Header Ads



பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் இடம்..!


பதிவு இல :. 006/ACJU/FTW/2012/0155


அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்

اللهم هداية للصواب

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

பெருநாள் தினம் மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் வெளிப்படுத்தும் ஒரு தினமாகும். அத்தினத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமுகமாக அவனைப் புகழ்ந்து, தொழுவது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும்.

பெருநாள் தொழுகை எந்த இடத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனும் விடயத்தில் அறிஞர்களிடத்தில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் தவிர்ந்த மற்றைய அறிஞர்கள் பெருநாள் தொழுகை மக்காவைத் தவிர உள்ள ஏனைய இடங்களில், முற்றவெளியில் நிறைவேற்றப்படுவது ஸுன்னத் எனவும், நிர்ப்பந்தமான சூழ்நிலைகள் தவிர்ந்த மற்றைய சந்தர்ப்பங்களில் மஸ்ஜிதில் தொழுவது மக்ரூஹ் எனவும் கூறுகின்றனர்.

ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களைப் பொறுத்தவரையில் ஓர் ஊரின் மஸ்ஜித் மக்களுக்குப் போதுமானதாக இருக்குமாயின் மற்றைய இடங்களில் தொழுவதைவிட மஸ்ஜிதில் தொழுவதே மிகச் சிறப்பானதாகும். ஏனெனில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் முற்றவெளியை நாடிச் சென்றது ஊர்மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று சேர வேண்டுமென்ற நோக்கத்தினாலாகும்.

அந்நோக்கம் மஸ்ஜிதில் கைகூடிவிட்டால் அங்கு தொழுவதே சாலச் சிறந்தது என குறிப்பிடுகின்றனர். மேலும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மஸ்ஜிதில் இடவசதி போதாமை காரணமாகவே முற்றவெளிக்குச் சென்றார்கள் என்று ஸுனன் அல்-பைஹகீ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றை இக்கருத்துக்கு வலுவாக எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில், ஓர் ஊரின் மஸ்ஜித் மக்களுக்குப் போதுமானதாக இல்லாவிடின் முற்றவெளியில் தொழுவது ஸுன்னத் மாத்திரமின்றி இந்நிலையில் மஸ்ஜிதில் தொழுவது (மக்ரூஹ்) பொறுத்தமற்றதாகும். எனினும், மஸ்ஜித் மக்களுக்குப்


போதுமானதாக இருக்கும் நிலையில் முற்றவெளியில் தொழுவதிலும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. மேலும், பெருநாள் தொழுகைக்காக முற்றவெளிக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ள பலவீனமானவர்கள், நோயாளிகள் போன்றோர்கள் இருப்பின் அவர்களுக்காக மஸ்ஜிதில் தொழுகை நடாத்த ஒருவர் இமாமாக நியமிக்கப்பட வேண்டும்.

ஏனெனில், பலவீனமானவர்களுக்கு மஸ்ஜிதில் பெருநாள் தொழுகை நடாத்துவதற்கு அலி றழிலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூ மஸ்ஊத் அல்-அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நியமித்தார்கள் என்ற அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் செயலை இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவித்துள்ளதாக இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் "அல்-மஜ்மூஃ" வின் பெருநாளுடைய பாடத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேற்கூறப்பட்ட நபி மொழிகள், அவற்றிற்கான மார்க்க அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது.

தமது ஊரில் உள்ள மஸ்ஜித் அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்றாகத் தொழுமளவு போதிய இடவசதி கொண்டதாக இருக்குமாயின் அம்மஸ்ஜிதில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது பொருத்தமானது. அவ்வாறில்லாத பட்சத்தில் முற்றவெளியில் நிறைவேற்றுவதே மிகப்பொருத்தமான விடயமாகும்.

பெருநாள் தொழுகைக்காக மஸ்ஜிதிலோ அல்லது முற்றவெளியிலோ பெண்களும் சமுகமளிக்குமிடத்து பின்வரும் ஒழுங்குமுறைகளைப் பேணிக்கொள்வது மிக மிக அவசியம்.

இஸ்லாமிய ஆடை ஒழுங்குகளுடன் சமுகமளித்தல்.

மணம் பூசுவதைத் தவிர்ந்து கொள்ளல்.

அலங்கார ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றை மற்றவர்களுக்குத் தெரியும்படி அணியாதிருத்தல்.


ஆண், பெண் கலப்பதைத் தவிர்க்க மறைப்பை ஏற்படுத்தல்.

