கிழக்குத் தேர்தலும், ஆமை – முயல் அரசியலும்..!
தம்பி
ஆமை – முயல் கதை பற்றி நமக்குத் தெரியும். அந்தப் பந்தயத்தில் ஆமை வெற்றியீட்டியமைக்கு முயலின் பலவீனமே காரணமாகும். ஆமையை விடவும் வேகமாக ஓடுவதில் முயல் திறமைசாலி. ஆனாலும், பந்தயத்தின் இடைநடுவில் முயல் தூங்கிப் போனதால், ஆமை வெற்றி பெற்றது. முயலிடம் திறமை இருந்தும் தனது பலவீனத்தால் அது – தோற்றுப் போனது!
ஒரு பந்தயத்தில் நமது வெற்றி என்பது இரண்டு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
01) நமது பலம்
02) எதிராளியின் பலவீனம்
ஆமை – முயல் கதையில் ஆமை வெற்றியீட்டுவதற்கு எதிராளியின் பலவீனமே காரணமாக அமைந்தது!
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் களத்திலும் கட்சிகள் மற்றும், வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளில் மேற்சொன்ன 'சமாச்சாரங்கள்' தாக்கத்தினைச் செலுத்தப் போகிறன.
கிழக்கு மாகாணசபைக்கு அதிக உறுப்பினர்கள் (14 பேர்) தெரிவு செய்யப்படும் மாவட்டம் அம்பாறையாகும். கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கு இந்த மாவட்டத்திலிருந்து ஐ.ம.சு.முன்னணி சார்பில் 08 உறுப்பினர்களும், ஐ.தே.கட்சி (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியுடன்) 06 உறுப்பினர்களும் தெரிவாகியிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆனால், இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு களமிறங்கியுள்ளதால் மேற்சொன்ன புள்ளி விபரங்கள் மாறக் கூடும். உதாரணமாக, முன்னைய தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் இரண்டு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால், இந்தத் தேர்தலில் அந்த தமிழ் பிரதிநிதித்துவங்கள் இரண்டினையும் த.தே.கூட்டமைப்பு தட்டிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி பெற்றுக் கொள்ளும் ஆசனங்களின் எண்ணிக்கை 06 ஆக குறைவடையலாம்.
கடந்த முறை அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி மற்றும் மு.காங்கிரஸ் கூட்டணியில் ஐ.தே.கட்சி 02 ஆசனங்களையும், மு.காங்கிரஸ் 04 ஆசனங்களையும் பெற்றிருந்தன. இம்முறை மு.கா. 05 ஆசனங்களை வெற்றி கொள்ளும் என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறி வருகின்றனர். அதற்கு ஆகக்குறைந்தது ஐ.ம.சு.முன்னணியின் 10 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் வரையிலான வாக்குகளை மு.காங்கிரஸ் பிரித்தெடுக்க வேண்டும். அது சாத்தியமா என்று தெரியவில்லை. அவ்வாறு நிகழுமாயின் மு.கா. வின் ஆசன எண்ணிக்கை இம்முறை 05 ஆக அதிகரிக்கும். அதேவேளை, ஐ.ம.சு.முன்னணி பெற்றுக் கொள்ளும் உறுப்பினர் தொகை 05 ஆகக் குறைவடைவடையும்!
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணியின் வாக்குகளில் ஐ.தே.கட்சி ஏதோவொரு விகிதத்தில் சரிவுகளை ஏற்படுத்துவதற்குச் சந்தர்ப்பங்கள் உள்ளதாககத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான தயாகமகே இம்முறை அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் ஐ.தே.கட்சி சார்பாக பெரும் முன்னெடுப்புகளோடு குதித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறமிருக்க, அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணியின் சிங்கள வேட்பாளர்கள் தேர்தல் வியூகமொன்றினை வகுத்து வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. அதுளூ இந்த மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிடும் 07 சிங்கள அபேட்சகர்களில் ஒருவரை 'தூங்கும்' வேட்பாளராக மாற்றி விடுதல். பிறகு, கிட்டத்தட்ட சிங்கள மக்கள் முழுமையாக வாழுகின்ற அம்பாறை தொகுதியினை இரண்டு வலயங்களாகப் பிரிப்பது. பின்னர் தலா 03 வேட்பாளர்களுக்கு ஒரு வலயம் என ஒதுக்குவது.
