Header Ads



இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது..?

அன்புடன் இஸ்லாம்

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இந்த ஆண்டு (2012) 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் அர்ஜெண்டினாவில் 9 மணிநேரமே நோன்பு நோற்கிறார்கள்.

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் 24 மணிநேரமும் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயேதான் நடக்க முடியும்.

இரவு அதிகமாக வரும் சில காலங்களில் சில இடங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அமையும். சில இடங்களில் முழு நாளும் இரவாகவே அமையக்கூடும். அவர்கள் இரவிலேயேதான் நோன்பு நோற்கவும் திறக்கவும் முடியும்.
 
இதன் அடிப்படையில் பார்த்தால், நோன்பு நோற்கும் கால அளவை உலக முஸ்லிம்கள் வரையறுத்துக்கொள்ளுதல் அவசியம் என்று ஆகிறது.
இறைவன் நமக்கான நன்மை தீமைகளை வரையறுத்துக்கொடுத்து, நல்ல அறிவையும் ஊட்டி, வாழும் வழியை அவன் திசையில் வகுத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அவனே வழங்கியும் இருக்கிறான்.

உங்களில் எவர் ரமளான் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ அவர் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குர்-ஆன் 2:185 (ஒரு பகுதி)

அன்புதான் இஸ்லாம்.

கருணைதான் இறைவன்.

பல இடங்களில் அவன் அழுத்தமாகக் கூறுவது யாதெனில் அவன் மனிதர்களை சிரமங்களுக்கு உட்படுத்துவதே இல்லை என்பதைத்தான்.

நன்மை தீமை அறிந்து நல்ல வழியில் செல்லவே மனிதர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறானே தவிர மனிதர்களை அவன் சிரமங்களுக்கு உள்ளாக்குவதே இல்லை.

இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (குர்-ஆன் 2:185) என்று இறைவன் தெளிவாகவே தன் வசனத்தில் கூறுகின்றான்.

மக்காவில் நோன்பு நோற்கும் காலம் என்பது 11 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரங்கள்தாம். நோன்பு என்பது மக்கா மதினா நகர வாசிகளைக் கொண்டுதான் வரையறுக்கப்பட்டது. அதைத்தான் உலக மக்கள் யாவரும் பின்பற்றுகிறோம்.

அப்படி பின் பற்றும்போது வரும் ஏற்ற இறக்கங்களை இறைவனின் வழியில் நாம் சரிசெய்துகொள்வதும் நமக்குக் கடமையாகும்.

ஒரு நாளில் அதிகப்படியாக 14 மணி நேரம் நோன்பு நோற்பது என்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிரமம் தராததாக அமையும்.

கடுமையான வெயில் காலங்களில் குழந்தைகள் தாகம் காரணமாக சுருண்டு விழுந்துவிடும் நிலையை இறைவன் ஒருக்காலும் தரமாட்டான். ஏனெனில் அவன் கருணையுடையவன், அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்.

நோன்பின் நோக்கம் அறியாமல் நோன்பு வைப்பதால் நன்மையைவிட தீமையே விளையும்.

நோன்பின் நோக்கங்கள் பல. அவற்றுள் மிக முக்கியமானவை என்று மூன்றினைக் கொள்ளலாம்.

1. பசியை உணர்ந்து உலக ஏழ்மையைப் போக்குதல்,

2. தனித்திருந்து ஓதியும் தொழுதும் இறைவனை அறிந்து நல் வழியில் செல்லுதல்,

3. உணவுக் கட்டுப்பாடுகளுடன் பசியில் இருந்து உடலை ஆரோக்கியமானதாகவும் வலுவானதாகவும் ஆக்குதல்.

நோன்பு நாட்களில் நோன்பு திறந்தபின்னும் நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம், ஒரு பேரீச்சம் பழத்தையும் ஒரு குவளை தயிரையும் கொண்டு நோன்பு திறந்ததாக குறிப்புகள் சொல்கின்றன.

நோன்பு திறக்க நம் ஊரில் வாங்கிக் குவிக்கும் உணவுவகைகள் ஏராளம். மற்ற மாதங்களில் உண்பதைவிட ரமதான் மாதத்தில்தான் நாம் அதிகம் உண்கிறோம்.

நோன்பின் நோக்கத்திற்கு இது மாறாக இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பகல் முழுவதும் உறங்கியும் இரவெல்லாம் விழித்திருந்தும் சிலர் நோன்பை சமாளிக்கிறார்கள். பகலில் சிறிது நேரம் உறங்குவது தவறில்லைதான். ஆனால் இப்படி இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக்கொண்டு பசியை உணராதிருப்பது சரியா என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நோன்பின் நோக்கம் நிறைவேறாமல் கடமையே என்று நோன்பு நோற்பது கூடுமா என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அறிவினைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்.

அன்புதான் இஸ்லாம் கருணைதான் இறைவன்.

4 comments:

  1. அதாவது இஸ்லாம் மார்க்கம் பரி பூரணமானதல்ல். சில விடயங்கள் சரி செய்யப்படவேண்டும் என்றும் இஸ்லாம் மக்கா மதீன மக்களை மனதில் கொண்டே இருக்கிறதென்றுமா கட்டிரையாளர் கூறவருகிறார்?

    ReplyDelete
  2. If somebody visit Moon, what is the timing he should follow for fasting?? Definitely, Mecca timing should be followed for start & break fasting.

    I totally disagree with some wording of this writer such as "Love is Islam and Mercy is GOD". Islam is the verses of Holy Quran reveled by Allah to Prophet Mohammed.

