 1 = 15) இந்த நான்கு ஆசனங்களை அரசு என்ன விலை கொடுத்தேனும் எந்த கட்சியிலிருந்தேனும் வாங்கும் பலத்தைப் பெற்றிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் எதிரணிக்கு ஆதரவு அளிப்பது என்கிற முடிவை அறிவித்த மறுகணமே இந்த பேரம் பேசல்கள் ஆரம்பமாகும். முடிவில் முஸ்லிம் காங்கிரஸ் நடுத்தெருவில் விடப்படும்.
2. அரசுக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லையென்பதை சர்வதேசத்துக்கு சொல்வதனால் நேரடியாக பலனடையப் போவது தமிழர் தரப்பே. முஸ்லிம்களுக்கு இதனால் நேரடி நன்மை எதுவும் கிடையாது.
3. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண சபைஉறுப்பினர்கள் கொண்டு வரும் சிங்கள சமூகத்துக்கு சார்பான பிரேரணைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் நிச்சயம் ஆதரவாக வாக்களித்தேயாக வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் பெரும்பான்மை இன மக்களின் மத்தியில் செல்வாக்கு இழந்து போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தன்னை மேலும் இக்கட்டுக்குள் மாட்டிக் கொள்ள கிஞ்சித்தும் விரும்பாது. ஆகையால் தமிழர் கூட்டணியுடன் கூட்டாட்சி அமைக்கும் முஸ்லிம் காங்கிரஸால் அரசின் முஸ்லிம் தரப்பு (?!) உறுப்பினர்களின் ஆதரவின்றி பெரும்பான்மை சமூகத்தின் இன விரோத செயற்பாடுகளை எதிர்க்க முடியாத கையாளகாத மாகாணசபையாகவே கிழக்கு மாகாணசபை இருக்கும்.
4. முஸ்லிம் காங்கிரஸுக்கு இப்போது இருக்கும் பேரம் பேசும் பலத்தைக் கொண்டு அரசுக்கு ஆதரவை வழங்குவதற்கு மேலும் இரண்டு விடயங்களை முதன்மைப்படுத்தி பெற்றுக் கொள்வது மிக முக்கியமானதாகும். முஸ்லிம் காங்கிரஸின் அம்முடிவை தமிழர் தரப்பு விமர்சனப்படுத்த முடியாத அளவிற்கு அவர்களின் வாயை கட்டிப் போடுவதுடன் பேரினவாதிகளுக்கும் சர்வதேசத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை நிருபிக்க முடியுமாகவிருக்கும். அவ்விரண்டு விடயங்களாவன.
அ. 13 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசை வற்புறுத்தி வெற்றி காணல்.
ஆ. கிழக்கு மாகாண ஆளுனர் சிறுபான்மை இனத்தவராக இருக்க வேண்டும் என்கிற நியதியை ஏற்படுத்துதல்.
கடந்த இரண்டு தினங்களாக பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் முகநூல்10 பக்கஙக்ளிலும் பிரதானமான இடத்தை முஸ்லிம் காங்கிரஸ் யாருடன் ஆட்சியமைக்க வேண்டும் என்கிற விடயமே ஆக்கிரமித்திருந்தது. இவற்றுள் கணிசமானோர் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்து ஆட்சியமைப்பதே சிறந்தது என்று சொல்லியிருந்த அதே நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தன் பேரம் பேசும் பலத்தைக் கொண்டு அமைச்சுப் பதவிகளையும், நிறுவன தலைவர் பதவிகளையும் முதன்மை படுத்துவதை விடவும், முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை சிங்கள குடியேற்றங்களால் ஏற்படும் பிரச்சினை, தொழில் வாய்ப்புக்கள் (மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட) ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணிகள் + சுவீகரித்த காணிகளுக்கான நஷ்டஈடு , பள்ளிவாயல்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தில் சுனாமி அகதிகளை குடியேற்றல்.... என்று பல்வேறுபட்ட விடயங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் தனது பேரம் பேசும் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
13வது அரசியல் சீர்த்திருத்தம் மாகாண அரசுக்கு வழங்கும் அதிகாரங்களை முஸ்லிம் காங்கிரஸ் தன் பேரம் பேசும் பலத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கும் போது, தனித்தனியாக இவ் இணையத்தள, முகநூல் அபிமானிகள் பட்டியல் இட்டிருக்கும் இவற்றுள் பெரும்பாலானவை தானாகவே நிறைவேற்றப்படும் என்பதால் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு நீண்ட பட்டியலை அரசுக்கு சமர்ப்பித்து பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. பின்வரும் விடயங்களை மட்டும் பெற்றுக் கொண்டால் போதுமானது.
1. 13வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்த வலுவை மாகாண சபைக்கு வழங்குதல்
2. முதலமைச்சர் முஸ்லிமானால் ஆளுனர் தமிழர் என்றும் முதலமைச்சர் தமிழரானால் ஆளுனர் முஸ்லிம் என்றும் நியமிக்கப்படுவதற்கான ஒழுங்கொன்றை அமைத்தல்
3. முதலமைச்சர் முஸ்லிம் காங்கிரசுக்கு என்றால் மேலும் ஒரு மாகாண அமைச்சு பதவியையும், முதலமைச்சர் தமிழர் என்றால் இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளையும் முஸ்லிம் காங்கிரசுக்கு பெற்றுக் கொள்ளல்.