இதனடிப்படையில், குறித்த வலயங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அவர்களுடைய வலயத்துக்கென இனங்காட்டப்பட்ட 03 வேட்பாளர்களுக்கும் தமது மூன்று விருப்பு வாக்குகளையும் வழங்குவது.
இந்த வியூகம் வெற்றி பெறுமாயின் ஐ.ம.சு.முன்னணியில் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெறுவோர் சிங்கள வேட்பாளர்களாகவே இருப்பர். அவ்வாறாயின் - அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறப் போவதில்லை என்பதே அதன் மறு பொருளாக அமையும்!
ஐ.ம.சு.முன்னணியின் சிங்கள வேட்பாளர்களுடைய மேற்படி வியூகத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படப் போவது அமைச்சர் அதாஉல்லாவின் அணிதான். இது அமைச்சருக்கும் புரிந்திருக்க வேண்டும்.
அதனால், அமைச்சர் அதாஉல்லாவும் வெற்றிலையில் போட்டியிடும் தமது 04 வேட்பாளர்களுக்கும் வலயம் பிரித்து வாக்களிக்கும் வியூகம் ஒன்றினை வகுத்துள்ளார். இந்த வியூகத்தின் அடிப்படையில் அதாஉல்லா அணி வேட்பாளர்களுள் - முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் அதாஉல்லாவின் விருப்பமும் அதுவாகவே இருக்கிறது.
இவை ஒரு புறமிருக்க, நாட்டில் பள்ளிவாசல்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலான சூழ்நிலையானது முஸ்லிம்கள் மத்தியில் ஆத்திரத்தையும், அரசாங்கத்து எதிரான மனநிலையினையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையினை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மிக நன்றாகப் பயன்படுத்தி வருகின்றார். அவர் - அரசாங்கத்தினை கடுமையான தொனியில் விமர்சிக்கின்றார். இதனால், மு.காங்கிரசின் பக்கமாக ஆரவு அலையொன்று உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
உதாரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.காங்கிரஸ் மிக மோசமாகப் பலவீனப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் ஓர் ஆசனத்தினைப் பெற்றுக் கொள்வதே பெரிய விசயம் என்று மு.கா. தரப்பினரே யோசித்தனர். ஆனால், இப்போது அங்கு மு.கா.வின் பக்கமாக எழுச்சி நிலையொன்று ஏற்படத் தொடங்கியுள்ளது.
காவியுடைக்காரர்கள் பள்ளிவாசல்களுக்கு விடுத்து வரும் அச்சுறுத்தலை, தனது பிரசாரத்துக்கான துரும்பாக மு.கா. தலைவர் பயன்படுத்தி வருகின்றமை – அவருடைய கட்சிக்கு கைமேல் பலனை வழங்கியிருக்கின்றது.
இதனால், அமைச்சர் அதாஉல்லா மிரண்டு போயுள்ளார். ஆரம்பத்தில் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது, அதாஉல்லா மௌனத்தைக் கடைப்பிடித்தார். பிறகு பள்ளிவாசல் உடைக்கப்படவில்லை என்றும் இரண்டொரு கூரைத் தகடுகளே கழன்று விழுந்ததாகவும் அரச தொலைக்காட்சியில் வந்து கூறினார். பின்னர், கடந்த வாரம் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது – 'முஹம்மது நபியவர்களின் காலத்திலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் உடைக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல' எனத் தெரிவித்திருந்தார். கடைசியாக – பள்ளிவாசல் விவகாரத்தில் தனது 'விளையாட்டு'க்கள் சரிப்பட்டு வராது என உணர்ந்தாரோ என்னவோ தெரியவில்லைளூ 'நாட்டிலுள்ள எந்தவொரு பள்ளிவாசலுக்கும் ஆபத்துகள் இல்லை. அனைத்துப் பள்ளிவாசலுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது' என்று அறிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில்தான், தம்புள்ளை விகாரைக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மையில் விஜயம் செய்திருந்தார். தம்புள்ளை நகரம் மற்றும் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தினை விரைவுபடுத்துமாறு அங்கு வைத்து ஜனாதிபதி உத்தரவுகளையும் வழங்கியுள்ளார். இதன் பிறகு தம்புள்ளை விகாராதிபதி ஊடகங்களிடம் பேசுகையில், 'தம்புள்ளை புனித பூமியை அபிவிருத்தி செய்வதற்குள்ள தடைகள் அகற்றப்படும். தம்புள்ளை பள்ளிவாசல் என்பது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிடமாகும். எனவே அதுவும் அகற்றப்படும். செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் இவை நடக்கும்' என்று உறுதிபடக் கூறியிருக்கின்றார். ஆனால், 'எந்தப் பள்ளிவாசலுக்கும் நாட்டில் ஆபத்துக்கள் இல்லை' என்கிறார் அமைச்சர் அதாஉல்லா!