    ReplyDelete
  3. "இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது" என்ற இந்தக் கட்டுரையை எழுதியவர் யார்?

    மேற்குறிப்பிடப் பட்ட தலைப்பில் பிக்ஹுடைய விடயங்கள் குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராயப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தால், பலத்த ஏமாற்றமே காத்திருக்கின்றது.

    இந்தக் கட்டுரையில் இந்துத்துவ, அத்வைத வாடை அடிக்கின்றது.
    'இறைவன் கருணை உள்ளவன்' என்பதற்கும், 'கருணைதான் இறைவன்' என்பதற்கும் பலத்த வேறுபாடு உள்ளது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். கருணை என்பதனை இறைவனின் பண்புகளில் ஒன்றாக இஸ்லாம் சொல்கின்றது. கருணை என்கின்ற பண்பு ஒரு பொழுதுமே இறைவன் ஆக முடியாது. இந்துத்துவ, அத்வைத கருத்தை இஸ்லாத்திற்குள் திணிக்க முயற்சிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

    நோன்பு கடமையாக்கப் பட்ட நோக்கம் குறித்து அல்லாஹ் அவனது திருமறையில் குறிப்பிடும் பொழுது, நோன்பின் முக்கிய நோக்கமாக 'நீங்கள் பயபக்தி - இறையச்சம் (தக்வா) உள்ளவர்களாக ஆகுவதற்காக, உங்கள் முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப் பட்டது போல உங்கள் மீதும் கடமையாக்கப் பட்டது' என்கின்றான்.

    அல்லாஹ்தான் நோன்பைக் கடமையாக்கினான் என்றால், அவன்தான் அதற்கு நேரடியாக கூலியும் தருவான் என்றால், அல்லாஹ்வின் நோக்கங்களை நாம் கற்பனை செய்ய முடியுமா, அல்லது அவனே சொல்லவேண்டுமா? அல்லாஹ் சொன்ன நோக்கத்தை மறைத்து விட்டு, கட்டுரை எழுதியவர், தான் நினைத்த விதமாக 3 நோக்கங்களை சொல்கின்றார். இவற்றை இவர் எங்கிருந்து பெற்றுக் கொண்டார்? குறைந்த பட்சம் நபிகளார் இவர் சொன்னது போல எங்காவது சொல்லியிருக்கின்றர்களா?

    1. 'பசியை உணர்ந்து உலக ஏழ்மையைப் போக்குவது' என்பது ஒரு நோக்கமாக இருக்குமேயானால், நோன்பு பணக்காரர்கள் மீது மட்டும் விதியாக்கப் பட்டருக்க வேண்டுமே. தினமும் பசியிலே வாடும் உலக ஏழைகள், சோமாலியர்கள் போன்றவர்கள், யாரின் பசிய உணர அல்லது யாரின் ஏழ்மையைப் போக்க நோன்பு நோற்பது??

    2. 'தனித்திருந்து ஓதியும் தொழுதும்', தனித்திருந்து தொழுவதை விட, ஜமாத்தாக தொழுவது 27 மடங்கு நன்மையானது. சுன்னத்தான இரவுத் தொழுகை கூட ரமளானில் ஜமாத்தாக நடாத்தப்படும் பொழுது, தனித்திருந்து தொழுவது நோன்பின் நோக்கம் ஆக முடியுமா?

    3. 'உணவுக் கட்டுப்பாடு....உடலை ஆரோக்கியமாக, வலுவாக வைத்திருத்தல்...' இப்படியோயான லோகாயுத நோக்கங்கள் வந்துவிட்டாலே, நோன்பின் நோக்கமே பாழடிக்கப் பட்டு விடுமே. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நோன்பு நோற்பதா, அல்லது டயட் என்று நோன்பு நோற்பதா?

    மேலும் பகலில் தூங்குவதையும், இரவில் விழித்திருப்பதையும் இவர் எப்படி குறை சொல்ல முடியும்? பர்லான தொளிகைகளுக்கு பாதகமில்லாத நிலையில் ஒரு நோன்பாளி தூங்குவதை குறை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. 'நோன்பாளியின் தூக்கமும் வணக்கமாகும்' என்ற நபிமொழியை மறுக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?

    மேலும், நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இரவு காலங்களில் நின்று வணங்குவார்கள் என்னும் பொழுது, இரவில் விழித்திருப்பதை குறை சொல்ல இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

    இஸ்லாத்தை உள்ளபடி பின்பற்ற வேண்டுமே தவிர, அவரவர் கற்பனைக்கு ஏற்ற விதமாக புதிய மார்க்கங்களை உருவாக்க கூடாது.

    'அறிவினைத் தேடும் அறிவுடியாயோனே இஸ்லாமியன்' என்று கூறிக்கொண்டே இஸ்லாமிய அறிவில்லாமல் கட்டுரை எழுதி இஸ்லாத்திற்கு முரணான, அறிவீனமான செய்திகளை பரப்புவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  4. @ LEARN ISLAM BETTER,

    சம்பொடி மூனுக்குப் போனால் மட்டுமில்லை,மூனிக்கிட்குப் போனாலும் நோன்பு பிடிக்கத்தேவையில்லை. ஏனென்றால் பிரயாணிக்கு நோன்பு கடமையில்லை.

    (இங்கிலாந்துக்கு டெஸ்ட் விளையாட சென்றுள்ள ஹசீம் அம்லா கூட நோன்பு நோற்காதது 'தான் பிரயாணி' என்பதனால்தான் என்று அவரே சொல்லியுள்ளார்.)

    ReplyDelete

Powered by Blogger.