பெண்கள் தனியாக சமுகமளிக்காது, மஹ்ரமான ஆண்களுடன் அல்லது கூட்டாக பெண்களுடன் சமுகமளித்தல்.

வரிசைகளைச் சீர்செய்வதில் கவனம் செலுத்துதல்.

ஆண்கள், பெண்கள் பிரவேசிக்க வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துதல்.

பெண்கள் தொழுகை, குத்பா முடிந்தவுடன் தாமதியாமல் அவசரமாகத் தத்தமது வீடுகளுக்குச் சென்றுவிடல்.

வாலிபப் பெண்கள் சமுகமளிப்பதனால் பித்னா ஏற்படும் எனப் பயந்தால் அவர்கள் வருவது மக்ரூஹ் ஆகும்.

இவ்விடயத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டுமெனவும் இதுவே இப்பெருநாளின் கருப் பொருளாகும் எனவும் ஊர்மக்களுக்கிடையில் பிரிவோ பிரச்சினையோ ஏற்படாவண்ணம் பொறுப்புடையோர்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும் அ. இ. ஜ. உ. மக்களைக் கேட்டுக்கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

6 comments:

  1. அகில இலங்கை ஜமியத்துல் உலமா இந்த விடயத்தில் சரியான பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.


    பள்ளியில் இடம் இருக்கின்றது என்பதற்காக, பெருநாள் தொழுகையை பள்ளியில் நிறைவேற்றினால், மாதவிடாய்ப் பெண்களையும் பெருநாள் தொழுகை தொழுமிடத்திட்கு வரச்சொன்ன நபி (ஸல்) அவர்களின் கட்டளையை என்ன செய்வது?

    மேலும் அலி (ரலி) அவர்களின் சம்பவம், நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் இடம் பெறவில்லை. நாம் பின்பற்ற வேண்டியது நபி (ஸல்) அவர்களையேயாகும்.

    ReplyDelete
  2. மைதானத்தில் தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யவேண்டும்

    சில பகுதிகளில் ஆண்களுக்கு ஒரு நேரத்திலும், பெண்களுக்கு வேறொரு நேரத்திலும் பள்ளிவாசல்களில் இருமுறை தொழுகை, குத்பா நடாத்துகிறார்கள். சில சமயங்களில் வீடுகளில் பெண்களுக்கு மாத்திரம் ஜமாஅத் தொழுகை நடாத்துகிறார்கள். இவை நபிவழிக்கு முரணான செயலாகும். ஊர்மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஒரே ஜமாஅத்தின் கீழ் ஒரே நேரத்தில் ஒரே (திடலில்) மைதானத்தில் தொழக்கூடியதாக ஏற்பாடுகள் செய்வதே நபிவழியாகும்.

    ”நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) மைதானத்திற்கு (தொழுவதற்கு) செல்பவர்களாக இருந்தார்கள் என அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி)

    உம்முஅதிய்யா (ரலி) அறிவிக்கும் மேலேயுள்ள ஹதீஸிலும் மைதானத்திற்கு தொழுகைக்காக புறப்பட்டுச் செல்லுமாறுதான் நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. எனவே பெருநாள் தொழுகைகளை ஏற்பாடு பண்ணக்கூடிய பள்ளி நிர்வாகிகள் அல்லது பேஷ் இமாம்கள் ஊரிலுள்ள மைதானத்தில் ஆண்கள், பெண்களுக்கு ஒரே நேரத்தில் -ஒழுக்கம் பேணி- தொழுகை நடாத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே நபியவர்கள் நடைமுறைபடுத்திக் காட்டிய சுன்னாவாகும். ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனியாக நபியவர்கள் ஜமாஅத் நடாத்தியதில்லை. ஒரே நேரத்தில் தொழுகை நடாத்துவதன் மூலம் அன்றைய நாளின் வேலைகளை செய்து முடிப்பதற்கும் ஏனைய விடயங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். நபியவர்கள் காட்டிய முறை நிச்சயமாக இந்த உம்மத்திற்கு நன்மையாகவே இருக்கும்.

    ஊரில் மைதானம் இல்லை அல்லது மழை சூராவளி மற்றும் மைதானத்தில் தொழுவிக்கக்கூடிய சூழல் இல்லை போன்ற காரணங்களுக்காக பள்ளியில் தொழுவிழக்கலாம். எந்த தடுங்களும் இல்லாமல் பெண்களை தடுத்து நிறுத்துவது சுன்னாவை புறக்கணிக்கும் செயலாகும்.