4. முஸ்லிம் காங்கிரஸை மத்திய அரசில் பலமுள்ள ஒன்றாக ஆக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொள்ளல்
இதுவரை இங்கு சொல்லப்படாத விடயமொன்று பாக்கியிருக்கிறது. அது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கரையோர மாவட்ட கோரிக்கை. இந்த இனவாத அரசிடம் இருந்து அது இலகுவாக பெறக்கூடியதொன்றல்ல அதற்கான காலம் கனிந்து வரும்வரை நாம் பொருத்திருந்தேயாகவேண்டும். ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மிக பெரும்பான்மையானவர்களின் ஆதரவை கொண்ட கட்சியாக இருப்பதற்கான பலத்தை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் வருங்காலத்திலும் கிழக்கு மாகாண ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம்களின் வாக்குகளே என்பதைக்கொண்டு கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் மாகாணம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
ஊமைகளின் கூடாரத்தில் குந்தியிருப்பதை விட பிசாசுகளின் குகையில் மத்திரவாதியாக இருக்க வேண்டிய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை அரசியலில் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை சகலருக்கும் உணர்த்த கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற அல்லாஹ்விடம் அனைவரும் துஆ செய்வோமாக. ஆமீன்

முஸ்லீம் காங்கிரஸ் வெல்லவும் வேண்டும் ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகளும் அவர்களுக்கும் அவர்களை சார்ந்த தெரிவுசெய்த வாக்காளர்களுக்கும் பூரண சுதந்திரம் உண்டு என்பதனை மறக்காமல் முஸ்லீம் காங்கிரசும் அவர்களைப்போல் அரசுடன் இணைந்து கேட்பது வழமைபோல் கிடைக்காது போனாலும் நாம் அரசுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இலகுவான இரையாகாமல் நட்பையும் நம்பிக்கையையும் சமாதான அடிப்படையில் பேசி வெல்வது போக, புலிகளின் சார்பு TNA வுடன் சேர்ந்து அடி வாங்கக் கூடாது அவர்கள் வீராப்பு பிடித்து பிச்சைக்காரனுக்கு பிச்சை கொடுப்பவனின் வீட்டு உறுதிக்கு ஆசை வந்தது போல அவர்கள் நிலைமை அவர்களுக்கு முதலில் வீண்டும் வடக்கு கிழக்கு இணைவு பின்னர் 13 சரத்துக்கள் பின்னர் வட்டுக்கோட்டை தீர்மானம் பின்னர் போலிஸ் அதிகாரம் பின்னர் கல்வி மத்தும் நில காணி அதிகாரம் அப்புறமா எல்லைப்பிரச்சனை பின்னை குடியேத்தம் பின்னர் வேலை வாய்ப்பு விகிதாசாரம் பின்னர் மத சம்பதமாக அணைத்து கோவில்களின் மீளமைப்பு புரன்மைப்பு பின்னர் கீப் கம்ப்லைநிங் வித் அரசாங்கம் இது போதாது அது போதாது அவர்கள் பயன்பத்துவது நாடு கடந்த புலிகளையும் அவர்களின் அரசு அதிபர் கக்கூசு ருத்ரகுமாரன் சொல்வதையும் இந்த லட்சணத்தில் எமக்கு தமிழ் கட்சியுடன் ஓர் உடன்பாடும் தேவை இல்லை சிங்களவனின் நாட்டில் நாம் மத்தளம் போல் இருக்கின்றோம் இரு பக்கமும் அடி எமக்கு ஆனால் அரசின் நட்பே சிறந்தது ஆனால் ஊர்க்கு ஊர் துத்துவதையும் எள்ளி நகயாடுவதையும் ஊர்க்கு ஊர் பாரபட்சம் காட்டுவதையும் முஸ்லீம்கள் நிறுத்தவும்
ReplyDeleteநல்ல கற்பனை ஆனால் நீங்கள் கூறிய சாதக பாதகங்கள் நடைமுறை சாத்தியம் அற்றவையும் அநேகமானவை ஏற்றுக்கொள்ள முடியாதவையும் கூட ......
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே அதரவாகத்தான் உள்ளது.. எதை சாதித்தது... நீங்கள் கூறுவது போல் காங்கிரஸ் அரசுடன் தான் சேரப்போகிறது அனால் நீங்கள் கூறிய சாதகம் ஒன்றும் நடவாது.. ஹக்கீமும், பசீர் சேகுதாவுத்தும் அவர்களது அடிவருடிகளும், தங்களது பாக்கட்டுகளையும் தங்களையும் மேம்படித்திக் கொள்வார்கள்....
பாவம் முஸ்லிம்களும் காங்கிரஸ் போராளிகளும்.. ஏமாளிகள் அடுத்த தேர்தல் வரும்வரை ஓய்வெடுங்கள்.. கோசமிடுவதட்கும்.. அல்லாஹு அக்பர் சொல்வதற்கும்...
மு.கா. கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 80, 000 க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றமைக்கான முக்கிய காரணம் முஸ்லிம்களின் மதச்சுதந்திரம் மீறப்படுகிறது, பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன போன்ற அரசாங்கத்திக்கு எதிரான கோஷங்கலேயாகும். இவ்வாறு வழங்கப்பட்ட வாக்குகளைக்கொண்டு பள்ளிவாசல்களை உடைக்கத் துணை போவதாக அவர்களாலே குற்றம் சுமத்தப்படும் அரசை எவ்வாறு ஆதரிக்க முடியும்? இவ்வாறு அரசுக்கு ஆதரவளிப்பது தமக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகாதா? இப்போதே அரசாங்கத்துடனான அனைத்து வித கொடுக்கல் வாங்கல்களையும் முறித்துக்கொண்டு தமிழ் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மு.கா வின் நேர்மையை சரியாக புரிந்து கொள்ளும். இல்லாவிடில் தேர்தல் கால கோஷங்கள் வெறும் ஏமாற்று வித்தை என மக்கள் நிச்சயம் கருதுவார்கள்.
ReplyDelete