கட்சிகளின் நிலைவரங்கள் இப்படியிருக்க, வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் உருவாகத் தொடங்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பில் இம்முறை 17 வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் கலைக்கப்பட்ட மாகாணசபையில் உறுப்பினர்களாக இருந்த ஜவாத், ஜெமீல் மற்றும் அப்துல் மஜீத் ஆகியோரும் அடங்குகின்றனர். மு.கா.வின் நான்காவது உறுப்பினரான மசூர் சின்னலெப்பை கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் காலமானார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.
மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களில் கல்முனைத் தொகுதியினைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. காரணம், கல்முனைத் தொகுதியானது மு.காங்கிரசின் கோட்டையாகும். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் மட்டுமே ஆளும் ஐ.ம.சு.முன்னணி தோற்கடிக்கப்பட்டது.
இந்த வகையில் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர்களாக இருந்து, தற்போது கல்முனை தொகுதியில் மு.காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்றவர்களான ஜவாத் மற்றும் ஜெமீல் ஆகியோர் 'கொழுத்த' விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
ஆனால், கடந்த மாகாணசபையில் உறுப்பினராகப் பதவி வகித்த மு.கா.வின் மற்றொரு வேட்பாளரான பொத்துவில் மஜீத் - அவரின் பிரதேசத்தில் தனக்கான ஆதரவினைப் பலப்படுத்த வேண்டியதொரு தேவை உள்ளதாகக் கூறப்படுகிறது. பொத்துவில் பிரதேசம் மு.காங்கிரசின் ஆதரவுத் தளமாக உள்ளபோதும், அங்குள்ள மு.கா.வின் பிரதேச அரசியல்வாதிகளுக்கிடையில் – பாரிய உள் முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஆயினும், அம்பாறை மாவட்டத்தில் வாக்குகளைப் பரவலாகப் பெறக் கூடிய வேட்பாளர்களில் பொத்துவில் மஜீதும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் மு.கா.வின் தற்போதைய அம்பாறை மாவட்ட வேட்பாளர்களில் ஒருவருமான ஜெமீல் மற்றும் கல்முனை மாநகரசபை மேயர் சிராஷ் ஆகியோருக்கிடையிலும் ஓர் உள் முரண்பாடும், பனிப்போரும் இருந்து வந்தது. மேற்படி இருவரும் ஒரே ஊர், ஒரே கட்சியினைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கிடையில் உருவாகியிருந்த மனக்கசப்பின் காரணமாக, இம்முறை ஜெமீலுக்கு எதிரானதொரு அரசியல் முன்னெடுப்பினை கல்முனை மேயர் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், தடாலடியாக, 'ஜெமீலின் வெற்றிக்காக நான் உழைப்பேன்' என்று கல்முனை மேயர் பகிரங்கமாக மேடைகளில் அறிவித்து விட்டமையினால், அந்தப் பிரச்சினை தீர்ந்து விட்டது!
இவை ஒருபுறமிருக்க, அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸின் தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. இந் நிலைமையானது கட்சி ஆதரவாளர்களிடையே மனச் சோர்வினை உருவாக்கியுள்ளது. ஆனால், ஆளும் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இப்போதே மடித்துக் கட்டிக் கொண்டு காரியத்தில் இறங்கி விட்டனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் சில ஆதரவுப் பிரதேசங்களில் எதிர் கட்சிகளின் வளர்ச்சி அதிகரித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மு.காங்கிரசின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி, மு.கா.வின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஆகியோரின் சொந்தப் பிரதேசமான நிந்தவூரில் அமைச்சர் அதாஉல்லாவின் கட்சிக்கு குறிப்பிடத்தக்கதொரு தொகை வாக்குகள் கிடைக்கும் நிலையொன்று உருவாகியுள்ளது.
மு.காங்கிரசின் மேற்படி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொந்த ஊரான நிந்தவூரில், இவ்வாறு மு.காங்கிரசுக்கு எதிரான அரசியலானது சவால் தரும் வகையில் தலைதூக்கி வருகின்றமை குறித்து, அண்மையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கவலை தெரிவித்திருந்தார். இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹசன் அலி மற்றும் பைசால் காசிம் ஆகியோரும் இருந்தனர்.