    ReplyDelete
  3. ஜம்இய்யதுல் உலமாவின் இந்நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேவேளை ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். பள்ளியினுள் இடம் இல்லாததன் காரணமாக மைதானத்தில் தொழுதார்கள் என்றால் அக்காலத்து சகாபாக்கள் நம்மைப்போன்று வாரத்தில் ஒரு தடவை அல்லது வருடத்திற்கு ஒரு தடவை தொழுபவர்களா? அவர்கள் நம்மை விட எவ்வளவோ அதீத அக்கறையுடன் மார்க்க விடயங்களை பின்பற்றுபவர்கள். அப்படியான சகாபாக்கள் வாழந்த காலத்தில் ஜூம்ஆ குத்பாக்கள் ஒதும்போது பள்ளியினுள் இடம் காணாமல் இருந்திருக்கவேண்டுமே! அந்த நேரத்திலும் அத்தனை சகாபாக்களும் ஒரே நேரத்தில் கூடியிருப்பார்கள் அல்லவா? அப்படியிருக்க பள்ளியில் இடம் காணாமல் போகுதல் என்ற நொன்டிச்சாட்டை விளக்கமில்iலாம்ல் கூறியிருப்பது கொஞ்சம் குறைவு அல்லவா? அத்துடன் ஹைழான பெண்களையும் இதற்கு சமூகமளிக்கவேண்டும் என்று கூறியிருக்கும்போது பள்ளியில் தொழுகை நடாத்துவது சாத்தியமா? இதில் ஜம்மிய்யதுல் உலமாவின் இந்த கூற்று எதற்கும் தலையை ஆட்டுவது போலல்லவா இருக்கின்றது. நபி வழியை பூரணமாகப் பின்பற்றி ஒரு தீர்;ப்பை வழங்குங்கள். இதை விட்டுவிட்டு அதற்கும் தலையை ஆட்டி இதற்கும் தலையை ஆட்டாமல் நபி வழியென்றால் நபி வழிதான் அதை விட்டு விட்டு இரட்டை வேடம் போட வேண்டாம் ஹதீதுகளை மத்தியமாக நின்று ஆராயுங்கள். இதில் சமூகத்தில் குழப்பம் வருமே! இதனால் அந்த மௌலவி கோபிப்பாரே என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. நபி வழியென்றால் நபி வழிதான் அதற்கு மாற்றமாக போகக்கூடாது இதில் சமூகத்தில் குழப்பங்கள் வந்தாலும் பரவாயில்லை. அல்லாஹ் போதுமானவன். அல்லாகு அக்பர்.

    ReplyDelete
  4. ல வீக்ஸ் ஹலீம் போன்றவர்களின் கருத்துக்கள் நீக்கப் பாடல் வேண்டும் . உலமா சபைக்கு அறிவுரை கூறும் அளவுக்கு இவர்களுக்கு அறிவு கிடையாது என்றே கருதுகின்றேன்.
    எனது சுன்னத்துகளை பின்பற்றுங்கள். எனக்குப் பிறகு குலபவூர் ராஷிடீங்களை பின்பற்றுங்கள். அவர்களின் நடைமுறைகளை கடவை பட்களால் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (ஹதீஸ் - புஹாரியாக இருக்கலாம்)

    சூரா அன் நிசா 4.59
    நம்பிக்கை கொண்டோரே அல்லாவுக்கு கீழ் படியுங்கள். இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும் உங்களில் நேர்மையான அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ் படியுங்கள்.

    மேற்சொன்ன இருவரினதும் கருத்துக்கள் குர் ஆன் மற்றும் ஹதீசுக்கு மாற்றமாக உள்ளது.
    மேட்சொன்ன இருவரும் இஸ்லாம் பற்றிய அரைகுறை அறிவு உள்ளவர்கள். எனவே மார்க்க விடயங்களில் அவர்களில் கருத்துக்களை யாழ் முஸ்லிம் இணையம் போடாமல் தவிர்ப்பது தான் நல்லது.

    ReplyDelete
  5. @ Mohamed Irfan,

    உங்களுக்கு மார்க்கம் தெரியவில்லை என்றால், வாசித்துவிட்டு பேசாமல் பொத்திக்கொண்டு போக வேண்டியதுதானே? இல்லாவிட்டால் முறையாக விடயத்தைத் தேடி, உரிய முறையில் படித்துக் கொள்ளுங்கள்.

    அதை விட்டு விட்டு, இங்கே வந்து, காழ்ப்புணர்வு பிடித்தவர்கள் கூச்சல் போடுவது போல நீங்களும் 'அது நீக்கப்பட வேண்டும்,இது நீக்கப் பட வேண்டும்' என்று முறையற்று எழுதுவது எந்த வகையில் நியாயம்?

    எமக்கு உலமா சபைக்கு அறிவுரை கூறும் அளவுக்கு அறிவு இருக்கின்றதா இல்லையா என்பதனை விட, மிக முக்கியமான விடயம், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் உலமா சபைக்கு அறவே கிடையாது என்பதாகும். இந்த மார்க்கம் பூரணப் படுத்தப்பட்டு விட்டது. சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சஹாபாக்கள் அதற்கு சாட்சி.

    அன்றே பூரணப் படுத்தப்பட்டு விட்ட மார்க்கத்தில், இன்றைக்கு 1400 வருடங்களுக்குப் பின் வந்து மாற்றங்கள் செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? அப்படி யாராவது செய்தால்,அது நிராகரிக்கப் பட்டு, குப்பையில் தூக்கி வீசப்பட வேண்டும், அது உலமா சபை என்ற பெயரில் செய்யப் பட்டாலும் கூட நிராகரிக்கப் பட வேண்டும்.

    நபி (ஸல்) அவர்கள் தனது வழி வந்த 'குலபாஉ ராசிதீன்' என்றுதான் சொன்னார்களே தவிர, மார்க்கத்தில் மாற்றங்களை செய்பவர்களை பற்றி அல்ல. இன்றைய ஜமியத்துல் உலமா ஒன்றும் நபி (ஸல்) வழி வந்த குலபாஉ ராசிதீன் கிடையாது என்பது அவர்களுக்கே தெரியும். 'குலபாஉ ராசிதீன் அல் மஹ்தியீன்' என்றால் யார் என்பதனை உலமாக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


    فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ

    என்ற வாசகம் வரும், இப்னு சாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் அபூதாவுத் , திர்மிதி , இப்னு மாஜா போன்ற கிரந்தங்களில் தான் இடம் பெற்றுள்ளது என்பதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    சூரத்துல் நிஸா, வசனம் 59

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

    இதில் வரும் أُولِي الْأَمْرِ என்பது நீங்கள் தப்பாக விளங்கிக் கொண்டது போல உலமா சபையை ஒருபோதுமே குறிக்காது. அது, உமர் (ரலி), அபூபக்கர் (ரலி), அப்துல் அசீஸ் இப்னு உமர் போன்ற அதிகாரம் மிக்க கலீபாக்களைத்தன் குறிக்கும். உலமா சபையும், பள்ளி நிர்வாக சபையும், ஊர் பஞ்சாயத்தும், தெருச் சண்டியனும் இதில் அடங்குவதில்லை.

    நீங்கள் முன்வைத்த ஹதீஸோ, குர்ஆன் வசனமோ, நீங்கள் சொல்ல முற்படும் விடயத்திற்கு சற்றும் பொருத்தமற்றவை.

    '' மேற் சொன்ன இருவரும் இஸ்லாம் பற்றிய அரைகுறை அறிவு உள்ளவர்கள். எனவே மார்க்க விடயங்களில் அவர்களில் கருத்துக்களை யாழ் முஸ்லிம் இணையம் போடாமல் தவிர்ப்பது தான் நல்லது." என்பதன் கருத்தை நீங்களே உங்களை கண்ணாடியில் பார்த்து சொல்ல வேண்டிய நிலைமையை அல்லாஹ் உருவாக்கி விட்டான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.


    உங்களுக்கு முடிந்தால் உரிய முறையில் மறுப்பபை முன்வையுங்கள், அதனை விட்டு விட்டு, 'கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும்' என்று கூச்சல் போடும் பாணியில் தொடர்ந்து எழுதினால் அது கோழைத்தனமாகக் கருதப்படும்.


    'இஸ்லாத்தின் பார்வையில் அந்நிய மதத்தவர்களுடனான இப்தார்' என்ற கட்டுரையின் பின்னூட்டம் பகுதியில் பதிலளிக்க முடியாமல் போனதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியை இங்கே காட்ட முயல மாட்டீர்கள் என நம்புகின்றேன்.


    புதிய செய்திகள் பதியப்டுவதால், இந்த செய்தி பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஆகவே, உங்களிடம் பதில் இருந்தால், தாமதிக்காமல் பதிவு செய்யவும், இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  6. I totally dis agree with Irfan Mohamed. He is a blind follower of Jamiyathu Ulam. We shouldn't obey to them, If their verdicts are contradict to Quran and Sunnah.

    ReplyDelete

Powered by Blogger.