நிந்வூர் பிரதேசம் மு.காங்கிஸ் பெரும்பான்மையினைக் கொண்டது. நிந்தவூர் பிரதேச சபையும் மு.காங்கிரசின் வசமே உள்ளது. ஆனால், கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், அங்கு மாற்றுக் கட்சிகளின் கைகள் நீண்டுள்ளன. இதற்கான காரணம், நிர்ந்தவூர் பிரதேச மு.காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கிடையிலான – வெட்டுக் குத்துகளாகும்!
அதாவது, நிந்தவூரின் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹசனலி மற்றும் பைசால் காசிம் ஆகியோருக்கும் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளருக்கும் இடையில் சில காலமாக பகைமையொன்று இருந்து வருகிகிறது. கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலின் போது, நிர்தவூர் பிரதேச சபைத் தவிசாளரைத் தோற்கடிப்பதற்காக – நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹசன் அலி மற்றும் பைசால் காசிம் ஆகியோர் தமக்கு நெருக்கமானவர்களை அபேட்சகர்களாகக் களத்தில் இறக்கி விட்டிருந்தனர்.
இப்படி, ஒரே கட்சியினைச் சேர்ந்த இவர்களுக்குள் இருந்துவரும் இந்த உட்பூசல்கள் காரணமாக அங்கு எதிர்க்கட்சிகள் வளரத் தொடங்கியுள்ளன. இவர்களுக்குள் தொடரும் கோழிச் சண்டையால், தமது கட்சியை வளர்க்க முடியாமலும் எதிர்க்கட்சியின் வளர்ச்சியினைத் தடுக்க முடியாமலும் இவர்கள் திண்டாடுகின்றனர். மேற்படியார்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, தற்போது நிந்தவூரில் அமைச்சர் அதாஉல்லா சொல்லிக் கொள்ளத் தக்கதொரு தொகை வாக்கினை பெற்றுக் கொள்ளும் வகையில் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு விட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நிந்தவூரிலுள்ள இந்த நிலைவரம் காரணமாக, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்களுக்கும் தர்ம சங்கடமானதொரு நிலை உருவாகியுள்ளது. நிர்தவூரில் மு.கா. ஆதரவைப் பெறுவதற்கு யாரைச் சந்திப்பது என்பதில் வேட்பாளர்களுக்கு குழப்பகரமானதொரு நிலை உருவாகியுள்ளது. ஹசனலி, பைசால் காசிம் ஆகியோரிடம் சென்றால் தவிசாளருக்குக் கோபம். தவிசாளரிடம் சென்றால் மேற்படியார்கள் இருவருக்கும் கோபம்!
ஆக, மு.கா.வின் இவ்வாறான பலவீனங்களால் - அந்தக் கட்சி பெறுவதற்கு சாத்தியமுள்ள உச்சபட்ச வாய்ப்புகள் சிலவேளை நழுவிப் போக இடமுண்டு. ஆமை – முயல் பந்தயத்தில் தூங்கக் கூடாத நேரத்தில் தூங்கியதால் முயல் தோற்றுப் போனதைப் போல, மு.கா. அரசியல்வாதிகளுக்கிடையில் நிகழ்ந்து வரும் இந்தப் பனிப்போர்கள் காரணமாக, இந்தத் தேர்தலில் அவர்களின் கட்சிக்கு கைசேதங்கள் ஏற்படவும் கூடும்!
முயல்களின் தோல்விக்கு – ஆமைகள் பொறுப்பு அல்ல!
·

மட்டகளப்பில் கடந்த பொதுதேர்தலில் ஐகிய தேசியகட்சியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்காங்கிரஸ் பெற்றுகொண்ட 22,000 இரண்டாக உடையுமே அன்றி அங்கே எந்த ஊரிலும் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் அணிதிரண்ட காட்சியை காணமுடியவில்லை வீன் கட்பனைகளை அள்ளி வீசி இருதியில் மரத்தின் இலைகளை கண்கலங்கி நிட்க வைகாதீர்கள்
ReplyDeleteதம்பி சொன்னது சரி
ReplyDeleteதம்பி சொன்னதும் சரி , தம்பி சொன்னதும் சரி, இரண்டு தம்பியும் சொன்னது சரி, முயல் தோக்கும். அறி குறிகள் ஆங்காங்கே தென்படவும் செய்கிரது.
ReplyDelete